Published:Updated:

மிஸ்டர் கழுகு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... பெருமூச்சுவிடும் மாஜி!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

சட்டசபை வளாகத்திலேயே தன் சகாக்களிடம், ‘எல்லாம் பேசி முடிச்சாச்சுப்பா’ என்று பெருமூச்சுவிடுகிறார் என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... பெருமூச்சுவிடும் மாஜி!

சட்டசபை வளாகத்திலேயே தன் சகாக்களிடம், ‘எல்லாம் பேசி முடிச்சாச்சுப்பா’ என்று பெருமூச்சுவிடுகிறார் என்கிறார்கள்.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

“விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம்” என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார்... “அதுதான் உதயநிதியை அமைச்சரவையில் இணைப்பது பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டீரே...” என்று நாம் கேட்க, “அதற்கும் மேலதிக தகவல்கள் இருக்கின்றன” என்று கண்சிமிட்டியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மே 7-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அன்றைய தினமே அமைச்சரவையை மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும், அதில் உதயநிதிக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படலாம் என்றும் சொல்லியிருந்தேன். தற்போதைய அப்டேட் என்னவென்றால், பள்ளிக்கல்வியுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையும் சேர்த்துக் கொடுக்கப்படலாம் என்கிறது கோட்டை பட்சி. அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வியும், இளைஞர் நலனும் ஒரே அமைச்சரின் கீழ்தான் இருந்தன. தி.மு.க பொறுப்பேற்ற பிறகுதான் துறையைப் பிரித்து, பள்ளிக்கல்வியை அன்பில் மகேஸிடமும், இளைஞர் நலனை மெய்யநாதனிடமும் கொடுத்தனர். மெய்யநாதனிடம் ஏற்கெனவே சுற்றுச்சூழல்துறை இருப்பதால், இளைஞர் நலனைப் பிரித்தால் அவருக்கு அதிருப்தி எதுவும் எழாது என்று நினைக்கிறார்கள்!”

“வாரிசுக்கு முக்கியத்துவம் கூடுகிறது என்று சொல்லும்... பின்னணி என்னவாம்?”

உதயநிதி
உதயநிதி

“ஏற்கெனவே நாம் கோடிட்டுக் காட்டியதுதான்... வருங்கால வாக்காளர்களான மாணவர்களிடம் உதயநிதியை இப்போதே புரொமோட் செய்வதுதான் கட்சித் தலைமையின் இலக்கு. அதாவது, அடுத்த தலைவராக உதயநிதியை வார்த்தெடுக்க வேண்டும் என்பது செனடாப் சாலைத் தரப்பின் தீவிர விருப்பமாம். அதேபோல், கட்சியில் இளைஞரணிச் செயலாளராக இருப்பதால், இளைஞர் நலன்துறையை அவருக்கு ஒதுக்கத் திட்டமிடுகிறார்கள். ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்... சமீபத்தில், சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், `234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்’ என்றார். அவற்றைக் கட்டி முடிக்க மூன்றாண்டுகளாவது ஆகும். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் கட்டப்படும் விளையாட்டு மைதானங்களை உதயநிதி சென்று திறந்துவைப்பார்; விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசு வழங்குவார். இவையெல்லாம் முதல் தலைமுறை வாக்காளர்களான இளைஞர்களைக் கவரும் என்பது கட்சித் தலைமை போடும் கணக்கு!”

“பலே கணக்குதான்... அதுசரி, அமைச்சரவையில் மேலும் இரண்டு பேர் இடம்பிடிக்கிறார்களாமே?”

“அப்படித்தான் தகவல்கள் வருகின்றன... டி.ஆர்.பாலு தீவிரமாகப் போராடி, தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் பதவியை ரிசர்வ் செய்துவிட்டாராம். ராஜா ஐ.டி விங் செயலாளராக இருப்பதால், அதே துறை ஒதுக்கப்படலாம். அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்துக்கென்று இருக்கும் ஒரே அமைச்சர் மனோ தங்கராஜ் என்பதால், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க மாட்டார்கள்; இலாகா மட்டும் மாற்றப்படலாம் என்கிறார்கள். இவர்களுடன் ‘தாயகம்’ கவிக்கும் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னொன்றையும் சொல்கிறார்கள்... ‘அமைச்சர் சேகர் பாபு சென்னையை மொத்தமாகக் கைப்பற்றிவிட்டார். எனது மாவட்டத்திலேயே எனக்கு எதிரானவரைத் துணை மேயராக்கிவிட்டார். சேகர் பாபுவுக்கு செக் வைக்க வேண்டும்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பிலிருந்து முதல்வரிடம் புலம்பியிருக்கிறார்கள். அதனால், சேகர் பாபு ஏரியாவில் இன்னொருவரை வளர்த்துவிட தலைமை தயாராகிறதாம். ஆனாலும், ‘தாயகம் கவி, சேகர் பாபுவுக்கு வேண்டப்பட்டவர்... அவரைவைத்து எப்படி அண்ணனுக்கு செக் வைக்க முடியும்?’ என்று லாஜிக்காகக் கேள்வி கேட்கிறார்கள் தலைநகர உடன்பிறப்புகள்!”

மிஸ்டர் கழுகு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... பெருமூச்சுவிடும் மாஜி!

“வேண்டப்பட்டவரைவைத்து குத்துவதுதானே ‘உள்குத்து’ அரசியல்... தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றமும் இருக்கும்போல...”

“ஆமாம், மாவட்டச் செயலாளர்கள் பலரும் மாற்றப்படலாம். அதற்காக இப்போதே மாற்றுக் கட்சியினரை தி.மு.க-வுக்கு அழைத்துவருவது, சிட்டிங் மா.செ-க்கள் குறித்து தலைமைக்குப் புகார் கடிதம் எழுதுவது எனக் காரியங்கள் ஜோராகத் தொடங்கிவிட்டன. தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி சமீபத்தில் ராமநாதபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் தம்பிகளைக் கட்சியில் சேர்த்தார்... அடுத்தகட்டமாக மே 2 அன்றும் 3,000 நாம் தமிழர் கட்சியினரை அறிவாலயத்தில்வைத்து கட்சியில் சேர்த்திருக்கிறார். ஏதோ ஒரு பதவியைக் குறிவைத்தே இந்த ஆள் பிடிக்கும் வேலையை அவர் செய்கிறார் என்கிறார்கள்.”

“அண்ணாமலை இலங்கைக்குப் பறந்திருக்கிறாரே!”

“இலங்கை மலையகத் தமிழர்களின் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் மே விழா அழைப்பிதழை முன்னரே அண்ணாமலைக்குக் கொடுத்திருக்கிறார்கள். மே 1 அன்று நடந்த அந்த விழாவில் கலந்துகொள்ளத்தான் அவர் இலங்கைக்குச் சென்றார் என்று சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் வேறு சில அஜெண்டாக்களையும் முன்வைக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது அல்லவா... அதற்கு மத்திய அரசு, ‘எங்கள் வழியாகத்தான் உதவிகளை அளிக்க முடியும்; ஒரு தரப்பினருக்கு மட்டும் உதவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசும் தெரிவித்துவிட்டது’ என்று பதில் சொல்லியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தி.மு.க அரசுக்கு செக் வைப்பதற்காகவே அண்ணாமலை இலங்கைக்குச் சென்று மக்களைச் சந்தித்திருக்கிறார் என்கிறார்கள். அதாவது, இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தி.மு.க-வைவிட எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதை உணர்த்தவே இந்த அரசியலைக் கையிலெடுத்திருக்கிறதாம் பா.ஜ.க.”

“இலங்கை அரசியல் இந்த நூற்றாண்டில் ஓயாதுபோலிருக்கிறது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்ட அறிக்கையைப் படித்தீரா?”

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

“ம்ம்... படித்தேன்... ‘ஓர் அரசியல்வாதியாக நான் உங்களுக்குப் பயன்படுவேனா என்று தெரியாது. ஆனால், ஒரு நண்பனாகச் செயல்படுவேன்’ என்று நீள்கிறது அந்த அறிக்கை. சமீபத்தில் திருவாடானையில் நடந்த ஒரு கோயில் குடமுழுக்கு விழாவில், ஜெயபிரதீப் கலந்துகொண்டார். அந்த விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஜெயபிரதீப்பின் படத்தைப் பெரிதாகவும், எடப்பாடி பழனிசாமியின் படத்தைச் சிறிதாகவும் வைத்துவிட்டார்கள். இதை மதுரை மண்டல ஐ.டி விங் பொறுப்பாளரான ராஜ்சத்யன் கட்சித் தலைமையிடம் புகார் செய்தாராம். இதையடுத்து, ஜெயபிரதீப்பிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அதில் அப்செட்டானவர், இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டார் என்கிறார்கள்” என்ற கழுகாருக்கு சூடாக ஏலக்காய் டீயைக் கொடுத்தோம். ரசித்துப் பருகியபடியே உரையாடலைத் தொடர்ந்தார் கழுகார்...

“கொடநாடு வழக்கு விவகாரத்தில் மாஜி ஒருவர் தெம்பாக இருக்கிறார். சட்டசபை வளாகத்திலேயே தன் சகாக்களிடம், ‘எல்லாம் பேசி முடிச்சாச்சுப்பா’ என்று பெருமூச்சுவிடுகிறார் என்கிறார்கள். இதன் பின்னணியில் ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறின என்றும் பேச்சு அடிபடுகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தப்பியோடிய ஒரு காவலாளி என்ன ஆனார் என்பதையே போலீஸ் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையே அரசியலுக்காக நடக்கும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கைதான் என்கிற பேச்சு அ.தி.மு.க-விலேயே எழ ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பேச்சு உண்மையா, பொய்யா என்று நிரூபிக்கவேண்டிய கடமை ஆளுங்கட்சிக்கு இருக்கிறது.”

சித்ரா
சித்ரா

“சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் அ.தி.மு.க மாஜி உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபடுகின்றனவே?”

“சித்ராவின் தற்கொலை வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக பெரம்பலூரில், ‘கிஃப்ட் ஷாப்’ திறப்புவிழா ஒன்றில் பங்கேற்றார் சித்ரா. அதன் பின்பு அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின், தொடர் தொந்தரவே தற்கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட அந்த முன்னாள் எம்.எல்.ஏ உதவிக்காகக் கட்சித் தலைமையை நாடியிருக்கிறார்... ஆனால், இருவருமே கையை விரித்துவிட்டார்கள்... ஒருவேளை போலீஸ் அந்த முன்னாள் எம்.எல்.ஏ-வை வளைக்கும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இதில் சிக்குவார் என்று தெரிகிறது!” என்ற கழுகார்...

“நிலச்சரிவு அபாயம் உள்ள நீலகிரியில் மீண்டும் புற்றீசல்போல காட்டேஜ்கள் கட்டும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக, அதிகரட்டி பேரூராட்சியில் காப்புக் காட்டை ஒட்டிய மலைப் பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டு, பிரமாண்டமாகக் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. கேட்டால், ‘உள்ளூர் அமைச்சரிடம் அனுமதி வாங்கிவிட்டோம்’ என்கிறார்கள். அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக இப்போதே சுதாரிக்க வேண்டும் தமிழக அரசு” என்று எச்சரிக்கை மணியை அடித்தபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்!

* டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களைத் தவிர வேறு பொருள்களை விற்பதற்கு அனுமதி இல்லை. அந்த விதிமுறையில் திருத்தம் செய்து தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் ஆகியவற்றையும் விற்பனை செய்ய பெரும் லாபி நடக்கிறது. கறாரான மதுரைக்காரரின் நண்பர்தான் இதன் பின்னணியில் இருக்கிறாராம்.

* மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் முடிந்தவுடன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் நடக்கவிருக்கிறது. 30 பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகளைக் கொண்டுவர கையெழுத்தாகியிருக்கிறது என்கிறது கோட்டை வட்டாரம்!

* மே 9, 10 ஆகிய தேதிகளில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருக்கும் சூழலில், அனைத்து மண்டல ஐ.ஜி-க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது உளவுத்துறை. அதில் கடந்த மூன்றாண்டுகளில் கட்சியினரால் தாக்கப்பட்ட காவல்துறையினர் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. அநேகமாக மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அதிரடி அறிவிப்பு வெளியாகலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism