Published:Updated:

மிஸ்டர் கழுகு: டார்கெட் உதயநிதி... பி.ஜே.பி-யின் பிக் பிளான்!

தி.மு.க-வுக்குள் தலைமைமீது அதிருப்தியிலுள்ள பட்டியலின பிரமுகர்களிடம் பேசி கட்சிக்குள் இழுக்குமாறு, வி.பி.துரைசாமியிடம் பி.ஜே.பி புது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறதாம்.

பிரீமியம் ஸ்டோரி
‘‘சென்னைவாசிகள் பாவம்... கொரோனா, வெயில் இரண்டையும் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ!’’ - வியர்வை மழையில் குளித்தபடி வந்தமர்ந்தார் கழுகார்.

பருக தர்பூசணி ஜூஸ் கொடுத்து விட்டு, ‘‘ஆர்.எஸ்.பாரதி கைது பரபரப்பாகிவிட்டதே...’’ என்று அவரை நேராகச் செய்திக்குள் இழுத்தோம்.

‘‘ஆமாம். `அவரை 15 நாள் ரிமாண்ட் செய்தே தீருவது’ என்பது ஆளும் தரப்பு முடிவாக இருந்ததாம். கைது பற்றிய செய்தியைச் சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரி ஒருவர் தி.மு.க முகாமுக்கு முன்கூட்டியே பாஸ் செய்திருக்கிறார். உஷாரான தி.மு.க வழக்கறிஞர் பிரிவு, உடனடியாக சட்ட ஷரத்துகளை ரெடி செய்து ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வாங்கிவிட்டது. திட்டம் சொதப்பிவிட்டதாக ஆளுங்கட்சி காதில் ஏகத்துக்கும் புகை.’’

‘‘ஓஹோ... ‘ஆளுங்கட்சியின்மீது அடுக்கடுக்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் நான் புகாரளித்ததே என் கைதுக்குக் காரணம்’ என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தாரே?”

“திட்டம் அதைவிடப் பெரியது. அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி சமீபத்தில் பி.ஜே.பி-யில் இணைந்தார். தி.மு.க-வில் சாதி பேதம் தலைதூக்கிவிட்டதாகவும், பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவ தில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நேரத்தில் ஆர்.எஸ்.பாரதியை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புப் பிரிவில் கைதுசெய்தால், தி.மு.க-வை `பட்டியலின விரோதி’ என அடையாளப்படுத்திவிடலாம் எனத் திட்டமிட்டே இந்தக் கைதை ஆளும் தரப்பு அரங்கேற்றியதாம். தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு என மற்றவர்களுக்கும் குறிவைக்கப் பட்டிருந்திருக்கிறது. அதற்குள் அவர்கள் உஷாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால பாதுகாப்பு வாங்கிவிட்டனர். ’முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் வேலுமணியும் இணைந்துதான் இந்தத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்கள்’ என்று தி.மு.க தரப்பிலிருந்து ஏகத்துக்கும் குமுறல் கேட்கிறது.’’

மிஸ்டர் கழுகு: டார்கெட் உதயநிதி... பி.ஜே.பி-யின் பிக் பிளான்!

“ `அரசுக்கும் இந்தக் கைதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று முதல்வர் கூறியிருக்கிறாரே...’’

“அது வழக்கமாகச் சொல்வதுதானே.... `தமிழக வாக்காளர்களில் ஏறத்தாழ 17 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர்’ எனக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அருந்ததியர், வட மாவட்டங்களில் ஆதிதிராவிடர், தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் என தி.மு.க-வுக்குச் செல்லும் கணிசமான பட்டியலின வாக்குகளை உடைத்துவிட்டால், 2021 தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்திவிடலாம் என அ.தி.மு.க கணக்குப் போடுகிறது. ஏற்கெனவே, முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரத்தில் தி.மு.க-விடம் மணிக்கொரு முறை மூலப்பத்திரம் கேட்டுக்கொண்டிருக்கும் பி.ஜே.பி-யும் இந்தத் திட்டத்துக்கு பூரண சப்போர்ட் தருகிறதாம். எனவே, தி.மு.க-வை இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘இப்படிச் செய்வதன் மூலம் தி.மு.க-வைப் பட்டியலின விரோதியாகக் காட்டிவிட முடியுமா?’’ என்றபடியே கழுகாருக்குப் பொரிகடலையை நீட்டினோம். ‘‘அப்படித்தான் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் நினைக்கின்றன’’ - புன்முறுவலுடன் கடலையைக் கொரித்தபடியே கழுகார் தொடர்ந்தார்.

‘‘தி.மு.க-வுக்குள் தலைமைமீது அதிருப்தியிலுள்ள பட்டியலின பிரமுகர்களிடம் பேசி கட்சிக்குள் இழுக்குமாறு, வி.பி.துரைசாமியிடம் பி.ஜே.பி புது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறதாம்.
வெங்கடேஷ்
வெங்கடேஷ்

அதன்படியே அவரும் பேசத் தொடங்கியிருக்கிறாராம். முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில், உதயநிதி ஸ்டாலினை நோக்கியும் பி.ஜே.பி அம்பு எய்யப்போகிறதாம். முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான அவர்மீது தேசிய எஸ்.சி./எஸ்.டி கமிஷனில் புகார் அளிக்கவும் தயாராகிறார்கள். அதேசமயம், தி.மு.க கூட்டணிக் கட்சிகளைத் தாக்குவதற்கும் தயாராகிவிட்டார்களாம்.

‘பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் எந்த நன்மையும் செய்யவில்லை. அவரின் சிதம்பரம் தொகுதியிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த கல்வியாளரான சுவாமி சகஜானந்தரை கௌரவிக்கவில்லை’ என திருமாவையும் அட்டாக் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். ஏற்கெனவே `இந்து விரோதி’ என்ற தாக்குதலை எதிர்கொள்ளும் தி.மு.க., இனி `பட்டியலின விரோதி’ என்ற தாக்குதலையும் பி.ஜே.பி., அ.தி.மு.க-விடமிருந்து எதிர்கொள்ள நேரிடும்.’’

உதயநிதி ஸ்டாலின் - ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - ஸ்டாலின்

‘‘அ.தி.மு.க செய்திகள் ஏதேனும் உண்டா?’’

‘‘ஜூன் முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்துக்கு அ.தி.மு.க தயாராவதை ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்தப் பட்டியலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திருவள்ளூர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு விருதுநகர் என வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாம்’’ என்ற கழுகார், ‘‘இன்னொரு சுவாரஸ்யத் தகவலும் இருக்கிறது’’ என்றபடி தொடர்ந்தார்.

‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ், சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர். இப்போது சங்ககிரியில் குடியிருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியைக் குறிவைத்திருக்கும் மைத்துனர் வெங்கடேஷுக்குத் தொகுதியை ஒதுக்குவதாக எடப்பாடி கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம். குஷியான வெங்கடேஷ், சங்ககிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ராஜாவை அழைக்காமலேயே தொகுதிக்குள் கொரோனா நிவாரணப் பொருள்களை வழங்க ஆரம்பித்துவிட்டார். முதல்வரின் மைத்துனர் என்பதால் வெளியில் சொல்ல முடியாமல் ராஜா தரப்பு விரக்தியில் நொந்துபோயிருக்கிறது’’ என்ற கழுகார் புறப்படுவதற்கு முன், ‘‘சென்னை பெருநகரக் காவல் கூடுதல் கமிஷனராக இருக்கும் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஏறத்தாழ 39 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்களை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பத்திரமாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இதை ஒரு ஆபரேஷனாகவே சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா டீம் செய்து முடித்து, முதல்வரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா?

‘சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு விரைவில் அமலுக்கு வரலாம்’ என்று தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேச்சு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 70 சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களிலுள்ள 11 மாநகராட்சிப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். எனவே, சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு ஆலோசனை செய்துவருகிறது.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், `ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ள ராயபுரம், திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை என ஒவ்வொரு மண்டலத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்த மண்டலங்களிலுள்ள 527 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் நெருக்கமாக வாழும் குறுகலான தெருக்களில், ‘சமூக இடைவெளியைப் பின்பற்ற வாய்ப்பில்லை’ என்று அங்குள்ளவர்கள் சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். அங்கெல்லாம் முன்பு போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருந்தன. இப்போது அப்படியில்லை. எனவே, இந்த நான்கு மண்டலங்களையும் துண்டித்து, தனிமைப்படுத்தி சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட ஏற்பாடுகள் நடக்கின்றன. உள்ளூர் போலீஸை தவிர்த்து ஆயுதப்படை போலீஸை ரோந்துப் பணிக்கு அனுப்பலாமா என்ற ஆலோசனையும் நடக்கிறது.

களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

கொரோனா பொது முடக்கத்தால் தடைப்பட்டிருந்த பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ‘விஜய் மக்கள் இயக்கம்’ மீண்டும் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஒரு பூத் கமிட்டிக்கு குறைந்தது 12 பேர் வீதம் ஆட்களை ரெடி செய்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளும் இப்போதே பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை இரண்டு கட்சிகளுமே உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கிவிட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு