அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: டி.டி.வி-யின் சமாதானக்கொடி... கிழித்து எறிந்த எடப்பாடி!

தினகரன், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன், எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடந்த மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியிருக்கிறார் கள்.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால், 32 ஆண்டு சிறை வாசத்திலிருந்து விடுதலையான அவர்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார் உரையாடலைத் தொடர்ந்தார்.

“அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், கால்பந்து வீராங்கனை பிரியா கால் இழந்தது குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம் அல்லவா... அந்த மாணவி இறந்தேவிட்டார். இறந்த பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும், கெளதமபுரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஒரு வீடும், அவரின் அண்ணனுக்கு அரசு வேலையும் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. முதல்வரே நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். பிரியாவின் குடும்பத்தினரோ, ‘எங்க பிள்ளைக்கு நடந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்றால், அதற்குக் காரணமான மருத்துவர்கள் இருவரையும் கைதுசெய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.”

“நாம் கையாள்வது மகத்தான மனித உயிர் என்கிற எண்ணம் துளிக்கூட இல்லாமல் போய்விட்டதே இந்த மருத்துவர்களுக்கு?!”

“அரசு நிர்வாகத்தின் அலட்சியத்துக்கு இன்னோர் உதாரணம் சொல்கிறேன் கேளும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48.84 லட்சம் பேரில், 13.47 லட்சம் பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி பெறத் தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டு, தள்ளுபடியும் செய்யப்பட்டது அல்லவா... அப்படிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களில் 2,500-க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் அடங்கியிருக்கிறார்கள் என்ற விஷயத்தை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்களாம். செய்தி வெளியே கசிந்தால், எதிர்க்கட்சிகள் சலங்கை கட்டி ஆடிவிடும் என்பதால், கடன் தள்ளுபடியான அரசு ஊழியர்களைத் தொடர்புகொண்டு, ‘எப்படியாவது பணத்தைத் திரும்பச் செலுத்திவிடுங்கள்’ எனக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்களாம் கூட்டுறவு ஊழியர்கள்.”

“ஓராண்டுக்காலமாக ஆய்வுசெய்து பட்டியலை இறுதிசெய்தோம் என்றார்களே... அந்த ஆய்வின் லட்சணம் இதுதானா... அது இருக்கட்டும். அழுகையை நிறுத்தி புன்னகைத்த குழந்தையொன்றை மறுபடியும் அழவைத்துவிட்டார்கள்போல...”

மிஸ்டர் கழுகு: டி.டி.வி-யின் சமாதானக்கொடி... கிழித்து எறிந்த எடப்பாடி!

“யாரைச் சொல்கிறீர் என்று புரிகிறது. பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்துவிடலாம் என்று மகிழ்ச்சியாக இருந்தார் டி.டி.வி.தினகரன். அந்த நேரம் பார்த்து, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்’ என எடப்பாடி சொல்ல, கூட்டணிக்குத் தலைமை தாங்கப்போகிறவர் ஆச்சே என்று அவருக்கு வெள்ளைக்கொடி காட்டினார் தினகரன். ‘பொது எதிரியான தி.மு.க-வை வீழ்த்த யாருடனும் கரம் கோக்கத் தயார், மெகா கூட்டணி அமைப்பவர்களாக இருந்தாலும் சரிதான்’ என்று பொதுவெளியிலேயே வெட்கத்தை விட்டுச் சொல்லிவிட்டார் தினகரன். ஆனால், எடப்பாடியோ, ‘தினகரனுடன் கூட்டணிக்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை’ என்று சொல்லிவிட்டார். தனது சமாதானக்கொடியை இப்படிக் கிழித்தெறிவார் எடப்பாடி என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை தினகரன். கோபத்தில், ‘அ.தி.மு.க-வுடன் 0.25 சதவிகிதம்கூட கூட்டணிவைக்க வாய்ப்பே இல்லை’ எனச் சொல்லிவிட்டார் என்றாலும், ‘வடை போச்சே’ மனநிலையில் இருக்கிறாராம்.”

“அப்புறம்..?”

“அப்புறம் என்ன, இந்த யோசனையை தனக்குச் சொன்ன கட்சி சீனியர்களை வறுத்தெடுத்துவிட்டாராம் தினகரன்.”

“தன் மெகா கூட்டணியில், ஓ.பி.எஸ் வேண்டாம்... சசிகலா வேண்டாம்... தினகரனும் வேண்டாம் என்கிறாரா எடப்பாடி?”

bjp
bjp

“அப்படிச் சொல்ல முடியாது... இப்பவே தலையாட்டினால் முதலுக்கே மோசமாகிவிடும். அவர்களையெல்லாம் உதிரிகளாக டீல் பண்ணினால் போதும் என்று நினைக்கிறாராம். அதேநேரத்தில் முக்குலத்தோர் ஓட்டுகளை இழந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணத்தை யொட்டி, மதுரை குண்ணத்தூரில் 51 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைக்கும் முடிவுகூட அதில் ஒன்றுதான் என்கிறார்கள்.”

“அரசுப் பணத்தில் தன் தோட்டத்துக்குச் சாலை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறாராமே ஓர் அமைச்சர்?”

“எனக்கும் தகவல் வந்தது. அந்த ‘பசுமை’ அமைச்சருக்கு மலைச்சரிவான இடத்தில் 45 ஏக்கர் தோட்டம் ஒன்று இருக்கிறது. மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் அந்தத் தோட்டத்துக்கு போய்வரவும், விளைபொருள்களை எடுத்து வரவும் சிரமமாக இருந்ததால், விற்றுவிடலாம் என யோசித்தாராம். சாலை வசதி இல்லாததால் குறைவான விலைக்கே கேட்டிருக்கிறார்கள். டக்கென அமைச்சர் மூளையில் மின்னல் வெட்டியிருக்கிறது. அதிகாரிகளிடம் பேசி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்ட நிதியிலிருந்து ஒரு பெரிய தொகையைத் தனது தோட்டத்துக்குச் சாலை அமைப்பதற்காக ஒதுக்க வைத்துவிட்டாராம். அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத அதிகாரிகளும் மண்டையை ஆட்டிவிட்டு, வீடே இல்லாத அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்கான ஆய்வில் இறங்கியிருக்கிறார்களாம்” என்ற கழுகார் முடியும் தறுவாயில் இருந்த ஜூ.வி இதழைப் பார்வையிட்டார். காங்கிரஸ் செய்தியைப் பார்த்தவர், “சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் குறித்து என்னிடம் ஒரு அப்டேட் இருக்கிறது...” என உரையாடலைத் தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: டி.டி.வி-யின் சமாதானக்கொடி... கிழித்து எறிந்த எடப்பாடி!

“காங்கிரஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடந்த மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியிருக்கிறார் கள். அதோடு அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடமும் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், அதில் கையெழுத்து போடுவதற்கு மாவட்டத் தலைவர்கள் சிலர் மறுத்துவிட்டார்களாம். ‘கையெழுத்திடாதவர்கள்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என கே.எஸ்.அழகிரி தரப்பு மிரட்டியதையடுத்தே அவர்கள் கையெழுத்திட்டதாகச் சொல்கிறார்கள். பூனை மாதிரி இருந்துகொண்டு புலியாகப் பாய்கிறாரே அழகிரி என்று புலம்புகிறது கதர் வட்டாரம்.”

“தலைமறைவான நிதி மோசடி நிறுவன அதிபர்களைப் பற்றிய தகவல் ஏதுமில்லையே...”

“காரணம் இருக்கிறது. கோடி கோடியாய் மோசடி செய்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் டீல் பேசிவிடுவதாகச் சொல்கிறார்கள். வெறுமனே ஏஜென்ட்டுகளை மட்டும் கைதுசெய்து கணக்கு காட்டுகிறார்கள். அதனால் மோசடி மன்னர்கள், வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்.ஏற்கெனவே மோசடியில் சிக்கிய ஒரு நிறுவனத்திடம் ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கியதாகச் சில காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இப்போதும் சில அதிகாரிகள் மோசடி நிறுவனங்களிடமிருந்து மாதம்தோறும் லட்டுகளை வாங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அதில் நிலவின் பெயரைக்கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரியே முதலிடத்தில் இருப்பதாகச் சொல்கிறது காக்கி வட்டாரம்” என்ற கழுகார்,

“சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பா.ஜ.க-வின் மாநில ஐடி பிரிவுத் தலைவர் நிர்மல்குமார் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். ‘ஆளுங்கட்சிக்கு எதிராக எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும் உடனடியாக வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் பா.ஜ.க-வினர்மீது 32 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். சில ஐ.பி.எஸ் அதிகாரிகள், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்போலச் செயல்படுகிறார்கள்’ என்பதுதான் அந்தப் புகாரின் சாரம். அந்தப் பட்டியலில் தன்னுடைய பெயர் முதலிடத்தில் இருப்பதை அறிந்து கலக்கத்தில் இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரி” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ‘எண்’ பெயர்கொண்ட அதிகாரி, சௌகார்பேட்டை பில்டர் ஒருவர் மூலம் தன் அடிப்பொடிகளுக்கு தீபாவளிப் பரிசாகத் தங்க நாணயங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஆனால், தங்க நாணயம் வாங்கியதற்கான பில் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் அதிகாரி. விவகாரம் உயரதிகாரிகள் வரை பஞ்சாயத்துக்குச் சென்ற பிறகுதான், பில் செட்டில் ஆகியிருக்கிறது.

சி.எம்.டி.ஏ-வில் பணிபுரியும் ‘மல்லிகை’ பெயர்கொண்ட பெண் அதிகாரி ஒருவர், அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த, கப்பமாக வைர நகை கேட்கிறாராம். அதுவும், ‘ஆழ்வார்ப்பேட்டையில இருக்குற கடையிலதான் மேடம் டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி நகைங்க இருக்கு... அங்கேயே வாங்கிக் கொடுங்க. மேடம் சந்தோஷப்படுவாங்க...’ என ரூட் போட்டுக் கொடுக்கிறார்களாம் சில ஏஜென்ட்டுகள். இப்படி மாதத்துக்கு அரை டஜன் வைர நகைகள் பெண் அதிகாரியின் வீட்டுக்கு பார்சல் ஆகின்றனவாம்!