Published:Updated:

மிஸ்டர் கழுகு: கமலாலயம் டு அறிவாலயம்... அன்பகம் டு அரசியல்...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

‘இப்ப இருக்கிற பதவியை ராஜினாமா பண்ணிட்டு நம்ம கட்சியில சேருங்க. இடைத்தேர்தல்ல ஜெயிக்கவெச்சு அமைச்சராக்கிடுறோம்

மிஸ்டர் கழுகு: கமலாலயம் டு அறிவாலயம்... அன்பகம் டு அரசியல்...

‘இப்ப இருக்கிற பதவியை ராஜினாமா பண்ணிட்டு நம்ம கட்சியில சேருங்க. இடைத்தேர்தல்ல ஜெயிக்கவெச்சு அமைச்சராக்கிடுறோம்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

“சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒருவழியாக முடிந்துவிட்டது...” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், சூடான திருநெல்வேலி அல்வாவைத் தட்டில் வைத்து நீட்டினோம். “தி.மு.க ஆட்சியின் ஓராண்டு நிறைவு தினமான மே 7-ம் தேதியன்று, சட்டப்பேரவையை கவர் செய்யும் ஊடகத்துறையினருக்கு அல்வா சாப்பிடக் கொடுத்ததுபோல எனக்கும் கொடுக்கிறீரோ...” என்று சிரித்தபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“அன்று 110 விதியின் கீழ் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாரே முதல்வர்... அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு எக்கச்சக்க வரவேற்பு. இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக முதல்வரின் செயலாளர் ஒருவரும், திட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவரும் ரொம்பவே மெனக்கெட்டார்களாம். `பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்த காமராஜர் பெயரும், அதைச் சத்துணவாக மாற்றிய எம்.ஜி.ஆர் பெயரும் வரலாற்றில் இடம்பெற்றிருப்பதுபோல, காலைச் சிற்றுண்டி கொடுத்த உங்கள் பெயரும் வரலாற்றில் நிலைக்கும்’ என்று சிலர் சொன்னதாலேயே இந்தத் திட்டம் நிறைவேறியதாகச் சொல்கிறார்கள்.”

“திராவிட மாடல் என்று ஒரு ‘பிட்’டைச் சேர்த்துப் போட்டிருப்பார்களே...”

“அடுத்ததா, ஆன் லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரப் போகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியின் கடைசி கட்டமான பிப்ரவரி 2021-ல் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை, ஆகஸ்ட் மாதமே சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், இந்த விவகாரத்தில் மீண்டுமொரு சட்ட முன்வடிவு தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். விளையாட்டு நிறுவனங்களால் வழக்குகள் தொடரப்பட்டால், அதை எதிர்கொள்வது குறித்தும் சட்ட ஆலோசனை நடத்தவேண்டியதிருந்ததால்தான், இந்தக் கூட்டத்தொடரில் மசோதா நிறைவேறவில்லையாம்!”

ஜெய.ராஜமூர்த்தி
ஜெய.ராஜமூர்த்தி

“அடுத்த அரசியல் வாரிசு உருவாகிறது போல..!”

“நீரும் அதை ‘ஸ்மெல்’ பண்ணிவிட்டீரா... முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் இளைய சகோதரரும், இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் இயக்குநருமான டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி பொதுமேடையில் அரசியல் பேசியிருக்கிறார். மே 6-ம் தேதி தி.மு.க இளைஞரணித் தலைமையகமான அன்பகத்தில் நடந்த திராவிட சமூகப்பேரவை என்கிற அமைப்பின் முதலாமாண்டு விழாவில் பேசிய அவர், பா.ஜ.க குறித்தும், ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்தும் கடுமையாகப் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளர் இப்போது அரசியல் பேசியிருக்கிறார் என்று லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள் தி.மு.க-வினர். தி.மு.க ஆட்சி ஓராண்டு நிறைவடையும் நாளில், அன்பகத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்து ராஜமூர்த்தியை மேடையேற்றியிருப்பதற்குப் பின்னால் பெரிய திட்டமிருக்கலாம் என்று கிசுகிசுக்கிறார்கள் அவர்கள்.”

“இருக்கிற வாரிசுகள் போதாதா... `பா.ஜ.க-விலிருந்து இரண்டு எம்.எல்.ஏ-க்களைத் தூக்கப்போகிறோம்’ என்று செந்தில்குமார் எம்.பி கொளுத்திப்போட்டது வைரலாகிவிட்டது போல...”

“நானும் பார்த்தேன். ஒருவரிடம் பேரம் நடந்தது உண்மை. அமைச்சராக்க வேண்டும் என்று கண்டிஷன் வைத்தாராம் அந்த ‘தெற்கத்தி’ வி.ஐ.பி. ‘இப்ப இருக்கிற பதவியை ராஜினாமா பண்ணிட்டு நம்ம கட்சியில சேருங்க. இடைத்தேர்தல்ல ஜெயிக்கவெச்சு அமைச்சராக்கிடுறோம்’ என்று ஆசைகாட்டியிருக் கிறார்கள். ‘சொன்னபடி ராஜினாமா செய்யறேன். ஆனால், தேர்தலுக்கு முன்னாடியே அமைச்சராக் குங்களேன்’ என்று கறார் காட்டுகிறாராம் அவர். இந்த டீலிங் பற்றி கேள்விப்பட்டதால்தான் பா.ஜ.க மேலிடம் அவருக்குக் கட்சியில் எந்தப் பதவியும் தராமல் புறக்கணித்துவிட்டதாம்.”

மிஸ்டர் கழுகு: கமலாலயம் டு அறிவாலயம்... அன்பகம் டு அரசியல்...

“ஒருவர் அன்பகம் ரூட்டில் அரசியலுக்கு வந்தால், இன்னொருவர் நேரே கமலாலயம் டு அறிவாலயத்துக்கு வண்டிவிடுகிறாரே?!”

“தி.மு.க அடுத்த கட்சிக்காரருக்குத் தூண்டில் போடும் கவனத்தில், தன் கூட்டணிக் கட்சிகளை இழந்துவிடும்போல. அவ்வளவு அதிருப்தி. முதலில் வி.சி.க கதையைச் சொல்கிறேன். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில், சேலம் மாவட்டத்தில் வி.சி.க கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றியதால் பெரும் பிரச்னை வெடித்தது இல்லையா... அப்போதே முதல்வரிடம் நேரில் முறையிட்டாராம் திருமாவளவன். ஆனால் சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. பொறுமையிழந்து, காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் நிலைப்பாட்டை எடுத்தது அந்தக் கட்சி. வி.சி.க-வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகக் குற்றம்சாட்டி சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காவல்துறையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வன்னிஅரசு. சட்டமன்றம் நடக்கும் நேரத்தில் கூட்டணிக் கட்சியினரே இப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினால், எதிர்க்கட்சிகள் என்ன பேசுவார்கள் என்று வன்னி அரசு உள்ளிட்ட வி.சி.க-வினர் மீது வழக்கு பதிந்துவிட்டது ஆளும் தரப்பு. இந்தச் சம்பவம், இரு தரப்பு உறவில் விரிசலை அதிகமாக்கக்கூடும் என்கிறார்கள்.”

“ஓஹோ...”

“திருமா மட்டுமல்ல. பண்ருட்டி வேல்முருகனும் விரக்தியில் இருக்கிறார். தி.மு.க சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ ஆன அவரால், கடந்த இரு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது செயல்பட்டதைப் போல சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையாம். ‘வேண்டுமென்றே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஏதாவது கேட்டால், நீங்கள் தி.மு.க கணக்கில்தானே வருகிறீர்கள்? என்று சொல்லி ஆஃப் செய்துவிடுகிறார்கள். நான் வளர்ந்துவிடக் கூடாது. தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டின் பிரச்னைகளைப் பேசிவிடக் கூடாது என தி.மு.க நினைக்கிறது’ என்று புலம்புகிறாராம் வேல்முருகன்.”

‘பாரிவேந்தரும் தி.மு.க சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்தான். அவர் சுதந்திரமாகத்தானே இருக்கிறார்?”

“பாயின்டைப் பிடித்துவிட்டீர்கள். `பாரிவேந்தர் நேரடியாக பா.ஜ.க-வை ஆதரித்துப் பேசினாலும் தி.மு.க எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை. ஆனால், அண்ணனைப் படுத்தியெடுக்கிறார்கள். தி.மு.க-வில் பணம் படைத்தவர்களுக்கு ஒரு மரியாதை, இல்லாதவர்களுக்கு ஒரு மரியாதை...’ என்று புகார் வாசிக்கிறார்கள் வேல்முருகனுக்கு நெருக்கமானவர்கள்.”

“சட்டமன்றத்தில் வீராவேசமாகப் பேசிவிட்டு, கடைசியில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்துக்கு அரசு ஒப்புதல் கொடுத்த பின்னணி...”

“இந்த விவகாரத்தை பா.ஜ.க சர்ச்சையாக்கியதுமே, பதற்றமாகியிருக்கிறது தி.மு.க. உடனே பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும்படி சேகர் பாபுவுக்கு உத்தரவிட்டிருக்கிறது முதல்வர் தரப்பு. அரசுக்கு ஆதரவான ஆதீனங்கள் மூலம் இந்த விவகாரத்தைக் கையாள நினைத்து, நேரடியாக ஆதீனத் தலைவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார் சேகர் பாபு. மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனையில், ‘இந்த மரபைத் தடுத்து நிறுத்தினால் அது வேறு மாதிரியாகத் திரிக்கப்பட்டு அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, இப்போது இதில் தலையிட வேண்டாம்’ என்று சொல்லிருக்கிறார்கள் ஆதீனங்கள். அதன் பிறகே முதல்வர் இல்லத்துக்கு ஆதீனங்களை அழைத்துச் சென்றிருக்கிறார் சேகர் பாபு. அங்கிருந்த முதல்வரின் செயலாளர்கள், ‘மரபுப்படி இந்த முறை செய்துவிடுங்கள். முதல்வரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுவிட்டார்’ என்று சொல்ல, அருகிலிருந்த முதல்வர் அதை ஆமோதிப்பதுபோலச் சிரித்திருக்கிறார். கசப்புடன் ஆரம்பித்த இந்த விவகாரம் புன்னகையுடன் முடிந்திருக்கிறது” என்ற கழுகாருக்கு முந்திரிப் பருப்புகளைச் சாப்பிடக் கொடுத்தோம். அதைக் கொறித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார் கழுகார்.

“அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பே அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக, துறையின் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு மாற்றம் இருக்கப்போகிறது. மின்வாரிய சேர்மனாக இருக்கும் ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவர விரும்புகிறாராம் முதல்வர். அமைச்சர் செந்தில் பாலாஜியோ, ‘பிரச்னைகளைச் சமாளித்து மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நேரத்தில் இவரை மாற்றினால் எனது துறைக்குச் சிக்கல் வந்துவிடும்’ என்று முதல்வரிடம் புலம்ப, லக்கானியை மாற்றும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்கள். சுகாதாரத்துறையைக் கையில் வைத்திருக்கும் ராதாகிருஷ்ணன், உள்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் வேறு துறைகளுக்கு மாற்றப்படலாம் என்பதே கோட்டையிலிருந்து வரும் தகவல்.”

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

“வெறும் தி.மு.க செய்திகளாகவே இருக்கின்றனவே... வேறு ஏதும் இல்லையா?”

“பா.ஜ.க செய்தி ஒன்று இருக்கிறது. அண்ணாமலையின் இலங்கைப் பயணம் இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த அசைன்மென்ட் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்ப இலங்கையின் பொருளாதாரச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க. அதன் ஒரு பகுதியாகவே இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கிவருகிறது. அப்படியே கச்சத்தீவை மீட்பது பற்றியும் யோசிக்கிறதாம் பா.ஜ.க. ஆனால், இலங்கையில் இப்போது இருக்கும் பிரச்னைகள் சரியாகட்டும். பிறகு இதில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறார்களாம்” என்ற கழுகார்.

“ `விக்னேஷ் காவல் மரண வழக்கில் ஆறு காவலர்களைக் கைதுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் புகழும்பெருமாளை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை?’ என்று கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கிலிருந்து சிலரைக் காப்பாற்ற தமிழ்க் கடவுளின் பெயரைக்கொண்ட சி.பி.சி.ஐ.டி உயரதிகாரி ஒருவர் டீல் பேசிவருகிறாராம். இதைக் கேள்விப்பட்ட டி.ஜி.பி அலுவலக உயரதிகாரி, `அவரை உடனடியாக மாற்றுங்கள்’ என்று குறிப்பு அனுப்பியிருக்கிறாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சட்டசபைத் தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செயல்படாததால், கொங்கு தி.மு.க-வில் எக்கச்சக்க மாற்றங்களை நிகழ்த்தப்போகிறார்களாம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றப்படவுள்ளனர். கோவையில் டாக்டர் மகேந்திரனுக்கும், திருப்பூரில் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்கிறார்கள்.

* சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. இந்த விவகாரத்தில் ஆளும் தரப்பு மக்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளவில்லை என்று கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள். முதியவர் ஒருவர் தீக்குளித்தே அதை நிறுத்தினார். இந்த அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றத்தின் பின்னணியில் ஆளுங்கட்சி வி.வி.ஐ.பி ஒருவர் இருக்கிறார் என்ற தகவல் மக்களின் கோபத்தை மேலும் கூட்டியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism