Published:Updated:

மிஸ்டர் கழுகு: தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறி - காய்நகர்த்தும் மூத்த அமைச்சர்...

அரசியலில் எதுவுமே ஆச்சர்யம் இல்லை. சசிகலா விதித்த நிபந்தனைகளில் சில பன்னீருக்கு ஏற்புடையதாக இல்லை என்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

மழை சற்றே ஓய்ந்த மாலையில் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “ஒருவழியாக மழையை வழியனுப்பிவிட்டு வருகிறீர்போலவே!” என்று புன்முறுவலுடன் கேட்டபடி சூடான காபியை நீட்டினோம். “ஆமாம், நகரம் முழுவதும் சுற்றிவந்தேன். தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின்வாரியப் பணியாளர்களெல்லாம் சுற்றிச் சுழன்று வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பெருமழையிலும் அவர்களின் பணி அளப்பரியது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்...

“அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில், பன்னீர் தரப்பின் வாதம் சசிகலாவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘நிச்சயம் நமக்குச் சாதகமாக பதில் அளிப்பார்; அதனால்தானே கடந்த முறை வாய்தா வாங்கினார்’ என்று சசிகலா தரப்பு நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நவம்பர் 10-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘அ.தி.மு.க-வில் உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று வாதாடியிருக்கிறார் பன்னீரின் வழக்கறிஞர்.”

“ஆச்சர்யமாக இருக்கிறதே!”

“அரசியலில் எதுவுமே ஆச்சர்யம் இல்லை. சசிகலா விதித்த நிபந்தனைகளில் சில பன்னீருக்கு ஏற்புடையதாக இல்லை என்கிறார்கள். அத்துடன், எடப்பாடியும் சற்றே இறங்கிவந்ததாகவும் ஒரு தகவல் ஓடுகிறது... டிசம்பர் மாத இறுதியில் அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டும் திட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் அதிகாரங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள எடப்பாடி ஒப்புக்கொண்டிருப்பதே பன்னீரின் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள். ஆனாலும், ‘பன்னீரை நம்ப முடியாது; அவர் எந்த நேரத்திலும் மாறலாம்’ என்று சந்தேகத்துடனேயே இருக்கிறது எடப்பாடி தரப்பு!”

மிஸ்டர் கழுகு: தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறி - காய்நகர்த்தும் மூத்த அமைச்சர்...

“சரிதான்... அ.ம.மு.க-வில் ஏதோ இடப் பிரச்னையாமே?”

“ஆமாம். சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ‘பிரிஸ்ட்’ பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டடத்தில்தான் அ.ம.மு.க தலைமை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த இடத்துக்கான வாடகையைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செலுத்தவில்லையாம் அ.ம.மு.க நிர்வாகம். மறைந்த ‘பிரஸ்ட்’ பல்கலைக்கழக வேந்தர் முருகேசன் ஒருவகையில் தினகரனுக்கு உறவுக்காரரும்கூட. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகவும் முருகேசன் போட்டியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்துவரும் அவரின் மகன் நாகேஸ்வரன் சமீபத்தில் தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார். ஏற்கெனவே அ.ம.மு.க தலைமை அலுவலகம் சென்னை, அசோக் நகரில் இருந்தபோது அதன் உரிமையாளரான இசக்கி சுப்பையா அ.தி.மு.க-வுக்குச் சென்றதும், அவரது கட்டடத்தைத் திருப்பிக் கேட்டார். அதேபோல நாகேஸ்வரன் தி.மு.க-வுக்குச் சென்றுவிட்டதால், கட்டடத்தைத் திருப்பிக் கேட்கிறார். ‘ஒன்று வாடகையை மொத்தமாகக் கொடுக்க வேண்டும்... இல்லையென்றால் கட்டடத்தை காலி செய்ய வேண்டும்’ என்று நாகேஸ்வரன் பலமுறை கேட்டும் தினகரன் தரப்பில் பதில் இல்லாததால், சட்ட நடவடிக்கைக்குத் தயாராகிறதாம் பல்கலைக்கழகத் தரப்பு!”

மிஸ்டர் கழுகு: தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறி - காய்நகர்த்தும் மூத்த அமைச்சர்...

“எங்கே... செந்தில் பாலாஜியைப் பார்க்கவே முடியவில்லையே!”

“அவரது கவனம் முழுக்கவே கோவைப் பக்கம் திரும்பியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதால் கோவையில் ‘மக்கள் சபை’ என்ற பெயரில் வார்டு வார்டாக விசிட் அடித்து, மக்களிடம் மனுக்கள் வாங்கினார் செந்தில் பாலாஜி. இதற்காகக் களமிறங்கியிருக்கும் தனி டீம், மனுக்களைப் படித்துப் பார்த்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புமாம். ஆனால், அமைச்சருக்கு எதிர்க்கோஷ்டியினரோ, ‘மனுக்களைக்கூட நேரடியாகப் படிக்காமல் ஆள்வைத்துப் படிப்பவர், எப்படி மக்கள் பிரச்னைகளைச் சரிசெய்யப்போகிறார், எப்படி கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்கப்போகிறார்?’ என்று கொளுத்திப்போடுகிறார்கள். அமைச்சர் தரப்போ, ‘அத்தனை மனுக்களையும் அமைச்சரே படித்தால் துறைரீதியான வேலைகளை யார் பார்ப்பது?’ என்று பதிலடி கொடுக்க, சூடாகியிருக்கிறது கோவை அரசியல் களம்.”

“திருவண்ணாமலை இடி முழக்கம் காட்பாடி வரை கேட்கிறதாமே?”

மிஸ்டர் கழுகு: தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறி - காய்நகர்த்தும் மூத்த அமைச்சர்...
மிஸ்டர் கழுகு: தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறி - காய்நகர்த்தும் மூத்த அமைச்சர்...

“ஆளுங்கட்சியில் நடக்கும் பனிப்போரைத்தானே சொல்கிறீர்கள்... அறிவாலயத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் கைகள் ஓங்கத் தொடங்கியிருக்கின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களும் துரைமுருகனின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன. தனது சமூகத்தைச் சேர்ந்த ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தியை அமைச்சரவைக்குள் கொண்டுவந்ததன் மூலம் அந்த மாவட்டத்துக்குள் துரைமுருகனின் முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கிறார் வேலு. சமீபத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு அமைச்சராகத் தன்னை முதலமைச்சர் ஸ்டாலின் வாயாலேயே அறிவிக்கச் செய்துவிட்டார். இதையடுத்து, நவம்பர் 9-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்துக்குச் சென்ற வேலு, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ அலுவலகத்தை நாட்றாம்பள்ளியில் திறந்துவைத்தார். பிறகு திருப்பத்தூருக்குச் சென்றவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். தொடர்ந்து, திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இப்படி துரைமுருகனின் கோட்டையிலேயே கொடி நாட்டியிருக்கும் எ.வ.வேலு தரப்பு, அடுத்து பொதுச்செயலாளர் பதவியை நோக்கிக் காய்நகர்த்துகிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!”

“நடக்கட்டும்... நடக்கட்டும்!”

“இது ஒருபுறம் என்றால், மாவட்டவாரியாகவும் பதவிகளைப் பிடிக்க வேகம் காட்டிவருகிறார்கள் உடன்பிறப்புகள். ‘உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு 2022, ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் உட்கட்சித் தேர்தலில் பதவிகள் கிடைக்கும்’ என்று தி.மு.க தலைமையிலிருந்து உத்தரவு சென்றிருப்பதால், எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் இப்போதே மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* சென்னை அங்காடித் தெருவைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவர், தொகுதிக்கு உட்பட்ட சமோசா வியாபாரிகளிடம் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 6 லட்சம் ரூபாய் வரை கறந்துவிட்டாராம். மாமூல் கொடுக்க மறுப்பவர்களின் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் விரட்டியடிப்பதால், ‘கருணையே இல்லையா?’ என்று புலம்புகிறார்கள் சமோசா வியாபாரிகள். சமோசா கடைக்காரர்களிடம் மட்டுமே இவ்வளவு என்றால், மற்ற கடைக்காரர்களிடம் வசூலித்தது எவ்வளவு இருக்கும் என்று வாயைப் பிளக்கிறது அங்காடித் தெரு!

* மத்திய மாவட்டத்தின் முன்னாள் இனிப்பு அமைச்சர், சமீபத்தில் சசிகலாவிடம் நீண்ட நேரம் போனில் பேசியிருக்கிறார். அப்படி என்ன பேசியிருப்பார்கள் என்று விசாரித்துக்கொண்டிருக்கிறது சேலம் குரூப்!

* வம்பு வழக்கில் சிக்கியிருக்கும் சேலத்து நிழல் நபரை சமீபத்தில் கட்சியின் ‘விவசாய’ பிரமுகர் சந்தித்து பல மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். மத்திய மண்டலத்தில் இருக்கும் கல்லூரியில் இருவரும் பார்ட்னர்கள் என்பதால் சிலபல டீலிங்குகளை ரகசியமாக முடித்தார்களாம்!

பத்திரப்பதிவில் வில்லங்க பெண் அதிகாரி!

பத்திரப்பதிவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் மனைவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிகாரி, தன்னுடன் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவருடன் நெருக்கத்தில் இருந்ததே, இந்த தற்கொலைக்குக் காரணம் என்கிறார்கள். துறையின் உயர் பொறுப்புக்கு வருபவர்களை வளைத்து, காரியம் சாதிப்பதில் கில்லாடியாம் அந்தப் பெண் அதிகாரி. பெண் அதிகாரியின் வலையில் சிக்கிய உயரதிகாரி, அவருக்காகவே சில ஃபைல்களைக் கண்ணை மூடிக்கொண்டு பாஸ் செய்த விவகாரம் முதல்வர் அலுவலகம் வரை சென்றிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு