அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பண்டல்கள் என்னவாகுமோ!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

பண்டல் மாயமாகிவிடுமோ என்கிற அச்சம்தான். ஒரு பண்டல் காணாமல் போவது அவருக்குப் பிரச்னையில்லை.

“கஜானாவை இடம் மாற்றலாமா என்று முதல்வர் பழனிசாமி தரப்பு ஆலோசனை செய்கிறதாமே..?” - கேள்வியுடன் நுழைந்தார் கழுகார். ஆவின் இனிப்புகளைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘அரசு கஜானாவையா?’’ என்று கண்சிமிட்டினோம். பொய்க் கோபம் காட்டிய கழுகார், “கட்சி கஜானாவைச் சொல்கிறேன். ‘அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தில் நடந்த குளறுபடி, மற்றவர்களிடமும் நடந்துவிட்டால் என்ன செய்வது?’ என்கிற பதற்றத்தில் இருக்கிறாராம் முதல்வர்” என்று இனிப்பைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“அமைச்சர் துரைக்கண்ணு மறைந்து விட்டாலும், அவரைச் சுற்றும் சர்ச்சைகள் ஓயவில்லை. டெல்டா மாவட்டத்தில் நடந்த சில டெண்டர் விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு துரைக்கண்ணுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாம். அந்த வகையில் பெரும் ‘பண்டல்’ ஒன்று அமைச்சர்வசம் அளிக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் 25 தொகுதிகளுக்கு துரைக்கண்ணுவை வைத்து பரிமாற்றங்களைச் செய்யவும் கட்சி மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான், கொரோனாவால் அவர் மறைந்தது மேலிடத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ‘பண்டல்’ விவரங்களெல்லாம் அமைச்சரின் இளைய மகன் அய்யப்பனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அவரை கார்னர் செய்யும் வேலை தொடங்கியிருக்கிறது. ஆனால், தகவல் ஒன்றும் தேறவில்லையாம். இதனால் பதற்றத்தில் இருக்கிறது எடப்பாடி தரப்பு.”

“ஏன்?”

“பண்டல் மாயமாகிவிடுமோ என்கிற அச்சம்தான். ஒரு பண்டல் காணாமல் போவது அவருக்குப் பிரச்னையில்லை. ஆனால், நாளை இதையே சாக்காகக்கொண்டு, இதே பாணியில் மற்றவர்களும் கம்பி நீட்டிவிட்டால் கட்சியின் கதி? இதற்காகத்தான், ஒவ்வோர் அமைச்சரிடமும் இருப்பிலுள்ள ‘பண்டல்’களை தொழிலதிபர்கள் பக்கம் மடைமாற்றிவிடலாமா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்தாராம் முதல்வர். ஏற்கெனவே, மண்டலம்வாரியாகச் சேர வேண்டியது சேர்ந்துவிட்டது. தேர்தல் நெருக்கத்தில், ‘வெளியே எடுக்க முடியலைண்ணே...’ என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்.”

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“துரைக்கண்ணுவின் குடும்பத்தில் வேறொரு சொத்து விவகாரமும் பஞ்சாயத்து ஆகியிருக்கிறதாமே?”

“துரைக்கண்ணுவின் மருமகன் கனகதாரனுக்கும் அய்யப்பனுக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. கனகதாரனைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யான வைத்திலிங்கம், துரைக்கண்ணு குடும்பத்துக்கு எங்கெங்கு சொத்துகள் இருக்கின்றன, அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பதை முதல்வர் தரப்புக்கு அப்டேட் செய்தாராம். ஆனாலும், முதல்வர் தரப்பு பதற்றத்தில் இருக்கிறது.”

“தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியைச் சுற்றி மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறதே..?”

“நவம்பர் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்ட தி.மு.க சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பொன்முடி செய்திருந்தார். இதற்காக விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க அச்சடித்த நோட்டீஸ்தான் சர்ச்சையாகியிருக்கிறது. பொன்முடி பெயருக்குக் கீழே மாவட்டச் செயலாளர் புகழேந்தி பெயர் இடம்பெற்றது. அதற்கு அடுத்து, பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் பெயரும், மாவட்ட நிர்வாகிகள் பெயரும் இடம்பெற்றன. அதற்கும் கீழேதான், தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் பெயர்களை போட்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியுடன் சேர்த்து நான்கு மாநில நிர்வாகிகள் இருக்கிறார்கள். ஆனால், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.பி-யான கெளதம சிகாமணியை முன்னிலைப்படுத்துவதற்காக, பிற நிர்வாகிகளை பொன்முடி பின்னுக்குத் தள்ளிவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் தானும், தன் வாரிசின் ஆளுமை மட்டும்தான் இருக்க வேண்டுமென பொன்முடி நினைக்கிறார்’ என்று தி.மு.க-வினர் புலம்புகிறார்கள்.”

“சரிதான்... தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் ஸ்டாலினிடம் புகார் வாசித்திருக்கிறார்களாமே..?”

“ஆமாம். பொதுக்கணக்கு குழுவில் நடைபெறும் பஞ்சாயத்துதான் காரணம் என்கிறார்கள். தமிழக அரசின் செலவினங்கள் தொடர்பாக, அரசு அதிகாரிகளை அழைத்து விசாரிப்பதற்கும், செலவினங்கள் தொடர்பான கோப்புகளை ஆராய்வதற்கும் பொதுக்கணக்கு குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவது வழக்கம். முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால், தி.மு.க-வுக்கு பொறுப்பை ஒதுக்க ஜெயலலிதா விரும்பவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமியை பொதுக்கணக்கு குழுவின் தலைவராக்க சபாநாயகர் தனபால் முடிவெடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்திலேயே தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூச்சல் போட்டார்கள். பிறகு அடம்பிடித்து இந்தப் பதவியை வாங்கிய தி.மு.க., துரைமுருகனை குழுவின் தலைவராக நியமிக்க வைத்தது. 2006-2011 காலகட்டத்தில் மாவட்டவாரியாகச் செலவழிக்கப்பட்ட தொகை குறித்து இந்தக் குழு இப்போது விசாரித்துவருகிறது. இந்தக் கூட்டத்தில்தான் துரைமுருகன் அலம்பல் செய்கிறாராம்.”

“என்ன செய்கிறாராம்?”

“மாவட்டவாரியாக அதிகாரிகளை அழைத்துப் பேசும்போது, ஏகத்துக்கும் நக்கல் அடிக்கிறாராம். சமீபத்தில், வேலூர் மாவட்டத்திலிருந்து அதிகாரி ஒருவர் வந்திருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது அல்லவா... அப்போது உடனிருந்த அதிகாரியாம் இவர். ‘இவரைத்தான் எனக்கு நல்லாத் தெரியுமே... நமக்கு ரொம்ப நல்லது பண்ணியிருக்காரு...’ என்று துரைமுருகன் கிண்டலடிக்கவும், அந்த அதிகாரி வெலவெலத்துப் போயிருக்கிறார். கூட்டம் முடிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளம்பும்போது, அவர்கள் கையில் கோரிக்கை மனுக்களைத் திணித்து, ‘நம்ம கட்சிக்காரங்கதான். செஞ்சு கொடுத்துடுங்க. அடுத்த ஆட்சி எங்களுதுதான் தெரியும்ல’ என்று கறார் காட்டுகிறாராம் துரைமுருகன். இதைத்தான் ஸ்டாலினிடம் சொல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் சங்கடப்பட்டிருக்கிறார்கள்” என்ற கழுகாருக்கு, சூடாக இஞ்சி ‘டீ’யைக் கொடுத்தோம்.

டீயைச் சுவைத்தபடி தொடர்ந்தார் கழுகார். “எஸ்.ஏ.சி கட்சியைப் பதிவு செய்த விவகாரத்தில், ‘விஜய் அறிக்கையுடன் நிறுத்திக்கொண்டது ஏன்? கட்சி விஷயத்தில் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு ஏன் கடிதம் எழுதவில்லை’ என்பது விஜய் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.”

“இருக்காதா பின்னே?”

“கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு 25 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. அந்தக் கணக்குகளில், 2011-2016 காலகட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் வரை டெபாசிட் தொகை இருந்திருக்கிறது. இப்போது, நான்கு கோடி ரூபாய் மட்டும்தான் டெபாசிட் தொகை இருக்கிறதாம். ‘இவ்வளவு பெரிய தொகை எங்கே சென்றது?’ என்பதை தி.மு.க-வினர் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கொங்கு மண்டல அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் உடனடியாக பில் செட்டில் செய்யப்படுகிறதாம். அந்த வகையில் டெபாசிட் செய்த தொகையைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக அவசர அவசரமாக எடுத்ததால், ‘ப்ரீ மெச்சூர்’ வகையில் மாநகராட்சிக்கு மூன்றரைக் கோடி ரூபாய் நஷ்டமாகியிருக்கிறதாம். இது தொடர்பான ஆவணங்களைத் திரட்டி, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறது தி.மு.க.”

கமல்ஹாசன் - ராகுல் காந்தி
கமல்ஹாசன் - ராகுல் காந்தி

“கமலுடன் காங்கிரஸ் நெருங்குகிறதுபோல?”

“அவர்கள் மட்டுமா நெருங்குகிறார்கள்... நவம்பர் 7-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்கு முதல் ஆளாக வைகோ போனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமலுக்கு வந்த வாழ்த்துகளில், ‘ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்குவோம்’ என்று ராகுல் காந்தி கூறியிருப்பதுதான் ‘ஹைலைட்.’ ‘இது வெறும் வாழ்த்தா இல்லை தி.மு.க-வை மிரட்டிப் பார்க்கும் யுக்தியா?’ என்று உடன்பிறப்புகள் குழப்பத்தில் இருக்கிறார்கள். எது எப்படியோ, கமல் குஷியில் இருக்கிறார்.”

“சரிதான்...”

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கற்களை வெட்டியெடுக்க ஆளுங்கட்சிப் புள்ளிகள் முயல்வதைத் தொடர்ச்சியாகத் தடுத்துவருகிறார் கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. இதையடுத்து, விதிகளைமீறி கனிம வளத்துறை சார்பில் விட முயன்ற கிரானைட் குவாரி டெண்டரை, மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ரத்து செய்தார். கடுப்பான ஆளும் தரப்பு, ஆட்சியரை மாற்றியது. தற்போது வந்திருக்கும் ஆட்சியர், புதிய டெண்டரை நவம்பர் 7-ம் தேதியன்று அறிவித்திருக்கிறார். இதற்கும் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை வாங்கிவிட்டார் செல்லக்குமார்.”

“ஓஹோ!”

“சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் ‘மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ அலுவலகம் செயல்படுகிறது. கிரானைட்டில் ஆரம்பித்து மண் வரை எந்த குவாரியாக இருந்தாலும் சரி, அவற்றுக்கான என்.ஓ.சி-யை இந்த அலுவலகம்தான் வழங்க வேண்டும். இரண்டெழுத்து மணல் பிரமுகரின் ஆட்கள் சிலர், ஓரிரு உயரதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு, என்.ஓ.சி வழங்குவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் கறக்கிறார்களாம். இவர்களை மீறி எந்தக் கோப்பும் நகராது என்பதால், பனகல் மாளிகையில் பணமழை பொழிவதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆட்சி முடிவதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கடைசிக்கட்ட வசூல் தூள் பறக்கிறது” என்று சிறகைச் சிலிர்த்தபடி எழுந்த கழுகார்,

சகாயம்
சகாயம்

“மக்கள் பாதை அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமியும், வழிகாட்டியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமும் இருக்கிறார்கள். சகாயத்தின் ஆதரவாளரான அமைப்பின் நிர்வாகி பாட்ஷா மீது ஏகப்பட்ட புகார்களை எழுப்பியிருக்கும் அமைப்பின் 25 மாவட்ட பொறுப்பாளர்கள், பாட்ஷாவை உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கும்படி நாகல்சாமியிடம் புகார் அளித்திருக்கின்றனர். நாகல்சாமியும் விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்க முயன்றிருக்கிறார். இந்தச் சூழலில், நாகல்சாமியை விமர்சித்து பாட்ஷா எழுதியதாக ஒரு கடிதம் அமைப்பின் வட்டாரங்களில் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. சகாயத்தின் ஒப்புதலுடன்தான் இந்தக் கடிதம் எழுதப்பட்டதாகக் கூறும் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் சிலர், சகாயத்துக்கு எதிராகக் கச்சை கட்டவும் தயாராகிறார்கள். இந்த விவகாரம் சூடாகிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.