Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.ம.மு.க-வை உடைக்க அசைன்மென்ட்! - எடப்பாடி வியூகம்...

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

பா.ம.க-வின் சமீபத்திய செயல்பாடுகள் அ.தி.மு.க-வை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது

மிஸ்டர் கழுகு: அ.ம.மு.க-வை உடைக்க அசைன்மென்ட்! - எடப்பாடி வியூகம்...

பா.ம.க-வின் சமீபத்திய செயல்பாடுகள் அ.தி.மு.க-வை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி
கை நிறைய பலாப்பழச் சுளைகளுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “இனிப்பான செய்தியோ?” என்றோம். புன்முறுவலுடன் பலாப்பழச் சுளைகளை நமக்கு அளித்தவர், “சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டளை மையத்துக்கு மே 14-ம் தேதி இரவு 10:30 மணிக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் குறைகளைக் கேட்டு அசத்தியிருக்கிறார். கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவில் கட்சி பேதம் பார்க்காமல், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் சேர்த்திருக்கிறது தமிழக அரசு. மற்றொருபுறம், கொரோனா தடுப்புப் பணிக்காக ஒரு கோடி ரூபாய் நிதியளித்திருக்கும் அ.தி.மு.க., தங்களது எம்.எல்.ஏ., எம்.பி-க்களின் ஒரு மாத ஊதியமும் நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. மனமாச்சர்யங்களை மறந்து, பேரிடரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நமது கட்சிகள் மாறிவருகின்றன. இது இனிப்பான செய்திதானே...” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“பா.ம.க-வின் சமீபத்திய செயல்பாடுகள் அ.தி.மு.க-வை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. ஸ்டாலின் பதவியேற்பில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றது, ஸ்டாலினை பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து வாழ்த்து கூறியது என அடுத்தடுத்த நகர்வுகள் ராயப்பேட்டை அலுவலகத்தைக் கலவரமாக்கியிருக்கின்றன. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிக்கும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டவுடன் அதை ராமதாஸ் வரவேற்றார். கொரோனா பணியின்போது இறந்த 43 டாக்டர்களின் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாயையும், கொரோனா இரண்டாம் அலையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையையும் ஸ்டாலின் அறிவித்தபோதும் ராமதாஸ் பாராட்டினார். ஏற்கெனவே, அ.தி.மு.க-வின் வாக்குகள் தங்களுக்கு மடைமாறவில்லை என்று ராமதாஸ் கொதிப்பில் இருப்பதால் ‘உள்ளாட்சித் தேர்தலுக்குள் எங்கே கூட்டணியிலிருந்து பா.ம.க கழன்றுவிடுமோ?’ என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க முகாம்.”

மிஸ்டர் கழுகு: அ.ம.மு.க-வை உடைக்க அசைன்மென்ட்! - எடப்பாடி வியூகம்...

“ம்ம்... ஆனால், எடப்பாடி பழனிசாமி கலக்கத்தில் இருப்பதுபோலத் தெரியவில்லையே... அ.ம.மு.க முகாமைத் தவிடு பொடியாக்கச் சொல்லி சிலரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராமே?”

“இதுவும் உள்ளாட்சித் தேர்தல் கணக்குதான். சசிகலா, டி.டி.வி.தினகரனை டம்மியாக்க, அ.ம.மு.க-வை உடைத்து அ.தி.மு.க-வுடன் இணைப்பது என வியூகம் வகுத்திருக்கிறார் எடப்பாடி. இதன் மூலம், ஒற்றை ஆளுமையாக அ.தி.மு.க-வுக்குள் தன் அதிகாரத்தை நிலைநாட்டப் பார்க்கிறாராம். இந்த ஹிட் லிஸ்ட்டில் தகுதியிழப்பு நடவடிக்கையால் பதவியிழந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் இருவர், அந்தக் கட்சியின் கஜானாவை கவனிப்பவர் எனப் பலரும் இருக்கிறார்களாம். இவர்களை வளைப்பதற்கான அசைன்மென்ட்டை அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, சிவகங்கை செந்தில்நாதன், மதுரை செல்லூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்டவர்களிடம் ஒப்படைத்திருக்கிறாராம் எடப்பாடி.”

“சரிதான்...”

“சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டாலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் மாற்றப்படவில்லை. இதற்குக் காரணம் உறவுமுறைப் பாசம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் நெருங்கிய உறவினர்தான் குமாரவேல் பாண்டியன். துணை ஆணையர் மதுராந்தகியும் சக்கரபாணியின் உறவினர்தான். இந்தச் சூழலில், குமாரவேல் பாண்டியனை மாற்றும்படி, கோவையிலுள்ள தி.மு.க முக்கியப் புள்ளிகளிடமிருந்து அறிவாலயத்துக்குத் தகவல் போயிருக்கிறது. ஆனால், சக்கரபாணி தரப்பிலிருந்து மாற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகச் கூறப்படுகிறது.”

“கோவை என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. கொங்கு மண்டலத்தில் ஒரு மிரட்டல் ஆடியோ வைரலாகிவருகிறதே. கேட்டீரா?”

“ம்ம்... கேட்டேன்... கேட்டேன்... ஏற்கெனவே, வரதராஜனுக்கு கோவை தெற்கு மாவட்ட தி.மு.க வர்த்தகர் அணியின் துணைத் தலைவர் லிங்கதுரை என்பவர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், புதிதாக இந்த மிரட்டல் ஆடியோ வைரலாகியிருக்கிறது. கோவை தெற்கு தி.மு.க மகளிரணித் துணை அமைப்பாளர் சண்முகப்பிரியாவின் கணவர் வெல்லம் ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்தக் கொலை மிரட்டல் ஆடியோவை விடுத்திருக்கிறாராம். அதில், ‘பொள்ளாச்சி தி.மு.க வேட்பாளர் வரதராஜன் கொல்லப்படுவார். தடுக்க முடிந்த தி.மு.க-வினர் வாருங்கள். வெல்லம் ஸ்ரீனிவாசன் ஆகிய நான் கொலை செய்யப்போகிறேன். சீஃப் செக்கரட்ரி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அனைவரும் ஷேர் செய்யுங்கள்’ என்று மிரட்டுகிறார். இந்தக் கொலை மிரட்டல் குறித்து வரதராஜன், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜிடம் புகார் அளித்திருக்கிறார்” என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியைச் சுவைத்தபடி தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: அ.ம.மு.க-வை உடைக்க அசைன்மென்ட்! - எடப்பாடி வியூகம்...

“சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் தமிழக காங்கிரஸில் இன்னும் நிரப்பப்படவில்லை. மே 17-ம் தேதி மீண்டும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு டெல்லியிலிருந்து மல்லிகார்ஜுன கார்கே வந்திருந்தார். சட்டமன்றத் தலைவர் பதவியைப் பிடிக்க விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி, குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் உள்ளிட்டோர் இடையே போட்டி கடுமையாகியிருக்கிறது. பல தலைவர்கள் பேசிப் பார்த்தும், இவர்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. எந்த முடிவும் எட்டப்படாததால், எம்.எல்.ஏ-க்களிடமும் துண்டுச் சீட்டைக் கொடுத்து, அவர்களின் முதல் சாய்ஸ் யார், இரண்டாவது சாய்ஸ் யார் என எழுதி வாங்கியிருக்கின்றனர். இனி டெல்லிதான் முடிவு எடுக்குமாம்.”

“காங்கிரஸ் கட்சியில் இப்படி கிளி ஜோசியம் பார்க்கும் அளவுக்கு நடப்பது வழக்கம்தானே!”

மிஸ்டர் கழுகு: அ.ம.மு.க-வை உடைக்க அசைன்மென்ட்! - எடப்பாடி வியூகம்...

“தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடக்கிறது. இந்த நியமனங்களில் தங்களை தி.மு.க ஒதுக்குவதாக, கூட்டணிக் கட்சிகளான வி.சி.க., ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. பதவி கேட்டுப்போன ஒரு வி.சி.க பொறுப்பாளரிடம், ‘வழக்கமாக இந்தப் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதில்லை’ என்று தி.மு.க தலைவர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். கொதித்துப்போன வி.சி.க நிர்வாகிகள், ‘16 மாவட்டங்களில் சுமார் 100 தொகுதிகளில் தி.மு.க-வின் வெற்றிக்கு எங்கள் வாக்குகள் உறுதுணை செய்திருக்கின்றன. ஜெயிப்பதற்கு மட்டும் நாங்கள் வேண்டுமா?’ என்று விளாசிவிட்டார்களாம். விஷயத்தை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார் திருமா வளவன்” என்றபடி டபுள் மாஸ்க்கை மூக்குக்கு மேலிழுத்து, சரி செய்துகொண்ட கழுகார்,

“தமிழக மருத்துவக் கல்லூரிகளிலுள்ள டீன்களில் எட்டு பேரை இடமாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், டி.எம்.இ என்றழைக்கப்படும் மருத்துவ கல்வி இயக்குநரான நாராயணபாபு மட்டும் தப்பிவிட்டார். கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அதே பதவியிலிருக்கும் நாராயணபாபு, அ.தி.மு.க அரசின் செல்லப்பிள்ளையாக வலம்வந்தவர். டி.எம்.இ பதவியில் இன்சார்ஜ் ஆகவே பல ஆண்டுகள் இருந்தவரை கடந்த ஆண்டுதான் ரெகுலர் டி.எம்.இ-ஆக நியமித்தார் களாம். தமிழக மருத்துவக் கல்லூரிகளிலுள்ள டீன்கள் சீனியாரிட்டி லிஸ்ட்டில், நாராயணபாபு மூன்றாவதாக இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் கடந்த நான்கு வருடங்களாகச் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார். புதிய தி.மு.க அரசு இதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக டீன்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

*****

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கடந்த ஆட்சியில் சி.எம்.டி.ஏ துறையில் ‘லெட்டர் பேடு’ ரியல் எஸ்டேட் சங்கப் பிரமுகர் ஒருவர், துணை முதல்வர் பன்னீரின் பெயரைச் சொல்லி புரோக்கர் பணியில் ஈடுபட்டுவந்தார். சில மாதங்கள் அமைதியாக அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் துறை அமைச்சர் முத்துசாமியின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டிவருகிறாராம். ஆரம்பத்திலேயே களையெடுக்கா விட்டால் முத்துசாமிக்குத்தான் அவப்பெயர் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

* பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர்கள் இருவர், கட்சியின் வேட்பாளர் ஒருவரிடம் தேர்தல் சீட்டுக்காக தலா ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸ் வாங்கிய விவகாரம் ஆதாரங்களுடன் டெல்லியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். விரைவிலேயே சாட்டை சுழலலாம் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்!

சர்ச்சையில் காவல் அதிகாரி நியமனம்!

கடந்த காலங்களில் முக்கியப் பதவிகளில் இருந்தவர் சந்திரசேகர். புதிய அரசில் முக்கியப் பதவிகளில் இடம்பெற்றவர்களுக்கான செக்யூரிட்டி ஆபீஸர்கள் நியமனத்தை கவனித்தது சந்திரசேகர்தான் என்கிறார்கள். தமிழக போலீஸில் சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., உளவுத்துறை தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்களை நியமித்து விட்டனர். இவர்களில், சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யான தாமரைக்கண்ணன் நியமனம்தான் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியில் சர்ச்சையை உண்டாக்கி யிருக்கிறது. சந்திரசேகருடன் தாமரைக்கண்ணனுக்கு நல்ல அறிமுகம் உண்டு என்பதால், அவரது கண்ணசைவில்தான் தாமரைக்கண்ணனுக்கு பதவி கிடைத்ததாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism