சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: நானாவது தலைவருக்கு ஜால்ரா... ஆனா, நீங்க?

தி.மு.க பொதுக்கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க பொதுக்கூட்டம்

ஜால்ரா போடுகிறார் என்றது மட்டுமல்ல. மேலும் சில வார்த்தைகளையும் கொட்டியிருக்கிறார் அந்த எம்.பி. அதற்கு பதிலடி கொடுக்க சேகர் பாபுவும் தயங்கவில்லையாம்.

“நவம்பர் 11-ம் தேதி காந்தி கிராமம் - கிராமியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன், முதல்வர் ஸ்டாலினும், ஆளுநர் ரவியும் கலந்துகொள்கிறார்கள். உமது நிருபரை உஷார்படுத்தும்” என்றவாறே நுழைந்த கழுகார் நேரடியாகச் செய்திக்குள் நுழைந்தார்.

“அ.தி.மு.க-வுக்குள் வன்னியர் சமூகத்தின் முகம் யார் என்ற போட்டி, கே.பி.முனுசாமிக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே பூதாகரமாகிக் கொண்டேபோகிறது. சண்முகத்தை ஓவர்டேக் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் கே.பி.முனுசாமி. நவம்பர் 6-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில எடப்பாடியும் பங்கேற்றுப் பேசியிருந்தார். ஆனால், இது குறித்து ஒரு பிட் செய்திகூட அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், சி.வி.சண்முகத்தின் செய்தி ஒன்று, கால் பக்கத்துக்கு போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே கடும் அப்செட்டில் இருக்கும் முனுசாமியை இந்தச் சம்பவம் மேலும் அப்செட்டாக்கியிருக்கிறது. சி.வி.சண்முகத்தின் சகோதரர் ஒருவர்தான் ‘நமது அம்மா’ நாளிதழைக் கவனித்துவருகிறார். அதனால்தான், முனுசாமியின் நிகழ்ச்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது குறித்து முனுசாமி எடப்பாடியிடம் புகார் சொன்னபோது, ‘விசாரிக்கிறேன்’ என்று ஒற்றை வார்த்தையில் கடந்துபோய்விட்டாராம்.”

சேகர் பாபு
சேகர் பாபு

“அமைச்சர் சேகர் பாபுவும் கடும் அப்செட்டில் இருக்கிறாராமே?”

“ஆமாம்... தலைமையிடம் நல்ல பெயர் இருந்தாலும், மூத்த நிர்வாகிகள் யாரும் தன்னை மதிப்பதில்லை என்ற அப்செட்தான் அது. இந்த நிலையில் சேகர் பாபுவின் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே மட்டம்தட்டிப் பேசியிருக்கிறார் கட்சியின் சீனியர் எம்.பி. ‘தளபதிக்கு நல்லா ஜால்ரா போட்டுட்டு வந்துடுவாரு...’ என்று அவர் யதார்த்தமாகப் பேசவில்லை. தி.மு.க உட்கட்சித் தேர்தலின்போது, கட்சியின் மூன்றாவது பெரிய பதவியைப் பெற முட்டி மோதியிருக்கிறார் இனிஷியல் அமைச்சர் ஒருவர். கட்சியின் சீனியர் என்கிற அடிப்படையிலும், ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருப்பவர் என்பதாலும் சீனியர் எம்.பி-யின் பெயரையே அந்தப் பதவிக்கு ‘டிக்’ செய்துவிட்டார் தலைவர் ஸ்டாலின். ஆனாலும், ‘அந்தப் பதவியை சீனியர் அமைச்சருக்கே கொடுக்க வேண்டும்’ என தி.மு.க-வுக்கு உள்ளேயே ஒரு லாபி முயன்றிருக்கிறது. அந்த லாபியை முன்னின்று நடத்தியதே சேகர் பாபுதான் என்கிறார்கள். தன் கட்சிப் பதவிக்கே குறிவைத்த கடுப்பில்தான், அவரை மறைமுகமாக மேடையில் சீண்டிப் பேசினாராம் அந்த எம்.பி.”

“ஓஹோ...”

“ஜால்ரா போடுகிறார் என்றது மட்டுமல்ல. மேலும் சில வார்த்தைகளையும் கொட்டியிருக்கிறார் அந்த எம்.பி. அதற்கு பதிலடி கொடுக்க சேகர் பாபுவும் தயங்கவில்லையாம். பொதுக்கூட்டம் முடிந்து கிளம்பும்போது, எம்.பி அருகே சென்ற சேகர் பாபு, ‘நானாவது தலைவருக்குத்தான் ஜால்ரா அடிக்கிறேன். நீங்க மோடிக்கில்ல ஜால்ரா அடிக்கிறீங்கண்ணே’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டாராம். இதை எதிர்பார்க்காத மூத்த நிர்வாகி, கடுப்போடு கிளம்பியிருக்கிறார். ‘ஏற்கெனவே கொங்கு அமைச்சருக்கும், அந்தச் சீனியர் நிர்வாகிக்கும் ஒத்துப்போவதில்லை. இப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் வெளிப்படையாகவே மோதலைத் தொடுத்திருக்கிறார் சீனியர் எம்.பி. தி.மு.க-வுக்குள்ளேயே பழைய ஆட்களுக்கும், அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்குமான இந்த மோதல் எங்கே போய் முடியப்போகிறதோ?’ எனக் கிசுகிசுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

மிஸ்டர் கழுகு: நானாவது தலைவருக்கு ஜால்ரா... ஆனா, நீங்க?

“அமைச்சர் துரைமுருகனும் வார்த்தையை விட்டிருக்கிறாரே?”

“அவருக்கு இது புதுசா என்ன... நீலகிரியில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக் கூட்டத்தில், கட்சிக்குள் நடக்கும் உள்ளடி மற்றும் உட்கட்சிப்பூசலைப் பற்றிப் பேசிவிட்டு, இந்தி மொழி குறித்து எதுவும் பேசாமல் இறங்கிவிட்டாராம் துரைமுருகன். மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் வேறு ‘தீர்மானம்’ என்ற சொல் ‘தீர்மாணம்’ என்று இருந்திருக்கிறது. ‘நல்லா இருக்குதுய்யா உங்க இந்தி எதிர்ப்பு கூட்டம்’ என உடன்பிறப்புகளே கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள்” என்ற கழுகாருக்கு மிளகாய் பஜ்ஜியும், சுக்குமல்லி காபியும் கொடுத்தோம்.

அதை ருசித்தவர், “வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரோடுகளிலுள்ள பள்ளங்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. மழையால் பள்ளம் ஏற்பட்டாலும் சரிசெய்ய ஆயத்தமாக இருக்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார் அந்த மாவட்ட ஆட்சியர். உண்மையில், தூத்துக்குடியில் எந்த வேலையும் செய்யப்படவில்லையாம். ‘ஐயய்யோ முதல்வரிடம் பொய் சொல்லிவிட்டோமே...’ என்று கூட்டம் முடிந்த மறுநாள்தான் அவசரகதியில் பள்ளங்களை மண்ணைப் போட்டு மூடியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதிகாரிகளே இப்படியிருந்தால் என்ன செய்வது?” என்ற கழுகார்...

“தென்கோடி மாவட்டத்தில், அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியாக இருப்பவரின் வீடியோ ஒன்று அவரின் டிரைவரிடம் சிக்கியிருக்கிறதாம். அந்த வீடியோவைக் காட்டியே அண்ணனிடம் பணம் வாங்கிவந்தவர், இப்போது மிரட்டவே ஆரம்பித்துவிட்டாராம். டிரைவரின் செயல் கடும் எரிச்சலூட்டினாலும் விஷயத்தை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கிறாராம் அந்த நிர்வாகி” என்றபடி சிறகுகளை விரித்தார்.