Published:Updated:

மிஸ்டர் கழுகு: குடியரசுத் தலைவர் தேர்தல்... டெல்லிக்கு கிடுக்கிப்பிடி போடும் தி.மு.க!

ஸ்டாலின், வெங்கைய நாயுடு
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், வெங்கைய நாயுடு

வருகின்ற மே 7-ம் தேதி அன்று ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்வித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட முதல்வர் திட்டமிட்டிருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: குடியரசுத் தலைவர் தேர்தல்... டெல்லிக்கு கிடுக்கிப்பிடி போடும் தி.மு.க!

வருகின்ற மே 7-ம் தேதி அன்று ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்வித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட முதல்வர் திட்டமிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின், வெங்கைய நாயுடு
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், வெங்கைய நாயுடு

“அனைத்து சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி...” - என்ற வாக்கியத்தை உச்சரித்தபடியே என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், “என்ன, பீடிகையெல்லாம் பலமாக இருக்கிறதே!” என்று விழி உயர்த்தினோம்... “காரணம் இல்லாமல் சொல்வேனா?” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்.

“ஆளுநர் - தி.மு.க மோதல்கள் கடைசியில் டெல்லியை நோக்கித்தான் நகர்கின்றன... குடியரசுத் தலைவர் தேர்தல்தான் அது. குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கு வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவிகித ஆதரவு தேவை. தற்போது ஆளும் பா.ஜ.க-விடம் 48.8 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. தெலங்கானா, ஆந்திராவை ஆளும் கட்சிகளிடம் பேசி சரிக்கட்டிவிட்டார்கள் என்று கூறப்பட்டாலும், பாதுகாப்பு கருதி, இதர மாநிலங்களை ஆளும் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இருக்கிறது பா.ஜ.க.”

“ம்ம்ம்... மேற்கொண்டு சொல்லும்!”

“தேவையான அளவுக்கு ஆதரவு கிடைத்துவிட்டால் பா.ஜ.க., தான் விரும்பும் வேட்பாளரைக் களமிறக்கி குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை வெற்றிபெறவைத்துவிடலாம். இல்லையென்றால், பொது வேட்பாளரைக் களமிறக்க வேண்டும். அப்படித்தான் 2002-ல் வாஜ்பாய் அரசுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டபோது, அப்துல் கலாம் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பொது வேட்பாளராக நிறுத்தப்படுபவர் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அதிக எம்.பி-க்களைக்கொண்ட கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க-வின் ஆதரவை எதிர்பார்க்கிறது பா.ஜ.க. பதிலுக்கு இதுதான் சந்தர்ப்பம் என்று, ஆளுநர் மாற்றம் தொடர்பாக பா.ஜ.க-விடம் கொக்கி போடவிருக்கிறது தி.மு.க.”

“ஓஹோ... கதை அப்படிப் போகிறதா?”

“ஆமாம்... இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். தற்போது குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கைய நாயுடுவுக்கு, குடியரசுத் தலைவராக வேண்டும் என்பது ஆசையாம். அது குறித்து டெல்லி மேலிடத்திலும் நாயுடு பேசிவிட்டார் என்கிறார்கள். ‘ஒருவேளை வெங்கைய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவரை முழுமனதாக நாங்கள் ஆதரித்து, ஏற்றுக்கொள்வோம்’ என்று தி.மு.க சார்பில் பேசப்பட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. அதாவது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது தி.மு.க. ஒன்று, வெங்கைய நாயுடுவை வெற்றி பெறவைப்பதற்குப் பரிகாரமாக, ஆளுநர் ரவியை திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்யலாம்... இரண்டு, வெங்கைய நாயுடு குடியரசுத் தலைவராகிவிட்டால், அடுத்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில், ரவி போல மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் ஆளுநர் நியமிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இந்தப் பின்னணியில்தான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க யாரையும் அனுப்பாமல், மறுநாளே வெங்கைய நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினே பங்கேற்றிருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: குடியரசுத் தலைவர் தேர்தல்... டெல்லிக்கு கிடுக்கிப்பிடி போடும் தி.மு.க!

“கேட்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது... என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தமிழக ஆளுநர்மீது காட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறதே உச்ச நீதிமன்றம்?”

“எழுவர் விடுதலையில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதைக் கண்டித்திருக்கிறது நீதிமன்றம். இந்த விவகாரத்தில் நீதிபதிகள் கண்டிப்பு காட்டியிருப்பதால், ஆளுநர் தரப்பிலும் சட்ட ஆலோசனை நடந்துவருகிறது. டெல்லியிலும் சில கருத்துகளைக் கேட்டிருக்கிறது ராஜ் பவன். விரைவில் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள். அநேகமாக ஆளுநர் தனது கருத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவிடுவாராம். அதன் பிறகு அனைத்தையும் டெல்லி மேலிடமே பார்த்துக்கொள்ளுமாம்.”

“அ.தி.மு.க-வில் நடந்த உட்கட்சித் தேர்தலை கவனித்தீரா?”

“கவனித்தேன்... கவனித்தேன்... அதைத் தேர்தல் என்று சொல்லாதீர்... அத்தனையும் நியமனங்கள். 90 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்களையே மீண்டும் நியமித்திருக்கிறார்கள். ஒருசில இடங்களில் மட்டும் மாற்றங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, `சசிகலா ஆதரவாளர்களை மட்டும் மாற்றிவிடுங்கள்’ என்று தலைமையிலிருந்து வாய்மொழி உத்தரவு சென்றிருக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நடத்தாமலேயே வெற்றிபெற்ற கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது!”

“போங்கு தேர்தல் என்று சொல்லும்... அது சரி, ஓராண்டு கொண்டாட்டங்களுக்கு, கோட்டை தயாராகிவிட்டதுபோலிருக்கிறதே!”

“ஆமாம்... தி.மு.க ஓராண்டு ஆட்சியின் சாதனை மலர் தயாரிக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்துவருகின்றன. வருகின்ற மே 7-ம் தேதி அன்று ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்வித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட முதல்வர் திட்டமிட்டிருக்கிறார். அநேகமாக அன்றைய தினம் அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள் புதிய வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள். அப்படி நடந்தால், முன்கூட்டியே வாரிசுக்கு முடிசூட்டப்படலாம். ஏற்கெனவே நான் சொல்லியிருந்தபடி அன்பில் மகேஸ் வசமுள்ள பள்ளிக்கல்வித்துறை வாரிசுக்கு வழங்கப்படலாம். அன்பிலுக்கு வேறு ஒரு துறை ஒதுக்கப்படலாம். அமைச்சர் ஐ.பெரியசாமியை சாந்தப்படுத்தும் வகையில் அவருக்கு ‘திருப்தி’கரமான துறை கொடுக்கப்படலாம்... அதேசமயம், ‘இவை அனைத்துமே மாற்றத்துக்குரியவை... தள்ளிப்போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். மொத்தத்தில் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

“ஓ... அதே உற்சாகத்தில்தான் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்போகிறார்களா?”

“ஆமாம். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே அண்ணா சாலையில் கருணாநிதிக்குச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார் ஸ்டாலின். அதில் ஒரு மாற்றம்... இப்போது ஓமந்தூரார் வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். விசாரித்தால், அண்ணா சாலையில் சிலைவைத்தால், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி எதிர்க்கட்சியினர் சிலையை அகற்ற வாய்ப்பு இருக்கிறது... அதைத் தவிர்க்கவே ஓமந்தூரார் வளாகத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று காதைக் கடிக்கிறார்கள் அதிகாரிகள். இதற்காக 16 அடி உயர வெண்கலச் சிலை ஒன்று தயாராகிவருகிறது. அந்தச் சிலை நிறுவப்பட்டால், தமிழகத்திலேயே உலோகத்தால் செய்யப்பட்ட பெரிய சிலை இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்!” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடியே உரையாடலைத் தொடர்ந்தார் கழுகார்...

“கடந்த இதழில் ‘தள்ளிப்போகும் நியமனங்கள்...’ என்று தமிழக பா.ஜ.க பற்றிய கட்டுரையை வெளியிட்டிருந்தீர் அல்லவா... அமித் ஷா சென்னைக்கு வந்து சென்ற பிறகு பா.ஜ.க நிர்வாகிகளின் நியமனங்கள் வேகமெடுத்துள்ளன. ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு வெளியாகலாம். இந்தப் பட்டியலில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கையே ஓங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. சீனியர்கள் பலருக்கும் கல்தா கொடுக்கப்படலாம் என்பதே கமலாலயத்திலிருந்து வரும் தகவல்...”

“அதிருக்கட்டும்... ‘யாரை, யார் ரிஜெக்ட் செய்தார்கள்?’ என்கிற பட்டிமன்றம் டெல்லியில் சூடுபிடித்திருக்கிறதே?”

மிஸ்டர் கழுகு: குடியரசுத் தலைவர் தேர்தல்... டெல்லிக்கு கிடுக்கிப்பிடி போடும் தி.மு.க!

“காங்கிரஸ் - பிரசாந்த் கிஷோர் விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான மேல்மட்டக்குழு ஒன்றை சோனியா அமைத்திருக்கிறார். அந்தக் குழுவில் இணைந்து பணியாற்ற பிரசாந்த் கிஷோருக்கு கோரிக்கைவைத்திருக்கிறார்கள். ஆனால், ‘கட்சியில் பவர்ஃபுல் பதவியைத் தந்தால் மட்டுமே கட்சியில் இணைவேன்; இல்லையென்றால், தேர்தல் யுக்தியை வகுக்கும் பணிகளை மட்டும் செய்து கொடுக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இதற்கு காங்கிரஸ் தரப்பும் தலையாட்டிவிட்டதாம். இதைத்தான் காங்கிரஸை நிராகரித்துவிட்டார் பிரசாந்த் கிஷோர் என்றெல்லாம் பில்டப் கொடுத்துவருகிறார்கள் சிலர்!” என்ற கழுகார்,

“கடந்த ஆண்டு, பிப்ரவரி 22 அன்று தமிழக காவல்துறையின் சிறப்பு டி.ஜி.பி-யாக இருந்தவர்மீது பாலியல் புகார் வெடித்தது. சரியாக ஓராண்டு கழித்து கடந்த பிப்ரவரி 21 அன்று அதே மத்திய மண்டலத்திலிருந்து ‘தற்கொலை உணர்வுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்... தயவுசெய்து உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்கிறரீதியில் மற்றொரு பெண் அதிகாரி காவல்துறைத் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். வடக்கு மண்டலத்திலும் இது போன்ற குமுறல்கள் ஒலிக்கின்றன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள்!” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, சத்தான துறையின் போக்குவரத்துப் பணிகளை கடந்த இரண்டு வருடங்களாக கவனித்துவருகிறது. “கடந்த ஆட்சியில் இந்தத் துறையின் அமைச்சரைச் சரிக்கட்டி டெண்டரை எடுத்தார்கள். இந்த ஆட்சியிலும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி, தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்’’ என்கிறது அதிகாரிகள் தரப்பு.

* சமீபத்தில் இஸ்லாமியர்கள் அளித்த இப்தார் விருந்தில் கலந்துகொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அதற்கான அழைப்பிதழில் மோடியின் படத்தையும் அச்சடித்திருக்கிறார். கடுப்பான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சிலர், ‘சென்சிட்டிவ்வான விஷயங்களில் யாரைக் கேட்டு இவர் முடிவெடுக்கிறார்? இப்படித் தன்னிச்சையாகச் செயல்படுவது நல்லதல்ல’ என நாக்பூருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism