Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜெ. கையெழுத்து மர்மம்... ஃபைல்களைத் தோண்டும் ஆட்சி மேலிடம்!

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

முன்பெல்லாம், ஃபைல்களில் ஜெ.ஜெயலலிதா என்று முழுப்பெயருடன் கையெழுத்து போட்டுத்தான் வரும். ஆனால், பிறகு வந்த ஃபைல்களில் அவரது முழு கையெழுத்து இல்லை.

மிஸ்டர் கழுகு: ஜெ. கையெழுத்து மர்மம்... ஃபைல்களைத் தோண்டும் ஆட்சி மேலிடம்!

முன்பெல்லாம், ஃபைல்களில் ஜெ.ஜெயலலிதா என்று முழுப்பெயருடன் கையெழுத்து போட்டுத்தான் வரும். ஆனால், பிறகு வந்த ஃபைல்களில் அவரது முழு கையெழுத்து இல்லை.

Published:Updated:
ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

வியர்க்க விறுவிறுக்க வந்தமர்ந்த கழுகாருக்கு ஐஸ் மோரை அளித்தபடி, “மிகுந்த அலைச்சலோ!” என்றோம். மோரைப் பருகியபடி, “முழு ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போயிருந்தேன். போனில் பலரிடமும் பேசியபோது கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் காய்கறி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. டேமேஜ் கன்ட்ரோல் செய்வதற்காக, நடமாடும் வண்டிகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலைப்பட்டியலை அரசுத் தரப்பிலிருந்தே ‘லீக்’ செய்திருக்கிறார்கள்” என்ற கழுகார், செய்திகளுக்குள் நுழைந்தார்.

“தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்ட துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. ‘ஒப்பந்தத்தில் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் எடுக்கப் பட்ட நடவடிக்கை இது’ என்று கூறப்பட்டாலும், டெண்டர் ரத்து பின்னணியில் வேறொரு தகவலையும் சொல்கிறார்கள். மாப்பிள்ளை தரப்புக்கு நெருக்கமான லாட்டரி அதிபரின் உறவினர் ஒருவர், தனக்கு வேண்டிய ஒரு நிறுவனத்தை இந்த ஒப்பந்தத்தில் நுழைக்கத் திட்டமிட்டிருக்கிறார். அந்த நிறுவனம் கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் நெருக்கமானது என்கிறார்கள். இந்தமுறை டெண்டரை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, லாட்டரி அதிபரின் உறவினரைவைத்து மேலிடத்தை நெருங்கியிருக்கிறார்கள். அதனாலேயே சுதாரித்துக்கொண்டு டெண்டரை ரத்து செய்துவிட்டார்கள் என்று ஒரு பேச்சு ஓடுகிறது.”

மிஸ்டர் கழுகு: ஜெ. கையெழுத்து மர்மம்... ஃபைல்களைத் தோண்டும் ஆட்சி மேலிடம்!

“ஓஹோ... அந்த முன்னாள் அமைச்சர்மீது ஏற்கெனவே தி.மு.க தலைமை ஏக கோபத்தில் இருக்கிறதே!”

“உண்மைதான். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வைக் கரைத்ததில் அந்த முன்னாள் அமைச்சரின் பங்கு அதிகம் என்பதால் ஏற்பட்ட கோபம் அது. அப்படிப்பட்டவருடன் தொடர்பிலிருக்கும் நிறுவனத்துக்குச் சாதகமாக லாட்டரி பிரமுகரின் குடும்பம் ஏன் செயல்பட வேண்டும், அதை மாப்பிள்ளை தரப்பு ஏன் ஆதரிக்க வேண்டும் என்கிற புகைச்சல் தி.மு.க-வுக்குள் எழுந்துள்ளது. அந்த முன்னாள் அமைச்சரும் லேசுப்பட்டவரல்ல. தி.மு.க-வின் கஜானாவாகக் கருதப்படும் இனிஷியல் அமைச்சர் ஒருவருக்குச் சமீபத்தில் தூதுவிட்டிருக்கிறார். முக்கிய டெண்டர்களை எடுப்பதற்கும், பழைய ஊழல் புகார்களைக் கிடப்பில் போடுவதற்கும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கோவை மாவட்ட தி.மு.க மகளிரணியில் முக்கியப் பொறுப்பிலுள்ள நிர்வாகிதான் இந்தப் பேச்சுவார்த்தைக்கு பாலமாக இருந்திருக்கிறார். முடிவில், ‘டெண்டர்களைக் கொடுக்கிறோம். எங்களுக்கு கமிஷனை மட்டும் வெட்டிடுங்க’ என்று முன்னாள் அமைச்சரிடம் டீல் பேசியிருக்கிறாராம் இன்ஷியல் அமைச்சர்.”

“சரிதான்... இனிஷியல் அமைச்சர் மீது ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. கட்டட நிறுவனத்துடன் அவர் போட்டுக்கொண்ட டீலைக் கேள்விப்பட்டீரா?”

“ம்ம்... என் காதுக்கும் வந்தது. அடையாறில் இருக்கும் நில விவகாரம்தானே... அந்த நிலத்தை நீண்ட வருடங்களாக இனிஷியல் அமைச்சரால் விற்க முடியவில்லையாம். முன்னாள் ஆட்சி பீடத்துக்கு நெருக்கமாக இருந்த கட்டட நிறுவனம் ஒன்று, சி.எம்.டி.ஏ-வில் பல புகார்களில் சிக்கியிருக்கிறது. பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்காக, சமீபத்தில் இனிஷியல் அமைச்சரை அணுகியிருக்கிறது அந்த நிறுவனம். ‘கிச்சன் கேபினெட்டிடம் பேசி நான் முடித்துத் தருகிறேன். என் நிலத்தை நல்ல விலைக்கு எடுத்துக்கொள்கிறீர்களா?’ என்று அந்த நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார் இனிஷியல் அமைச்சர். அதற்குக் கட்டட நிறுவனமும் ஒப்புக் கொள்ளவே, ஆட்சி பீடத்திடம் நிறுவனத்துக்குச் சாதகமாக தூபம் போட ஆரம்பித்திருக்கிறாராம்.”

“ம்ம்... ஆளாளுக்கு மஞ்சள் குளிக்கிறார்கள்!”

“முதல்வர் அலுவலகத்தில் பணியாற்ற 45 பேர் நியமனம் செய்யப்பட்டிருக்கும் பட்டியல் லீக் ஆனதைக் கூறியிருந்தேன் அல்லவா... அந்தச் செய்தியில் அப்டேட். லிஸ்ட்டில் இருக்கும் துர்கா பிரபுவின் பெயர் பலரையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. அலுவலக உதவியாளர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் இவர், எந்த அரசுத்துறையிலும் பணியில் இல்லை. சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவரான துர்கா பிரபு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் உதவியாளராகக் கடந்த 12 வருடங்களாக இருக்கிறார். தனது அலுவலகப் பணிக்காக இப்படிச் சிலரை முதல்வர் நியமித்துக்கொள்ள சட்டத்தில் இடம் உண்டாம்.”

மிஸ்டர் கழுகு: ஜெ. கையெழுத்து மர்மம்... ஃபைல்களைத் தோண்டும் ஆட்சி மேலிடம்!
மிஸ்டர் கழுகு: ஜெ. கையெழுத்து மர்மம்... ஃபைல்களைத் தோண்டும் ஆட்சி மேலிடம்!

“ஜெயலலிதாவின் சில ஃபைல்கள் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்திருக்கின்றனவாமே?”

“ஆமாம்... முன்பெல்லாம், ஃபைல்களில் ஜெ.ஜெயலலிதா என்று முழுப்பெயருடன் கையெழுத்து போட்டுத்தான் வரும். ஆனால், பிறகு வந்த ஃபைல்களில் அவரது முழு கையெழுத்து இல்லை. அதிகாரிகள் அனுப்பும் ஃபைல்களின் எண்களை ஒரு காகிதத்தில் எழுதி, ‘அப்ரூவ்டு’ என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டு அனுப்புவார்களாம். சில ஃபைல்களில் ஜெ.ஜெ. என்று ‘இன்ஷியல்’ மட்டும் இருக்கும். இதை யார் எழுதியது என்றும் தெரியாது. அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்டபோது, ‘முதல்வர் ஓகே செய்துவிட்டார்’ என்று மட்டும் முதல்வர் அலுவலகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். இந்த விவகாரம் தற்போது முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்துக்கு பாஸ் செய்யப்பட்ட நிலையில், அந்த ஃபைல்களில் அப்படி என்ன இருக்கிறது என்கிற விவரங்களைத் தோண்டச் சொல்லியிருக்கிறதாம் முதல்வர் அலுவலகம். அந்த ஃபைல்களிலிருந்து பூதங்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்ற கழுகாரிடம் தட்டு நிறைய நெய் முறுக்கை நீட்டினோம். முறுக்கைக் கொறித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“முதல்வர் ஸ்டாலினிடம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ‘நாங்க தாயில்லா பிள்ளைகள். எங்கள்மீது ஊழல் வழக்கு போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்’ என்று கேட்பதுபோல ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. பொய்யாக இப்படியொரு தகவலை பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க-வின் ஐடி விங் சார்பாக நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, சமூக வலைதளங்களில் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தனிப்பேரவைகள் தொடங்கப் பட்டன. ‘தாயின் தலைமகனுக்குத்தான் தலைமைப் பதவி’ என பன்னீரின் ஆதரவாளர்கள் பதிவுகளைத் தெறிக்கவிட்டனர். நிலைமை கைமீறிப் போனதால் தான், ‘சமூக வலைதளங்களில் அ.தி.மு.க-வுக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.”

“ம்ம்... ஒருவழியாக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்டார்களே!”

“ஆமாம். விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோர் முட்டி மோதிய நிலையில், ப.சிதம்பரத்தின் சிபாரிசுடன் செல்வப்பெருந்தகைக்கு யோகம் அடித்திருக்கிறது. ‘போட்டிபோடும் மூவரில் யாருக்குப் பதவி கிடைக்கவில்லையென்றாலும், அவர்கள் கோஷ்டிப் பூசலை வளர்ப்பார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும்போது, அதை ஈடுசெய்யும் வகையில் அதே சமூகத்தைச் சேர்ந்த செல்வப் பெருந்தகையை சட்டமன்றத் தலைவர் ஆக்குவதுதான் சரி. இதனால், பெரிதாக கோஷ்டிப் பூசலும் ஏற்படாது’ என்று இங்குள்ள தலைவர்கள் சிலர் டெல்லிக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான், செல்வப்பெருந்தகை சட்டமன்றத்தின் முதல் வரிசையில் இடம் பிடித்திருக் கிறார்” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“நீட் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின், ‘மருத்துவப் படிப்பில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நடத்தலாம்’ என்கிற சர்ச்சைப் பேச்சால் டென்ஷன் ஆகிவிட்டாராம் முதல்வர். உடனடியாக, ‘நீட் தேர்வுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை’ என்றொரு விளக்கமும் அரசுத் தரப்பில் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘பொதுவெளியில் அமைச்சர்கள் சுதாரிப்புடன் பேச வேண்டும்’ என்று முதல்வர் தரப்பிலிருந்து அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது” என்றபடி ஜூட் விட்டார்.

மிஸ்டர் கழுகு: ஜெ. கையெழுத்து மர்மம்... ஃபைல்களைத் தோண்டும் ஆட்சி மேலிடம்!

பி.எஸ்.ஓ பதவிக்குப் போட்டி!

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பி.எஸ்.ஓ-வாகப் பணிபுரிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் முட்டி மோதுகிறார்கள். ராஜகண்ணப்பன் ஏற்கெனவே அமைச்சராக இருந்தபோது, அவரிடம் பணியாற்றிய பி.ஏ-க்கள், பி.எஸ்.ஓ-க்கள் பலரும் வெயிட்டாக செட்டில் ஆகிவிட்டார்களாம். அதைப் பார்த்துத்தான், இவ்வளவு போட்டி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

டெல்டாவில் கமிஷன் பஞ்சாயத்து!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோட்டங்களின் கீழ்வரும் நீர்நிலைகளைத் தூர்வாருவதற்கும், ஏரி, குளங்களைப் பராமரிக்கவும் சிறப்பு நிதியாக 69 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. கடந்த ஆட்சியில், தனக்கு நெருக்கமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நபர்களுக்கே எடப்பாடி தரப்பு தூர்வாரும் டெண்டர்களை வழங்கியதால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க சார்பு அரசு ஒப்பந்ததாரர்கள் பலரும் தங்களது அரசு ஒப்பந்தப் பணிக்கான உரிமங்களைப் புதுப்பிக்கவில்லையாம். இந்தச் சிக்கல் தெரியவந்ததால், அ.தி.மு.க ஆட்சியில் தூர்வாரிய ஒப்பந்ததாரர்களுக்கே கூடுதல் கமிஷனில் டெண்டர் ஒதுக்க சில மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதையடுத்து, கமிஷன் விவகாரத்தில் மா.செ-க்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் முட்டல் மோதல் களைகட்டியுள்ளது!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

*அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், தி.மு.க-வில் ஐக்கியமாவதற்கு அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி மூலமாக அறிவாலய தலைமைக்குத் தூதுவிட்டிருக்கிறாராம்.

*கடந்த ஆட்சியில் பன்னீருக்கு நெருக்கமாக இருந்த மணல் தொழிலதிபர் இப்போதெல்லாம் ‘அண்ணாநகர்’ ஏரியாவில்தான் அதிக நேரம் செலவழிக்கிறாராம். தமிழகத்தில் மணல் டெண்டர் எடுப்பது குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றனவாம். அப்போது, ‘ஆந்திராவில் தற்போது கொடுக்கும் கமிஷனைவிடக் கூடுதலாகக் கொடுக்கிறேன்’ என்றும் உறுதியளித்திருக்கிறாராம்!