அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மூன்றாவது அணி... மம்தா வீசிய வலை... பிடிகொடுக்காத ஸ்டாலின்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

எல்லோரையும் அழைப்பதுதானே இல.கணேசன் ஸ்டைல்... ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களில் பலர் அந்தப் பக்கம் தலையையே காட்டவில்லை.

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், வழக்கத்துக்கு மாறாக ரசகுல்லாவை நீட்ட... புரியாமல் பார்த்தோம். “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற இனிப்புகளைப் பரிசாக அளித்திருந்தார். அவற்றில் ஒன்றைத்தான் உமக்காகக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார் புன்முறுவலுடன். “வழக்கமாக முதல்வர் இல்லத்திலிருந்து செய்திகளைத்தான் வேட்டையாடுவீர்... இப்போது இனிப்பையும் எடுக்கிறீரா?” என்று நாம் கிண்டலடிக்க, உற்சாகமாகச் செய்திகளைச் சொன்னார் கழுகார்.

“மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் 80-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கத்தான், நவம்பர் 2-ம் தேதி சென்னைக்கு வந்திருந்தார் மம்தா பானர்ஜி. சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வெளிவந்தவுடன், ஸ்டாலினின் வீட்டுக்குத்தான் முதலில் பறந்திருக்கிறது மம்தாவின் கார். வாசலுக்கே வந்து மம்தாவை வரவேற்ற ஸ்டாலின், மகன் உதயநிதி, மனைவி துர்கா, மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரை அவருக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், கொல்கத்தா இனிப்புகளும், தமிழ்நாடு காரத்தட்டையும் பரஸ்பரம் பரிமாறப்பட்டிருக்கின்றன.”

மிஸ்டர் கழுகு: மூன்றாவது அணி... மம்தா வீசிய வலை... பிடிகொடுக்காத ஸ்டாலின்!

“அரசியல் பரிமாற்றங்கள் இல்லையா?”

“சந்திப்பே அரசியல்தானே... பா.ஜ.க பிரமுகரான இல.கணேசனின் வீட்டு விசேஷத்தில் மட்டும் கலந்துகொண்டால் தன் சொந்த மாநிலத்தில் தேவையில்லாத அரசியல் சூறாவளி கிளம்பும் என்பதால், பயணத்தோடு பயணமாக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்திருக்கிறார் மம்தா. இதற்காகத்தான், முதல் ‘அட்டெண்டென்ஸை’ ஸ்டாலின் இல்லத்தில் போட்டாராம். அவர் நினைத்தபடியே, தேசிய ஊடகங்களும் இந்தச் சந்திப்பைப் பெரிதுபடுத்தின. சந்திப்பில், ‘பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதில் இன்னும் கொஞ்சம் தீவிரம் தேவை’ என்று பேச்சைத் தொடங்கிய மம்தா, மூன்றாவது அணி பற்றியும் பேச்செடுத்தாராம். அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ‘நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நாம் இணைந்துதானே ஆக வேண்டும்’ என்று பிடிகொடுக்காமல் மையமாக பதில் சொல்லியிருக்கிறார்.”

“சரிதான்... இல.கணேசன் இல்ல விழாவுக்குக் கட்சி பேதமின்றி பலரும் சென்று வந்திருக்கிறார்களே?”

மிஸ்டர் கழுகு: மூன்றாவது அணி... மம்தா வீசிய வலை... பிடிகொடுக்காத ஸ்டாலின்!

“எல்லோரையும் அழைப்பதுதானே இல.கணேசன் ஸ்டைல்... ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களில் பலர் அந்தப் பக்கம் தலையையே காட்டவில்லை. காரணம், அவர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லையாம் இல.கணேசன். ‘பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்படும் இரு முதல்வர்களைத் தன் வீட்டு விசேஷத்துக்கு வரவழைத்திருக்கிறார். அவர்கள் சந்தித்துக்கொள்ள இவரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். தி.மு.க மீதான பாசம் இல.கணேசனுக்கு இன்னும் போகவில்லை’ என்று டெல்லி பா.ஜ.க தலைமையிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் இங்குள்ள நிர்வாகிகள் சிலர்.”

“தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றச் சொல்லி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களே...”

“ஆமாம். ‘தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது பதவியைவிட்டு விலகி கருத்துகளைச் சொல்லட்டும்’ என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிக்கைவிட்டிருந்தது. இந்த நிலையில், தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். அதன்படி கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் அறிவாலயத்துக்குச் சென்று கையெழுத்து போட்டிருந்தாலும், ‘ஒரு குழு அமைத்து நேரில் சென்று கையெழுத்து வாங்கியிருக்கலாம். யதேச்சதிகாரத்தை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் இவர்களே இவ்வளவு அதிகாரமாக நடந்துகொள்கிறார்களே’ எனக் கூட்டணிக் கட்சிகளுக்குள் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது” என்ற கழுகாருக்கு மழைக்கு இதமாக இஞ்சி டீ கொடுத்தோம். அதை ருசித்தவர்...

 “ம்... பா.ஜ.க மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் ஏதோ பஞ்சாயத்து என்கிறார்களே... என்னவாம்?”

மிஸ்டர் கழுகு: மூன்றாவது அணி... மம்தா வீசிய வலை... பிடிகொடுக்காத ஸ்டாலின்!

“விளம்பர மோகத்தால், பா.ஜ.க பெண் நிர்வாகிகளின் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க பிரமுகர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோரை அவதூறாகப் பேசிய தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளரைக் கைதுசெய்யக் கோரி பா.ஜ.க மகளிரணி நடத்திய போராட்டத்தில், அவர்களையே பங்கேற்கவிடாமல் தடை போட்டிருக்கிறார் அண்ணாமலை. இத்தனைக்கும் அக்டோபர் 29-ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ‘உங்க தலைமையிலதான் ஆர்ப்பாட்டம் நடக்கும்’ என்று அந்த நால்வரிடமும் உறுதியளித்தார் அண்ணாமலை. ஆனால், அடுத்த நாளே மகளிரணி நிர்வாகிகள் சிலர், ‘நீங்கள் வர வேண்டாம்... உங்களுக்காகக் கட்சி நிற்கும். உங்களுக்கும் சேர்த்து மகளிரணியே ஆர்ப்பாட்டம் நடத்தும்’ என்றிருக்கிறார்கள். தங்களுக்கு எதிரான அநாகரிகப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருந்த நால்வரும் இந்த உத்தரவால், கொதிப்பில் இருக்கிறார்களாம்.”

“இதில், அண்ணாமலைக்கு என்ன லாபமாம்?”

“வந்தால் ஊடகங்களின் கவனம் அவர்களின்மீதே விழும் என்பதாலேயே இப்படிச் செய்தாராம். அதுமட்டுமின்றி இன்னொரு நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார் அவர். ‘1-ம் தேதி போராட்டத்துக்கு அனுமதி கேட்டு முந்தைய நாள்தான் காவல்துறையிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ‘உடனே அனுமதி கிடைக்காது... தடையை மீறிப் போராட்டம் நடத்தினால், போலீஸ் கைதுசெய்யும்’ என்று தெரிந்தும் திட்டமிட்டே இப்படிச் செய்தாராம் அவர். ஏற்கெனவே, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக நடந்த ஒரு போராட்டத்தில், பாதியிலேயே ஆட்டோவில் ஏறி எஸ்கேப் ஆனார் அண்ணாமலை. அந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காக மகளிரணி ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டார்’ என்கிறது கமலாலய வட்டாரம்.”

“கடந்த முறை ஆட்டோவில் ஏறியவர், இந்த முறை போலீஸ் வேனில் சென்றிருக்கிறார்... நல்ல முன்னேற்றம்தான்!”

“இதில் மட்டுமல்ல... நீட் விவகாரத்திலும் பா.ஜ.க அம்பலப்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை விவரம் இணையத்தில் வெளியானதல்லவா... அதில் மொத்த மதிப்பெண்ணான 720-க்கு வெறும் 99, 98, 94 மார்க் பெற்றவர்கள்கூட, தனியார் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட் வாங்கிருக்கும் விவரங்கள் இருக்கின்றன. அதாவது, வெறும் 13 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள் டாக்டராகப் போகிறார்கள்! இது சமூக வலைதளங்கள் தொடங்கி மருத்துவப் படிப்புக்கு தயாரான மாணவர்களின் வீடுகள் வரை பேசுபொருளாகியிருக்கிறது. நீட் விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக தமிழ்நாடு அரசே இதைக் கசியவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகார்...

“திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள எண்டோஸ்கோபி கருவி ஒன்று காணாமல்போய் இரண்டு ஆண்டுகள் ஆகியும், மருத்துவமனைத் தரப்பிலிருந்து இதுவரை போலீஸில் புகாரே கொடுக்கவில்லை. மாறாக, மருத்துவமனை ஊழியர்களிடம் சம்பிரதாயத்துக்கு விசாரணை நடத்திவிட்டு, விஷயத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். என்னவென்று விசாரித்தால், மருத்துவர் ஒருவர்தான் இந்த எண்டோஸ்கோபி கருவியை எடுத்துச் சென்றிருக்கிறார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்திருக்கிறது. இத்தனை நாள்கள் விட்டுவிட்டு, இப்போது எப்படி அந்த மருத்துவரை அணுகி அந்தக் கருவியை மீட்பது எனத் தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் விழிபிதுங்கி நிற்கிறதாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், இந்நாள் அமைச்சர் ஒருவரிடம் செலவுக்காக 2 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறாராம். இலைக் கட்சியில் தீவிர விசாரணை நடக்கிறது.

* மேலிடத்து மாப்பிள்ளை, அண்ணாநகர் பிரமுகர் உள்ளிட்டோர் சில நாள்கள் பயணமாக பெங்களூரு சென்றிருக்கிறார்கள். `ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் சிலரைச் சந்திப்பதற்கான பயணம் இது’ என்கிறது மேலிட வட்டாரம். அரசியல் சந்திப்பா, பிஸினஸ் சந்திப்பா என்பது பெரிய குடும்பத்துக்கே வெளிச்சம்!