Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி... மாறுது முகமூடி!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

மிரட்டும் பி.ஜே.பி... நெருங்கும் தேர்தல்...

மிஸ்டர் கழுகு: எடப்பாடி... மாறுது முகமூடி!

மிரட்டும் பி.ஜே.பி... நெருங்கும் தேர்தல்...

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
நீண்ட நாள்களுக்குப் பிறகு கழுகாருடன் நேரில் சந்திப்பு. கூலிங்கிளாஸ், மாஸ்க், கைகளில் சானிட்டைஸர் சகிதம் வந்தமர்ந்தார் கழுகார்.

‘‘அப்பப்பா என்ன வெயில்...’’ என்றவரிடம், இளநீரை நீட்டினோம். வாஞ்சையுடன் வாங்கிப் பருகியவரிடம், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் என்கிறார்களே!’’ என்று செய்திக்குள் அவரை இழுத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஊராட்சிச் செயலாளர்கள் பதவிகளை ரத்துசெய்ததைத்தானே சொல்கிறீர்கள். அது ஆரம்பம் மட்டுமே என்கிறார்கள். அ.தி.மு.க-வின் அடிமட்ட அமைப்பாக கிளைச் செயலாளர் என்ற பதவி மட்டுமே இருந்தது. ஆனால், அனைத்து கிராமங்களுக்கும் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நபர் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, `ஊராட்சிச் செயலாளர்’ என்கிற பதவியை ஜெயலலிதா உருவாக்கினார். இந்த நிலையில்தான் `கொரோனா நிவாரண உதவிகளை பல ஊராட்சிச் செயலாளர்கள் சரியாகச் செய்யவில்லை’ என்ற புகார் எழுந்துள்ளது. இவர்கள்மீதான புகார் ஒன்றும் புதிதல்ல... ஏற்கெனவே அ.தி.மு.க-விலிருந்து தினகரன் பிரிந்து சென்ற பிறகு பல ஊராட்சிச் செயலாளர்கள் அவர் பக்கம் சென்றார்கள். யார் இப்போது அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள் என்கிற விவரங்கள்கூட முழுமையாகத் தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது செலவுக்காக அளித்த பணத்தையும் சில ஊராட்சிச் செயலாளர்கள் சுருட்டிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தனை குழப்பங்களை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால் ஊரகப் பகுதிகளில் பாதகங்கள் ஏற்படும் என்பதால்தான் அந்தப் பதவிகள் ரத்துசெய்யப்பட்டனவாம்!’’

‘‘ஓ... தேர்தல் வேலையை இப்போதே ஆரம்பித்துவிட்டாரா?’’

‘‘ஆமாம். சமீபத்தில் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட ஜோதிடர் ஒருவரை, அவரின் குடும்ப உறுப்பினர்கள் தரப்பில் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அந்த ஜோதிடர், ‘உங்கள் ஆட்சிக்காலம் முடியும் முன்பே நீங்களாக ஆட்சியைக் கலைத்து தேர்தலைச் சந்தித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்’ என்று யோசனை கொடுத்தாராம். எடப்பாடிக்கும் இந்த யோசனை சரியென பட்டுள்ளதாம். ஆனால், கொரோனா ஊரடங்குச் சூழலில் அதற்கான சாத்தியம் குறைவு. எனவே, கட்சியை மறுசீரமைப்பு செய்யும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘‘ஆறு மாதங்களுக்கு தேர்தல் தள்ளிப்போகலாம் என்று பா.ஜ.க வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றனவே?”

“என் காதுக்கும் தகவல் வந்தது. தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஆறு மாதங்களுக்கு தள்ளிவைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சியின் மூலம் ‘கிளீன்’ அரசாங்கத்தை அளிப்பது, அதற்குள் ரஜினியைத் தயார் செய்வது, தி.மு.க-வின் பணபலத்தைக் குறைப்பது என பா.ஜ.க-வுக்கு வேண்டப்பட்டவர்கள் பழைய பல்லவியை மீண்டும் டெல்லியில் பாடியிருக்கிறார்கள். இதையெல்லாம் அறிந்துதான், தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகங்களை வகுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள்.”

‘‘ஆனால், பா.ஜ.க-வை எதிர்த்துக்கொண்டு அவரால் என்ன செய்ய இயலும்?’’

‘‘எடப்பாடியின் இறுதி அஸ்திரமே பா.ஜ.க-வை கூட்டணியிலிருந்து கழற்றிவிடுவதுதான் என்கிறார்கள். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்துசெய்வதாக பா.ஜ.க அறிவித்துள்ளதை எதிர்த்து, மே 18-ம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் எடப்பாடி. ‘மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கடன்களைத் திருப்பிச் செலுத்துகிறோம். இலவசமாக கடன் கொடுப்பதுபோல் ஏகத்துக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. எங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே கடனளிக்கப்படும் என்கிறரீதியில் மத்திய அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம், அரசியல்ரீதியாக சென்சிட்டிவ்வான பிரச்னை. இதில், மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று காட்டமாகச் செல்கிறது அந்தக் கடிதம்.’’

‘‘அடேங்கப்பா!’’

“ஏற்கெனவே அ.தி.மு.க சீனியர்கள் பலரும் ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கதிதான் மீண்டும் ஏற்படும்’ என்று எடப்பாடியிடம் எச்சரித்துள்ளார்கள். அதனால், பா.ஜ.க-வைக் கழற்றிவிடும் முன்பாக தன் பக்கம் உள்ள வில்லங்கமான சில விவகாரங்களை சரிசெய்துகொள்ளும் பணிகளைத் தொடங்கிவிட்டாராம்.’’

சசிகலா
சசிகலா

“எடப்பாடிக்கு அவ்வளவு துணிச்சல் வந்துவிட்டதா என்ன?” - சந்தேகத்துடன் வறுத்த கடலையை நீட்டினோம். ஒரு கை எடுத்து வாயில் போட்டு மென்றவர், ‘‘அந்தச் சந்தேகம் அவரது கட்சிக்குள்ளேயே உண்டு’’ என்றபடி தொடர்ந்தார்.

‘‘சமீபத்தில் தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலரிடம் எடப்பாடி மனம்விட்டுப் பேசியுள்ளார். பா.ஜ.க குறித்தும் பேச்சு திரும்பியுள்ளது. ‘அவங்களை எதிர்த்தால் என்ன பண்ணுவாங்க...நம்ம ஆளுங்க பத்து பேரை கைதுசெய்வாங்க, சொத்துகளை முடக்குவாங்க அவ்வளவுதானே! இதுக்கு ஏன்யா பயப்படுறீங்க? நமக்கும் அரசியல் பண்ணத் தெரியும்கிறதைக் காட்டணும். இதுக்குமேலயும் பயந்துக்கிட்டு இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லை’ என்றதும் அமைச்சர்களுக்கு விக்கித்துவிட்டதாம்!”

“ஆனால், மிரட்டலையே பாணியாகக் கொண்ட பா.ஜ.க, எடப்பாடியின் துள்ளலுக்கு ஒப்புக்கொள்ளுமா?”

“அதுதான் பிரச்னை ஆரம்பித்துவிட்டதே! பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணகிரி நரசிம்மன், ‘ஜோதிமணி - கரு.நாகராஜன் பிரச்னையில், ஜோதிமணிக்கு ஆதரவாக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ளன. நமக்கு ஆதரவாக அ.தி.மு.க அறிக்கைகூட தரவில்லை. இனிமேலும் இவர்களை நம்ப வேண்டுமா?’ என, கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் தரப்பினரும், ‘அ.தி.மு.க-வை முழுமையாக நம்ப வேண்டாம்’ என்ற மனநிலையில் இருக்கிறார்களாம். டெல்லி மேலிடத்திலிருந்தும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான வழக்குகளை தூசித்தட்ட ஆரம்பித்து விட்டார்களாம். முதல்கட்டமாக அமைச்சர் மீதான சில வழக்குகளை இறுக்கி, மறுபடியில் ஷாக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க மேலிடம்.’’

‘‘ம்ம்... அ.தி.மு.க ஐ.டி விங் பொறுப்புகளும் மாற்றப்படுகின்றனவா?’’

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

‘‘தி.மு.க ஐ.டி விங்குக்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.தி.மு.க-வின் ஐ.டி விங்கை வலுப்படுத்த வேண்டும் என எடப்பாடியிடம் ஆலோசனை சொல்லியிருக்கிறாராம் தேர்தல் வியூக வல்லுநர் சுனில்.’’

‘‘சுனில்..?’’

“உங்கள் கேள்வி புரிகிறது... தி.மு.க-வுக்காகப் பணியாற்றி, அதிருப்தியில் வெளியேறிய அதே சுனில்தால். இவர் தற்போது அதிகாரபூர்வமாக அல்லாமல் அ.தி.மு.க-வுக்காகப் பணியாற்றுகிறாராம். அவர் கொடுத்த ஆலோசனையின்படிதான் ஐ.டி விங்கை நான்கு மண்டலங்களாகப் பிரித்து மண்டலத்துக்கு ஒருவர் என்று பதவிகளைப் பிரித்துப் போட்டுள்ளனர். ஐ.டி விங்கில் மட்டுமல்ல... கட்சியிலும் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.’’

“வேறு என்ன மாற்றங்களாம்?’’

“மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்குமாம். பல மாவட்டங்களில் அவர்களின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தவிர, புதிதாக சில மாவட்டங்களைப் பிரித்த பிறகு அவற்றுக்கும் செயலாளர்களை நியமிக்கவில்லை. இதையெல்லாம் முன்வைத்து மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கலாம். அதேபோல், பல ஒன்றியச் செயலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லையாம். இந்தப் பட்டியலை இப்போது கையில் எடுத்துள்ளார்கள். தென் மாவட்டங்களில் மாற்றம் அதிகம் இருக்கலாம் என்கிறார்கள்.’’

“சசிகலா, தினகரன், திவாகரன் ஆகியோர் அ.தி.மு.க கட்சியில் இல்லாவிட்டாலும், அவர்களின் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. போதாக்குறைக்கு, பன்னீர்செல்வம் கோஷ்டி வேறு. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களை மாற்றினால் கட்சி கலகலத்துவிடாதா என்ன?”

“ஆமாம். தேன்கூட்டில் கை வைப்பதுபோன்ற நிலைதான். ஆனால், எடப்பாடி தரப்பில் அந்த ரிஸ்கை எடுக்கத் துணிந்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு பன்னீர் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரலாம் என்கிறார்கள். ஏற்கெனவே எடப்பாடி தரப்புமீது கடும் அதிருப்தியில் இருக்கிறது பன்னீர் தரப்பு. கட்சிரீதியாக நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்கும்போது, பன்னீருக்கு தகவலை மட்டும் சொல்லி கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்களாம். கொங்கு மண்டலத்தில் கோலோச்சும் சில அமைச்சர்களின் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அறிவிப்புகளில் பெயருக்குக்கூட பன்னீரின் பெயரைப் போடுவதில்லை. இதையெல்லாம் வைத்து பன்னீர் தரப்பிலிருந்து தர்மயுத்தம் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது.’’

“சசிகலா விடுதலையாகி வந்தால் எடப்பாடிக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்கிறார்களே?’’

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

‘‘அப்படியொரு பயம் உள்ளுக்குள் எடப்பாடிக்கு இருக்கிறதுதான். ஆனால், சசிகலா தரப்பிலும் சில பல விஷயங்களை சாதுர்யமாக எடப்பாடி சரிக்கட்டிவிட்டார் என்கிறார்கள். சட்டப்படி இந்த வருட இறுதிக்குள் சசிகலா விடுதலையாக வேண்டும். அவர் வருவதற்கு முன்னதாக கட்சிக்குள் தன் பிடியை இறுக்க முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தாலும் தன்னை எதிர்க்க முடியாத அளவுக்கு தனது பொசிஷனை வலுப்படுத்திக் கொள்ளவும் தொடங்கிவிட்டார். இவற்றையெல்லாம் முன்வைத்து இதுவரை எடப்பாடி அணிந்திருந்த முகமூடி மாறுகிறது.’’

“அதென்ன முகமூடி மாறுகிறது... புதுக்கதையாக இருக்கிறதே?!”

“இத்தனை நாள்களாக பி.ஜே.பி-யின் கையாள் என்கிற அளவுக்கு காவி முகமூடி அணிந்தவராகவே அவருடைய காலம் ஓடிக்கொண்டிருந்தது. அதை மாற்றி, நான் பக்கா அ.தி.மு.க காரன் என்பதைக் காட்டப்போகிறாராம். தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் அதிகரிக்குமாம்.

முதல்வர் வேட்பாளராக விரைவிலேயே அவர் முன்னிறுத்தப்படவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்”

“சரி சரி... தி.மு.க செய்திகள் ஏதேனும் உண்டா?’’

‘‘கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் களில் ஒருவரான வி.பி.துரைசாமி தரப்பிலிருந்துதான் கட்சியின் சில உள்விவகாரங்கள் மீடியாக்களுக்குக் கசிகின்றன என்கிறரீதியில், சிலர் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்துள்ளனர். அதனால், துரைசாமி தரப்புமீது ஏற்கெனவே வருத்தத்தில் இருந்தாராம் ஸ்டாலின். இந்த நிலையில்தான் பா.ஜ.க தலைவர் எல்.முருகனை, துரைசாமியும் அவரின் மைத்துனரும் நேரில் சந்தித்திருக்கிறார்கள். துரைசாமி தரப்பில், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி கேட்கப்பட்டதாம். மேலும், துரைசாமி தரப்பிலிருந்து தி.மு.க மீதான அதிருப்தியான வார்த்தைகளும் வெளிவர ஆரம்பித்தன. ‘அது அவர்கள் கட்சி. நான் ஒரு சர்வன்ட். நாமக்கல் மாவட்டத்தில் சிலரை மாற்றும்போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லேயே என்கிற வருத்தம் இருக்கிறது. எம்.பி பதவிக்காக, வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதியை நேரில் சந்தித்துக் கெஞ்சினேன்’ என்றெல்லாம் பேட்டியில் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இந்த விஷயங்கள் ஸ்டாலினை மேலும் டென்ஷனாக்கிவிட்டனவாம். இதனையடுத்தே, துரைசாமியின் பதவியை பறித்து அந்தியூர் செல்வராஜிடம் வழங்கியுள்ளார் ஸ்டாலின்.”

“துரைமுருகன் நிலை?’’

“சமீபத்தில் அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிடும்படி அறிவாலயத்திலிருந்து துரைமுருகனுக்கு போன் செய்துள்ளார்கள். ‘என்னை எதுக்குப்பா அறிக்கை விட சொல்றீங்க..? நான் கட்சியின் சாதாரண உறுப்பினர். உறுப்பினர் அறிக்கை விட்டா நல்லா இருக்குமா...’ என்று தனக்கே உரிய பாணியில் குத்திக்காட்டினாராம் துரைமுருகன். இந்தத் தகவல், ஸ்டாலின் காதுக்கும் சென்றுள்ளது. துரைமுருகனை சமாதானப் படுத்த வழி தேடி வருகிறார் ஸ்டாலின்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.