Published:Updated:

மிஸ்டர் கழுகு: யார் டான்? - விஜய்க்கு எதிராக எஸ்.கே-வுக்கு கொம்பு சீவும் உதயநிதி!

சிவகார்த்திகேயன், உதயநிதி, விஜய்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன், உதயநிதி, விஜய்

‘விஜய்யின் அரசியல் பிரவேச முன்னெடுப்புகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். வளரவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து’ என்று உதயநிதியைச் சுற்றியிருப்பவர்கள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: யார் டான்? - விஜய்க்கு எதிராக எஸ்.கே-வுக்கு கொம்பு சீவும் உதயநிதி!

‘விஜய்யின் அரசியல் பிரவேச முன்னெடுப்புகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். வளரவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து’ என்று உதயநிதியைச் சுற்றியிருப்பவர்கள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
சிவகார்த்திகேயன், உதயநிதி, விஜய்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன், உதயநிதி, விஜய்

“ஒரு வழியாக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல் வந்துவிட்டது” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகார், “அ.தி.மு.க தலைமையிலும் மாற்றம் வரப்போகிறது...” என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

“அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தலைவர், செயல் தலைவர் என்கிற புதிய பதவிகளை உருவாக்கும் திட்டம் இருக்கிறதாம். அதேபோல கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்தப்போகிறார்கள். ஜூன் முதல் வாரத்துக்குள் பொதுக்குழுவைக் கூட்டி, அ.தி.மு.க சட்ட விதிகளில் இதற்கான திருத்தத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்கிறார்கள்.”

“அதற்கு ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்வாரா?”

மிஸ்டர் கழுகு: யார் டான்? - விஜய்க்கு எதிராக எஸ்.கே-வுக்கு கொம்பு சீவும் உதயநிதி!

“இதுவரையில் எல்லாம் அவர் ஒப்புதலுடன்தான் நடந்ததா என்ன... தி.மு.க விஷயத்துக்கு வருகிறேன். ஜூன் 3-ம் தேதிக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிறது தி.மு.க. கட்சி நிர்வாகத்தை 77 மாவட்டத்திலிருந்து 55-ஆகக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், சுமார் இரண்டு டஜன் மாவட்டச் செயலாளர்கள் பதவியை இழப்பார்கள் என்பதால், இப்போதிருந்தே இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், கட்சித் தலைமை இதில் கறாராக இருக்கிறதாம். ‘மாவட்டப் பொறுப்பாளர்கள் அதிகம் இருப்பதால்தான் கட்சிக்குள் நிறைய சிக்கல்கள் எழுகின்றன என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறது தலைமை’ என்கிறார்கள் அறிவாலயத்தில்...’’

“இதற்கு பஞ்சு மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே...!”

“ஆமாம்... ஆமாம். இதற்கிடையே அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் இருவரையும் அழைத்துப் பேசியிருக்கிறார் ‘மாப்பிள்ளை.’ ‘நீங்க ரெண்டு மாவட்டச் செயலாளர்களும்தான், அதிகமான சட்டமன்றத் தொகுதிகளை வெச்சுருக்கீங்க. பெரிய பாதிப்பு இல்லாமல், ஒருசில தொகுதிகளை மட்டும் உங்க மாவட்டத்துலருந்து பிரிச்சு வேறொரு மாவட்டத்துக்குத் தரலாம்னு யோசிக்கிறோம்’ என்றிருக்கிறார் மாப்பிள்ளை. அமைச்சர்கள் இருவருமே நாசுக்காக மறுத்திருக்கிறார்கள். அவர் விடாப்பிடியாக வற்புறுத்த, ‘நாங்க தலைவர்கிட்ட பேசிக்கிறோம்’ என்று கிளம்பியிருக்கிறார்கள். முதல்வரிடத்திலும் இந்தப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. அதன் பிறகுதான், ‘மா.சு., சேகர் பாபு விஷயத்துல நீங்க தலையிட வேண்டாம்’ என்றிருக்கிறார் முதல்வர். ஆக, இவர்கள் இருவரின் மாவட்டங்களும் இப்போதைக்கு அப்படியே தொடரும் என்று தெரிகிறது.”

“ஓஹோ...”

“இன்னொரு பக்கம், மாவட்டச் செயலாளர் பதவிகளில், ‘மாஸ் சேஞ்ச்’ கொண்டுவர உதயநிதி முயல்வதாகத் தகவல். நீண்டகாலமாக பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைத் தூக்கிவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறார் என்கிறார்கள். கனிமொழி உள்ளிட்ட பிற குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கான கோட்டாவைக் கேட்கிறார்களாம். ஒரேயொரு மா.செ மட்டுமே இருப்பதால், பட்டியலினச் சமூகமும் கூடுதல் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்கிறது. முதற்கட்டமாக, ‘அமைச்சர் பதவியோடு மாவட்டச் செயலாளர் பதவியையும் வைத்திருப்பவர்களிடமிருந்து கட்சிப் பதவியை விட்டுத்தரச் சொல்வோமா?’ என்று நேருவிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் முதல்வர்.”

“நடிகர் விஜய்க்கும் உதயநிதிக்கும் என்ன பிரச்னை..?”

“ ‘டான்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுவிழாவில், ‘தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன்தான்’ என உதயநிதி பேசியதைக் கேட்கிறீரா... கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கும் உதயநிதிக்கும் ‘டேர்ம்’ சரியில்லை. ‘விஜய்யின் அரசியல் பிரவேச முன்னெடுப்புகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். வளரவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து’ என்று உதயநிதியைச் சுற்றியிருப்பவர்கள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் இசைந்துவிட்டதன் வெளிப்பாடுதான் அந்தப் பேச்சு. அதே மேடையில், ‘குருவி’ படத்தை உதயநிதி தயாரித்ததையெல்லாம் கேலி செய்து பேசியிருக்கிறார்கள். விஜய்க்கும் உதயநிதிக்கும் நெருக்கமான தொழிலதிபர் ஒருவர், விஜய்யின் மனநிலையை உதயநிதி தரப்புக்கு அவ்வப்போது தெரியப்படுத்துகிறாராம். சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள நட்சத்திர அடுக்குமாடிக் குடியிருப்பில் ரகசிய கூட்டம் போட்டு, ‘திரைத்துறையில் விஜய் அடி வாங்கினால், அரசியலுக்கு வரும் ஆசையையே கைவிட்டுவிடுவார்’ என்று பேசப்பட்டிருக்கிறது. விஜய்க்கு அடுத்தபடியான ஓப்பனிங் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால், விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனைக் கொம்புசீவிக் களமிறக்க நினைக்கிறது உதயநிதி தரப்பு”

“விஜய் தரப்பில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்...”

“விஜய்யைக் குறிவைத்தே இந்த ‘டான்’ சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் உதயநிதி என்பது விஜய்க்கு நன்கு தெரியும். விஜய் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.விஜய்யை அரசியலுக்குள் இழுக்காமல் விட மாட்டார்கள்போல...” என்ற கழுகாருக்கு, மழைக்கு இதமாக இஞ்சி டீ கொடுத்தோம். அதைப் பருகியபடியே அடுத்த விஷயத்துக்கு நகர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: யார் டான்? - விஜய்க்கு எதிராக எஸ்.கே-வுக்கு கொம்பு சீவும் உதயநிதி!

“ராஜ் பவனிலிருந்து கொஞ்ச காலத்துக்கு எந்தப் பரபரப்புச் செய்தியும் வராது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ‘ஆளுநரின் அதிகாரம்தான் என்ன... எத்தனை காலம்தான் ஒரு ஃபைலைக் கிடப்பில் போட்டுவைப்பார்... அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆளுநர் செவிசாய்ப்பது இல்லையா?’ என்றெல்லாம் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அதற்குப் பிறகே இந்த மாற்றம். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம்பொருத்தமாக இருக்கும் நிலையில், நீதிமன்றமும் ஆளுநருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்திருப்பதால் ஆளுநரும் அப்செட் என்கிறார்கள். ‘அரசியல் விவகாரங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக இப்போது வீரியமாகச் செயல்பட வேண்டாம். அதைத் தமிழ்நாடு பா.ஜ.க பார்த்துக்கொள்ளும். நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்’ என்று டெல்லியிலிருந்து சொல்லிவிட்டார்களாம்.”

“டெல்லி என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. டெல்லி அலுவலகக் கட்டடம் கட்டும் அ.தி.மு.க-வின் முயற்சி எந்த நிலையில் இருக்கிறது?”

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே திறப்புவிழா கண்டிருக்கவேண்டிய கட்டடம், சில அனுமதிகள் கிடைக்காததால் முடங்கிவிட்டது. ஒருவழியாக எல்லா அனுமதியையும் தளவாய்சுந்தரம் வாங்கிக்கொடுத்துவிட்டாராம். கட்டடம் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டு, ஜூலை மாதத்தில் திறப்புவிழா கண்டுவிடும் என்கிறார்கள். சமீபத்தில் திறக்கப்பட்ட தி.மு.க அலுவலகத்துக்கே இப்போதுதான் மின் இணைப்புக்கான ஒப்புதலே கிடைத்திருக்கிறது” என்று புறப்படத் தயாரான கழுகாரிடம், “அதிகாரிகள் மாற்றம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...” என்றோம்.

“அதிகாரிகள் மாற்றம் உறுதியாக இருக்கும். உள்துறைச் செயலாளர் பதவிக்குத்தான் அதிக போட்டி. ‘விநாயகரின்’ பெயருள்ள அதிகாரி, முதல்வர் பார்வைக்குச் சென்ற பட்டியலில் எப்படியோ தன் பெயரைச் சேர்த்துவிட்டார். அவரது ‘டிராக் ரெக்கார்டு’ படு மோசமாக இருந்ததால் ‘நோ’ சொல்லிவிட்டாராம் முதல்வர்” என்றபடி சிறகை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டிருந்த கான்ட்ராக்டர், பெரிய இனிஷியல் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் மீண்டும் கான்ட்ராக்ட்டுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார். எந்த டெண்டர் எடுத்தாலும், தனது ஏரியாவுக்குள் வரக் கூடாது என்று அதே மாவட்டத்தின் மற்றோர் அமைச்சர் அந்த கான்ட்ராக்டருக்கு ‘ஸ்ட்ரிக்ட் ஆர்டர்’ போட்டுவிட்டாராம்.

* டெல்டா மாவட்டத்தின் அ.தி.மு.க மூத்த தலைவர், ரிங் ரோடு போடும் கான்ட்ராக்ட்டை பினாமி பெயரில் எடுத்திருக்கிறார். ஆளுங்கட்சிப் பிரமுகரின் முழு ஆசியுடன்தான் இது நடந்திருக்கிறது என்று தலைமைக்குப் புகார் தட்டியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

நீர்வள ஆதார அமைப்பு தலைமை அலுவலகத்தின் அதிகாரி ஒருவர், உடன் வேலைபார்க்கும் பெண் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கிறாராம். ‘அவருக்கு, உயர் பொறுப்பிலுள்ள பெண் அதிகாரியும் உடந்தை’ என்கிறார் பாதிக்கப்பட்ட பெண். முதல்வர் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாறாக, அந்தப் பெண்ணுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை நிறுத்திவைத்துவிட்டார்களாம். நியாயம் கேட்டு, மீடியா முன்பு தோன்றத் தயாராகிறார் அந்தப் பெண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism