Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆக்ஸிஜன் அரசியல்! - ஸ்டெர்லைட் மீது திடீர் பாசம் ஏன்?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது தமிழக அரசு

மிஸ்டர் கழுகு: ஆக்ஸிஜன் அரசியல்! - ஸ்டெர்லைட் மீது திடீர் பாசம் ஏன்?

கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது தமிழக அரசு

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

“அரசு எத்தனை உத்தரவுகளைப் போட்டாலும் அதைப் பின்பற்றுவதேயில்லை’’ என்று முணுமுணுத்துக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவரது உஷ்ணத்தைக் குறைக்க, குளிர்ந்த மோரைக் கொடுத்து, “யாரைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டோம். மோரை உறிஞ்சியபடியே செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“பொதுமக்களில் சிலரைத்தான் சொல்கிறேன்... முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் 25-ம் தேதி சென்னையில் ஒரு ரவுண்ட் வந்தேன். இளைஞர்கள் பலர் ஸ்போர்ட்ஸ் பைக்கில் பறப்பதும், தம்பதியர் சகிதம் ஊர் சுற்றுவதும் என ஆங்காங்கே போலீஸாரிடம் மாட்டிக்கொண்டேயிருந்தார்கள். சென்னையில் மட்டும் 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் கூட்டம் கூடுவதைப் பார்த்து கடுப்பான சென்னை உயர் நீதிமன்றமும், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிடுவோம்’ என்கிறரீதியில் எச்சரித்துள்ளது. குறிப்பாக, அரசு நிர்வாகம் ஆரம்பத்தில் கொரானா விஷயத்தில் காட்டிய அலட்சியத்தைக் கடுமையாக கண்டித்ததுடன், அரசுத் தரப்பு இனிமேல் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: ஆக்ஸிஜன் அரசியல்! - ஸ்டெர்லைட் மீது திடீர் பாசம் ஏன்?

“நியாயம்தானே... ‘பிச்சை எடுங்கள்’ என்று மத்திய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் சொன்னதைவிடவா சொல்லிவிட்டார்கள்... தமிழக அரசுத் தரப்பில் என்னதான் செய்யப்போகிறார்களாம்?”

“கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது தமிழக அரசு. சில நாள்களுக்கு முன்பு முதல்வருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘சென்னையில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு வாரமாவது பொதுப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்’ என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். அதை மெளனமாக கேட்டுக்கொண்டாராம் முதல்வர். தற்போது நகர்ப் பகுதிகளில் மட்டுமே கொரோனா வேகமாகப் பரவுகிறதாம். நகர்ப் பகுதிகளிலிருந்து கிராமப் பகுதிகளுக்கும் கொரோனா பரவினால் நிலைமை கைமீறிவிடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். அதன் பிறகே மால்கள் அடைப்பு, பார்கள் மூடல், சலூன்கள் மூடல் என விதிமுறைகளைக் கடுமையாக்கியது தமிழக அரசு.”

“ஸ்டெர்லைட் ஆலை திரும்பவும் திறக்கப்படுகிறதுபோல!”

“ஆமாம்... அதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. கூட்டத்தில் தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் கலந்துகொண்டனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே அதிருப்தி மனநிலையிலிருந்த தி.மு.க., ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதை முன்வைத்து ‘ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம்’ என்று கூறிவிட்டது. மற்ற கட்சிகளும் இதேரீதியில் கருத்து கூற, சி.பி.எம் மட்டும் ‘ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்று சொன்னது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறக்கச் சம்மதித்துவிட்டார். இதனால் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுவிட்டது.”

“ஆனால், வேறு மாதிரியாகவும் ஒரு பேச்சு ஓடுகிறதே!”

மிஸ்டர் கழுகு: ஆக்ஸிஜன் அரசியல்! - ஸ்டெர்லைட் மீது திடீர் பாசம் ஏன்?

“இருக்காதே பின்னே... தேர்தலுக்கு முன்னதாகவே முக்கியக் கட்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் ‘உதவிகள்’ சென்றடைந்துவிட்டன என்கிறார்கள் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள். தமிழ்நாட்டில் புது அரசு அமைந்த பிறகு, எப்படியாவது மீண்டும் ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்று கணக்கு போட்டிருந்தது ஸ்டெர்லைட். இந்தச் சூழலில்தான் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அமையவே... ஆலையைத் திறக்க அனுமதியும் வாங்கிவிட்டது. இதைவைத்தே நிரந்தரமாக ஆலையை இயக்க ஒரு டீம் தனியாக வேலை செய்கிறதாம். இன்னொன்றையும் சொல்கிறார்கள்... தமிழகத்தில் இருக்கும் உரத் தொழிற்சாலைகளில் சில தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்தி, ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியுமாம். ஆனால், இதை மறைத்துவிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.’’

“தி.மு.க சட்டப் பிரிவில் சலசலப்பு சத்தம் கேட்கிறதே?”

வில்சன்
வில்சன்

“உமக்கும் கேட்டுவிட்டதா... என் காதுக்கு வந்ததைச் சொல்கிறேன். தி.மு.க சட்டப் பிரிவில் சண்முகசுந்தரமும், வில்சனும்தான் சீனியர்கள். இருவரும் தி.மு.க-வுக்காகப் பல்வேறு வழக்குகளில் வாதாடியிருக்கிறார்கள். வில்சன் எம்.பி ஆக்கப்பட்டு டெல்லிக்குச் சென்றுவிட்டதால், முன்புபோல சட்டப் பிரிவு செயல்பாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. இந்த நிலையில்தான், இரண்டெழுத்து இனிஷியல் நபர் உள்ளிட்ட ஜூனியர் டீம் ஒன்று, கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவரைக் கைக்குள் போட்டுக்கொண்டு தனி ஆவர்த்தனம் செய்துவருகிறது என்கிறார்கள். விரைவில் சட்டப்பிரிவில் சட்டை கிழிந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்பதே லேட்டஸ்ட் தகவல்!”

“கொடைக்கானல் ரிட்டர்ன் ஸ்டாலின் என்ன செய்கிறார்?’’

மிஸ்டர் கழுகு: ஆக்ஸிஜன் அரசியல்! - ஸ்டெர்லைட் மீது திடீர் பாசம் ஏன்?

“கட்சியின் நிர்வாகிகள் பலரும் புகார்களைத் தூக்கிக்கொண்டு செனடாப் சாலைக்கு வந்துவிட்டனர். வேட்பாளர்கள் சிலரும் ‘எங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் வேலையைச் சரியாக செய்யவில்லை’ என்று புகார் மெயில் தட்டிவிட்டுள்ளனர். ‘கொளத்தூரில் ஒழுங்காக வேலை செய்யவில்லை’ என்று மாவட்டச் செயலாளர் சேகர்பாபு மீதும் சிலர் புகார்களை அனுப்பியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார் ஸ்டாலின். அவரது எண்ணமெல்லாம் ‘எந்தவிதப் புகாரும் இல்லாமல் ஆட்சியை எப்படி நடத்துவது?’ என்பதில்தான் இருக்கிறதாம். ‘நிர்வாகத்தில் குடும்பத்தினரைத் தலையிட விடாதீர்கள். உங்களுக்கென தனி ஆலோசகர்களை வைத்துக்கொள்ளுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் சர்வாதிகாரத்தைக் கையிலெடுங்கள்... தவறே இல்லை’ என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.’’

“ஆனால், ஆளுங்கட்சியில் எடப்பாடியும் உற்சாகமாகத்தானே இருக்கிறார்!”

“அவரவர் நம்பிக்கை அவரவருக்கு! அறுவை சிகிச்சை முடித்துவிட்டு எடப்பாடி ஓய்விலிருந்தபோது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் பேசிய எடப்பாடி, ‘கமலும் சீமானும் பிரிக்கக்கூடிய வாக்குகள் நமக்குச் சாதகமாகவே அமையும். கருத்துக்கணிப்புகளை எல்லாம் ஓரமாகத் தள்ளிவையுங்கள். மே 2-ம் தேதி நமக்கான நாள். அதுவரை பொறுத்திருங்கள்’ என்று சற்றுச் சத்தமாகவே சொல்ல... அவருடன் பேசிய நிர்வாகிகள் உற்சாகமாக போனை வைத்திருக்கிறார்கள்.”

“ஒஹோ!”

“முதல்வர் தரப்பில் இப்படி நம்பிக்கையுடன் இருந்தாலும், அமைச்சர்களுடன் இருந்தவர்கள் இப்போதே வேறு ரூட் போட ஆரம்பித்துவிட்டார்கள். அமைச்சர்களுடன் ஐந்து ஆண்டுகளாக வலம்வந்த பி.ஏ-க்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்த முறையும் அதைத் தொடர வழியிருக்கிறதா என்று தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

*புதுச்சேரி மாநிலத்தின் பெண் அதிகாரி ஒருவரும், நிதி அதிகாரி ஒருவரும் இரவு நேரத்தில் ஜோடியாக உலாவருகிறார்கள். புதுச்சேரி - கடலூர் சாலையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், கண்ணாடி டம்ளர்களின் சத்தத்துடன் நடக்கும் இந்தச் சந்திப்பு, நள்ளிரவைத் தாண்டியும் நீள்கிறதாம். இவர்களின் சலம்பல்களால், ‘நாமளும் நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியலையே...’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் திடீர் சப்ளையர்களாக மாறிய அதிகாரிகள் சிலர்!

* தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் சமீபத்தில் டெல்லிக்குச் சென்று திரும்பியிருக்கிறார். அங்கு தனது பேட்ச்சை சேர்ந்த சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியவர், தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர்களுடன் விவாதித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். திரும்பிய வேகத்தில், தி.மு.க-வுக்குச் சாதகமான அதிகாரிகளை அழைத்து பார்ட்டிவைத்து, ‘நமக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவே டெல்லியிலும் சொல்கிறார்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்கு நமது ஆட்சிதான்’ என்று உற்சாகமூட்டியிருக்கிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism