அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘முந்திரி’ உதயகுமார்... வறுத்தெடுத்த எடப்பாடி... தென்மாவட்ட ‘தெறி’ அரசியல்!

எடப்பாடி பழனிசாமி -  உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - உதயகுமார்

உதயநிதியின் பயணத் திட்டத்தில் தொடக்கத்தில் பசும்பொன் இல்லை. அன்றைய தினம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரம் ஒதுக்கியிருந்தார் உதயநிதி.

“குஜராத்தில் மோர்பி பாலம் உடைந்து விழுந்ததில், பா.ஜ.க எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜியின் குடும்பத்தினர் உட்பட 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பழைமைவாய்ந்த அந்தப் பாலத்தைச் சீரமைத்து, கடந்த அக்டோபர் 26-ம் தேதிதான் திறந்திருக்கிறது பா.ஜ.க அரசு” என்று வேதனையை வெளிப்படுத்தியபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார்.

அவரது மூடு-ஐ மாற்றும்விதமாக, “தேவர் ஜயந்தியில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி திடீரென கலந்துகொண்டிருக்கிறாரே...” என்று கேட்டோம்.

சற்று உற்சாகம் வந்தவராக, “உதயநிதியின் பயணத் திட்டத்தில் தொடக்கத்தில் பசும்பொன் இல்லை. அன்றைய தினம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரம் ஒதுக்கியிருந்தார் உதயநிதி. திடீரென முதல்வருக்கு முதுகுவலி ஏற்பட்டதால், தமிழக அரசின் சார்பில் சீனியர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பசும்பொன்னில் மரியாதை செலுத்த ஏற்பாடானது. ஆனால், கடைசி நிமிடத்தில் உதயநிதியை பசும்பொன் போகச் சொல்லிவிட்டாராம் முதல்வர். இதற்காக, தனி விமானம் மூலம் சேலத்திலிருந்து மதுரைக்கு வந்த உதயநிதியை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் வரவேற்று, பசும்பொன்னுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ‘தலைவர் இடத்தில் இனி உதயநிதிதான் என்கிற சிக்னலை கட்சி தெளிவாக உணர்த்திவிட்டது’ என்கிறார்கள் சீனியர்கள்.”

எடப்பாடி பழனிசாமி -  உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி - உதயகுமார்

“வெட்கத்தைவிட்டுப் பேசும் அளவுக்கு நேருவுக்கு என்னவானது?”

“எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடனான பஞ்சாயத்துதானாம். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசின் நிதியும் கலந்திருக்கிறது. அப்படி மத்திய அரசு நிதிவரும் திட்டங்களுக்கான ஃபைல்கள் சென்றால், கையெழுத்து போடாமல் அதிகாரிகள் காலதாமதப்படுத்துகிறார்களாம். சில ஃபைல்களை ‘நோட்’ போட்டுத் திருப்பியும் அனுப்பிவிடுகிறார்களாம். இதைத்தான் திருச்சியில் தான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், ‘வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்... தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்’ எனப் பேசியிருக்கிறார் நேரு. மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு செக் வைக்கும் வகையில், ‘ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான புதிய விதிகள்’ திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதும்தான் அதிகாரிகளின் இந்தப் பதற்றத்துக்குக் காரணமாம். அதைப் புரிந்துகொள்ளாமல் இப்படிப் பேசிவிட்டாரே என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.”

“முதல்வரிடமும் அவருக்கு டோஸ் விழுந்திருக்குமே?”

“அவரோடு சேர்த்து அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும்தான் மண்டகப்படி நடந்திருக்கிறது. உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, பம்மலில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க-வினரை அதிக அளவு களமிறக்கத் திட்டம் தயாரித்திருந்தாராம் அன்பரசன். ‘பொதுமக்களோடு நம்ம கட்சி ஆளுங்களும் கலந்துக்கிட்டு, அந்தப் பகுதிப் பிரச்னைகளைப் பேசணும். ஆனா, அவங்க நம்ம கட்சிக்காரங்க மாதிரி தெரியக் கூடாது... பொதுமக்கள் மாதிரி தெரியணும்’ என தா.மோ.அன்பரசன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது முதல்வர் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. கடுப்பான முதல்வர், தா.மோ.அன்பரசனையும் நேருவையும் அழைத்து, ‘எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்குப் புரியாதா?’ எனக் கடுமையாகக் கடிந்துகொண்டாராம். ‘இவர்கள் எப்போதும் முதல்வரை நிம்மதியாகத் தூங்கவிட மாட்டார்கள்போல...’ என முணுமுணுக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.”

கே.என்.நேரு - தா.மோ.அன்பரசன்
கே.என்.நேரு - தா.மோ.அன்பரசன்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு அப்டேட்டை கவனித்தீரா?”

“ம்... பார்த்தேன். சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே இந்த இரண்டு வழக்குகளிலும் விசாரணையெல்லாம் முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான், ‘மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றிருக்கிறது நீதிமன்றம்.மீண்டும் விசாரணையென்றால், சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்பு உருவாகிவிடுமே என்று கவலைப்படுகிறார்கள் விசாரணை அதிகாரிகள். பழைய சாட்சிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பதும் சந்தேகம்தானாம். செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையோடு, கூடுதலாக விசாரணை நடத்தத்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. ‘இது செந்தில் பாலாஜிக்கு சாதகமாகவே அமையும். சாட்சிகள் இல்லை என இந்த வழக்கு முடிந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எனவே, அமலாக்கத்துறை, ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் சார்பில் மேல்முறையீட்டுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகாருக்கு, மழைக்கு இதமாக கருப்பட்டி காபியும், பூண்டு மிக்ஸரும் கொடுத்தோம்.

அவற்றை ருசித்தபடி செய்திகளைத் தொடர்ந்த கழுகார், “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி, தனக்குக் கிடைக்காத விரக்தியில் இருந்தார் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன். அதில் எண்ணெய் ஊற்றும்விதமாக, பசும்பொன்னில் உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவரை மேலும் சூடாக்கியிருக்கிறதாம். எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம், ‘சட்டமன்றப் புறக்கணிப்பு, உண்ணாவிரதப் போராட்டம் என மொத்தக் கட்சியையும் உதயகுமாருக்காக இறக்கிவிடுறீங்க... போதாத குறைக்கு தென்மாவட்டம், முக்குலத்தோர் என்றாலே உதயகுமாரைத்தான் தேடுறீங்க... நாங்களும் அந்தச் சமூகம்தான்’ என பொருமித் தீர்த்தாராம் நத்தம் விசுவநாதன். இந்தக் கடுப்பில்தான், தேவர் ஜயந்தி விழாவில் பத்தோடு பதினொன்றாகத் தலைகாட்டிவிட்டு, முதல் ஆளாகக் கிளம்பிவிட்டாராம் அவர். திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பிற சீனியர்களுக்கும் உதயகுமார்மீது வருத்தம்தான் என்கிறார்கள்.”

“தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு எதிரான கோஷம் எழுந்ததாமே?”

“உண்மைதான். அ.தி.மு.க சார்பில் சீனியர்கள் ஒன்றாகச் சென்று மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பிய பிறகு, உதயகுமார் மட்டும் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் நினைவிடத்துக்குப் போய் மறுபடியும் மாலை அணிவித்திருக்கிறார். அப்போது, ‘எடப்பாடி வாழ்க... வருங்கால முதல்வர் எடப்பாடி’ என அவருடன் வந்த சிலர் கோஷமிட்டிருக்கிறார்கள். உடனே, அங்கிருந்த சில அமைப்பினர் சகட்டுமேனிக்கு எடப்பாடியைத் திட்ட ஆரம்பித்துவிட்டனர். வார்த்தை தடித்து கைகலப்பாகும் நிலைக்குப் போயிருக்கிறது. விபரீதத்தைப் புரிந்துகொண்ட போலீஸார் உடனே கூட்டத்தைக் கலைத்தனர். இந்த விஷயத்தில் எடப்பாடி கடும் அப்செட்டாம். ‘பொறுப்பா இருப்பீங்கனு நினைச்சா, இப்படிப் பண்ணீட்டீங்களே... உங்க பேச்சைக் கேட்டு நான் பசும்பொன் வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?!’ என கேப்பே விடாமல் உதயகுமாரை வறுத்தெடுத்துவிட்டாராம் எடப்பாடி” என்ற கழுகார்...

“கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தை பா.ஜ.க கையாண்டவிதத்தால், அந்த மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கடும் மன உளைச்சலில் இருந்துவந்தாராம். எந்நேரமும் அவர் மாற்றப்படலாம் என்றும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி உட்பட இந்த வழக்கை விசாரித்த போலீஸாரை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, பத்திரம் வழங்கியிருக் கிறார். குறிப்பாக, கடும் மன உளைச்சலில் இருந்த அந்த ஐ.பி.எஸ் அதிகாரியிடம், ‘கவலைப்படாதீங்க... நான் இருக்கேன்ல’ என தைரியமூட்டியிருக்கிறார் முதல்வர். அதன் பிறகே அந்த அதிகாரி உற்சாகத்துடன் கோவைக்குத் திரும்பினாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

****

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை செய்தது சரியா?!

கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி கந்தசஷ்டிக் கவசம் பாடிய அண்ணாமலை, கோயிலுக்கு வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சில ஆணிகளையும், கோலிக்குண்டையும் எடுத்துக் காண்பித்து, “இவை கோயில் அருகே கைப்பற்றப்பட்ட பொருள்கள். இங்கு வரும்போது பொதுமக்கள் என்னிடம் கொடுத்தனர். மிகப் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படுத்தத்தான் இதைச் செய்திருக்கிறார்கள்” என்றார். உண்மையில், அந்தப் பொருள்களை அண்ணாமலையிடம் கொடுத்தது, பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி சீனிவாசன்தான். அதைக் கொடுத்து, “1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பிலும் இதைப்போலத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர்” என்றார் அவர். அதற்கு அண்ணாமலையும், “ஆமாம்... கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லி வாங்கி, பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். இந்தக் காட்சியை நம்முடைய புகைப்படக்காரரும் படம் எடுத்தார். ஆனால், எதற்காக இப்படிப் பேசினார் என்பது புரியாத புதிர்! “முதலில், இது போன்ற முக்கியமான வழக்குகளில் தொடர்புடைய பொருள்கள், ஆதாரங்களை யார் கைப்பற்றியிருந்தாலும் அதை போலீஸாரிடம் ஒப்படைப்பதுதான் சரி. ஒரு கட்சித் தலைவரிடம் கொடுத்தது தவறு... அப்படியே யாராவது கொடுத்தாலும் அதைப் பெற மறுத்து, போலீஸாரிடம் ஒப்படைக்கச் சொல்வதே ஒரு தலைவருக்கு அழகு. அது உண்மையிலேயே அங்கு கிடைத்ததுதானா என்பதைக்கூட உறுதிசெய்யாமல், பத்திரிகையாளர்களிடம் அதை அப்படியே சொன்னது பொறுப்பற்ற செயல்” என்கிறார்கள் கோவை போலீஸார்!