அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அரசு டெண்டருக்கு முயற்சி... பெரிய குடும்பத்து நிறுவனம் இழுத்து மூடப்பட்ட பின்னணி!

ஓ.பன்னீர்செல்வம், அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், அமித் ஷா

‘கடந்த பத்தாண்டுக்காலமாக தமிழ்நாட்டை அ.தி.மு.க எப்படிச் சீரழித்திருக்கிறது என்பதை சென்னைக்கு வந்து பார்த்தால் எடப்பாடிக்குத் தெரியும்’ என அமைச்சர் சேகர் பாபு நேரடியாகவே விமர்சித்திருந்தார்.

“உலக மக்கள்தொகை 800 கோடியைத் தாண்டிவிட்டது. அடுத்த ஆண்டே நாம் மக்கள்தொகையில் சீனாவை முந்திவிடுவோம் என்கிறது ஐ.நா” என்றபடியே நுழைந்த கழுகாரிடம், “ ‘இப்ப என்ன... நாமிருவர் நமக்கொருவர்’ என்று சொல்லப்போகிறீரா?” என்று கேட்டோம்.

மிஸ்டர் கழுகு: அரசு டெண்டருக்கு முயற்சி... பெரிய குடும்பத்து நிறுவனம் இழுத்து மூடப்பட்ட பின்னணி!

“நமக்கு எப்படியோ... மோடி, எனக்கு இருவரும் வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரது திண்டுக்கல் வருகையின்போது எப்படியாவது தனியே சந்தித்துவிட வேண்டும் என்று முட்டிமோதியிருக்கிறார் ஓ.பி.எஸ். அது நடக்கவில்லை. அடுத்து, சென்னைக்கு வந்த அமித் ஷாவையாவது சந்தித்துப் பேசிவிட வேண்டும் என நினைத்தவருக்கு, ஒரு ‘ஹாய்’ சொல்ல மட்டுமே நேரம் ஒதுக்கினார்களாம். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஓ.பி.எஸ்., வழக்கம்போல ஆடிட்டர் ரூட்டைப் பிடித்திருக்கிறார். ஆனால், அந்த ஆடிட்டருக்கே தனியாக நேரம் கொடுக்கவில்லையாம். ‘கமிட் செய்து வந்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத்தான் நேரம் சரியாக இருக்கும். வேண்டுமானால் கமலாலயம் வாங்க, பார்க்கலாம்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்களாம். எப்போது சென்னைக்கு வந்தாலும் ஆடிட்டருக்கென்று தனியாக நேரம் ஒதுக்கும் அமித் ஷா, ஏதோ மனக்கசப்பாலேயே இப்படித் தவிர்த்திருக்கிறார் என்கிறார்கள் கமலாலயத்தில். சமீபத்தில் ஆடிட்டர் கொடுத்த எந்த அரசியல் ஸ்ட்ராட்டஜியும் கைகொடுக்கவில்லை என்பதே அதற்குக் காரணமாம்.”

மிஸ்டர் கழுகு: அரசு டெண்டருக்கு முயற்சி... பெரிய குடும்பத்து நிறுவனம் இழுத்து மூடப்பட்ட பின்னணி!

“இவ்வளவு நாள்கள் கழித்து, சென்னை மழை பாதிப்பைப் பார்வையிட்டிருக்கிறாரே எடப்பாடி... எப்படி வந்தது இந்தத் திடீர் அக்கறை?”

“சென்னை மழை குறித்து வெறும் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை, கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்கள் போட்டு உலுக்கியதுதான் அவரது விசிட்டுக்குக் காரணமாம். ‘கடந்த பத்தாண்டுக்காலமாக தமிழ்நாட்டை அ.தி.மு.க எப்படிச் சீரழித்திருக்கிறது என்பதை சென்னைக்கு வந்து பார்த்தால் எடப்பாடிக்குத் தெரியும்’ என அமைச்சர் சேகர் பாபு நேரடியாகவே விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறிய சென்னை அ.தி.மு.க-வினர், ‘கொங்கு மண்டலமே கதின்னு இருந்ததால்தான் கடந்த முறை சென்னையில ஒரு சீட்டைக்கூட ஜெயிக்க முடியலை... இப்பக்கூட வரலைன்னா எம்.பி தேர்தல் கஷ்டமாகிடும்’ என்று எடப்பாடியிடம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களாம். இதையடுத்தே சென்னையில் ரவுண்டு வந்திருக்கிறார் எடப்பாடி... ‘முதல்வர் சீர்காழி போயிருக்கும் நேரத்தில் சென்னைக்குச் சென்றால்தான் ஊடக கவனத்தை டைவர்ட் செய்ய முடியும் என்பதாலேயே அதே நாளை அவர் தேர்ந்தெடுத்தார்’ என்றும் சொல்கிறார்கள்.”

“முதல்வரும் சளைக்காமல் சுற்றிக்கொண்டிருக்கிறாரே?”

மிஸ்டர் கழுகு: அரசு டெண்டருக்கு முயற்சி... பெரிய குடும்பத்து நிறுவனம் இழுத்து மூடப்பட்ட பின்னணி!

“கவனித்தேன்... கால்வலி, முதுகுவலி இருந்தபோதும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வது என ஆக்டிவாக இருக்கிறார் முதல்வர். அதிலும், நவம்பர் 11-ம் தேதி அவரது சுற்றுப்பயணம் உச்சம். அன்று காலையில் கரூர் அரசு நிகழ்ச்சி, மாலையில் திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் கலந்துகொண்டு இரவுதான் சென்னைக்குத் திரும்பினார். அன்று இரவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பழனிக்குமாரின் இல்லத் திருமணவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர், வேளச்சேரியில் மழைவெள்ள பாதிப்புகளையும் பார்வையிட்டார். அடுத்த சில நாள்களில் டெல்டா மாவட்டங்களுக்கும் போயிருக்கிறார். முதல்வரே நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணிகளை ஆய்வுசெய்வது அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.”

“வழக்கமாக தமிழ்நாடு அரசு கேபிளிலிருந்து சேனல்களைத்தான் நீக்குவார்கள். இப்போது கேபிள் டி.வி நிறுவனத் தலைவரையே நீக்கியிருக்கிறார்களே என்ன பிரச்னை?”

“துறை அமைச்சரான மனோ தங்கராஜுடன் மோதல், தனியார் சேனல்களிடம் ‘இனிப்பு’ வாங்குவது, உடன்படாத சேனல்களை இருட்டடிப்பு செய்வது, மேலிடத்தைக் கலந்துகொள்ளாமல் டெண்டர் ஒதுக்குவது என கேபிள் நிறுவனத்தின் தனிக்காட்டு ராஜாவாகச் செயல்பட்டுவந்தாராம் குறிஞ்சி சிவக்குமார். மேலிடம் அறிவுறுத்தியும், அவரது போக்கில் எந்த மாற்றமும் இல்லாததாலேயே இந்த நீக்கம் என்கிறார்கள். அவரை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு ஐடி துறைச் செயலாளர் நீரஜ் மிட்டலை நியமித்திருக்கிறார்கள். இப்போது அதிகாரிவசம் இருந்தாலும், கடைசியில் இந்தப் பதவி கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுக்கப்படும் என்பதால் இப்போதே ஒரு கூட்டம் அறிவாலயத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறதாம்.”

“பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சத்தமில்லாமல் மூடப்பட்டிருக்கிறதே...”

“என் கவனத்துக்கும் வந்தது. பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவந்த அந்த நிறுவனம், மேலிடத்து மாப்பிள்ளைக்குச் சொந்தமானதாம். தமிழ்நாடு அரசின் சிவில் சப்ளைஸ் டெண்டர்களை எடுப்பதற்காகவே அந்த நிறுவனத்தைத் தொடங்கினார்களாம். இந்த விவகாரத்தை டெல்லி மோப்பம் பிடித்து கண்காணித்திருக்கிறது. இந்தக் கண்காணிப்பு விஷயம் முதன்மையானவருக்குச் சொல்லப்பட, உடனடியாக நிறுவனத்தை மூடச் சொல்லிவிட்டாராம் அவர்.”

“இன்னும் என்னவெல்லாம் பிசினஸில் ஈடுபட்டிருக்கிறார்களோ... சவுக்கு சங்கர் கைது நடவடிக்கையை கவனித்தீரா?”

“நீதிமன்றமே விடுவித்தாலும், தமிழக போலீஸ் அவரை வெளியேவிட மறுக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட ஆறு மாதச் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கும் நிலையில், மேலும் நான்கு வழக்குகளில் அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள் போலீஸார். இதில், ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கோடு மோடியின் நிகழ்ச்சி நிரலைச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கும், எடப்பாடியைக் கேலிசெய்து பதிவிட்டதும் அடங்கும். எடப்பாடிமீது இந்த அரசுக்கு என்னவொரு பாசம் பார்த்தீரா... இந்த நான்கு வழக்குகளும் எளிதில் ஜாமீன் கிடைக்கக்கூடியவைதான் என்பதால் விரைவில் சவுக்கு வெளியில் வந்துவிடுவார் என்கிறார்கள்.”

“ ‘கோ பேக் மோடி’ பதிவிட்டதற்காகக் கைது செய்வதாக இருந்தால், தி.மு.க தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டில் பலரையும் கைதுசெய்ய வேண்டியிருக்குமே?”

“நக்கல்தான் உமக்கு... சவுக்குமீது குண்டாஸ் பதிவுசெய்யும் நோக்கத்தில்தான் இப்படித் தொடர்ச்சியாக வழக்குகளைப் பதிவுசெய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார்கள்” என்ற கழுகாருக்கு இஞ்சி டீயும், பூண்டு மிக்ஸரும் கொடுத்தோம். அதைச் சுவைத்தவாறே அடுத்த செய்திகளுக்குத் தாவினார்.

குறிஞ்சி சிவக்குமார்
குறிஞ்சி சிவக்குமார்

“2008-ல் நடந்த சட்டக் கல்லூரி வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கத் தவறியதாக, தமிழகக் காவல்துறைக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் புகார் கொடுத்திருந்தார். அடுத்த சில நாள்களிலேயே சாமியை மோசடிப் புகார் ஒன்றில் கைதுசெய்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ். ஜாமீனில் வெளிவந்த சாமி, அப்போது சி.பி.சி.ஐ.டி எஸ்.பி-யாக இருந்த அருண், டி.எஸ்.பி சாம்பசிவம் உள்ளிட்டோர் தன்னைப் பழிவாங்கவே பொய் வழக்கு போட்டுக் கைதுசெய்ததாக மீண்டும் புகாரளித்தார். அதை விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யவும், 15,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்துரைக்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இப்போது நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்குச் சிக்கல் காத்திருக்கிறது...” என்ற கழுகார்,

“அ.தி.மு.க ஆட்சியில் பவர்ஃபுல் பதவியிலிருந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி, தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் சென்னையிலேயே முக்கியப் பதவிக்கு முயன்றுகொண்டிருந்தார். சமீபத்தில் பெரிய குடும்பத்து சாஸ்தா பிரமுகரைச் சந்தித்திருக்கிறார். ‘சென்னையில் முக்கியப் பொறுப்பு ஏதாவது கொடுங்கள்... நிச்சயம் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்று உருகியிருக்கிறார். ‘விரைவில் காலியாகவிருக்கும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உயரதிகாரி பொறுப்பை வழங்குகிறோம்’ என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறதாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்!