சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: தமிழக அரசுமீது புகார் வாசித்த ஆளுநர்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

நிலைமையைச் சமாளித்த தலைமைச் செயலர்...

குறித்த நேரத்தில் வீடியோ காலில் வந்த கழுகார், எடுத்ததுமே கோபமாக குரலை உயர்த்தினார். “பறவைப் பார்வையில் பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்... எல்லா ஊர்களிலும் டாஸ்மாக் முன் நிற்கும் வரிசையைக் கண்டால் பயமாகவும் கோபமாகவும் இருக்கிறது” என்றவரிடம், “மத்திய அரசு கடும் நெருக்கடியில் இருக்கிறதுபோலவே?” என்று கேட்டோம்.

“உலகமே நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் இந்தியா மட்டும் தப்ப முடியுமா? குறிப்பாக, மோடி மூன்றாவது முறையாக ஊரடங்கைத் தள்ளிவைப்பது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றாமல் தவிர்த்ததற்கு அவரது மன அழுத்தம் அதிகரித்ததே காரணம் என்கிறார்கள். ‘அடுத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் சமமற்ற நிலைக்குச் சென்றுவிடும். கட்டுமானம் உள்ளிட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பல தொழில் நிறுவனங்கள் முடக்கத்தைச் சந்திக்கும்’ என்று இப்போதே எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது ஒருபுறம் என்றால், பல மாநில அரசுகள் நிதியைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் மோடி.”

“ஓஹோ!”

“அதே நேரம் இதுவரை இல்லாமல் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சிதம்பரம் வீசும் அஸ்திரங்கள் ஆளுங்கட்சியை அதிரவைக்கின்றன. ‘வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப, காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி உதவி அளிக்கப்படும்’ என்ற அறிவிப்பு அந்தக் கட்சிக்கு தனி இமேஜை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐடியாவைக் கொடுத்தது சிதம்பரம்தானாம். எனவே, அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து உட்காரவைக்கும் திட்டம் சோனியாவிடம் இருக்கிறது. சமீபத்தில், டெல்லிக்கு நெருக்கமான மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.”

“என்ன விஷயமாம்?”

கவர்னர் மாளிகையில் ஆளுநருடனான  சந்திப்பின் போது...
கவர்னர் மாளிகையில் ஆளுநருடனான சந்திப்பின் போது...

“இன்னும் இரண்டு ஆண்டுகள் சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் நியமிப்பது... அவரைவைத்து ஆளுங்கட்சிக்கு ஆட்டம் காண்பிப்பது... தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பாக ராகுலை தலைமைப் பதவிக்குக் கொண்டுவருவது. இதுதான் சோனியாவின் திட்டமாம். சிதம்பரம் இன்னொரு வேலையையும் செய்துவருவதாக தகவல்.”

“அதையும் சொல்லும்...”

“இப்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத கட்சி, காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது. சரத்பவாரும் வயது முதிர்வால் அவதிப்பட்டுவருகிறார். தனக்குப் பிறகு தன் மகள் சுப்ரியா சுலேவை வைத்து கட்சியை நடத்துவதைவிட, தாய்க்கட்சியான காங்கிரஸுடன் தனது கட்சியை இணைத்து மகளுக்கு பவர்ஃபுல்லான பதவியை வாங்கிவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இதன் பின்னணியிலும் சிதம்பரம் இருக்கிறார் என்கிறார்கள்.”

“அது சரி, தமிழக அரசியல் நிலவரம் எப்படியிருக்கிறது?”

“ஆளுங்கட்சிக்கு எதிராக அறிக்கை அஸ்திரங்களை அடுத்தடுத்து வீசிவருகிறது தி.மு.க. குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் என அறிக்கை கொடுத்த மறுதினமே, அதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி மூலம் தலைமைச் செயலாளரிடம் புகாரும் அளித்துள்ளார்கள். அதேபோல் பாரத் நெட் டெண்டர் விவகாரத்திலும் புகார் அளிக்க இருக்கிறார்கள். அவர்கள் கணக்கு வேறுவிதமாக இருக்கிறதாம்.’’

“என்ன அது?”

“கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் அதன் பிறகு தமிழகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும். அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவுசெய்துள்ளார்கள். இப்போது ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மேலும் இரண்டு திட்டங்களை ஐபேக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கொரோனா தாக்கம் முடிந்த பிறகு அவற்றை செயல்படுத்துவார்களாம். அவையும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்கிறார்கள்.’’

“ம்!”

“எதிர்க்கட்சிகள் ஒருபுறம் ஆளுங்கட்சிக்கு எதிராக அஸ்திரத்தை வீசிவரும் நிலையில், அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ யுத்தத்தால் அரசு இயந்திரம் தடுமாறிவருகிறது. சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு பணிகளை அவர் வேகமாகத் தொடங்கினாலும், அவருக்கு மாநகராட்சி அதிகாரிகளோ சி.எம்.டி.ஏ உள்ளிட்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகளோ போதிய ஒத்துழைப்பு தருவதில்லையாம். இதுபற்றி முதல்வரிடமே முறையிட்டுவிட்டார் ராதாகிருஷ்ணன்.”

“ஆமாம்... ஆளுநரைச் சந்தித்தாரே முதல்வர்?”

“அதைத்தான் சொல்ல வந்தேன். கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் ஆளுநர் மாளிகையிலிருந்து முதல்வருக்கு அழைப்பு வந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி சகிதமாகச் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அப்போது விஜயபாஸ்கரிடம் ரேபிட் கிட் விவகாரம் குறித்து ஆளுநர் கேட்டதாகக் கூறப்படுகிறது.”

“என்ன சொன்னராம் அமைச்சர்?”

“திறமையாகச் சமாளித்தாராம் விஜயபாஸ்கர். அங்கும் தனது வாதங்களை வலுவாக எடுத்து வைத்துள்ளார். அப்போது ஆளுநர் ‘சமீப நாள்களாக தமிழக அரசுத் தரப்புமீது தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மத்திய அரசும் சில தகவல்களை எடுத்துவைத்துள்ளது’ என்று நாசூக்காகச் சொல்லியுள்ளார். அதைக் கேட்டதும் எடப்பாடி கொஞ்சம் அப்செட்டாம். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்றியது தலைமைச் செயலாளர் சண்முகம்தான் என்கிறார்கள். அவர் சில விளக்கங்களைக் கொடுத்ததும் ஆளுநர் அமைதியாகிவிட்டாராம். அப்போது சண்முகம் ஜூலை மாதம் ஓய்வுபெறுவது பற்றியும் பேச்சு எழுந்துள்ளது. அதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து பதவி நீட்டிப்பு செய்யும் எண்ணம் இருக்கிறது என்று சொல்லியதாகவும் தகவல்.”

“அமைச்சர்கள் மாற்றம் என்று செய்திகள் வந்தனவே?”

“ஆம், ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் செல்லும் முன்பு தலைமைச் செயலகத்தில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் அந்தப் பேச்சு எழுந்தது. மூன்று அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. முதல்வர் அலுவலகத்திலிருந்து அந்தத் தகவல் கசிந்துள்ளது. ஆனால், ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பிறகு ஆட்சியின் மீதே சில வருத்தங்களை ஆளுநர் சொல்வார் என எதிர்பார்க்கவில்லை எடப்பாடி. எனவே, அமைச்சர்கள் மாற்றம் தள்ளிப்போயுள்ளது.”

“ஆளுநர் எதற்கு இவ்வளவு அக்கறை காட்டுகிறார்?”

சோனியா காந்தி - நரேந்திர மோடி - ப.சிதம்பரம்
சோனியா காந்தி - நரேந்திர மோடி - ப.சிதம்பரம்

“இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. ஒருவேளை அதே நிலை தமிழகத்துக்கு வந்தால், தனது ஆளுமையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் ஆளுநர். அதற்காகவே அரசு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து கண்காணித்துவருகிறாராம்.”

“இந்த கொரோனா களேபரத்துக்கு நடுவில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு பொது அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளதே?”

“அந்த அறிக்கையில் வாரிசு இல்லாத சொத்தாக போயஸ் கார்டன் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா அரசிடம் நிலுவையில் உள்ள சசிகலாவின் தண்டனைக் குறைப்புக் கோப்பில் விரைவில் முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை சசிகலா விடுவிக்கப்பட்டால், அவர் போயஸ் கார்டனுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கை வேகமெடுக்கிறதாம்!” என்ற கழுகார் “பை பை” சொன்னபடி ஆஃப்லைனுக்குப் போனார்.

ஆன்லைன் விற்பனை... டாஸ்மாக் அப்பீல்?

தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறந்திருக்கும் நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் சிபாரிசு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் டாஸ்மாக் ஏற்கெனவே சில விஷயங்களைச் செய்துள்ளதாம். அதில் ஒன்று, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தொடர்பாக, வரும் ஜூன் 8-ம் தேதியன்று டெண்டர் தேதி அறிவித்திருக்கிறது டாஸ்மாக். இதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் திட்டமும் இருக்கிறதாம்!

5,100 கோடி ரூபாய்... மிச்சம் பிடித்த தமிழக அரசு!

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்த உத்தரவு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்குப் பொருந்தும். இந்த உத்தரவு, மே 7-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஓய்வுபெற இருக்கும் 30,000 நபர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கிறது. இவர்களுக்கான 5,100 கோடி ரூபாய் ஓய்வூதியப் பலன்கள் அடுத்த ஒரு வருடம் தள்ளிப்போகின்றன. ஏற்கெனவே, தமிழக அரசுப் பணிகளில் இரண்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த மாதம் அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 18 மாதங்களுக்கு ரத்துசெய்தது, ஈட்டு விடுப்பை அரசுக்கு ஒப்படைப்பு செய்வதை ஒரு வருடத்துக்கு ரத்துசெய்தது ஆகிய விஷயங்களில் அரசுப் பணியாளர்கள் கொதிப்பில் உள்ளனர். தற்போது ஓய்வு வயதை உயர்த்தியிருக்கும் நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவும் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவிக்கிறார்கள்.