Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!

காவல்துறையின் பணியில் யாராவது மூக்கை நுழைத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என அமைச்சர்களை எச்சரித்தாராம்.

பிரீமியம் ஸ்டோரி

ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகம், தலைமைச் செயலகம் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு டபுள் மாஸ்க் அணிந்துக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க வந்தமர்ந்தார் கழுகார். ஜில்லென கரும்புச் சாற்றை அவருக்கு அளித்தோம். ஒரே மடக்கில் குடித்து முடித்தவர், நமது கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “அ.தி.மு.க பஞ்சாயத்து முடிந்துவிட்டதாக நினைத்துவிட வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி தட்டிப்பறித்துச் சென்றாலும், பன்னீர் சும்மா இருக்கப்போவதில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வரும் மாதங்களில் அ.தி.மு.க-வில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று மட்டும் தெரிகிறது. சரி, அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். தி.மு.க அரசு ஜெட் வேகத்தில் பணிகளைத் தொடங்கிவிட்டதை கவனித்தீரா?” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!

“ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா நிவாரணம் முதற்கட்டமாக 2,000 ரூபாய், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசு காப்பீடு திட்டத்தில் ஏற்றுக்கொள்வது, ரெம்டெசிவிர் மருந்து அனைத்துப் பெரிய நகரங்களிலும் கிடைக்க ஏற்பாடு என்று ஓப்பனிங் ஓவரிலேயே சிக்ஸர்களாக அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, மகளிருக்கான இலவச பஸ் பயணத்தில் திருநங்கைகளையும் இணைத்தது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்திப் பெற்றது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக்கொண்ட வார் ரூம் என நிர்வாக ரீதியாகவும் ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்டாலின். பொதுவாக தமிழக அரசுக்கு ஆலோசகர் என்ற பதவியில் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஸ்டாலின் வித்தியாசமாக, ஒவ்வொரு துறைக்கும் ஆலோசகர்களை நியமிக்கப்போகிறார் என்கிறார்கள்.”

“பலே... பலே... அமைச்சரவைக் கூட்டத்திலும் கடுமை காட்டினாராமே?”

“காவல்துறையின் பணியில் யாராவது மூக்கை நுழைத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என அமைச்சர்களை எச்சரித்தாராம். அதிகாரம் கிடைத்தவுடன் வழக்கமாக காவல் நிலையங்களில் பஞ்சாயத்து செய்வது, அதிகாரிகளை மிரட்டுவது எனச் சில தி.மு.க நிர்வாகிகளின் சலம்பல் சற்றுத் தூக்கலாக இருக்கும். நிர்வாகிகள் சிலர் காக்கிகளுடன் இணைந்து கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபடுவார்கள். ‘எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் மூக்கை நுழைக்கக் கூடாது’ என்று அமைச்சர்களுக்குத் தெளிவாக உத்தரவிட்ட ஸ்டாலின், ‘காவல் துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் என் கண்காணிப்பு இருக்கும்’ என்று சொன்னவுடன் சீனியர்கள் சிலருக்கு முகம் வெளிறிவிட்டதாம். கூட்டம் முடிந்தவுடன், ‘நம்ம பேச்சைக் கேட்க மாட்டார்போலயே...’ என்று சிலர் முணுமுணுத்திருக்கிறார்கள். பதவியேற்று ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்றபோது, வாயிலில் முன்பு ஜெயலலிதா படம் இருந்த இடத்தில் அவருடைய படமும், கருணாநிதி படமும் இடம்பெற்றிருந்ததைப் பார்த்துவிட்டு, அவற்றை உடனே அகற்றச் சொல்லியிருக்கிறார். ‘க்ளீன் கவர்மென்ட்’ கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர். உடன்பிறப்புகள்தான் ஒத்துழைக்க வேண்டும்.”

மிஸ்டர் கழுகு: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!

“ம்ம்... அமைச்சர் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பனுக்கு எதிராக தி.மு.க சீனியர்கள் சிலர் பொருமலில் இருப்பதாகச் சொல்கிறார்களே. என்ன விவகாரமாம்?”

“எல்லாம் இலாகா பஞ்சாயத்துதான். சீனியர்கள் பலருக்குத் துறைகளை உடைத்து அளித்திருக்கிறார்கள். உதாரணமாக, கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறையை மொத்தமாக துரைமுருகன்தான் கவனித்தார். இந்தமுறை அவருக்கு நீர்வளத்துறை மட்டும் பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், பசையுள்ள மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறைகளை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கியிருப்பது தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிச்சன் கேபினெட்டுக்கு விசுவாசமான எ.வ.வேலுவுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறைகளை ஒதுக்கியிருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொடுக்கப்பட்டதன் பின்னணியில் சசிகலா குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.”

“என்ன சொல்கிறீர்... தி.மு.க அமைச்சரவையில் சசிகலா குடும்பம் எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும்?”

“இது ஆதிக்கமல்ல... அனுசரணைக்காக அளிக்கப்பட்ட ஆதரவு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் கீழ்தான் டாஸ்மாக் வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், மிடாஸ் மதுபான ஆலையின் வருமானத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாதபடி சசிகலா குடும்பம் பார்த்துக்கொண்டது. அதேபோல, தி.மு.க ஆட்சியிலும் வருமானம் தொடர வேண்டும் என்பதில் அந்தக் குடும்பம் தெளிவாக இருக்கிறதாம். மிடாஸ் நிர்வாகத்தை இப்போது இளவரசி குடும்பம்தான் கவனித்துக்கொள்கிறது. அவர்கள்தான் செந்தில் பாலாஜிக்கு 150 ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை தி.மு.க-வில் அவர் பெறுவதற்கு உதவினார்களாம். செந்தில் பாலாஜி மூலமாகத் தங்கள் வருமானம் தொடர்வதற்குத்தான் இந்த ஏற்பாடு என்கிறது விவரமறிந்த வட்டாரம். அதேபோல, எ.வ.வேலுவும் 50 ஸ்வீட் பாக்ஸ்களை அறிவாலயத்துக்குக் காணிக்கையாக்கி விட்டுத்தான் பொதுப்பணியைப் பெற்றார் என்கின்றன தி.மு.க வட்டாரங்கள். ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் வழக்கு நிலுவையிலிருக்கும்போது திருமயம் ரகுபதிக்கு அதே ஊழல் ஒழிப்புத்துறை வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. கட்சி மாறி வந்த ராஜகண்ணப்பனுக்கு பசையான பதவியா என்பதும் உடன்பிறப்புகளின் ஆதங்கம்.”

“சரிதான்... ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையை கவனித்தீரா?”

“கவனித்தேன்... கவனித்தேன்... ‘தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்” என்கிற வைகோவின் அறிக்கை தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘எழுவர் விடுதலை விவகாரம் மத்திய அரசின் கையிலிருக்கும் நிலையில், வைகோ எதற்காக இந்த விவகாரத்தில் தி.மு.க அரசைச் கோத்துவிடுகிறார்?’ என்று தி.மு.க நிர்வாகிகள் உஷ்ணமாகிறார்கள். வைகோவின் அறிக்கைக்குப் பிறகு ஸ்டாலினிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், ‘ஆட்சி அமைந்த சில தினங்களிலேயே நமக்கு நெருக்கடியை உருவாக்கிவிட்டாரே வைகோ’ என்று பொருமியிருக்கிறார். ஸ்டாலினும், ‘இந்த விவகாரத்தை வைகோவே நேரடியாகச் சொல்லியிருக்கலாம். ஏன் இப்படிச் செய்தார்?’ என்று வருத்தப்பட்டாராம்” என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியை அளித்தோம். காபியைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“பலரும் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமைச் செயலாளராக வருவார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், இறையன்புவைத் தலைமைச் செயலாளராக்கியிருக்கிறார் முதல்வர். தனது செயலாளர்களில் ஒருவராக உமாநாத்தை ஸ்டாலின் நியமித்திருப்பதுதான் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, கொரோனா கால மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டினார். அப்போது உமாநாத் தான் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் எம்.டி-யாக இருந்தார். அப்படிப்பட்டவரை ஸ்டாலின் எப்படித் தேர்வு செய்தார் என்கிறார்கள் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். ஆனால், ‘உமாநாத் எம்.டி-யாக இருந்தபோதும் பவர் இல்லாதவராகவே வைக்கப்பட்டிருந்தார். மருத்துவப்பணிகள் கழகத்தின் மற்ற இரு அதிகாரிகள்தான் முறைகேட்டில் ஈடுபட்டனர். இது குறித்து விவரமாக விசாரித்த பிறகே உமாநாத்தைத் தன் செயலாளராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின்’ என்கிறது முதல்வர் அலுவலக வட்டாரம்.’’

மிஸ்டர் கழுகு: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!

“அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டனவே!”

“சம்பளத்தைவிட இதர வருமானம் கொட்டும் என்பதால், எப்போதுமே இந்தப் பதவிக்குப் போட்டி அதிகம். தற்போது இதற்கான போட்டி தொடங்கியிருப்பதால், கிச்சன் கேபினெட்டின் உறவுகள் நேரடியாக இதில் இறங்கிவிட்டார்களாம். ஏலம் விடாத குறையாக ரேட் ஏறிக்கொண்டே செல்கிறதாம்” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“அ.தி.மு.க ஆட்சியில் நிரப்பப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பதவிகளை ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்போகிறார்களாம். மீண்டும் புதிதாகத் தேர்தல் நடத்தப்பட விருக்கிறதாம். அதேபோல, ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே முடிந்திருக்கிறது. அதிலும் இரு கட்சிகளும் சரிபாதியாகவே வென்றிருக்கின்றன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கு மட்டும் செலவு செய்து தேர்தல் நடத்துவதற்கு, ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்பு பதவிகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் முழுமையாகத் தேர்தலை நடத்தலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் ஸ்டாலின். இதனால், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் உதறலில் இருக்கிறார்கள். அப்படி நடந்தால் நீதிமன்றம் செல்வதற்கும் சிலர் தயாராகிவருகிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!

*****

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* டெல்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பை பிடிக்க பலரும் முட்டி மோதும் நிலையில், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் தன் மகனுக்கு அமைச்சரவையில் இடமில்லாததால், அந்த பதவியை தன் ஆதரவாளருக்குக் கேட்டு கேப்பில் கெடா வெட்டுகிறாராம்.

* கொரோனா பாதிப்பால் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறிய முன்னாள் அ.தி.மு.க வி.ஐ.பி ஒருவர், மே 6-ம் தேதி இரவு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திவிட்டுக் கிளம்பினாராம். கொரோனா பாதிப்பிலிருந்ததாகச் சொன்னவர் அங்கு ஏன் வந்தார்... அவருடன் ஆலோசனை நடத்திய இரண்டு மருத்துவ உயர் பொறுப்பிலிருந்தவர்கள் யார் யார் என்று விசாரணையை ஆரம்பித்திருக்கிறது முதல்வர் அலுவலகம்.

உஷாரான மாப்பிள்ளை!

மக்களைக் காக்கும் துறையை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்மீது ஊழல் கறைகள் படிந்திருக்கின்றன. என்றைக்கு இருந்தாலும் இது சிக்கல்தான் என்பதை உணர்ந்த அந்த முன்னாள் அமைச்சரின் கடவுள் பெயர்கொண்ட உதவியாளர் ஒருவர், பல்வேறு தொடர்புகள் மூலமாக தி.மு.க மாப்பிள்ளையிடம் சென்றுவிட்டாராம். சந்தித்துவிட்டு வந்ததோடு, ‘தி.மு.க ஆட்சியிலும் நான் அதிகாரத்தோடுதான் இருப்பேன்’ என்று தன் நெருங்கிய வட்டாரங்களில் கூறியிருக்கிறார். நாட்டையே உலுக்கிய குட்கா வழக்கிலும், இந்த உதவியாளரின் கைங்கர்யம் இருப்பதால், மாப்பிள்ளை தரப்பு உஷாராகிவிட்டதாம்.

சூடுபிடிக்கும் ஊழல் வழக்குகள்!

தேர்தல் பிரசாரத்தில் சொன்னதுபோலவே முன்னாள் முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல், சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. கடந்த சில மாதங்களாக காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவிக்கு டி.ஜி.பி கந்தசாமி நியமிக்கப்பட்டிருக் கிறார். இதேபோல சி.பி.சி.ஐ.டி பிரிவின் டி.ஜி.பி-யாக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் நடந்த பண மோசடி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை இவர் கையாள்வார் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு