Published:Updated:

மிஸ்டர் கழுகு: “என் நிலைமையே மோசமாத்தான் இருக்கு...” - நிழலிடம் புலம்பிய நிஜம்!

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையால் எடப்பாடி தரப்பு டென்ஷனில் இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

‘முதல்வரை குஷிப்படுத்த வேண்டும் என்பதில் அமைச்சர்கள் சிலருக்குள் நடக்கும் போட்டி தாங்க முடியவில்லை’ என்று வாட்ஸ்அப்பில் வந்த தகவலை வாசித்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த கழுகாருக்கு சூடான பாதாம் பாலைக் கொடுத்தோம். ருசித்துப் பருகியபடியே செய்திகளை விவரிக்கத் தொடங்கினார் கழுகார்.

“அமைச்சர்களுக்குள் சிறப்பாகச் செயல்படுவதில் போட்டி இருப்பது நல்லதுதான்... ஆனால், அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தினமும் முதல்வர் ஸ்டாலினை வைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, செந்தில் பாலாஜி ஆகியோர் இடையே பெரும் போட்டியே நடக்கிறது. முதல்வரின் சொந்தத் தொகுதியான கொளத்தூர், அமைச்சர் சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு முதல்வரை வைத்து ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சேகர் பாபு ரேஸில் முந்தியிருக்கிறார். இவருக்குப் போட்டியாக அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் எ.வ.வேலுவும் முதல்வரைவைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். இப்படித்தான் சமீபத்தில் சென்னையில் மேம்பாலத் திறப்புவிழாவை முதல்வரைவைத்து நடத்தி அதகளப்படுத்தியிருக்கிறார் எ.வ.வேலு.”

மிஸ்டர் கழுகு: “என் நிலைமையே மோசமாத்தான் இருக்கு...” - நிழலிடம் புலம்பிய நிஜம்!

“பேர் வாங்குவதில் இருக்கும் அக்கறையை கொஞ்சம் வேலையிலும் காட்டினால் சரிதான்!”

“ம்ம்... வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையால் எடப்பாடி தரப்பு டென்ஷனில் இருக்கிறது. ஏற்கெனவே முக்குலத்தோர் சமூகம் எடப்பாடிக்கு எதிராக லாபி செய்துவரும் நேரத்தில், இப்போது வன்னியர் சமூகத்திலும் எடப்பாடிக்கு எதிரான குரல்கள் கேட்கின்றன. ‘தேர்தல் லாபத்துக்காக அவசரகதியில் ஆணையைப் போட்டு எங்களை ஏமாற்றிவிட்டார்’ என்று அ.தி.மு.க-விலுள்ள வன்னியர்களே கடுகடுக்க ஆரம்பித்துவிட்டனர்.”

“சசிகலா அப்டேட்ஸ் ஏதேனும் இருக்கிறதா?”

“சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்ப்பது தொடர்பாக பன்னீர் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் ஆதரவு கொடுத்தார்கள் அல்லவா... அடுத்தகட்டமாக சசிகலாவின் சொந்த மண்ணான டெல்டாவிலிருந்து கலகக்குரல் எழுப்பவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது சசிகலா தரப்பு. அந்தவகையில், முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் நடத்தப்பட்ட ரகசியப் பேச்சுவார்த்தையின்போது, ‘பன்னீர் ஒருங்கிணைப்பாளர் பதவியில இருக்குறதால அவரை ஒண்ணும் பண்ண முடியாது... நாளைக்கு அவர் எப்படி வேணும்னாலும் பல்டி அடிக்கலாம்... என் நிலைமை அப்படியா? சின்னம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் ஆதரவு திரளட்டும்... அப்புறம் பார்க்கலாம்’ என்று பின்வாங்கியிருக்கிறார் அந்த மாஜி. சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவர்தான், அவரை இப்படிப் பேசவைத்தாராம். சசிகலா மீண்டும் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, அந்த உறவு இப்படி சைலன்ட் வில்லனாகியிருக்கிறார் என்கிறார்கள்.”

“நிழல், நிஜத்திடம் புலம்பிய கதை தெரியுமா?”

“சேலம் விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... உமது எல்லா புதிருக்கும் எம்மிடம் விடை இருக்கிறது. கடந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமாக வலம்வந்த இளங்கோவன் மீதான காவல்துறையின் கண்காணிப்பு வளையம் மேலும் இறுகியிருக்கிறது. அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கொடநாடு சம்பவம் தொடர்புடைய சில ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றனவாம். இதையடுத்து, விரைவில் காவல்துறை அவரை நெருக்கலாம் என்கிறார்கள். இது பற்றி நிழலானவர், நிஜமானவரிடம் புலம்பியபோது, ‘என் நிலைமையே மோசமாத்தான் இருக்கு!’ என்கிறரீதியில் பதில் வரவே... மனிதர் பதற்றத்தில் தவிக்கிறாராம்.”

“மலை மாவட்டத்தில் வசூல் வேட்டை தூள் பறக்கிறதாமே?”

“உமக்கும் அந்தத் தகவல் வந்துவிட்டதா... பசுமையைப் பாதுகாக்கும் அமைச்சருக்கு நெருக்கமான இருவர்தான் வரவு செலவு விவகாரங்களைக் கவனிக்கிறார்கள். அவர்கள் அமைச்சருக்கே தெரியாமல் பல இடங்களில் பையை நிறைத்திருக்கும் விவகாரம்தான் மலை மாவட்டத்தில் ஹாட் டாபிக். ஆட்சி மாறியும் கூட்டுறவுத்துறையில் இன்றளவும் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நியமனங்களே தொடர்வதால் அவர்கள் கப்பம்கட்ட மறுக்கிறார்கள். பிரபல மலை வாசஸ்தலத்திலும் அ.தி.மு.க பிரமுகர் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் தீபாவளிக்காக இருவரும் 15 ‘லட்டுகள்’ வரை கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிடிகொடுக்காமல் போகவே... அமைச்சர் வரை பேசி பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். ஒருவழியாக பண்டிகை முடிந்ததும் பட்டுவாடா செய்வதாக சொல்லியிருக்கிறது சூப்பர் மார்க்கெட் தரப்பு” என்ற கழுகார் இந்த இதழில் தயாராகியிருந்த ‘சாதிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள்...’ கட்டுரையில் பார்வையை ஓட்டியபடியே தொடர்ந்தார்...

“உண்மைதான்... சமீப நாள்களாக வரும் தகவல்களெல்லாம் அப்படியொன்றும் சரியாகப்படவில்லை... ‘சமூகநீதியைப் பேசும் தி.மு.க-விலேயே சாதி பார்க்கிறார்கள்’ என்கிற குமுறல்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குடியாத்தம் பகுதிக்குச் சென்றார். அப்போது அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான அமலு, அமைச்சரிடம் ‘நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலேயே அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதில்லை. அப்படியே அழைத்தாலும், என் பெயரைச் சொல்வது கிடையாது. ஒன்றியக்குழுத் தலைவர் ஒருவர் சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்கிவைத்துள்ளார். சமூகநீதி பேசும் நம் கட்சியிலும் சாதியப் பாகுபாடுகள் இருப்பது வேதனையளிக்கிறது’ என்று குமுறி அழுதிருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன!”

மிஸ்டர் கழுகு: “என் நிலைமையே மோசமாத்தான் இருக்கு...” - நிழலிடம் புலம்பிய நிஜம்!

“நல்லது நடந்தால் சரி... அதிருக்கட்டும், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி மீது ராமதாஸ் கோபத்தில் இருக்கிறாராமே?”

“அப்படித்தான் தகவல்கள் வருகின்றன... வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வந்த தீர்ப்பால் அப்செட்டில் இருக்கிறார் ராமதாஸ். ஏற்கெனவே ஜி.கே.மணி மீது ராமதாஸ் வருத்தத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் ஜி.கே.மணி, திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ உரிமையாளர் சுபாஷ்கரன் குடும்பத்தினருக்குச் சுற்றுலா வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். இது ராமதாஸை மேலும் சூடாக்கியிருக்கிறது. நவம்பர் 2-ம் தேதி சுபாஷ்கரனின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு இரண்டு கேரவன்களில் சென்றுள்ளனர். இவர்களை அழைத்து வந்த ஜி.கே.மணி கோயிலில் தடபுடல் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். இலங்கையில் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்க ளாகக் கருதப்படும் ‘லைகா’ நிறுவனத்தினருக்கு ஜி.கே.மணி இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?’ என்று புரியாமல் விழிக்கிறார்கள் பா.ம.க தொண்டர்கள்!”

“புதுச்சேரியில் புலம்பல் சத்தம் அதிகரித்திருக்கிறதே... கவனித்தீரா?”

“புதுச்சேரி சட்டசபை நுழைவு வாயிலை ஒட்டி அமைந்திருக்கும் கட்டடத்தில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்தின் அலுவலகம் இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த அலுவலகத்தைக் காலி செய்வதற்கான லாபியில் இறங்கியது பா.ஜ.க. ஆனால் முதல்வர் ரங்கசாமிதான், ‘போகட்டும்... வாசலில்தானே இருக்கிறார் விடுங்கள்’ என்று சொன்னதால் அமைதியானது பா.ஜ.க. முன்னாள் முதல்வர் நாராயணசாமி எப்போதாவது அந்த அலுவலகத்துக்குச் சென்று, வைத்திலிங்கத்திடம் பேசிவிட்டுச் செல்வார். இந்த நிலையில்தான், சமீபத்தில் ஒருநாள் காலை முதல்வர் ரங்கசாமி சட்டசபைக்கு வந்தபோது, நாராயணசாமி அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார்... ‘நானே நல்ல நேரம்... ராகு காலம் பார்த்து, அருள்வாக்கு வாங்கிட்டுத்தான் வீட்டுல இருந்து கிளம்பறேன். இங்க வந்தா அவரைப் பார்த்துட்டு உள்ளே போற மாதிரி ஆயிடுதே... உடனே அந்த அலுவலகத்தை மாத்துங்க’ என்று கடுகடுத்தாராம். வேறு வழியில்லாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பத் தயாராகிவருகிறாராம் வைத்திலிங்கம்” என்ற கழுகார், “நானும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஊருக்குக் கிளம்புகிறேன்... தீபாவளியைக் கொண்டாட வேண்டும்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

******

ஆபத்தான நிலையில் 13 மரங்கள்!

தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே இருந்த பிரமாண்டமான மரத்தின் உள்பக்கம் பூச்சி அரித்ததால், மழையின்போது சரிந்து விழுந்து பெண் காவலர் ஒருவர் மரணமடைந்தார். தலைமைச் செயலகத்தில் இருக்கும் பழைமையான கட்டடங்களையும் மரங்களையும் மத்திய தொல்லியல்துறையுடன் சேர்ந்து தமிழக அரசின் பொதுத்துறையின் கட்டடப் பிரிவும் கண்காணித்துப் பராமரிக்க வேண்டும். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் மேலும் 13 பழைமையான பிரமாண்ட மரங்களும் உள்பகுதியில் பூச்சி அரிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கின்றனவாம். இதையடுத்து வருமுன் காக்க வேண்டும் என்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள்.

மிஸ்டர் கழுகு: “என் நிலைமையே மோசமாத்தான் இருக்கு...” - நிழலிடம் புலம்பிய நிஜம்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

கொங்கு மாவட்டம் ஒன்றுக்கு ‘ஷாக்’ அமைச்சர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டின்படி எதிர்முகாமில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரியல் எஸ்டேட் பிரமுகரை ஹைஜாக் செய்ய டீல் பேசிவருகிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு