Published:Updated:

மிஸ்டர் கழுகு: நீதிமன்றம் மூலம் நெருக்கடி... உஷாராகும் ஆளுங்கட்சி!

சமீபத்தில் மழை நிவாரணம் கொடுக்க எடப்பாடி டெல்டா பகுதிகளுக்குச் சென்றபோது பல இடங்களில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

பிரீமியம் ஸ்டோரி

“கொட்டும் மழையில் ரெயின் கோட், குடை சகிதமாக வந்த கழுகார், “நேற்று வண்டி சாவியை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை... பார்த்தீர்களா?” என்று கேட்டார். “வேலை பிஸியில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டீர்கள்” என்று அவரிடம் சாவியை நீட்டியபடியே, “திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நீர்வளத்துறையில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறதே!” என்று கேட்டோம்... நம்மைச் செல்லமாக முறைத்தவர், “ம்ம்... எனக்கும் அந்தத் தகவல் வந்தது” என்றபடியே செய்திகளை விவரிக்கத் தொடங்கினார்...

“கடந்த ஆட்சியில் விழுப்புரத்தில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை இடிந்து விழுந்தது அல்லவா... இதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகளை ஆய்வுசெய்ய நீர்வளத்துறையின் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளார்கள். அந்த அதிகாரிதான் தளவானூர் தடுப்பணை கட்டப்பட்டபோதும் முதன்மைப் பொறியாளராக இருந்தாராம். அந்தத் தடுப்பணையைக் கட்டும்போதே குளறுபடிகளைக் கண்டுகொள்ளாதவர், எப்படி மற்ற தடுப்பணைகளை ஒழுங்காக ஆய்வுசெய்து ரிப்போர்ட் அளிக்கப்போகிறார் என்று சர்ச்சை வெடித்துள்ளது.”

“அது சரி... தரமற்ற முறையில் கட்டப்பட்ட சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரமும் அமுங்கிவிட்டதே?”

மிஸ்டர் கழுகு: நீதிமன்றம் மூலம் நெருக்கடி... உஷாராகும் ஆளுங்கட்சி!

“ஆமாம். அந்தக் குடியிருப்பு தரமற்ற வகையில் கட்டப்பட்டது என்று ஐஐடி நிபுணர்குழுவும் அறிக்கை அளித்துவிட்டது. ஆனால், அந்தக் கட்டுமான நிறுவனத்தின்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இனிஷியல் அமைச்சர் ஒருவரை அந்த நிறுவனம் சரிக்கட்டியதே இதற்குக் காரணம் என்கிறார்கள். அதேசமயம், இன்னொரு கட்டுமான நிறுவனமான பாஷ்யம் நிறுவனத்தை விடுவதாக இல்லையாம் ஆளும் தரப்பு. சென்னை கோயம்பேட்டில் அந்த நிறுவனம் முறைகேடாக அரசு இடத்தை வாங்கியதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார். நவம்பர் 17-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் நேரில் ஆஜரானவர், அந்தப் புகார் தொடர்பாக சில விளக்கங்களையும் கொடுத்துள்ளார். இந்தக் கெடுபிடிக்குக் காரணம், ஆளும் தரப்புக்கு நெருக்கமான அண்ணா நகர் கட்டுமான நிறுவனம்தானாம். ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் விளக்கம் அளித்த அதே தேதியில் சென்னையில் வேறு இரண்டு கட்டுமான நிறுவனங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளார்கள். கூட்டிக்கழித்துப் பார்த்தால், எல்லாம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவைதான்” என்று கண்சிமிட்டிய கழுகாருக்கு பாதாம் அல்வாவும் ஓட்டு பக்கோடாவையும் கொடுத்துவிட்டு, “சசிகலா தொடர்பாகத் தகவல் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டோம்...

“வருத்தத்தில்தான் இருக்கிறாராம் சசிகலா. கடந்த மாதம் அ.தி.மு.க நிறுவன நாள் நிகழ்ச்சி தொடங்கி சமீபத்தில் மழை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வரை சசிகலா கலந்துகொண்டபோதும், அவர் எதிர்பார்த்த கூட்டம் கூடவில்லையாம். இதற்கிடையே சசிகலா சார்பில் எடப்பாடியிடம் பேசிய டெல்லிக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர், ‘சின்னம்மாவுக்கு அவைத்தலைவர் பதவியைக் கொடுக்கலாமே...’ என்று கேட்டாராம். டென்ஷனான எடப்பாடி அவரிடம், ‘இனி இதுபோல கேட்டு போன் செய்ய வேண்டாம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் என்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: நீதிமன்றம் மூலம் நெருக்கடி... உஷாராகும் ஆளுங்கட்சி!

“எடப்பாடி கறார் காட்டுவதெல்லாம் இருக்கட்டும்... டெல்டா பகுதிக்கு அவர் சென்றபோதும் பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லையாமே?”

“ஆமாம்... சமீபத்தில் மழை நிவாரணம் கொடுக்க எடப்பாடி டெல்டா பகுதிகளுக்குச் சென்றபோது பல இடங்களில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது அவரிடம் பம்மிய நெருக்கமான நிர்வாகிகளே எட்டிப்பார்க்கவில்லை. நிகழ்ச்சியின் கடைசி பாயின்ட்டாக தஞ்சாவூர் மாவட்டம், சொக்கனாவூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் எடப்பாடி. இந்த நிகழ்ச்சிக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீரும் சென்றிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்தவுடன் பன்னீரைக் கையோடு அழைத்துச் சென்றுவிட்டார் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். அம்போவென தனித்துவிடப்பட்ட எடப்பாடி, ‘ரொம்ப துளிர்விட்டுப் போச்சுங்க... எல்லாத்துக்கும் காரணம் யாருன்னு தெரியும்’ என்று தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.”

“அடப்பாவமே!”

“அ.தி.மு.க தகவல் இன்னும் இருக்கிறது கேளும்... ஒருபக்கம் இந்தப் பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த பத்தாண்டுகளாக அமைச்சர்களாக இருந்த பலரும் தேர்தலில் ஆர்வம்காட்டாமல் கழன்றுவருகிறார்கள். ‘நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே இவர்கள் செலவு செய்யாததால்தான் படுதோல்வியைத் தழுவினோம்’ என்று கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் எடப்பாடிக்கு புகார் அனுப்பிய நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைகிறதாம் எடப்பாடி தரப்பு. இப்போதைக்கு கொங்கு மண்டலத்தில் ‘மணி’யான இருவர் மட்டுமே தேர்தல் செலவுகள் தொடர்பாக எடப்பாடிக்குத் தெம்பூட்டியிருக்கிறார்களாம்!”

“ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் விசேஷம் எதுவும் உண்டா?”

“வழக்கமான இடமாற்றங்கள் என்று கூறப்பட்டாலும், ஓர் அதிகாரியின் இடமாற்றம் மட்டும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சென்னை மத்தியக் குற்றப்பிரிவிலிருந்து ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அவர், தற்போது சி.பி.ஐ-க்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்குக் காரணமே, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அதிகாரி ஒருவருக்கு இவர் சில தகவல்களைக் கசியவிட்டதுதானாம். இதனால் கடுப்பிலிருந்த ‘கருத்தான’வர் சி.பி.ஐ-க்கு மத்திய அரசு கேட்டவுடன், உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அதேசமயம், ‘லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரியும் தமிழ்க் கடவுளின் பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவர், மாஜி அமைச்சர்களுக்குத் தகவல் சொல்கிறார் என்று முதன்மையானவர் வரை புகார் சென்றும் அவர் ஏன் மாற்றப்படவில்லை?’ என்று காதைக் கடிக்கிறார்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர்!”

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதுபோல?”

“ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கெனவே சொத்துக்குவிப்பு, ஆவின் ஊழல் வழக்குகள் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றன. இந்த நிலையில்தான், ‘என் உறவினருக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்’ என்று சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி என்பவரும், ‘மூன்று கோடி வரை ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டேன்’ என்று புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகார்களின் அடிப்படையில் நவம்பர் 17-ம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி உட்பட நான்கு பேர்மீது இரண்டு பண மோசடி வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட முகாந்திரம் இருப்பதால், பயங்கர டென்ஷனில் இருக்கிறார் அவர்!”

மிஸ்டர் கழுகு: நீதிமன்றம் மூலம் நெருக்கடி... உஷாராகும் ஆளுங்கட்சி!

“அப்பாவு அட்டகாசமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறாரே!”

“ம்ம்ம்... மனிதர் உற்சாகமாகத்தான் இருக்கிறார். சிம்லாவில் நடந்த மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாட்டில் அவரது பேச்சில் காரம் சற்றுத் தூக்கலாகவே இருந்தது... ‘சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது அது கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டால், அதை சிலநேரம் கவர்னர் கிடப்பில் போட்டுவிடுகிறார். சட்டமன்ற அதிகாரத்தையே இது துருப்பிடிக்கச் செய்துவிடுகிறது. எனவே, கவர்னருக்கு மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வுகாண வேண்டும் என்று கால அவகாசம் வரையறுக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார் அப்பாவு. தமிழக சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி, பல மாதங்களாகியும் எந்த பதிலும் இல்லை. இதை மனதில்வைத்தே அப்பாவு இப்படிக் காரமாக பேசினாராம். அவர் இப்படிப் பேசியது பா.ஜ.க தரப்பை கடுப்பாக்கியுள்ளது...” என்ற கழுகார்....

சஞ்ஜிப் பானர்ஜி
சஞ்ஜிப் பானர்ஜி

“நவம்பர் 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து விடைபெற்றுக் கிளம்பியிருக்கிறார் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி. அவர் சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு உருக்கமாக எழுதிய கடிதத்தில், ‘ஆதிக்க கலாசாரத்தைத் தடுக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பா.ஜ.க தரப்பில் சில வழக்குகளைத் தள்ளுபடி செய்ததாலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று கடும் சர்ச்சை எழுந்த நிலையில், தி.மு.க தரப்பை இது மிகவும் யோசிக்க வைத்துவிட்டதாம். இதையடுத்து, ‘நீதிமன்றம் மூலம் எதிர்காலத்தில் நமக்கு நெருக்கடி வரலாம்; அதை எதிர்கொள்ளும் வகையில் கவனமாகச் செயல்படுங்கள்’ என்று தி.மு.க மேலிடத்திலிருந்து வழக்கறிஞர் அணிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று சொல்லிவிட்டு சிறகுகளை விரித்தார்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 12 துணை கமிஷனர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பணிக்கு அமர்த்தப்பட்டு பவர்ஃபுல்லாக வலம்வந்தவர்களாம். அவர்களை மாற்ற வேண்டும் என்று உயரதிகாரி தரப்பில் மேலிடத்தில் நோட் போட்டும் பலன் இல்லையாம். ‘என் பரிந்துரைக்கு மரியாதையே இல்லையா?’ என்று புலம்புகிறார் உயரதிகாரி!

* வணிகவரித்துறையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் சமீபத்தில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளைக் கண்டறிந்த அதிகாரிகளே என்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள். இந்த விவகாரம் முதல்வர் அலுவலகம் வரை செல்லவே... இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு