Published:Updated:

மிஸ்டர் கழுகு: பிரதமர் விசிட்! - வசூல்வேட்டையில் பா.ஜ.க புள்ளிகள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டப் பணிகளைத் தொடங்கிவைப்பதற்காக, மே 26-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி

மிஸ்டர் கழுகு: பிரதமர் விசிட்! - வசூல்வேட்டையில் பா.ஜ.க புள்ளிகள்

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டப் பணிகளைத் தொடங்கிவைப்பதற்காக, மே 26-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

“ஜூ.வி மீதான வழக்கு பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. ஆளுங்கட்சியின் ஆசிபெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கொடுத்த புகாரை வாங்கி, அவசரம் அவசரமாக போலீஸார் நள்ளிரவில் வழக்கு பதிவுசெய்திருப்பதை எதிர்க்கட்சியினர் வரை எல்லோரும் கண்டித்துள்ளனர். ‘எதிர்க்கட்சியாக இருந்தபோது சகிப்புத்தன்மை பற்றி ஊருக்கே பாடம் எடுத்தவர்கள் ஆட்சியில் பத்திரிகைகளை இப்படித்தான் நடத்துவதா?’ என்பதே அவர்களின் கேள்வி. சம்பந்தமே இல்லாத ஒருவர் பெயரில் கொடுக்கப்பட்ட புகாரில் ஜூ.வி-யை இணைத்திருப்பது உள்நோக்கம் கொண்டது. யாருக்கு இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதைக் கண்டறியவேண்டியது அரசின் பொறுப்பு” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்தோம். அதைப் பருகியபடியே செய்திகளைப் பகிர்ந்தார் கழுகார்.

“தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டப் பணிகளைத் தொடங்கிவைப்பதற்காக, மே 26-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. இந்தப் பயணத்தின்போது, பிரதமரைத் தனியே சந்தித்துப் பேச தமிழக முதல்வரே பிரதமர் அலுவலகத்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம். நிலைமை இப்படியிருக்க, பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி, பா.ஜ.க-வைச் சேர்ந்த சில புள்ளிகள் தொழிலதிபர்கள், வியாபாரிகளிடம் பெரிய வசூல்வேட்டையே நடத்திவிட்டார்களாம். இது போதாது என்று மாநிலத் தலைவர் வேறு, புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: பிரதமர் விசிட்! - வசூல்வேட்டையில் பா.ஜ.க புள்ளிகள்

“பீடிகை போடாமல், விஷயத்தைச் சொல்லும்.”

“ ‘தமிழ்நாடு அரசு 72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும்... சமையல் எரிவாயு மானியம் 100 ரூபாய் கொடுப்பதாக அறிவிக்க வேண்டும்... இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்’ என்று அண்ணாமலை அறிவித்திருந்தார் அல்லவா... பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நேரத்தில் இந்தப் போராட்டம் எதற்கு என்று அண்ணாமலைக்கு ஆகாத பா.ஜ.க புள்ளிகள் சிலர் டெல்லிக்குப் புகார் தட்டியிருக்கிறார்கள். குண்டு போடுவதாக நினைத்து, குழப்பம் விளைவித்துவிட்டார் அண்ணாமலை என்று அவர்கள் புலம்புகிறார்களாம்.”

“ஊட்டி மலர்க் கண்காட்சி விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கிறாராமே ஆளுநர்?”

“ஆமாம். முதலில் மலர்க் கண்காட்சி தொடக்கவிழா மற்றும் நிறைவுவிழா இரண்டுக்குமே ஊட்டி மாவட்ட கலெக்டரிடமிருந்து ஆளுநருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஊட்டிக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துவந்த நேரத்தில், திடீரென முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைத்து, ‘நிறைவுவிழாவுக்கு ஆளுநர் வந்தால் போதும்...’ என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள். விஷயம் ஆளுநரின் காதுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ‘ஊட்டி ட்ரிப்பையே கேன்சல் செய்துவிடுங்கள்’ என்று கொதித்திருக்கிறார். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாகப் பங்கேற்றதால், இருவருக்குமிடையே இணக்கம் ஏற்பட்டுவிட்டதாகப் பேசப்பட்டது. மலர்க் கண்காட்சி விவகாரம் அந்த இணக்கத்தைக் கெடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘முதல்வரின் ஒப்புதலோடுதான் இது நடக்கிறதா... இல்லை, முதல்வரின் பெயரைச் சொல்லி அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்களா?’ என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் ஆளுநர்.”

“ம்...”

“அதிகாரிகளும் சந்தோஷமாக இல்லையாம். குறிப்பாக, 10 ஆண்டுகளாக தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதும், பல அதிகாரிகள் தி.மு.க-வுக்கு ஆதரவாகவே இருந்துவந்தார்கள். அவர்களெல்லாம் இந்த ஆட்சியிலாவது நமக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காத அதிருப்தியில் சிலர் பா.ஜ.க பக்கம் சாயத் தொடங்கிவிட்டார்கள். ‘அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்களே இப்போதும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் தொடர்கிறார்கள். குறிப்பாக இ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமானவர்கள்தான் அதிக அளவில் கோலோச்சுகிறார்கள்’ என்று கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: பிரதமர் விசிட்! - வசூல்வேட்டையில் பா.ஜ.க புள்ளிகள்

“ `நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்தீராமே...?”

“படம் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்தவர்களைப் பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரும் தி.மு.க தேர்தல் அலுவலகம்போல காட்சியளித்தது. உதயநிதி ரசிகர் மன்ற அகில இந்தியத் தலைவரும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸிடமிருந்து தியேட்டர்களை நிரப்புவதற்கான வாய்மொழி உத்தரவு, படம் வெளியாகும் முன்பே கட்சி நிர்வாகிகளுக்குப் பறந்திருக்கிறது. இது போதாதா... அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள்வரை அமர்க்களப்படுத்திவிட்டார்கள். அமைச்சரவை மாற்றத்தில் பதவி பறிபோகும் என்று கருதப்படுபவர்களும், புதிதாக அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக நம்புகிறவர்களும் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்திருக்கிறார்கள். ஊட்டி மலர்க் கண்காட்சிக்கு வந்திருந்த முதல்வர் குடும்பத்தினர் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஊட்டியிலுள்ள ஒரு தியேட்டரில் மொத்த டிக்கெட்களையும் புக் செய்திருக்கிறார்கள் சில நிர்வாகிகள். ஆனால், அவர்கள் படம் பார்க்க வராததால், மொத்த டிக்கெட்களையும் தொண்டர்கள் கையில் திணித்துப் படம் பார்க்க வைத்தார்களாம்.”

“எம்.ஜி.ஆர் மாளிகையிலும் ஒரு படம் ஓடியதாமே...”

“எல்லாம் ராஜ்ய சபா வேட்பாளர் தேர்வு விவகாரம்தான். எம்.ஜி.ஆர் மாளிகையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரச்னை வெடித்து, பாதியிலேயே கிளம்பிச் சென்ற பன்னீரை, எடப்பாடிதான் சமாதானப்படுத்தி அழைத்திருக்கிறார். இந்தக் களேபரங்களால், தனக்கு எம்.பி பதவியே வேண்டாமென்று முன்னாள் அமைச்சர் ஒருவர் போட்டியிலிருந்தே விலகிவிட்டாராம். அநேகமாக இந்த இதழ் வாசகர்களின் கைகளில் தவழும் வேளையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பார்கள். அதைத் தொடர்ந்து ஜூன் 3-வது வாரத்தில் பொதுக்குழுவைக் கூட்டப்போகிறார்களாம்.”

“ஆக... இப்போதைக்கு அ.தி.மு.க பஞ்சாயத்து முடியாது என்கிறீர்...”

“ஆமாம். ஓ.பி.எஸ்-ஸின் மூத்த மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது குறித்தும் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் ஓ.பி.எஸ்-ஸின் மனதைப் புண்படுத்திவிட்டனவாம். ‘குடும்பத்திலும் மரியாதை இல்லை... கட்சியிலும் மரியாதை இல்லை’ என்று நெருக்கமானவர்களிடம் புலம்பத் தொடங்கிவிட்டார் ஓ.பி.எஸ் என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, தன்மீது 28 கோடி ரூபாய் லஞ்சப் புகார் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் எதிரணியினர் இருப்பதாகச் சந்தேகப்படுகிறாராம் வைத்திலிங்கம்.”

மிஸ்டர் கழுகு: பிரதமர் விசிட்! - வசூல்வேட்டையில் பா.ஜ.க புள்ளிகள்

“தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம் பற்றிய தகவல்கள் ஏதாவது...”

“மே 28-ல் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்துவைக்கிறார். அந்த நிகழ்வு முடிந்ததும், அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பற்றி விவாதிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்று சொன்னாலும், வேறு அஜண்டாவும் வைத்திருக்கிறார்கள். தி.மு.க உட்கட்சித் தேர்தலில், மாவட்டச் செயலாளர் தேர்வு தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. பழையபடி மாவட்டங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா, சில மாவட்டங்களை மட்டும் பிரிப்பதா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதற்கொரு முடிவு கட்டப்படலாம்” என்ற கழுகார்,

“நெல்லை கல்குவாரி விபத்தை அரசு சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 55 குவாரிகளையும் உடனே ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருப்பதுடன், அதற்காக வருவாய், கனிம வளம் மற்றும் காவல்துறையினர் அடங்கிய ஆறு பேர் குழுவையும் அமைத்திருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான குவாரிகளை நடத்துவது அரசியல்வாதிகளும், அவர்களுடைய பினாமிகளும்தானாம். அதனால் எக்கச்சக்க தில்லாலங்கடி வேலைகளைத் துணிச்சலாகச் செய்து வைத்திருக்கிறார்கள்போல. ஆய்வில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் குவாரியின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்பதால், அவர்களில் பலர் பீதியில் இருக்கிறார்கள்” என்றபடி விருட்டெனப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism