அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அந்தரத்தில் இளைஞரணி... மாங்கனித் தோட்ட அரசியல்!

ராமதாஸ், அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ராமதாஸ், அன்புமணி

பா.ம.க இளைஞரணித் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர் பொறுப்பேற்று செயல்படுவதில் இழுபறி இருக்கிறது

“ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கும் கேரள கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து, ‘தைரியம் இருந்தால், ராஜ் பவனுக்குள் நுழையுங்கள்... என்னைத் தாக்குங்கள்...’ என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பகிரங்க சவால் விடுத்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், நேரடியாக உரையாடலைத் தொடங்கினார்...

“இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றன தி.மு.க கூட்டணிக் கட்சிகள். இந்தக் கடிதத்தை முர்முவிடம் நேரில் அளிக்க நேரம் கேட்டபோது, நேரம் ஒதுக்க மறுத்திருக்கிறது ஜனாதிபதி மாளிகை. வேறு வழியில்லாமல், ஜனாதிபதி அலுவலகத்திலேயே கடிதம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ‘அன்றைய தினம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவியேற்பு விழா இருந்ததால், நேரம் ஒதுக்க முடியவில்லை’ என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தாலும், ‘தி.மு.க கூட்டணிக் கட்சிகளைத் திட்டமிட்டே புறக்கணிக்கிறார் முர்மு. எம்.பி-க்களைச் சந்திக்க ஐந்து நிமிடங்கள்கூட ஒதுக்க முடியவில்லையா?’ எனக் கொந்தளிக்கிறார்கள் தி.மு.க எம்.பி-க்கள். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கும்போது, ஆளுநர் ரவி விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்றத்தை முடக்கவும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஆலோசித்துவருகின்றன.”

மிஸ்டர் கழுகு: அந்தரத்தில் இளைஞரணி... மாங்கனித் தோட்ட அரசியல்!

“முதல்வருக்கு உதவியாளர் தேடுகிறார்களாமே?”

“ஆமாம்... முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகுவலியோடு, தற்போது கால்வலியும் அதிகரித்திருக்கிறதாம். அது பூரணமாக குணமடையாத நிலையிலும்கூட, ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். மண்டலவாரியாகச் சுற்றுப்பயணத்துக்கும் தயாராகிறாராம். இந்தச் சூழலில், வெளியூர் பயணங்களின்போது, அவரது உடல்நலனை கண்ணும் கருத்துமாக கவனிக்கவும், தேநீர், பழச்சாறு, மருந்து, மாத்திரைகளைச் சரியான நேரத்தில் கொடுக்கவும் நம்பிக்கையான ஓர் உதவியாளரைத் தேடத் தொடங்கியிருக்கிறது முதல்வரின் குடும்பம். ‘திருவாரூர் பக்கத்திலிருந்து நம் சொந்தபந்தத்திலேயே ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாமே?’ என்று குடும்பத்தில் சிலர் யோசனை சொல்லியிருப்பதாகவும் தகவல்.”

“வேலுமணிக்குச் சிக்கல் நெருங்கிவிட்டது என்கிறார்களே... உண்மையா?”

“உண்மைதான். டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்தது எனப் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்துசெய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. இதில் வேலுமணிக்கு ஆதரவாக, மத்திய அரசு வழக்கறிஞரே சிறப்பு அனுமதி பெற்று ஆஜராகியும்கூட பலனில்லை. அந்த அளவுக்கு அறப்போர் இயக்கம் தரப்பிலிருந்து வலுவான பாயின்ட்டுகளை நீதிமன்றத்தில் அடுக்கியிருக் கிறார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வார காலத்துக்குள் வரலாம் என்றும், அது வேலுமணிக்கு எதிராகவே இருக்கும் என்றும் சொல்கிறார்கள் சட்டப்புள்ளிகள். அப்படி எதிராகத் தீர்ப்பு வந்தால், உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான முன்னேற்பாடுகளில் இப்போதே இறங்கிவிட்டதாம் வேலுமணி தரப்பு.”

“எடப்பாடி இதையெல்லாம் கண்டுகொள்வதில்லையோ?”

“அப்படித்தான் சொல்கிறார்கள். பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அவர். தீர்ப்பு சாதகமாகவே வரும் என்றாலும், ஒருவேளை எதிராக வந்தால் என்ன செய்யலாம் என்பதிலேயே அவரது முழு கவனமும் இருக்கிறதாம். தீர்ப்பு வந்தவுடனேயே, பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்து, ஜனவரியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு முன்பாக பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார் எடப்பாடி. அதையடுத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.”

வேலுமணி
வேலுமணி

“ஓஹோ...”

“வேலுமணி மட்டுமல்ல... இன்னொரு முக்கியப் பிரச்னையிலும் எடப்பாடி கருத்து ஏதும் சொல்லாதது சர்ச்சையாகியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த ஒதுக்கீடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்திருக்கிறது. ‘இந்தக் கூட்டத்துக்கு ஓ.பி.எஸ் தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டால், நம் தரப்பில் யாரையும் அனுப்ப வேண்டாம்’ என முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி. ‘தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் அ.தி.மு.க-வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் இப்படி ஒதுங்கிச் செல்வது நிச்சயமாகக் கட்சி நலனுக்கு நல்லதல்ல’ என முணுமுணுத்திருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.”

“ஓ.பி.எஸ் முகாம் பற்றிய செய்திகள் ஏதாவது...?”

“அவருக்கென்ன... எதைப் பற்றியும் கவலைப்படாமல், நிர்வாகிகளை நியமித்துக் கொண்டே போகிறார். மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து, இப்போது மாவட்ட அவைத்தலைவர், பொருளாளர், இளைஞரணி, ஜெ. பேரவை என எல்லாப் பதவிகளுக்கும் ஆள் போட ஆரம்பித்துவிட்டார். என்ன ஒன்று, அதில் பெரும்பாலானவர்கள், சொந்த ஊரிலேயே செல்வாக்கு இல்லாதவர்கள். இது போன்ற ஒன்றுக்கும் ஆகாதவர்களை நிர்வாகிகளாக நியமிப்பதால், ஏற்கெனவே ஓ.பி.எஸ் ஆதரவு மனநிலையில் இருந்தவர்கள்கூட, ‘ஐயய்யே...’ என்று பின்வாங்கத் தொடங்கிவிட்டார்களாம். இதில், வைத்திலிங்கம் தனக்கு வேண்டியவர்களாகப் பார்த்து நியமனம் செய்கிறார் என்கிற சர்ச்சை வேறு. ஓ.பி.எஸ் ஏதோ செய்யப்போவதாகத் தோற்றமளித்தாலும் உள்ளுக்குள் ஒன்றுமில்லாத புஸ்வாணமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்” என்ற கழுகாருக்கு பன்னீர் சோடாவும், பாதாம் பிஸ்கட்டும் கொடுத்தோம்.

மிஸ்டர் கழுகு: அந்தரத்தில் இளைஞரணி... மாங்கனித் தோட்ட அரசியல்!

“என்ன இது வித்தியாசமான காம்பினேஷனாக இருக்கிறது... பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், தமிழ்க்குமரன் காம்பினேஷன்போல?” என்று கமென்ட் அடித்த கழுகார், நம் சந்தேகப் பார்வையைப் புரிந்துகொண்டு விளக்கமாகவே சொன்னார். “பா.ம.க இளைஞரணித் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர் பொறுப்பேற்று செயல்படுவதில் இழுபறி இருக்கிறது. காரணம், மருத்துவர் ராமதாஸின் இந்த முடிவு அன்புமணிக்குப் பிடிக்கவில்லையாம். அதனால், நியமனத்தை நிறுத்திவைத்திருக்கிறார் என்கிறார்கள். கட்சி நிகழ்வுகள் சார்ந்து தமிழ்க்குமரனுக்கு அழைப்பு எதுவும் கொடுக்கப்படுவது இல்லையாம். ‘கட்சிக்காக உழைத்த இளைஞர்கள் பலர் இருக்கும்போது, கட்சி நிகழ்ச்சிகளில் தலையே காட்டியிராத தமிழ்க்குமரனுக்கு, ஜி.கே.மணியின் மகன் என்ற ஒரே காரணத்துக்காகப் பொறுப்பு கொடுத்தார்கள். அதனால்தான் அன்புமணி நிறுத்திவைத்திருக்கிறார். ஆனால், புதிதாக வேறு யாரையும் நியமிக்கும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை. அப்பா உறவு... மகன் பகையா?’ என்கிறார்கள் மாங்கனி வட்டாரத்தில்.”

“கொங்கு பொறுப்பு அமைச்சர் ரொம்பப் புலம்புகிறாராமே..?”

“தீபாவளி பண்டிகையையொட்டி கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், கட்சி நிர்வாகிகளுக்கு ‘ஸ்வீட் பாக்ஸ்’ விநியோகித்தார் அல்லவா... அது கட்சியினருக்குக் கொடுத்திருக்கும் உற்சாகத்தைப் பார்த்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதேபோல கட்சியினரை கவனிக்கலாமே என்று யோசனை சொல்லியிருக்கிறதாம் கட்சி மேலிடம். ‘அவங்க சந்தோஷமா இருந்தாத்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலை நாம தெம்பா எதிர்கொள்ள முடியும்’ என்றும் அழுத்தம் கொடுக்கிறார்களாம். ‘இவங்க சொல்லிட்டுப் போயிடுவாங்க... மூணு மாசத்துக்கு ஒரு முறை படியளந்தா, என்னோட சொத்து பத்தெல்லாம் கரைஞ்சு காத்தாப்போயிடுமே?’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாராம் அந்த அமைச்சர்” என்ற கழுகார்...

“குட்கா வழக்கு மீண்டும் வேகமெடுக்கப் போகிறதாம். இந்த வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவதற்கான முஸ்தீபுகளும் தொடங்கிவிட்டன. இதனால் முன்னாள் அமைச்சர் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடங்கி பணியிலிருக்கும் காவல்துறை அதிகாரிகள் வரை கலக்கத்தில் இருக்கிறார்களாம்” என்றபடி ஜூட் விட்டார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* பெரிய வீட்டு இல்லத்தரசி தரப்பிலிருந்து போன் வந்தால், உடனே அவர் சொன்ன வேலையை முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்கிறார்களாம் அமைச்சர்கள். காரணம், தன்னுடைய சிபாரிசுகளை நிறைவேற்ற சற்று காலதாமதம் ஆனால்கூட சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கே போன் போட்டு, ‘ஏம்ப்பா, ஒரு விஷயம் செஞ்சு கொடுக்கச் சொன்னா, இப்படித்தான் இழுத்தடிப்பீங்களா?’ என நேரடியாகவே கேட்டுவிடுவாராம் அவர்.

* சமீபத்தில், ஒரு அமைச்சரிடமிருந்த முக்கியமான துறை, ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நேரடி கன்ட்ரோலுக்கு மாற்றப்பட்டது. அந்தத் துறையிலிருந்து கட்சி நிதி சரிவர வராததாலேயே இந்த மாற்றம் என்கிறார்கள். தற்போது நிதி விவகாரங்களை கவனித்துக்கொள்ள, மேலிடத்து மாப்பிள்ளை தரப்பிலிருந்து ஒருவரை நியமித்திருக்கிறார்களாம்.

* கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோலோச்சிய ஐ.பி.எஸ் அதிகாரியின் குடும்பச் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. ‘இந்த நடவடிக்கை வெறுமனே அவருக்கானது மட்டுமல்ல, மூத்த அமைச்சர் ஒருவருக்கு விரிக்கப்பட்டிருக்கும் வலைதான் இது’ என்று கண்சிமிட்டுகிறார்கள் காக்கிகள்.