Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி!

பனகல் பூங்காவில் அவித்த கடலையைக் கொறித்தபடியே அலைபேசியில் ரஞ்சன் கோகோய் தொடர்பான செய்தியைப் படித்துக்கொண்டிருந்தார் கழுகார்.

பிரீமியம் ஸ்டோரி

‘‘அயோத்தி வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சபரிமலை விவகாரத்தில் பவ்யம்காட்டிவிட்டதே?’’ என்று ஆரம்பித்தோம். அதற்காகவே காத்திருந்ததைப்போல் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி!

‘‘தன் பதவிக்காலத்தின் இறுதியில் இத்தனை சோதனைகள் வரும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நினைத்துப்பார்த்திருக்கவே மாட்டார். சரச்சைக்குரிய அயோத்தி விவகாரம் மற்றும் சபரிமலை இரண்டு வழக்குகளுமே அவருக்கு பெரும்சவாலாகவே இருந்தன. சபரிமலைத் தீர்ப்புக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கின் தீர்ப்புதான் ரஞ்சன் கோகோய் ஓய்வுபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு தரப்பட்டிருக்கிறது.’’

‘‘அதைத்தான் ஏழு பேர் அமர்வுக்குத் தள்ளிவிட்டுவிட்டார்களே?’’

‘‘அயோத்தி தீர்ப்பின் எதிரொலியால் சபரிமலை வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று தகவல் பரவிக்கொண்டிருந்தது. இறுதித் தீர்ப்பைச் சொல்லாமல் ஏழு பேர்கொண்ட அமர்வுக்கு அதை மாற்றியிருக்கிறது ரஞ்சன் கோகோயின் தீர்ப்பு. இதுவும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இந்து கோயில்களில் மட்டும் இந்தச் சட்டம் இல்லை; மசூதிகளிலும் பெண்கள் நுழையக் கூடாது என்ற சட்டம் உள்ளது’ என்று கூறியிருக்கின்றனர். ஐந்து நீதிபதிகளில் இருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதும் இதற்கு ஒரு காரணம்.’’

‘‘ரஃபேல் வழக்கையும் முடித்து விட்டார்களே?’’

‘‘அந்த வழக்கு இப்படித்தான் முடியும் என, சட்ட நிபுணர்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். மூன்று நீதிபதிகள் அமர்வில் ரஃபேல் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் `இந்த ஒப்பந்தத்தில் விசாரிக்கும் அளவுக்கு எந்தவிதமான தவறுகளும் நடந்ததாகத் தெரியவில்லை. அதனால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தள்ளுபடி செய்துவிட்டார்கள். பி.ஜே.பி-க்கு இந்த வழக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, பி.ஜே.பி தரப்பைக் கொண்டாடவைத்திருக்கிறது தீர்ப்பு.’’

ஸ்டாலின், ஆடிட்டர் குருமூர்த்தி
ஸ்டாலின், ஆடிட்டர் குருமூர்த்தி

‘‘ம்!’’

‘‘மூன்று வழக்குகளையும் உன்னிப்பாகக் கவனித்துப்பாரும். அயோத்தி வழக்கின் தீர்ப்பு, பி.ஜே.பி-யின் நீண்டநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது. சபரிமலை, பி.ஜே.பி சிந்தாந்தத்துக்குச் சிக்கலான விவகாரம். அதுவும் அடுத்த அமர்வுக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக் கிறது. ரஃபேல் வழக்கு, பி.ஜே.பி மீது விழுந்த கறை. அதுவும் துடைக்கப்பட்டு விட்டது. இந்த மூன்று வழக்கில் வந்த தீர்ப்புகளும், பி.ஜே.பி-யை நிம்மதி பெருமுச்சுவிட வைத்துள்ளது.’’

‘‘அதுசரி... கர்நாடகா விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டி விட்டதே?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆமாம். கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்தார் அப்போதைய சபாநாயகர். ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். இந்த வழக்கில் சபாநாயகர் செய்த தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், அந்த 17 பேரும் தேர்தலில் நிற்பதற்கு தடையில்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. இதில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.’’

சபரிமலை
சபரிமலை

‘‘என்ன விமர்சனம்?’’

‘‘அடுத்த முறையும் வாய்ப்பு என்று ஆசைக்காட்டித்தான் பி.ஜே.பி தரப்பு 17 பேரையும் அவர்கள் பக்கம் இழுத்தது. அதற்கு முட்டுக்கட்டையாக சபாநாயகர், ஐந்து ஆண்டு காலம் தேர்தலில் நிற்கத் தடை என்று அறிவித்திருந்தார். ஆனால், தகுதி நீக்கம் செல்லும்; அதேசமயம் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று தீர்ப்பு வந்திருப்பது அவர்களுக்கு வசதியாகிவிட்டது என்று காங்கிரஸ் தரப்பில் குமுறுகிறார்கள்.’’

‘‘இந்தத் தீர்ப்பு ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்குப் பாதகமாக மாறுமா?’’

‘‘அதற்கு வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் வழக்கில் 11 எம்.எல்.ஏ-க்கள் குறித்து சபாநாயகர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ‘அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ என்ற வழக்குதான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறதா, இல்லையா என்ற சட்டப் பிரச்னை இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. எனவே, பன்னீர் தரப்புக்கு எந்தப் பாதிப்பும் வர வாய்ப்பில்லை.’’

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

‘‘மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக ஆடிட்டர் குரூமூர்த்தி கருத்து சொல்லியிருக்கிறாரே?’’

‘‘சமீபகாலமாகவே தன்னைச் சுற்றி நடக்கும் சர்ச்சைகளால் ஸ்டாலின் ஏக டென்ஷனில் இருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்வில் மிகப்பெரிய அடையாளமே மிசா கைதுதான். ஆனால், அதைப் பற்றியே சந்தேகத்தைக் கிளப்பியதும் நொந்துபோய்விட்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகள் பரப்பப்படுகின்றன. தி.மு.க தரப்பு கொடுத்த விளக்கத்தைத் தாண்டி பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க தரப்பு, இந்த விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளியாக துக்ளக் ஆசிரியர் குரூமூர்த்தி, ‘ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது முற்றிலும் உண்மை. அது எனக்கே தெரியும். நெருக்கடி நிலை முடிந்த பிறகு நடந்த 1977-ம் ஆண்டுத் தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்காக நான் பிரசாரம்கூட செய்திருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.’’

‘‘ஓ...’’

‘‘ஆனால், அதையும் கிண்டலடிக்கிறார்கள். ‘ஸ்டாலின் கைதானதை நிரூபணம் செய்யக்கூட பி.ஜே.பி-க்கு நெருக்கமான குரூமூர்த்திதான் தேவைப்படுகிறார்’ என்று நக்கல் செய்கிறார்கள். இதற்கு பதிலடி தரவேண்டிய தி.மு.க-வின் ஐ.டி விங் அமைதியாக இருப்பதன் மர்மம் புரியவில்லை.’’

‘‘தமிழக அமைச்சர்களுக்குப் படியளக்கும் துறைகளில் காக்கியும் இணைந்துவிட்டதாமே?’’

‘‘பொதுவாகவே அமைச்சர்களுக்கு அந்தந்தத் துறைகளின் அதிகாரிகள் மாதம்தோறும் கவனிப்பு செய்வது வழக்கம். அதில் விலக்கு பெற்றது காவல்துறை மட்டும்தான். ஆனால், சி.சி.டி.வி கொள்முதல் செய்தது முதல் அதைப் பொருத்தியது வரை பல கோடி ரூபாய் காவல்துறையில் புழங்கியிருக்கிறது. அதில்தான் காக்கித் தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவரையும் நன்றாகக் கவனித்துவிட்டார் களாம். இதில் ருசிகண்ட அமைச்சர், ‘மாதம்தோறும் தன்னை கவனிக்க வேண்டும்’ என்று அன்புக் கட்டளை போட்டுவிட்டாராம்.’’

தி.மு.க-வில் விருப்பமனு வாங்கியபோது...
தி.மு.க-வில் விருப்பமனு வாங்கியபோது...

‘‘மாமூலிடமே மாமூலா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) வைத்து ஒரு வசூல் நடக்கிறதாமே?’’

‘‘உண்மைதான். டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, அதற்கு நேர்காணல் விரைவில் நடக்கவிருக்கிறது. நேர்காணலில் தேர்வுசெய்ய வைக்கிறோம் என்று சொல்லியே மாவட்ட வாரியாக ஆளும் தரப்பில் பெரும்வசூல் நடந்துள்ளது. அதில் கொடுமை என்னவென்றால், முதல்வரிடமே லிஸ்ட்டைக் கொடுத்து ‘பாஸ் பண்ணிவிடுங்க’ என்று அமைச்சர்கள் சிலர் கேட்டார்களாம். ஆனால், ‘நேர்முகத் தேர்வை நேர்மையுடன் நடத்துங்கள்’ என்று அவர் கடுமை காட்டியதாகக் கேள்வி.’’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு என்னவாயிற்று?’’

‘‘அடுத்த வாரம் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். ஆளுங்கட்சி தரப்பில் மாவட்ட வாரியாக விருப்ப மனுக்களை வாங்கச் சொல்லிவிட்டார்கள். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே முக்கியப் பொறுப்புகளுக்கான வேட்பாளர்களைக்கூட அ.தி.மு.க முடிவுசெய்துவிடும் எனத் தெரிகிறது. தி.மு.க தரப்பில் கூட்டணி தொடர்கிறது. அங்கும் விருப்ப மனு வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.’’

‘‘ஓ!’’

‘‘மொத்தமுள்ளவற்றில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு மாநகராட்சிகளைக் கண்டிப்பாகக் கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறது ஆளுங்கட்சி. சிக்கலான ஊர்களை கூட்டணிக் கட்சிகளின் தலையில் கட்டிவிட முடிவுசெய்திருக்கிறார்கள்’’ என்ற கழுகார், தூறல் லேசாக விழுந்ததும் சிறகுகளைச் சட்டென விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு