அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: நெருக்கும் மூவர் கூட்டணி... ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைமுருகன்

டி.டி.வி.தினகரன்மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள். அப்படி அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைத் தூக்க, ‘ஆபரேஷன் அ.ம.மு.க’-வை எடப்பாடி தரப்பு தீவிரப்படுத்தியிருக்கிறதாம்

“தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமரியாதையாகப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கும் அண்ணாமலை, தான் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை, கடலூர் சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு, தன் குடும்பத்தின் சார்பாக 13 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் வழங்கவிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வின் பொதுக்குழு விவகாரம் நீதிமன்றப் படியேறியிருப்பதால், இந்த முறை கட்சியின் பொருளாளராக பன்னீரால் தங்கக் கவசத்தை எடுத்துக் கொடுக்க முடியவில்லை. ஒருவேளை அந்த உரிமை எடப்பாடிக்குப் போய்விட்டால், நாம் வெறுங்கையுடன் போகக் கூடாது என்றே, இப்படி ஓர் ஏற்பாட்டை முன்கூட்டியே செய்திருந்தாராம் பன்னீர். கூடவே, இந்தக் கவசம் எப்போதுமே தேவர் சிலையிலேயே இருக்கும்படி, தேவரின் நினைவிடப் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.”

மிஸ்டர் கழுகு: நெருக்கும் மூவர் கூட்டணி... ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

“பன்னீரின் இந்த நகர்வை எப்படி கணிக்கத் தவறினார், ஆர்.பி.உதயகுமார்... தெரிந்திருந்தால், அவர் போட்டிக்கு இன்னொரு தங்கக் கவசமே செய்திருப்பாரே?”

“நக்கல்தான் உமக்கு. இந்த விஷயத்தை ரொம்பவே ஜாக்கிரதையாகக் கையாண்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. காரணம், பசும்பொன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக எடப்பாடி தரப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, பன்னீருக்கும் சசிகலாவுக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடியை நேரில் அழைத்துச் செல்ல வேண்டுமென்பதில், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா, உதயகுமார் போன்றோர் தீவிரம் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அதற்கு எடப்பாடி மறுத்துவிட்டாராம். ‘நான் அங்கு வந்தால் தேவையில்லாத வாக்குவாதத்தை எழுப்பி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கத் திட்டமிடுகிறது பன்னீர் தரப்பு. இதற்கு தி.மு.க-வும் மறைமுகமாக ஆதரவளிக்கிறது. அதனால்தான், பன்னீருக்கும் சசிகலாவுக்கும் அடுத்தடுத்து நேரம் ஒதுக்கி, அவர்களின் ஆதரவாளர்கள் ஒன்று திரள வழிவகை செய்திருக்கிறது அரசு. இந்தச் சூழ்ச்சி வலையில் நாமே போய் சிக்கிக்கொள்ளக் கூடாது. நீங்களே மரியாதை செலுத்திவிட்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டாராம் எடப்பாடி. தேவர் தங்கக் கவச விவகாரத்தில்கூட, முரண்டு பிடிக்க வேண்டாமென அவர் தீர்மானமாகச் சொன்னதால்தான், உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்புக்கு எதிராக அ.தி.மு.க-வில் மேல்முறையீடு செய்யவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.”

“ஓஹோ...”

“இதையும் கேளும்... கட்சிக்கான எல்லாச் செலவையும் நம் தலையில்தான் ஏற்றுகிறார்... கஜானாவிலிருந்து சல்லிக்காசை வெளியே எடுப்பதில்லை என்று ஏற்கெனவே

டி.டி.வி.தினகரன்மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள். அப்படி அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைத் தூக்க, ‘ஆபரேஷன் அ.ம.மு.க’-வை எடப்பாடி தரப்பு தீவிரப்படுத்தியிருக்கிறதாம். தற்போது என்ன பதவியில் இருக்கிறார்களோ, அதே பதவியையோ அல்லது அதற்கு இணையான வேறு பதவியையோ வழங்குவதாக உத்தரவாதம் அளித்து அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு வலை விரித்திருக்கிறார்கள் தென்மாவட்ட சீனியர்கள். எஞ்சியிருக்கிற நிர்வாகிகளையும் இழந்துவிடக் கூடாது என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார் தினகரன். இதற்கிடையே, தான் குருபூஜைக்குச் செல்லும்போது மாஸ் காட்டுவதற்காக சசிகலா தரப்பு ஆள் கேட்டபோது, கைவிரித்துவிட்டாராம் தினகரன். அ.ம.மு.க-வுக்கென தனியே நேரம் வாங்கியிருக்கிறோம்... நமக்கு ஆள் வேண்டாமா... என்று நினைத்துவிட்டார்போல!”

“அதிருக்கட்டும்... நாம் தமிழர் கட்சி சார்பில், ‘தமிழ்நாடு நாள் - மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி’யை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்களே?”

“ஆமாம். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நவம்பர் 1-ம் தேதி அந்தப் பேரணி நடக்கிறது. `அன்றைக்கு நாம் கூட்டும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, இனிமேல் யாரும் நம்மைச் சிறிய கட்சி என்று கூறத் தயங்க வேண்டும். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டும்’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறாராம் சீமான். தி.மு.க இளைஞரணி நடத்திய சம்பிரதாய போராட்டம்போலன்றி உணர்வுமயமாக இந்தப் பேரணி இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்” என்ற கழுகாருக்கு கருப்பட்டி அல்வாவும், மிளகுச் சேவும் கொடுத்தோம். அதன் ருசியை மனம் திறந்து பாராட்டியவர், தி.மு.க செய்திக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: நெருக்கும் மூவர் கூட்டணி... ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

“தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனை ஓரங்கட்டும் வேலையில், மூத்த அமைச்சர்கள் மூவர் களமிறங்கியிருக்கிறார்களாம். சீனியர் என்பதுடன், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி, ஆட்சி என்று எந்த விஷயம் பற்றிப் பேசினாலும் முதல்வருடன் துரைமுருகனும் கலந்துகொள்கிறார். தி.மு.க-வில் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கவும், தங்களுக்கு வேண்டாதவர்களை ஓரங்கட்டவும் இவர்கள் காய்நகர்த்தும்போது, ‘ஏன்... அவருக்கென்ன?’ என்பது போன்ற கேள்விகளால் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறாராம் துரைமுருகன். தங்கள் அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்த முடியாத அவர்கள், துரைமுருகன் ஆதரவாளர்களின் காதுகளில் விழும்படி, ‘வயசாகிடுச்சுன்னா வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே... அவரும் வேலை எதுவும் செய்யறதில்லை... செய்யறவங்களையும் கேள்வி கேட்குறாரு’ என ஏக வசனத்தில் பேசுகிறார்களாம் அந்த சீனியர் அமைச்சர்கள். இதைக் கேள்விப்பட்டதிலிருந்து துரைமுருகன் ஏக அப்செட். ‘2010-ல் செம்மொழி மாநாடு நடந்தபோது, ஆற்காடு வீராசாமியை இதே வார்த்தையைச் சொல்லித்தான் ஓரங்கட்டுனாங்க. இப்ப என்கிட்ட ஆரம்பிக்குறாங்க... தம்பி ஸ்டாலின் ஒதுங்கச் சொன்னா, நானே ஒதுங்கப் போறேன்... இவிங்க யாரு?’ என்று தழுதழுத்த குரலில் புலம்பித் தீர்க்கிறாராம் துரைமுருகன்.”

“மம்தா பானர்ஜி சென்னைக்கு வருகிறாராமே?”

“ஆமாம்... மேற்கு வங்க ஆளுநரும், தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் சென்னையில் ஓய்வில் இருக்கிறார். அவரை நலம் விசாரிக்கவும், அவரது குடும்ப நிகழ்வு ஒன்றில் பங்கேற்கவுமே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கு வருகிறார். மத்திய அரசுடனும், காங்கிரஸுடனும் கடும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் மம்தா, சென்னைக்கு வந்தால் தி.மு.க சார்பில் வரவேற்பு அளிக்கப்படுமா என்பதையெல்லாம் பா.ஜ.க., காங்கிரஸ் தரப்பில் உற்று கவனிக்கிறார்கள்...”

மிஸ்டர் கழுகு: நெருக்கும் மூவர் கூட்டணி... ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

“ஓ...”

“கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அக்டோபர் 26-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் அல்லவா... கோவை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்ற முடிவெடுக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், உளவுத்துறை உயரதிகாரிகள் இருவர் ஆப்சென்ட் ஆகியிருக்கிறார்கள். கூட்டம் முடிந்ததும் ஓர் உயரதிகாரியைத் தனியே அழைத்த முதல்வர் வறுத்தெடுத்திருக்கிறார்” என்ற கழுகார்...

“சிறைத்துறை டி.ஜி.பி சுனில்குமார் சிங், சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி ஷகீல் அக்தர் ஆகியோர் இந்த மாதத்துடனும், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் அடுத்த மாதமும் ஓய்வு பெறுகிறார்கள். இந்த மூன்று பதவிகளையும் அடைய ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஷகீல் அக்தர் இடத்தில், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான ஆபாஷ் குமார், அமரேஷ் புஜாரி, பிரஜ் கிஷோர் ரவி இவர்களில் ஒருவரிடம் சிறைத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம். சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி பதவிக்குத்தான் அதிகாரிகளின் ரேஸ் உச்சத்தில் இருக்கிறது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், க்ரைம் பிரிவு ஏ.டி.ஜி.பி மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதற்கிடையே, மத்திய அரசுப் பணியிலுள்ள மகேஷ்வர் தயாளை மாநிலப் பணிக்குக் கொண்டுவந்து, அவரை சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன” என்றபடியே சிறகுகளை விரித்தார்.