Published:Updated:

மிஸ்டர் கழுகு: முத்தமிட்ட தயாளு அம்மாள்... கண்ணீர்விட்ட ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஏற்கெனவே தயாரித்திருந்த அமைச்சரவைப் பட்டியலை வைத்துக்கொண்டு சபரீசனுடன் ஆலோசனை செய்திருக்கிறார் ஸ்டாலின்

மிஸ்டர் கழுகு: முத்தமிட்ட தயாளு அம்மாள்... கண்ணீர்விட்ட ஸ்டாலின்!

ஏற்கெனவே தயாரித்திருந்த அமைச்சரவைப் பட்டியலை வைத்துக்கொண்டு சபரீசனுடன் ஆலோசனை செய்திருக்கிறார் ஸ்டாலின்

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“ஜூனியர் விகடன் சர்வேயில் ‘தி.மு.க கட்சி மட்டுமே 125 தொகுதிகளைக் கைப்பற்றும்’ என்று முன்கூட்டியே துல்லியமாகக் கணித்த உமது குழுவுக்கு வாழ்த்துகள்” என்றபடி பொக்கேயுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். வாழ்த்தை ஏற்றுக்கொண்டு ஜில்லென்ற நுங்கு ஜூஸை கழுகாருக்கு நீட்டினோம். ஜூஸைப் பருகியபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“வழக்கமாக தபால் வாக்குகளில் தி.மு.க-தான் முன்னிலை வகிக்கும். ஆனால், இந்தமுறை தி.மு.க-வுக்கு தபால் வாக்குகளிலேயே கடும் நெருக்கடியைக் கொடுத்தது அ.தி.மு.க. மே 2-ம் தேதி காலை 11 மணியளவில் தி.மு.க-வுக்குப் போட்டியாக நூறு இடங்களை அ.தி.மு.க நெருங்கியபோதும்கூட, எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் அமைதி காத்த ஸ்டாலின், ‘நாமதான்ப்பா வருவோம்... அமைதியா இருந்து நடக்குறதை மட்டும் பாருங்க’ என்று சுற்றியிருந்தவர்களிடம் சொன்னாராம். மதியத்துக்கு மேல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துவிடும் நிலை ஏற்பட்ட பிறகு ஸ்டாலின் முகத்தில் உற்சாகம் கூடியிருக்கிறது!”

“அதன் பிறகுதான் சித்தரஞ்சன் சாலை பரபரப்பானதோ?”

“அதற்கு முன்பே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. கள நிலவரங்களில் தி.மு.க முன்னிலை பெறத் தொடங்கியபோதே தயாநிதி மாறன், தமிழரசு, செல்வி உள்ளிட்ட உறவுகள் ஸ்டாலின் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையிலிருந்த கட்சி நிர்வாகிகளும் குவியவும், சித்தரஞ்சன் சாலை சற்று திக்குமுக்காடித்தான் போனது. மாலை நேரத்தில் தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியான நிலையில்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளும் படையெடுத்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே ஸ்டாலினுடன் சபரீசன் இருந்திருக்கிறார். ஏற்கெனவே தயாரித்திருந்த அமைச்சரவைப் பட்டியலை வைத்துக்கொண்டு சபரீசனுடன் ஆலோசனை செய்திருக்கிறார் ஸ்டாலின்.”

மிஸ்டர் கழுகு: முத்தமிட்ட தயாளு அம்மாள்... கண்ணீர்விட்ட ஸ்டாலின்!

“அதிகாரிகள் நியமனத்தில் சபரீசன் ஆதிக்கம் செலுத்துகிறார் என்கிறார்களே...”

“ஆமாம். எந்தத் துறைக்கு, யாரை நியமிக்க வேண்டும் என்பதை சபரீசன்தான் முடிவு செய்கிறாராம். அதனால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பட்டாளம் இப்போதே சபரீசனை மொய்க்கத் தொடங்கியிருக்கிறது.”

“ஆட்சி நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்கள் இப்போதே தலையிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லும்!”

“செப்டம்பர் மாதத்துடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஓய்வுபெறுகிறார். தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யான திரிபாதியின் பதவிக் காலம் ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைகிறது. தலைமைச் செயலாளர் பதவிக்கு இறையன்பு, விக்ரம் கபூர், ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன டி.ஜி.பி ரேஸில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகியோர் இருக்கிறார்கள். உளவுத்துறையின் தலைவர் பதவிக்கு டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.”

“பதவியேற்பு வைபவம்கூட முன்னரே நடக்கிறதுபோல..!”

“ஆமாம். பொதுவாக மே 10-ம் தேதிக்குப் பின்னர்தான் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். ஆனால், கொரோனா நிலைமை கைமீறிச் செல்வதால், பதவியேற்பு வைபவம் மே 7-ம் தேதி நடக்கும் என்கிறது அறிவாலயம். அன்றைய தினம் ஏகாதசி என்பதால், கிச்சன் கேபினெட் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திலோ அல்லது கலைவாணர் அரங்கிலோ பதவியேற்பு விழாவை நடத்தத்தான் முதலில் திட்டமிட்டனர். ஆனால், கொரோனா பரவலால் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடத்திக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.”

மிஸ்டர் கழுகு: முத்தமிட்ட தயாளு அம்மாள்... கண்ணீர்விட்ட ஸ்டாலின்!

“அதெல்லாம் இருக்கட்டும்... கோபாலபுரத்துக்குச் சென்ற ஸ்டாலின் கண் கலங்கிவிட்டாராமே...”

“தன் அப்பா கருணாநிதி வாழ்ந்த வீடு அல்லவா... உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியுமா! மே 3-ம் தேதி கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலினை, வாசலில் நிற்கவைத்து அவரின் சகோதரி செல்வி ஆரத்தி எடுத்திருக்கிறார். வீட்டுக்குள் நுழையும்போதே கண் கலங்கியிருக்கிறார் ஸ்டாலின். உறவினர் தேற்றிட, நேராக தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்தவர், ‘அம்மா, நான் முதல்வர் ஆகிவிட்டேன்’ என்று தழுதழுத்திருக்கிறார். எதுவும் பேசாமல் நனைந்த கண்களோடு ஸ்டாலினின் நெற்றியில் தயாளு அம்மாள் முத்தமிடவும் அழுதேவிட்டாராம் ஸ்டாலின்.”

“உணர்ச்சிபெருக்கில் நனைந்திருக்கிறது கோபாலபுரம்” என்றபடி கழுகாருக்குச் சூடாக சமோசாக்களை நீட்டினோம். அவற்றைச் சுவைத்தபடியே, “பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார்” என்றபடி அடுத்த செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: முத்தமிட்ட தயாளு அம்மாள்... கண்ணீர்விட்ட ஸ்டாலின்!

“தேர்தல் முடிவுகள் வந்ததும் கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசிய ராமதாஸ், ‘நம்ம கட்சி வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு எல்லா தொகுதிகளிலும் மடைமாறியிருக்கு. ஆனா, நாம போட்டியிட்ட 23 தொகுதிகள்ல அ.தி.மு.க வாக்குகள் நமக்குக் கிடைக்கலை. அப்படிக் கிடைச்சிருந்தா, இன்னும் கூடுதல் தொகுதிகள்ல வெற்றிபெற்றிருக்கலாம். நாம வெற்றி பெறணும்னு அவங்க உழைக்கவே இல்லை’ என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார். வரும் நாள்களில் இந்த அதிருப்தி அதிகரிக்கலாம் என்கிறது தைலாபுரம் தோட்டம்!”

“ம்ம்... தேர்தல் முடிவுகளில் எடப்பாடியின் ரியாக்‌ஷன் என்னவோ?”

“முதல் மூன்று சுற்றுகளில் அ.தி.மு.க கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வந்ததும், கட்சி நிர்வாகிகளிடம் உற்சாகமாக போனில் பேசியிருக்கிறார் எடப்பாடி. ஆனால், காலை 11 மணிக்கு மேல் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததால், டென்ஷனாகிவிட்டாராம். தன்னைத் தொடர்புகொண்டவர்களிடம், ‘இப்ப யாரும் பேசாதீங்கப்பா. யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று கறாராகக் கூறியதோடு, தன் உதவியாளர்களிடம், ‘கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க. யார் போன் பண்ணினாலும் என்கிட்ட எடுத்துட்டு வராதீங்க’ என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இந்தக் கடுகடுப்பில்தான், எடப்பாடி தொகுதியில் 93,352 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும், வெற்றிச் சான்றிதழை நேரில் சென்று அவர் பெற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி தொகுதியின் தலைமை ஏஜென்ட் தங்கமணியே அந்தச் சான்றிதழைப் பெற்றிருக்கிறார்” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“ஒரு கட்சியின் மிக மூத்த தலைவர் ஒருவர் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவில் இருந்திருக்கிறார். கடைசி நேரத்தில் நெஞ்சைப் பிடித்தபடி சோபாவில் அவர் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்த குடும்பத்தினர், பதறித்துடித்து கட்சித் தலைமையிடம் விஷயத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள். அந்தத் தலைவருக்கு போனைப் போட்ட கட்சித் தலைமை, ‘தைரியமா இருங்க... நீங்கதான் ஜெயிப்பீங்க’ என்று சொல்லியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக மாறிய பிறகே சோபாவிலிருந்து எழுந்திருக்கிறார் அந்த மூத்த தலைவர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

மிஸ்டர் கழுகு: முத்தமிட்ட தயாளு அம்மாள்... கண்ணீர்விட்ட ஸ்டாலின்!

பொன்னாரை வீழ்த்திய விஜய் வசந்த்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணனை காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். வர்த்தக துறைமுகத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடலோர மக்களும், மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் மக்களும் காங்கிரஸுக்கு வாக்களித்ததால் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பா.ஜ.க தரப்போ, “இருமுனைப் போட்டியிலும் சரி, அ.தி.மு.க கூட்டணியிலும் சரி கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் பா.ஜ.க வென்றது இல்லை. பா.ஜ.க-வுக்கு என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமாக நிரந்த வாக்குகள் உண்டு. 2014-ல் அவர் ஜெயித்தபோது, அதிகபட்சமாக 3,72,906 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால், இந்த முறை அதைவிட 70,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று 4,38,086 என்ற புதிய உச்சத்தை அடைந்ததே சாதனைதான்” என்கிறார்கள்.

ரூ.4,000 நிவாரணம்!

தி.மு.க தேர்தல் அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக அரசு சார்பில் 4,000 ரூபாய் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் திட்டமாக இதை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரம்காட்டுகிறாராம் ஸ்டாலின். இது தொடர்பாக நிதித்துறை, பொருளாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுவருகிறது!