அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: வைத்தி ட்ரீட்மென்ட்... இரட்டையர்களுக்கு தூதுவிட்ட சசிகலா!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

ஏற்கெனவே வைத்திலிங்கம் தரப்பு சசிகலாவுக்கு ஆதரவு திரட்டிவருவதாக வெளியான தகவலை வைத்திலிங்கம் மறுக்கவில்லை.

தொப்பலாக நனைந்தபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். கையில் பெரிய டிராவல் பேக்... “மாற்றுத்துணிகளைக் கொண்டுவந்திருக்கிறேன்... இதோ உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்” என்றவர், சில நிமிடங்களில் ஃப்ரெஷ்ஷாக வந்து செய்திகளை விவரிக்கத் தொடங்கினார்...

“அ.தி.மு.க தலைமைக்குள் நடக்கும் மோதலை அமைதியாக வேடிக்கை பார்த்துவரும் சசிகலா, தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘காலம் நமக்கு சாதகமாகக் கூடிவருகிறது’ என்று சொல்லியிருக்கிறார். ‘கட்சிக்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம்’ என்று போர்க்கொடி தூக்கியவர்களெல்லாம் இப்போது, ‘அமைதியாக வேடிக்கை பார்க்கலாம்... பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் நம்பிக்கையுடன் இருக்கிறது சசிகலா முகாம்...”

மிஸ்டர் கழுகு: வைத்தி ட்ரீட்மென்ட்... இரட்டையர்களுக்கு தூதுவிட்ட சசிகலா!

“அதுதான் ஆதரவாளர்களுடன் போட்டோவெல்லாம் எடுத்துக்கொண்டு அதகளப்படுத்தியிருக்கிறாரோ!”

“ஆமாம். அக்டோபர் 26-ம் தேதி தஞ்சாவூர் சென்ற சசிகலா, நவம்பர் முதல் வாரத்தில் நான்கு நாள்கள் தன் ஆதரவாளர்களைச் சந்தித்ததுடன், அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டிருக்கிறார். நவம்பர் 6-ம் தேதி மாலை, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சசிகலாவைச் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார். தி.மு.க ஆதரவாளராகக் கருதப்படும் பி.ஆர்.பாண்டியன், சசிகலாவைச் சந்தித்தது ஏன் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறது அ.தி.மு.க வட்டாரம். தஞ்சை விசிட்டில் சில ரகசிய மூவ்களை நடத்திவிட்டே நவம்பர் 7-ம் தேதி காலை சென்னைக்குக் கிளம்பியிருக்கிறார் சசிகலா.”

“வைத்திலிங்கம் தரப்பு, சசிகலாவைக் கட்சியில் சேர்க்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவருகிறதாமே?”

“அப்படித்தான் சொல்கிறார்கள். ஏற்கெனவே வைத்திலிங்கம் தரப்பு சசிகலாவுக்கு ஆதரவு திரட்டிவருவதாக வெளியான தகவலை வைத்திலிங்கம் மறுக்கவில்லை. தற்போது பன்னீர், எடப்பாடி, சசிகலா மூவருக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்டா பகுதியின் முக்கியஸ்தர் ஒருவர், சசிகலா தரப்பிலிருந்து வைத்திலிங்கத்திடம் தூது சென்றிருக்கிறார். அவர் சொன்ன சில நிபந்தனைகள் வைத்திலிங்கம் வழியாக எடப்பாடிக்குச் சென்றிருக்கின்றன. ஆனால், எடப்பாடி தரப்பு எந்தப் பதிலும் சொல்லாமல் முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்ததாம். வைத்தியைப் பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குள் பன்னீர், எடப்பாடி, சசிகலா மூவரையும் சேர்த்துவைத்த பிறகே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். இதே போன்றுதான் பன்னீரிடமும் சில கண்டிஷன்களை சசிகலா தரப்பு கூறியுள்ளது. அந்த கண்டிஷன்களுக்கு பன்னீர் ஒப்புக்கொள்வார் என்றே நினைக்கிறார் சசிகலா!”

மிஸ்டர் கழுகு: வைத்தி ட்ரீட்மென்ட்... இரட்டையர்களுக்கு தூதுவிட்ட சசிகலா!

“கோட்டை வட்டாரம் கிடுகிடுத்துப் போயிருக்கிறதே, கவனித்தீரா?”

“ஆமாம்... உச்ச பொறுப்பிலுள்ள சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டது கோட்டை வட்டாரத்தை கிடுகிடுக்கவைத்திருக்கிறது. நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் மாற்றம் மட்டுமே ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று பிற துறைகளில் அதிகாரிகள் மாற்றம் எப்படி நடந்தது என்று கோட்டையில் பட்டிமன்றமே நடக்கிறது. கிருஷ்ணனை மாற்றியே ஆக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடிவந்தது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரப்பு. அதனாலேயே, கிருஷ்ணனை மாற்றிவிட்டு, முருகானந்தம் அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேசமயம், நிதித்துறை தனக்கு வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தாராம் முருகானந்தம். ஆனால், `தமிழகத்தின் நிதி நிலைமை நெருக்கடியாக இருக்கும் நேரத்தில் நீங்கள் இங்கு வருவதுதான் சரியாக இருக்கும்’ என்று முதல்வர் அழுத்தமாகச் சொல்லவும் அவரால் மறுக்க முடியவில்லை என்கிறார்கள்!”

``அமைச்சரவை மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதிகாரிகள் மாற்றம் அரங்கேறியிருக்கிறது என்று சொல்லும்!”

“பல மாற்றங்களுக்குக் காரணமே அமைச்சர்கள்தான். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கும் அந்தத் துறையின் செயலாளராக இருந்த கோபாலுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. சமீபத்தில் அந்தத் துறையின் அதிகாரிகள் இடையே நடந்த ஒரு மீட்டிங்கில், ‘விரைவில் நமது துறையின் அமைச்சர் மாற்றப்படுவார்’ என்று பகிரங்கமாகப் போட்டு உடைத்தாராம் கோபால். இந்தத் தகவல் அமைச்சர் பெரியகருப்பன் காதுக்குச் செல்லவே... ‘அப்படியா சொன்னார் கோபால்?’ என்று கொதித்தவர், முதல்வரிடம் அவரை மாற்றியே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதையடுத்தே கோபாலை போக்குவரத்துத்துறைக்கு மாற்றிவிட்டு, ஊரக வளர்ச்சித்துறையை அமுதாவுக்கு வழங்கியிருக்கிறார்கள்.”

“ஒருவழியாக அமுதா பதவியில் அமர்ந்துவிட்டார் போலவே!”

“பெரியகருப்பன் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை, கேளும்... ஏற்கெனவே, ‘பெரியகருப்பன் துறையில் காட்டும் வேகம் போதவில்லை’ என்று முதல்வர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் வந்த நிலையில், கோபாலை மாற்ற வேண்டும் என்று அவர் ஒற்றைக்காலில் நின்றபோதே அவருக்கு செக் வைக்க முதல்வர் தரப்பில் முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்தே கறாராகச் செயல்படுவார் என்று கருதப்படும் அமுதா, ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பெரியகருப்பன் தரப்பு ‘இதுக்கு அந்த கோபாலே பரவாயில்லை’ என்று புலம்பிவருகிறது!”

“இதர மாற்றங்கள் குறித்துத் தகவல்...”

“கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் போர்க்கொடியால் அந்தத் துறையின் செயலாளராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டிருக்கிறார். அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் துரைமுருகனுக்கும் இடையே நிலவிய இறுக்கம் முதல்வர் ஸ்டாலினுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்துவந்தது. இதனால் பொதுப்பணித்துறையிலுள்ள நீர்வளத்துறையை மட்டும் தனியாகப் பிரித்து அதன் செயலாளராக சந்தீப் சக்சேனாவை நியமித்திருக்கிறார். பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் பிரிவுக்குப் போக்குவரத்துத்துறைச் செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியாவை நியமித்திருக்கிறார்கள். இப்போது நல்ல துறைக்கு வந்துள்ள அதிகாரிகள் அனைவருமே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முதல்வர் அலுவலகம் பக்கமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர்களாம். `இந்த யுக்தி தெரிந்திருந்தால், நாமும் ஒரு நடை போய்விட்டு வந்திருக்கலாமே...’ என்று புலம்புகிறார்கள் டம்மி துறையில் தொடரும் அதிகாரிகள்.”

ஸ்டாலினுடன் காந்தி, வினோத்
ஸ்டாலினுடன் காந்தி, வினோத்

“காந்தியின் இரட்டைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனபோல!”

“ஆமாம்... காந்தியின் மகன் வினோத்துக்கு, தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் கட்சி, ஆட்சி இரண்டிலும் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திலிருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு இதுவரை கட்சிப் பொறுப்பு வழங்கப்படாதது அவர்கள் இருவரையும் கடும் வருத்தமடையச் செய்திருக்கிறது. இது போதாதென்று பதவி கிடைத்த குஷியில் காந்தியின் மகன் வினோத், ராணிப்பேட்டையைத் தாண்டி நவம்பர் 7-ம் தேதி ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என ஒரு மினி சுற்றுப்பயணமே மேற்கொண்டார். வினோத்துக்கு ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், வாணியம்பாடி எம்.எல்.ஏ தேவராஜ், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுக்கவே... ஏற்கெனவே எதிரும் புதிருமாக இருந்த கதிர் ஆனந்த் தரப்பு பயங்கரக் கடுப்பில் இருக்கிறதாம்!”

“சீனியர்கள் இடையே நிலவிய பனிப்போர் இப்போது வாரிசுகளிடமும் பற்றிக்கொண்டது என்று சொல்லும்... வேறு ஏதேனும் தகவல் உள்ளதா?”

“கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஷர்மிளா என்பவர் கொச்சின் அமலாக்கப் பிரிவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகச் சில விஷயங்களைக் கூறியிருந்தார் அல்லவா... அதற்கு விளக்கம் கேட்டு விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது கொச்சின் அமலாக்கப் பிரிவு” என்ற கழுகார்,

“அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலாகக் கருதப்படும் சந்திரசேகர், சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீரைச் சந்தித்திருக்கிறார். அ.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் பதவியைக் குறிவைத்தே இந்தச் சந்திப்பு நடந்ததாம். வேலுமணி தரப்பிலிருந்தே ‘நீங்க போய்ப் பாருங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்று சொல்லி அனுப்பப்பட்டதாம். ஏற்கெனவே வேலுமணி-பன்னீர் தரப்பு நெருக்கமாகிவரும் நிலையில் சந்திரசேகருக்குப் பதவி கொடுத்து, கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தத் திட்டமிடுகிறார் பன்னீர் என்கிறார்கள். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துவருகிறது எடப்பாடி தரப்பு” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* ‘எந்த ரெக்கமன்டேஷனுக்கும் என்னை வந்து பார்க்காதீங்க... நான் சொல்லி எதுவும் நடக்குறதில்லை’ என்று போர்டு வைக்காத குறையாகச் சொல்லிவருகிறாராம் தலைமைக்கு நெருக்கமான நிலவு பெயர்கொண்ட அந்த முன்னாள் காக்கி.

* வெயில் மாவட்ட மூத்த அமைச்சருக்கு எதிராகச் சிண்டு முடிந்திருக்கிறார் இனிஷியல் அமைச்சர். மூத்தவரின் எதிர்க் கோஷ்டிகளிடம், ‘உங்க மாவட்டத்துல எந்த நிகழ்ச்சின்னாலும் தயங்காம கூப்பிடுங்க... நான் வந்து சிறப்பிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதையறிந்த மூத்தவர் கடந்த சில நாள்களாகச் சிரிப்பைத் தொலைத்துவிட்டாராம்!