அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட அதிகாரிகள்... கோட்டையில் சூடான ஸ்டாலின்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

தென் மாவட்டங்களிலும் சென்னையிலும் எம்.எல்.ஏ-க்கள் பலர் வெளியிலேயே தலைகாட்டவில்லை என்று வந்திருக்கும் ரிப்போர்ட் முதல்வரை கொதிக்கச் செய்துவிட்டது.

‘வட தமிழகத்தில் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும்’ - செய்தி சேனலில் ஸ்க்ராலிங் ஓடிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த கழுகாரிடம், “சென்னையில் மக்கள் பலரும் வெள்ளம் காரணமாக பாலங்கள் மீது ‘பார்க்’ செய்திருந்த கார்களை இப்போதுதான் இறக்கினார்கள்... மீண்டும் பாலத்துக்கு ஏற்ற வேண்டி யிருக்குமோ!” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம்.

“எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாலம் என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது... சென்னையில் வெள்ளத்துக்கு இன்னொரு காரணம், பாலங்கள் கட்டப்பட்டதில் நடந்த குளறுபடிகள் என்கிறார்கள். சென்னையின் பல இடங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் கட்டப்பட்டுவந்தன. அவற்றில் பல பாலங்கள், வேலை முடியவேண்டிய காலக் கெடுவைத் தாண்டியும் முடியாமல் இருக்கின்றன. ஆர்.கே.நகரில் மூன்றாண்டுகளாகியும் பணிகள் முடிக்கப்படாத ஒரு பாலத்துக்கு சமீபத்தில் கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுதான் இந்தப் பணியை டெண்டர் எடுத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தை ‘ஹிட்’ லிஸ்ட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும், இந்தப் பாலங்கள் கட்டுமானத்திலும் பல கோடி ரூபாய் கமிஷன் கைமாறியிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பாலங்கள் கட்டப்பட்டுவரும் இடங்களில் வடிகால்களைச் சரிவர அமைக்காததாலும் மழைநீர் வெளியேற முடியவில்லையாம். இந்த விவகாரமும் விரைவில் வெடிக்கலாம்!”

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட அதிகாரிகள்... கோட்டையில் சூடான ஸ்டாலின்!

“அதிகாரிகளுக்கு செம டோஸ் என்கிறார்களே, என்னவாம்?”

“முதல்வரின் கோபத்தைத்தானே கேட்கிறீர்கள்... மழைக்கு முன்னதாகவே, ‘சென்னையில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க முடியுமா?’ என்று அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டபோது, ‘ஒரு பிரச்னையும் இல்லை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று உறுதியளித்தார்களாம். ஆனால், மழைநீர் தேங்கி பெரும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, ‘உண்மையான தகவல்களைச் சொல்லியிருந்தால், இன்னும் சுதாரிப்பாக இருந்திருக்கலாம்தானே?’ என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்த வெள்ள பாதிப்புகள் கட்சிக்குச் சேதாரத்தை உண்டுபண்ணிவிடுமோ என்பதும் முதல்வரின் கோபத்துக்குக் காரணம்.”

“ஆனால், முதல்வரின் கோபத்துக்கு அது மட்டும் காரணமல்ல என்றும் சொல்கிறார்களே...”

“நீர் கேட்பது சரிதான்... முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை களத்தில் இறங்கி வேலை செய்துவருகிறார்கள். ஆனால், தென் மாவட்டங்களிலும் சென்னையிலும் எம்.எல்.ஏ-க்கள் பலர் வெளியிலேயே தலைகாட்டவில்லை என்று வந்திருக்கும் ரிப்போர்ட் முதல்வரை கொதிக்கச் செய்துவிட்டது. சென்னையிலுள்ள வட்டச் செயலாளர்கள் சிலர் அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ-க்களிடம், ‘நிவாரண உதவி செய்யணும். நிதி கொடுங்க’ என்று கேட்க, அந்த எம்.எல்.ஏ-க்களோ, ‘நிதியெல்லாம் கிடையாது... யாருக்கு கவுன்சிலர் சீட்டு வேணுமோ, அவங்க செய்யுங்க’ என்று எடுத்தெறிந்து பேசியிருக்கிறார்கள். இவர்கள் இப்படியென்றால் சென்னையில் தி.மு.க முன்னாள் கவுன்சிலர்களும், பெண் கவுன்சிலர்களின் கணவர்களும் ஏரியாவில் ஏகப்பட்ட இடங்களை ஆக்கிரமித்து அதகளம் செய்திருக்கிறார்கள். திருவல்லிக்கேணியில் கவியரசர் பெயரைக்கொண்டவர் இதில் நம்பர் ஒன் என்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் முதல்வரின் காதுக்கு எட்டியுள்ளன. இவையெல்லாம்தான் முதல்வரின் கோபத்துக்குக் காரணம். விரைவில் அவர் சாட்டையைச் சுழற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்” என்ற கழுகாருக்கு பாக்ஸில் வந்த சூடான ஸ்பெஷல் சமோசாக்களை பங்கிட்டுக் கொடுத்தோம்...

சமோசாவைச் சுவைத்தவர், “நானும் சூடான பங்கீட்டுத் தகவல் ஒன்றைச் சொல்கிறேன். ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டது. தி.மு.க-விடம் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகிவிட்டன.

காங்கிரஸ் தரப்பில் இரண்டு மேயர் பதவிகளையும், சுமார் 20 நகராட்சித் தலைவர் பதவிகளையும் கேட்டுப் பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஒருவேளை தி.மு.க ஒப்புக்கொள்ளவில்லையென்றால் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று இப்போதே சத்தியமூர்த்தி பவனில் கலகக்குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன!”

“ம்க்கும்... காங்கிரஸில் காமெடிக்குப் பஞ்சமில்லை என்று சொல்லும்... தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது டெல்லி வரை புகார் சென்றிருக்கிறதாமே?”

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட அதிகாரிகள்... கோட்டையில் சூடான ஸ்டாலின்!

“அது அடுத்த காமெடி. ‘எங்க பேச்சையே கேக்குறதில்லை... வாய்க்கு வந்ததைப் பேசிட்டுப் போயிடறாரு. எங்களால பதில் சொல்ல முடியலை. போட் ஷூட்டிங் நடத்துனதுல ஒரே அசிங்கமாப் போச்சுங்க. நெட்டிசன்கள் கிழிக்குறாங்க...’ என்று டெல்லி மேலிடத்தில் கண்ணைக் கசக்கியிருக்கிறார்கள் சீனியர்கள் சிலர். இது பற்றி டெல்லி மேலிடம் அண்ணாமலைத் தரப்பில் விளக்கம் கேட்கவும், ‘அ.தி.மு.க இடத்தை நாம பிடிக்க வேணாமா... இதே ரூட்டுல போனா தமிழகத்துல அடுத்து நம்மோட ஆட்சிதான்’ என்று விளக்கம் கொடுக்க, தலைமையும் ‘ம்ம்ம்... சூப்பர்’ என்று தலையாட்டிவிட்டதாம்!”

“எனக்குத் தலை லேசாக வலிப்பது போலிருக்கிறது!” என்ற கழுகாரிடம் “ஆமாம், வலிக்காமல் என்ன செய்யும்?” என்றபடி சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். டீயைச் சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

“தென் மண்டல முதல்வர்கள் மாநாடு நவம்பர் 14-ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்ற இதில் தமிழகம் சார்பில் ஸ்டாலினுக்கு பதில் பொன்முடி கலந்துகொண்டார். முதலில் ஸ்டாலின் கலந்துகொள்வதாகத்தான் இருந்ததாம். ஆனால், ‘ஏற்கெனவே பா.ஜ.க-வுக்குப் பணிந்துபோவதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் அழைத்ததும் கலந்துகொண்டால் சர்ச்சை ஏற்படும்’ என்று சிலர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே பொன்முடியை அனுப்பியிருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட அதிகாரிகள்... கோட்டையில் சூடான ஸ்டாலின்!

“விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாகத் தகவல்கள் வருகின்றனவே?”

“ஆமாம். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை வென்றதால், அதே உற்சாகத்துடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கும் தயாராகிவருகிறது விஜய் தரப்பு. இதற்காக, தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் நவம்பர் 14-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். பெரிய கட்சிகளைப்போல, கட்சிரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றியைப் பெற்றால், அதன் பிறகு விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக அறிவிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறதாம்!”

“அஸ்பயர் ஃபயர் பரவுகிறதுபோல!”

“உமக்கும் அந்தத் தகவல் வந்துவிட்டதா! அ.தி.மு.க-விலிருந்து விலகிவிட்டதாக அறிவித்த அந்தக் கட்சியின் சென்னை மண்டல ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், தமிழகம் முழுக்க உள்ள அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தி.மு.க-வில் இணைத்துவிட, பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். அதோடு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதலீட்டுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டபோது நடந்த கமிஷன் பேரங்களைப் பற்றியும் அப்போது உடனிருந்தவர் என்ற முறையில் சில தகவல்களை தி.மு.க தலைமையிடம் கொடுத்திருக்கிறார்... எடப்பாடிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள்தான்” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* தென்மாவட்டத்தை மையமாகவைத்து அரசியல் கட்சி நடத்திவரும் தலைவர், “எனக்கோ, என் மகனுக்கோ ராஜ்ய சபா சீட் கொடுத்தால், என் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்துவிடுகிறேன்” என்று டீல் பேசியிருக்கிறார். அதற்கு டெல்லியிலிருந்து “சிறிது காலம் பொறுமையாக இருக்கவும். அதுவரை தி.மு.க அரசுக்கு எதிராக நாங்கள் அனுப்பும் தகவல்களை உங்கள் கட்சி பெயரில் அறிக்கையாக வெளியிடுங்கள்” என்று சொல்லப்பட்டதாம்.

* சிறையிலிருந்து வந்த பிறகு யாரிடமும் எந்தக் கருத்தையும் பகிர்ந்துகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் சுதாகரன். “யாரையும் சந்திக்கக் கூடாது; முக்கியமாகப் பேசக் கூடாது” என்று ஹபிபுல்லா சாலையிலிருந்து வந்த உத்தரவே அமைதிக்குக் காரணமாம்.

திருப்புகழ் நியமனம் முதல்வரின் சாய்ஸ்!

சென்னையில் மழை வெள்ளப் பேரிடரைப் போக்க, மேலாண்மைக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் அண்ணன் திருப்புகழ் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையானது. தலைமைச் செயலாளர்தான் இந்தப் பரிந்துரையைச் செய்தார் என்றும் தகவல் கிளம்பியது. ஆனால், அது உண்மையில்லை. இந்த அறிவிப்புக்கான முன்மொழிதலில்கூட தலைமைச் செயலாளர் தலையிடவில்லையாம். திருப்புகழ், குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தவிர, பேரிடர் மேலாண்மையில் பட்டம் பெற்றிருப்பதோடு குஜராத் பூகம்பம், நேபாளப் பேரிடர் எனப் பல பேரிடர்களைக் கையாண்ட அனுபவம்மிக்கவர் என்பதாலேயே முதல்வரே அவரைத் தேர்வு செய்தாராம். ஊதியம் இல்லாத பணி இது!