Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘டீல்’ பேசிய எடப்பாடி... ‘எஸ்கேப்’ ஆன பன்னீர்...

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததுடன், ‘தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறார் முதல்வர்’ என்றும் பாராட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ்-ஸின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்.

மிஸ்டர் கழுகு: ‘டீல்’ பேசிய எடப்பாடி... ‘எஸ்கேப்’ ஆன பன்னீர்...

மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததுடன், ‘தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறார் முதல்வர்’ என்றும் பாராட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ்-ஸின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

வெள்ளை உடை, வெள்ளை மாஸ்க் அணிந்து பளிச்சென என்ட்ரி கொடுத்தார் கழுகார். “பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்துக்குப் போய்விட்டு வருகிறீரோ..?” என்று நாம் கிண்டலடிக்க, “வசமாக மாட்டிவிடுகிறீரே... பேரறிவாளன் விடுதலை எல்லோரையும்போல நமக்கும் மகிழ்ச்சியான செய்தியே..!” என்றவர், “சிதம்பரம் ரெய்டு ரகசியம் பற்றிச் சொல்கிறேன்” என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

“ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த 2011-ல் நடந்த ஒரு சம்பவத்துக்காக, 11 ஆண்டுகள் கழித்து இப்போது ரெய்டு நடத்தியிருக்கிறது சி.பி.ஐ. இதற்கு வலுவான பொலிட்டிகல் பின்னணி இருக்கிறது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்திகொண்ட ஜி-23 தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர் ப.சிதம்பரம். சோனியா, ராகுலுக்கு எதிராகத் துரிதமாகச் செயல்பட்டு, கட்சியை நிலைகுலையவைப்பார் அவர் என்று பா.ஜ.க எதிர்பார்த்தது. ஆனால், பா.ஜ.க-வை விமர்சிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டினார் சிதம்பரம். உதய்பூரில் நடந்த சிந்தனை அமர்வுக்கும் சிதம்பரம்தான் தலைவர். அந்த மாநாட்டில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கடுமையான வியூகங்கள் வகுக்கப்பட்டதும் ஆள்வோருக்கு உறுத்தலைக் கொடுத்திருக்கிறது. இதனால்தான், அவர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் எனும் நேரத்தில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்த ரெய்டை நடத்தியிருக்கிறது பா.ஜ.க என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ‘டீல்’ பேசிய எடப்பாடி... ‘எஸ்கேப்’ ஆன பன்னீர்...

“அவ்வளவு சிக்கலான வழக்கா இது?!”

“பஞ்சாப்பைச் சேர்ந்த, ‘தல்வாண்டி சபோ பவர் லிமிடெட்’ என்கிற மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வேலைக்காக வந்த 263 சீனர்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு, ‘வொர்க்கிங் விசா’ வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீதான எஃப்.ஐ.ஆர் சொல்கிறது. இதற்காக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கார்த்தியின் ஆடிட்டருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்கிறது சி.பி.ஐ. ஆனால், இந்த வழக்கில் வழக்கம்போல பல குளறுபடிகளைச் செய்திருக்கிறதாம் சி.பி.ஐ. இதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படும் மும்பை நிறுவனத்தின் அதிகாரி விகாஸ் மகாரியா மரணமடைந்தே நான்கு ஆண்டுகளாகிவிட்டனவாம். லஞ்சப் பணத்தை யாராவது செக்காகக் கொடுப்பார்களா... என்றும் லாஜிக்காகக் கேட்கிறார்கள். சம்பந்தப் பட்டவர்கள் ப.சிதம்பரத்தை நேரடியாகச் சந்தித்ததாகவோ, இந்த விசா கோப்பு உள்துறை அமைச்சகத்துக்குப் போனதாகவோ தகவல் இல்லையாம். வழக்கில் எந்த இடத்திலும் சிதம்பரத்தின் பெயரும் இல்லை என்பதால் ஆடிட்டரைப் பகடைக்காயாக வைத்து இந்த வழக்கில் தங்களை நுழைக்கப் பார்க்கிறார்கள் என்கிறது சிதம்பரம் தரப்பு” என்ற கழுகார் அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: ‘டீல்’ பேசிய எடப்பாடி... ‘எஸ்கேப்’ ஆன பன்னீர்...

“தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலாளர் அந்தஸ்துக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான பட்டியல் தயாராகியிருக்கிறது. இந்தப் பட்டியலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் உதவியாளராக இருந்த நாகராஜ் என்பவரின் பெயர் விடுபட்டுப் போனதாம். தற்போது சட்டப்பேரவை செயலகத்தில் இணைச் செயலாளர் அந்தஸ்தில் பணிபுரிகிறார் நாகராஜ். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், சபாநாயகரின் அறைக்கே சென்று, ‘என்கிட்ட வேலை செஞ்சாருங்கற ஒரே காரணத்துக்காக, நியாயமாக அவருக்கு வரவேண்டிய புரொமோஷனைத் தள்ளிப்போடலாமா அண்ணே...’ என்று அப்பாவுவிடம் கேட்டிருக்கிறார் பன்னீர். அதன் பிறகே, நாகராஜ் பெயர் பட்டியலில் ஏற்றப்பட்டதாம்.”

“தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாய்ந்திருக்கிறதே?”

“ஆமாம். மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததுடன், ‘தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறார் முதல்வர்’ என்றும் பாராட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ்-ஸின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத். அ.தி.மு.க-வில் பலர் ஷாக்காகியிருக்கிறார்கள். ஆனால், இந்தச் சந்திப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததே பன்னீர்தானாம். ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஓ.பி.எஸ் மீது இனம் புரியாத பாசத்தைக் காட்டிவருகிறது தி.மு.க. பதிலுக்கு ஓ.பி.எஸ் குடும்பமும் இணக்கமான உறவையே பராமரித்துவருகிறது என்கிறார்கள். இந்தச் சந்திப்பிலும்கூட தொகுதிக்கான கோரிக்கைகளை மட்டும்தான் ரவீந்திரநாத் பேசினாரா என்று அ.தி.மு.க-வினரே சந்தேகம் கிளப்புகிறார்கள். கே.பி.பார்க், மணல் கொள்ளை, நில அபகரிப்பு போன்ற முக்கியமான குற்றச்சாட்டுகளிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தைத் காப்பாற்றிக்கொள்ளவே இந்தச் சந்திப்பு என்றும் பேசிக்கொள்கிறார்கள்.”

“இதற்கு எடப்பாடியின் ரியாக்‌ஷன் என்னவாம்?”

“அதைத்தான் சொல்லவந்தேன். பன்னீரை பொதுக்குழுவுக்கு முன் பணியவைக்க பல யுக்திகளைக் கையாள்கிறது எடப்பாடி தரப்பு. ‘உங்கள் மகனுக்கும், தம்பிதுரைக்கும் மத்தியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருகிறோம். ஒற்றைத் தலைமைக்கு மட்டும் ஓ.கே சொல்லுங்க” என்று ‘டீல்’ பேசியிருக்கிறார்கள். கோவைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றிருந்த பன்னீரை, வேலுமணியின் சார்பில் ஒருவர் நேரிலேயே சந்தித்து, இதற்கு ஒப்புக்கொள்ளச் சொல்லி அழுத்தம் கொடுத்தாராம். ‘மகனிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று நழுவிய பன்னீர், சென்னைக்குத் திரும்பியதும், மகனை நேரே முதல்வரைப் பார்க்க அனுப்பியிருக்கிறார். இது எடப்பாடி தரப்பைக் கடுப்பாக்கியிருக்கிறது!”

“அப்படியானால், அ.தி.மு.க ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல்...”

“பா.ஜ.க., பா.ம.க இரு கட்சிகளும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்த பிறகும் இரட்டைத் தலைமைக்குள் நடக்கும் டக்-ஆஃப் வார் காரணமாகவே வேட்பாளர் பட்டியல் தாமதமாகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மே 31-ம் தேதியே கடைசி நாள் என்பதால், சீக்கிரமே சமரசம் ஏற்படலாம். தி.மு.க வேக வேகமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்ததற்குப் பின்னாலும் ஒரு கணக்கு இருக்கிறது..!”

“சொல்லும்...”

“கிரிராஜனை ராஜ்ய சபா எம்.பி-யாக்க முதல்வர் ஒப்புக்கொண்டதற்கு, வட சென்னையிலிருந்து சேகர் பாபுக்கு எதிராக வரிசைகட்டி வந்த புகார்கள்தான் காரணமாம். தென் சென்னையில் மா.சு-வுக்கு செக் வைக்க மகேஷ்குமாரை துணை மேயராகக் கொண்டுவந்த தலைமை, இப்போது சேகர் பாபுக்கு செக் வைக்க கிரிராஜனை எம்.பி-யாக்கியிருக்கிறது. ஒரே ஏரியாவில் இரண்டு பேரை வளர்த்துவிடும் கருணாநிதியின் பாலிசியை ஸ்டாலினும் கையில் எடுத்திருக்கிறார்போல” என்ற கழுகாருக்கு சூடாக பாதாம் பால் கொடுத்தோம். பருகிவிட்டு அடுத்த தகவலைப் பகிர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ‘டீல்’ பேசிய எடப்பாடி... ‘எஸ்கேப்’ ஆன பன்னீர்...

“ஆளும் தரப்புக்கு நெருக்கமானவர்கள் ஏற்கெனவே ரியல் எஸ்டேட் துறைக்குள் புகுந்து விளையாடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இப்போது கல்வி வியாபாரத்தின் பக்கமும் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள். ‘தலைவர்’ வாழ்ந்த பகுதியில் இருக்கும் பிரபல பள்ளி ஒன்றை விலைக்கு வாங்கியதோடு, அந்தப் பள்ளிக்கு தாளாளராக, குடும்பத்துக்கு நெருக்கமான மாண்புமிகு ஒருவரின் சகோதரியையே நியமித்து விட்டார்கள். கூடவே, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற பள்ளி ஒன்றையும் விலைக்குக் கேட்டிருக்கிறார்கள். தர மறுத்ததால், அவர்களை மசியவைப்பதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறது ஆளும் தரப்பு. முதன்மையானவருக்குத் தெரிந்துதான் இவையெல்லாம் நடக்கின்றனவா என்று கட்சியினரே கவலையோடு பேசிக்கொள்கிறார்கள்!” என்ற கழுகார்,

“தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் பங்கஜ் குமார் பன்சால் மத்திய அரசு பணிக்கு மாற்றலாகியிருக்கிறார். அதுவும் அமித் ஷா வசம் உள்ள கூட்டுறவுத்துறையின் இணைச் செயலாளர் என்கிற உயர் பதவிக்குப் போயிருக்கிறார். தி.மு.க ஆட்சிக்குவந்த பிறகு தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று புலம்பிவந்த நிலையில், தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் அமித் ஷா துறைக்குள் நுழைந்துவிட்டார். கோட்டை வட்டாரம் இதைக் கூர்ந்து கவனிக்கிறது!” என்றபடி சிறகை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னை மாநகர போக்குவரத்துக் கழக டெப்போக்களில் செயல்படும் கேன்டீன்களை, புதியவர்களுக்கு மாற்றிக்கொடுத்திருக்கிறார்கள். அதில் எட்டு கேன்டீன்களை ஆட்சித் தலைமையின் உறவினரான மருத்துவர், தன் மகன் பெயரில் எடுத்திருக்கிறாராம்.

* ஆட்சியில் நம்பர் டூ-வாக வலம்வரும் மூத்த அமைச்சர் ஒருவரின் துறையில், அவருக்குத் தெரியாமலேயே 16 அதிகாரிகளின் டிரான்ஸ்ஃபர் அரங்கேறியிருக்கிறது. “என்னய்யா இது...” என்று அமைச்சர் கேட்டபோது, “குரூப் சொல்லித்தான் டிரான்ஸ்ஃபர் போட்டேன்” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அந்த அதிகாரி. மாப்பிள்ளைக்கு நெருக்கமான அதிகாரி அவர் என்பதால், எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறாராம் மூத்த அமைச்சர்.