சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அப்செட்டில் தி.மு.க தலைவர்கள்... அவமதித்தாரா தலைமைச் செயலாளர்?

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

‘மாநில அரசுகள் ஒன்றும் மத்திய அரசுக்கு அடிமைகள் அல்ல’ என்கிறரீதியில் பேசியிருக்கிறார்.

‘‘நாட்டில் எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் `20 லட்சம் கோடி’ என்று முணுமுணுக்கிறார்கள்’’ என்றபடி ஹேங்அவுட்ஸ் மீட்டிங்கில் ஆஜரானார் கழுகார்.

அவரிடம், ‘‘அதுபற்றி இந்த இதழிலேயே தனிக்கட்டுரை வருகிறது’’ என்று சொல்லிவிட்டு, ‘‘தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் தடையில்லாமல் நடைபெறுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முழங்கியுள்ளாரே?’’ - கேள்வியை வீசினோம்.

‘‘மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே முதல்வர் இப்படி முழங்கியிருக்கிறார். மே 17-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்குத் திட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள்குறித்து மாநில முதல்வர்களுடன் ஏற்கெனவே பிரதமர் உரையாற்றியிருந்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம்குறித்து கேட்டுள்ளார். பலரும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘அப்போது முதல்வர், ‘தமிழக அரசு அறிவித்த அனைத்து உதவிகளும் பயனாளிகளுக்குச் சென்று சேர்கின்றனவா என்பதை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மற்றொரு காரணமும் சொல்கிறார்கள். அரசு அறிவித்த திட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பணமும் உணவுப்பொருளும் வழங்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அது பல இடங்களில் முழுமையாகச் சென்றடையவில்லை எனப் புகார் வந்துள்ளது. அதுகுறித்தும் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். ‘உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு எந்த ரூபத்திலும் வந்துவிடக் கூடாது. இன்னும் இரண்டு மாதங்கள் இந்த நிலையே நீடிக்கலாம்’ என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார் முதல்வர். அதையடுத்தே மக்களுக்காக உரையாற்றியிருக்கிறார்.’’

டி.ஆர்.பாலு.
டி.ஆர்.பாலு.

“மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனையில் என்ன நடந்தாம்?”

“மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கித் தீர்த்துவிட்டாராம்.

‘மாநில அரசுகள் ஒன்றும் மத்திய அரசுக்கு அடிமைகள் அல்ல’ என்கிறரீதியில் பேசியிருக்கிறார். தமிழகத் தரப்பில், ‘விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை அவசரப்பட்டு இயக்க வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘ரெட் அலர்ட் பகுதியில் ஊரடங்குத் தளர்வு இப்போது வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்த ஆலோசனையின் அடிப்படையில்தான் ஊரடங்கின் நான்காம் பகுதி அமையும் என்று பிரதமர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். அதாவது ஊரடங்கு என்று அரசு அறிவித்தாலும், இயல்பு வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இருக்காதது போன்று நான்காம்கட்ட ஊரடங்கு இருக்கும் என்கிறார்கள்.’’

‘‘அப்படியெனில், முழுத் தளர்வு எப்போது?’’

“ஏன்... இப்போதே கிட்டதட்ட இயல்பு வாழ்க்கைபோல்தானே செல்கிறது. இப்படியே படிப்படியாக தளர்வுகளைக் கொண்டுவரும் திட்டம் உள்ளது. அதே நேரம் சென்னையில் மட்டும் தொடர்ந்து கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.’’

‘‘மீண்டும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் குளறுபடிகள் அதிகரித்துவிட்டனபோலவே?”

“கடந்த இதழில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை முன்வைத்து தி.மு.க-வினருக்கும் ஐபேக் நிறுவனத்தினருக்கும் இடையே நடக்கும் உள்குத்து யுத்தம் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது கட்சி நிர்வாகிகள் இடையேயும் ஏகத்துக்கும் உரசலாம். குறிப்பாக, ஒன்றியச் செயலாளர்களை மாவட்டச் செயலாளர்கள் செலவழிக்கச் சொல்வதும், கிளை நிர்வாகிகள் கையில் ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைப்பதுமாகவும் இருக்கிறார்கள். குளறுபடிகளைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் ‘உங்களிடம் உள்ள மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படையுங்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.”

‘‘ஆனால், அதுவும் சிக்கலாகிவிட்டதே!’’

சண்முகம்
சண்முகம்

“மாவட்டச் செயலாளர்கள் ஆட்சியரைச் சந்திக்க நேரம் கேட்டதும், பலரும் கொடுத்து விட்டார்கள். ஆனால், கையில் கத்தையாக ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் வந்த மனுக்களோடு சந்திப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லையாம். பல மாவட்ட ஆட்சியர்கள், ‘இந்த மனுக்களை வாங்குவதா, வேண்டாமா எனக் குழம்பியிருக்கிறார்கள். சரி... கொடுத்ததை வாங்கி வைத்துக்கொள்ளலாம் என வாங்கியுள்ளனர். அந்த வகையில் தலைமைச் செயலாளரை தி.மு.கழக எம்.பி-க்கள் சந்தித்தது, பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. இருதரப்பும் தற்போது அறிக்கை யுத்தத்தை ஆரம்பித்துவிட்டன.”

‘‘சந்திப்பில் என்ன நடந்ததாம்?’’

“தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் வந்த ஒரு லட்சம் மனுக்களுடன் தலைமைச் செயலகத்துக்கு டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகிய நால்வரும் சென்றுள்ளனர். அவர்கள் தலைமைச் செயலாளர் அறைக்குள் நுழைந்தபோது, சண்முகம் தனது அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாராம். ‘அமருங்கள்’ என்றுகூட சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாராம்.’’

‘‘அப்படியா?’’

‘‘அதன் பிறகு நால்வரும் அமர, வந்தவர்களிடம் பேசுவதைவிட தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்ப்பதில் கவனமாக இருந்தாராம் சண்முகம். உடனே தயாநிதி மாறன், ‘தொலைக்காட்சி சத்தத்தைக் குறையுங்கள்’ என்று அலுவலக உதவியாளரிடம் சொல்ல... அவரும் குறைத்துள்ளார். உடனே அந்த உதவியாளரை ஏகத்துக்கும் சத்தம்போட்டாராம் சண்முகம். அப்போது டி.ஆர்.பாலு, ‘நாங்கள் மக்கள் குறைகளைச் சொல்ல வந்துள்ளோம். அதற்கு மரியாதைகொடுங்கள்’ என்று கேட்க, ‘நீங்கள்தான் தனி அரசாங்கம் போன்று செயல்படுகிறீர்கள். இது உங்களால் ஏற்பட்ட பிரச்னைதான்’ என்கிறரீதியில் அழுத்தமாக குரல்கொடுத்தாராம்.’’

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில்...
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில்...

‘‘அச்சச்சோ!’’

“அதுவரை அமைதியாக இருந்த டி.ஆர்.பாலு, ‘வி ஆர் பப்ளிக் ரெப்ரசன்டேடிவ்ஸ்’ என்று ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். எதற்கும் பிடிகொடுக்காத சண்முகம், ‘உங்கள் அவசரத்துக்கு இந்த மனுக்களை பரிசீலனை செய்ய முடியாது. பொறுமையாகத்தான் செய்ய முடியும். வெளியில் போய் பிரஸ்ஸைப் பார்த்து இதைச் சொன்னாலும் பிரச்னை இல்லை’ என்று சொல்லி, சீட்டைவிட்டு எழுந்துவிட்டாராம். கலாநிதி அந்த நேரத்திலும் சண்முகத்தைச் சமாதானப்படுத்த, ‘மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழகம் முழுவதும் மனு கொடுத்துள்ளீர்கள். இப்போது என்னிடம் கொடுக்கிறீர்கள்’ என்றாராம். ‘நீங்கள் ஒரு தலைமைச் செயலாளர் என்பதை மறந்துவிட்டீர்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்புவோம்’ என்று பாலு கடிந்துகொண்டாராம். இந்த மொத்த களேபரமும் எட்டு நிமிடங்களுக்குள் முடிவடைந்துவிட்டதாம். இந்தத் தகவல் அங்கிருந்தே ஸ்டாலினுக்கு பாஸ் செய்யப்பட்டதாம்.’’

“பிறகு?”

“ஸ்டாலினின் அறிவுரைப்படி அங்கு நடந்த நிகழ்வுகளை அறிக்கையாக வெளியிட்டாராம் பாலு. ‘இதற்குப் பின்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல் இருக்கும்’ என்று தி.மு.க தலைமை நினைக்கிறது. தி.மு.க ஆட்சியில் குட்புக்கில் இடம்பெற்றவர் சண்முகம். மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பவர் என்று தி.மு.க-வினரே அவரைப் பற்றி சிலாகித்தது உண்டு. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு, சண்முகம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்.’’

‘‘இந்தச் சம்பவம் குறித்து சண்முகம் வேறு அறிக்கை வெளியிட்டுள்ளாரே?’’

‘‘ஆமாம். நமது நிருபர் அவரை தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்துதான் முதலில் பிரத்யேகமாக விகடனுக்கு விளக்க அறிக்கையை அனுப்பினார் தலைமைச் செயலாளர். அதில், ‘தி.மு.க நிர்வாகிகள் வந்த சமயத்தில் மத்திய நிதியமைச்சரின் கொரோனா நிவாரணத் திட்ட அறிவிப்புகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தன. அதை நிதித்துறைச் செயலாளரைக் குறிப்பெடுக்கச் சொல்லிவிட்டு, தி.மு.க நிர்வாகிகளை வரவேற்று சோபாவில் அமரச் செய்தேன். அப்போது தொலைக்காட்சி ஒலியளவு குறைவாகவே வைக்கப்பட்டிருந்தது. அப்போது 15, 20 நபர்கள் மனுக்கள் அடங்கிய பெரிய பெரிய கட்டுகளுடன் அறைக்குள் நுழைந்தனர். நான் போட்டோ எடுக்க வேண்டாம் எனக் கூறியதை மீறி போட்டோவும் வீடியோவும் எடுத்தனர். தொடர்ந்து தி.மு.க நிர்வாகிகள், ‘எத்தனை நாள்களில் மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்புவீர்கள்?’ என்று கேட்டனர். ‘அத்தனை மனுக்களையும் பிரித்து அனுப்ப வேண்டும். தற்போது குறைவான அலுவலர்களே பணியில் இருப்பதால் தேதியை உறுதியாகக் கூற இயலாது’ என்றேன். அதை ஏற்க மறுத்தவர்கள், தேதியைக் குறிப்பிடுங்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் டி.ஆர்.பாலு ‘அரசுத் தரப்பில் அலுவலர் இல்லை என்பதால், நடவடிக்கை இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறோம்’ என்று சொல்ல... ‘நீங்கள் எதை வேண்டுமானாலும் பத்திரிகையாளர்களிடம் கூறிக்கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை’ எனத் தெரிவித்து இருக்கையில் இருந்து எழுந்துகொண்டேன். அவர்கள் சொல்வதுபோல் எந்த அவமதிப்பும் செய்யவில்லை. இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் மனுக்களை உடனடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி, மனுக்களை துறைவாரியாகப் பிரித்து ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்’ என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘இதற்கு முதல்வரின் ரியாக்‌ஷன் என்னவோ?”

“தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் எடப்பாடி, ‘எல்லாவற்றிலும் அரசியல் செய்வதே தி.மு.க-வினருக்கு வேலையாகப்போய்விட்டது. கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவிலும் தலைமைச் செயலாளர் அவர்களைச் சந்தித்திருக்கிறார். அதற்காக இப்போது அவரது தலையை உருட்டுகிறார்கள். பேசாமல் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துவிட்டுப் போங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்’ என்று கோபமாகச் சொன்னாராம்.”

“ஒருபுறம் தி.மு.க-வுக்கு எதிராக அதிகாரிகள் யுத்தம் செய்ய... மறுபுறம் தி.மு.க-வினருடன் உறவாடும் அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்?”

“ஆமாம்! சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பாக ஆவணங்களுடன் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். அந்த ஆவணங்கள் எப்படி வெளியே போயின என ஆளுங்கட்சியினர் ஆய்வு செய்ததில், அந்தத் துறையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின்மூலம் தி.மு.க தலைமைக்குச் சென்றதைக் கண்டறிந்துள்ளனர். அதுபோல் காவல்துறை வட்டாரத்திலிருந்தும் தி.மு.க-வினர் மீது பாய்ச்ச திட்டமிடப்படும் வழக்குகள் குறித்து முன்கூட்டியே தகவல் சென்றுவிடுகிறதாம். ‘எப்போதும் ஆட்சி முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அதிகாரிகள் இப்படி உள்ளடி வேலைகள் பார்ப்பார்கள். இந்த முறை ஓராண்டுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்களே’ என்று ஆளுங்கட்சி யோசிக்க ஆரம்பித்துள்ளது.’’

ரங்கராஜன்
ரங்கராஜன்

“கொரோனாவுக்குப் பிறகு தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்துள்ளதே அரசு?”

‘‘ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதாரக் குழு அமைத்திருக்கிறார்கள். தலைமைச் செயலாளர் தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் கூட்டம் வரிசையாக நடந்துவந்தாலும் அதன் பலன் எப்படியிருக்கும் எனத் தெரியாது என்கிறார்கள். மதுபானக் கடைகளை அடைத்ததால் வருவாய் இல்லை என அரசு புலம்புகிறது. ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்கு முன்பு தமிழக அரசு கையில் வணிகவரித் துறை இருந்த காலத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வணிக நிறுவனங்களின் மீது போடப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. கிட்டத்தட்ட மூவாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்த நிறுவனங்கள் அபராதத்துடன் வரித்தொகையைச் செலுத்தியாக வேண்டும். அந்த வழக்குகளில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினாலே, அதில் பாதித்தொகையை தமிழக அரசுக்கு வருவாயாகக் கொண்டுவரலாம்’’ என்ற கழுகார், மீட்டிங்கில் இருந்து வெளியேறினார்.