Published:Updated:

மிஸ்டர் கழுகு: “பணம் உன்னுது... அதிகாரம் என்னுது...” - அன்புச்செழியனுடன் கைகோக்கும் உதயநிதி...

உதயநிதி, அன்புச்செழியன்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, அன்புச்செழியன்

தலைமைக்குள்ளேயே தடுமாற்றம் இருப்பதால், சீட் ஒதுக்கீட்டிலும் பஞ்சாயத்து வெடிக்கும் போல. பன்னீர் தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் வாங்கிவிட நினைக்கிறார்.

மிஸ்டர் கழுகு: “பணம் உன்னுது... அதிகாரம் என்னுது...” - அன்புச்செழியனுடன் கைகோக்கும் உதயநிதி...

தலைமைக்குள்ளேயே தடுமாற்றம் இருப்பதால், சீட் ஒதுக்கீட்டிலும் பஞ்சாயத்து வெடிக்கும் போல. பன்னீர் தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் வாங்கிவிட நினைக்கிறார்.

Published:Updated:
உதயநிதி, அன்புச்செழியன்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, அன்புச்செழியன்

“யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது தி.மு.க தலைமை” என்றபடி ‘என்ட்ரி’ கொடுத்த கழுகார், ‘சீட்’ கிடைத்த பின்னணியை விவரித்தார்.

“ஆறு மாத காலமே எம்.பி-யாக இருந்த காரணத்தால் ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ‘திருமதி முதல்வர்’ ரூட்டைப் பிடித்து சீட் வாங்கிவிட்டார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். எப்படியோ நாமக்கல் மாவட்ட தி.மு.க-வின் சக்தியாக மாறியிருக்கிறார் ராஜேஸ்குமார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் பெயர் ‘டிக்’ ஆகியிருப்பது பலருக்கும் ஆச்சர்யம். அன்பில் மகேஸின் பலமான ரெக்கமண்டேஷனே அதற்குக் காரணமாம். தஞ்சையில் கோலோச்சிய பழனிமாணிக்கத்துக்கு ‘செக்’ வைக்க அதே சமூகத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்துக்கு உதயநிதி மூலம் ‘சீட்’ வாங்கிக்கொடுத்திருக்கிறார் அன்பில் என்றும் பேசுகிறார்கள். ‘80 வயதுக்கு மேலான கல்யாணசுந்தரத்துக்குப் பதில் வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம்’ என்கிற புலம்பலும் கட்சியினர் மத்தியில் இருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: “பணம் உன்னுது... அதிகாரம் என்னுது...” - அன்புச்செழியனுடன் கைகோக்கும் உதயநிதி...

“ம்.”

“கடைசி நேரம் வரை எம்.பி பதவிக்கு மல்லுக்கட்டிய ஆர்.எஸ்.பாரதியிடம், ‘2024 மக்களவைத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறது தலைமை. அதன் பிறகே கிரிராஜன் பெயரைப் பரிந்துரை செய்திருக்கிறார் பாரதி. கிரிராஜன், உதயநிதிக்கு அனுகூலமானவர் என்பதால், ஓ.கே ஆகியிருக்கிறது. இன்னொரு பக்கம், ‘ராஜ்ய சபா எம்.பி பதவியெல்லாம் வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் என்று கட்சி விதியில் திருத்தம் செய்துவிட்டார்களா என்ன...’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள். டி.கே.எஸ்.இளங்கோவனைச் சமாதானப்படுத்த, வாரியத் தலைவர் பதவி தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.”

“காங்கிரஸ் கதைக்கு வாரும்...”

“நான் ஏற்கெனவே சொன்னதுபோல காங்கிரஸ் கட்சி ஒரு சீட்டைப் பெற்றுவிட்டது. கூடவே அந்த ஒற்றை அதிர்ஷ்டசாலி யார் என்கிற மல்லுக்கட்டும் தொடங்கிவிட்டது. வரும் ஜூலை மாதத்தோடு ப.சிதம்பரத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்கிறார்கள். முதலில் அவரை மகாராஷ்டிராவிலிருந்து மறுபடியும் தேர்வுசெய்யவே காங்கிரஸ் தலைமை நினைத்தது. ஆனால், ‘தமிழகத்தில் வாய்ப்பு தந்தால் நல்லாயிருக்கும்’ என்று வாய்விட்டே கேட்டுவிட்டாராம் ப.சி. ‘ஒரு குடும்பம் ஒரு சீட்... ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் தொடர முடியாது... என்று உதய்பூர் சிந்தனை அமர்வில் (சிந்தன் ஷிவிர்) பேசியதெல்லாம் பொய்யா...’ என்று இப்போதே எதிர்க்கோஷ்டிகள் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிவிட்டன. இருந்தாலும் இன்றைய சூழலில் சிதம்பரம் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது அவசியம் என்று நினைக்கிறது டெல்லி தலைமை. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் முடியப்போவதால், கே.எஸ்.அழகிரியும் எம்.பி-யாக முயல்கிறார். இதற்கு நடுவே, சொல்லிவைத்தது போல தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் பெயரையும் சிலர் உள்ளே நுழைக்கிறார்கள். யார் அவர் என்று விசாரித்தேன். அகில இந்திய காங்கிரஸ் ‘டேட்டா அனலிஸ்ட்’ பொறுப்பிலிருக்கிறாராம்.”

“அ.தி.மு.க-வில் யாருக்கு சீட் என்று விசாரித்தீரா..?”

“தலைமைக்குள்ளேயே தடுமாற்றம் இருப்பதால், சீட் ஒதுக்கீட்டிலும் பஞ்சாயத்து வெடிக்கும் போல. பன்னீர் தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் வாங்கிவிட நினைக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகமும் ஜெயக்குமாரும் தங்களுக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். மாஜிக்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தால் அது கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி நினைக்கிறார். மற்றொருபுறம் முன்னாள் அமைச்சர் செம்மலை, `மகளிர் கோட்டா’வில் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோரும் கேட்கிறார்கள். இப்போதுள்ள நிலையில் சி.வி.சண்முகத்துக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். மற்றவர்களைச் சமாதானப்படுத்த கட்சிப் பதவிகள் தரப்படலாம். தமிழ்மகன் உசேனிடம் இருக்கும் தற்காலிக அவைத்தலைவர் பொறுப்பு, ஜெயக்குமாருக்கு நிரந்தரமாக்கப்படலாம்.”

“பா.ஜ.க ஒரு சீட் கேட்கிறதாமே?”

“காங்கிரஸுக்கு தி.மு.க சீட் கொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களும் கேட்கிறார்கள். ஏதாவது நெருக்கடி கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என்பது மாநில பா.ஜ.க-வின் திட்டம்! இன்னொரு விஷயம்... புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று பா.ஜ.க ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், ‘வேட்பாளர்களைத் தயார் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டதாம் தலைமை. ‘நம்மிடம் அத்தனை வேட்பாளர்கள் இல்லையே...’ என்று புதுச்சேரி நிர்வாகிகள் தலையைச் சொறிய, ‘எதிர் முகாம் மட்டுமல்ல, பக்கத்து முகாமாக இருந்தாலும் பரவாயில்லை. அமுக்குங்கள்’ என்று அட்வைஸ் செய்திருக்கிறதாம் தலைமை. பா.ஜ.க-வின் இந்த ‘மூவ்’-ஆல் தங்கள் நிர்வாகிகளை எப்படிப் பாதுகாப்பது என்று என்.ஆர்.காங்கிரஸும் அ.தி.மு.க-வும் தீவிர யோசனையில் இறங்கிவிட்டனவாம்” என்ற கழுகார், நாம் தந்த மிளகாய் பஜ்ஜியை ருசித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“ஓராண்டு தி.மு.க ஆட்சி குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் கெட்ட பெயர் வர, காவல்துறை உயரதிகாரிகள் சிலரின் பொறுப்பற்றதனமே காரணம் என்றும், தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடு படுமோசம், கொஞ்சம் வேகமாகவும் ஆர்வமாகவும் அவர்கள் வேலை பார்த்தாக வேண்டும் என்றும் அந்த ரிப்போர்ட் சொல்கிறது. அரசு அறிவிக்கும் திட்டங்களை, கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது குறித்தும் சுட்டிக்காட்டியிருப்பவர்கள், இதைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களாம்.”

“ஓஹோ...”

“இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். அதிகாரிகள் மாற்றத்துக்கான ஃபைல்கள் இரண்டு முறை முதல்வர் டேபிள் வரை சென்று கையெழுத்தாகாமல் திரும்பிவந்திருக்கின்றன. மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு ஃபைல் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். இதையாவது வெளியிடுவார்களா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அதிகாரிகள். துபாய் பயணச் சர்ச்சை, முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் அழுத்தம் போன்றவற்றால் நேர்மையான அதிகாரிகள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஒருசிலர் மத்திய பணிக்கே சென்றுவிடலாம் என்னும் மனநிலையில் இருப்பதாகத் தகவல்” என்ற கழுகாரிடம்,

“ஆளுநர் ரவி, மறுபடியும் டெல்லி போயிருக்கிறாரே... என்ன விஷயம்?” என்று கேட்டோம்.

“ `பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக’ என்கிறார்கள் ராஜ்பவன் அதிகாரிகள். தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான மதம் தொடர்பான நிர்வாகங்களை அடிப்படைவாத ‘ஐடியாலஜி’ கொண்ட சிலர் கைப்பற்றிவிட்டார்களாம். இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் ஹவாலா முறையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தாராளமாகப் புழக்கத்தில் இருக்கிறது. ஆளுங்கட்சியின் பவர் சென்டருக்கு நெருக்கத்தில் உள்ளவர்களும் லஞ்சம் மற்றும் கமிஷன் பணத்தை ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள் என்பது போன்ற விவகாரங்களை மத்திய உள்துறை அதிகாரிகளிடம் ஃபைலாகக் கொடுத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஆளுநர்” என்ற கழுகார்,

மிஸ்டர் கழுகு: “பணம் உன்னுது... அதிகாரம் என்னுது...” - அன்புச்செழியனுடன் கைகோக்கும் உதயநிதி...

“மே 15-ம் தேதி நடந்த, கமல்ஹாசனின் `விக்ரம்’ பட ஆடியோ வெளியீட்டுவிழாவுக்கு உதயநிதியை அவருடைய வீட்டிலிருந்து அழைத்துவந்தது சர்ச்சைக்குப் பேர்போன ஃபைனான்ஸியரும், அ.தி.மு.க பிரமுகருமான அன்புச்செழியன்தான். கடந்த பத்து ஆண்டுகளாகத் திரைத்துறையே அன்புச்செழியன் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் குற்றச்சாட்டு உண்டு. இப்போது அதே குற்றச்சாட்டு உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனத்தின் மீதமிருக்கிறது. இருவரும் ஒன்றாக இணைந்து திரைப்படங்களை வெளியிடுவது குறித்தும் ஆலோசித்துவருகிறார்களாம். `பணம் உன்னுது... அதிகாரம் என்னுது... ஜமாய்க்கலாம்’ என்பதே திட்டம் என்கிறார்கள்” என்றபடியே விருட்டெனப் பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* ஆளுநர் ரவி, தமிழ் மொழிமீது திடீர்ப் பாசம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். டியூஷன் ஆசிரியர் மூலமாக ஆன்லைனில் தினமும் இரண்டு மணி நேரம் தமிழ் கற்றுக்கொள்கிறாராம்.

* தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் பதவிக்கு ககன் தீப் சிங் பேடி, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம்.

* பேரூராட்சிகளுக்கு மாதம் ரூ.2 லட்சம், நகராட்சிகளுக்கு 25 லட்சம் முதல் 50 லட்சம், மாநகராட்சிகளுக்கு ஒரு கோடி ரூபாய் என்ற அடிப்படையில், கப்பம் செலுத்த வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அமைச்சர் பெயரைச் சொல்லிக் கேட்கப்படும் இந்த டார்கெட்டை எப்படி அடைப்பது என்று தெரியாமல் விழிபிதுங்குகிறார்கள் அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism