Published:Updated:

மிஸ்டர் கழுகு: “பா.ம.க-விடம் பேச்சுவார்த்தை வேண்டாம்!” - முட்டுக்கட்டை போட்ட ஸ்டாலின்...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

கொரோனா அச்சுறுத்தலால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிகமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து, வாரிசை முழுவீச்சில் களமிறக்கியிருக்கிறது கிச்சன் கேபினெட்.

வெளியே லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. ``அவர் ஓய்வுபெறுவதற்குள் எப்படியாவது அவர்மீது நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தமிழக ஆளும்தரப்பு” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். தேன் கலந்த சூடான இஞ்சி டீயை கழுகாருக்கு நீட்டியபடி, “துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தைக் குறிப்பிடுகிறீரா?” என்றோம். ஆமோதித்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் கமிஷனிடம், 2021 பிப்ரவரிக்குள் அறிக்கை கேட்டிருக்கிறது தமிழக அரசு. அந்த அறிக்கையை முறைப்படி ஆளுநருக்கு அனுப்புவார்களாம். அது குறித்து ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவில்லை யென்றால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தமிழக அரசு ஆலோசித்துவருகிறது. 2021, ஏப்ரல் மூன்றாவது வாரம் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்குள் அவர்மீது நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறதாம் தமிழக அரசு!”

“ஓஹோ... தேர்தல் பிரசாரத்தை தி.மு.க தொடங்கிவிட்டதே!”

“ஆமாம். கொரோனா அச்சுறுத்தலால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிகமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து, வாரிசை முழுவீச்சில் களமிறக்கியிருக்கிறது கிச்சன் கேபினெட். ஆனால், கட்சியின் சீனியர் நிர்வாகிகளோ, ‘கட்சியில் தனயனின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அதைத்தான் கொரோனா அச்சுறுத்தல் என்று நாசூக்காகச் சொல்கிறார்கள்’ என உச்சுக் கொட்டுகிறார்கள். திருக்குவளையி லிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கும் உதயநிதி, அனைத்துத் தொகுதிகளுக்கும் ரவுண்ட் அடிக்கப் போகிறாராம். ஐபேக் நிறுவனத்தின் மூலம் உதயநிதியின் சுற்றுப்பயணத்துக்கான பிரசார யுக்திகளைத் தயார் செய்துவருகிறார்கள். அதேசமயம், அவர்களை நம்பாமல் தனக்கென்று தனி டீமை அமைத்திருக்கிறார் உதயநிதி.”

ராமதாஸ் - ஸ்டாலின்
ராமதாஸ் - ஸ்டாலின்

“ஐபேக் மீது அவ்வளவு அவநம்பிக்கையா?”

“ஐபேக் மீது அல்ல... தன் மைத்துனர் சபரீசனை அவர் நம்பவில்லை. ஐபேக் நிறுவனத்தை தி.மு.க-வுக்கு ஒப்பந்தம் செய்தது சபரீசன்தான். சமீபகாலமாக, உதயநிதிக்கும் சபரீசனுக்கும் இடையே உரசல்கள் இருப்பதால், தனது வெற்றிப் பாதையில் உள்ளடி வேலைகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த உஷார் நடவடிக்கை என்கிறார்கள்.”

“ஆலங்குளம் தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி விவகாரம் பற்றி எரிகிறதே..?”

“பூங்கோதை எப்போதுமே தனி அணியாகச் செயல்படக்கூடியவர். தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான சிவபத்மநாதனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. இதற்கிடையே, பூங்கோதைக்கும் அவரின் தம்பி எழில்வாணனுக்கும் இடையே சில வருடங்களாகப் பேச்சுவார்த்தை கிடையாது. குடும்பத்துக்குள் சொத்துப் பிரச்னையும் இருந்திருக்கிறது. நவம்பர் 18-ம் தேதி ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குச் சென்ற பூங்கோதையை, பார்வையாளர் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். ஆனால், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத அவரின் தம்பிக்கு மேடையில் இருக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.”

“ம்ம்...”

“ஆத்திரமடைந்த பூங்கோதை, அங்கேயே சீறியிருக்கிறார். அப்போது சிவபத்மநாதனின் ஆதரவாளர்களுக்கும் பூங்கோதைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய நிர்வாகிகள் சிலர் அவரைக் கூட்டத்தைவிட்டு வெளியே செல்லுமாறு கோஷமிட்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற பூங்கோதை, அங்கேயே தரையில் அமர்ந்து, அனைவரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவர், அழுதுகொண்டே அவமானத்துடன் வெளியேறிவிட்டார். தொடர்ந்து, அதே ஆவேசத்துடன் கட்சித் தலைமையிடம் போனில் புகார் செய்தபோது, அவர்மீது வந்த புகார்களைச் சுட்டிக்காட்டி சீறியிருக்கிறது தலைமை. இதில் மேலும் மனமுடைந்தவர், அன்றிரவு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அளவைவிட அதிகமாகத் தூக்க மாத்திரையை விழுங்கிவிட்டாராம். மயக்கத்தில் இருந்தவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.”

“உஸ்ஸ்ஸ்ஸ்...”

“ஒரே தி.மு.க சங்கதிகளா என்று நீர் அலுத்துக்கொள்வது புரிகிறது... என்ன செய்வது, சில சமயங்களில் சம்பவங்கள் அப்படி அமைந்துவிடுகின்றன. இதுவும் தி.மு.க தரப்பு தகவல்தான். தி.மு.க கூட்டணியில் 20 தொகுதிகள் வரை பா.ம.க-வுக்குக் கொடுக்கலாம் என்று ஸ்டாலினிடம் சீனியர்கள் சிலர் அட்வைஸ் செய்ததை நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். கடந்த வாரம்கூட மாநில நிர்வாகி ஒருவர் இது குறித்து ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். அவரிடம் ஸ்டாலின், ‘அவங்களை நம்ம கூட்டணியில சேர்த்துக்கிட்டா 20 தொகுதிகள்லயும் ஜெயிப்பாங்க. இதுவே அ.தி.மு.க கூட்டணியில பா.ம.க போட்டியிட்டால், பத்து தொகுதிகள்லகூட ஜெயிக்க முடியாது. நமக்கு பத்து தொகுதி லாபம். நம்ம கூட்டணியில பா.ம.க போட்டியிட்டு ஜெயிச்சு, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாடி அவங்க அ.தி.மு.க கூட கூட்டணிக்குப் போக மாட்டாங்கனு என்ன நிச்சயம்? அதனால, பா.ம.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இப்போதைக்கு நிறுத்திக்கலாம்’ என்று சொல்லி விட்டாராம்” என்ற கழுகாரிடம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சுவாமி தரிசனம் செய்த போட்டோவைக் காண்பித்தோம்.

மிஸ்டர் கழுகு: “பா.ம.க-விடம் பேச்சுவார்த்தை வேண்டாம்!” - முட்டுக்கட்டை போட்ட ஸ்டாலின்...

புன்முறுவல் பூத்த கழுகார், “எல்லாம் பதவி ஆசை படுத்தும்பாடு. `திருச்செந்தூர் முருகனை தரிசித்தால் ஆட்சி, அதிகாரம் கைகூடும்’ என்பார்கள்.

ஆர்.எஸ்.பாரதிக்கும் ஆசைகள் இருக்குமல்லவா? போதாக்குறைக்கு பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரை தி.மு.க-வின் நித்திரையைக் குலைத்திருக்கிறது. எதையாவது செய்து, ‘நாங்கள் இந்து விரோதி அல்ல’ என்று தாஜா செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். இதெல்லாம் அதன் வெளிப்பாடுதான்.”

“வரும் தேர்தலில் பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்போகிறார்களாமே?”

“ஆமாம். கூட்டணியில் கொளத்தூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், ஸ்டாலினை எதிர்த்து அவரைக் களமிறக்க முடிவெடுத்திருக்கிறதாம் கமலாலயம். இல்லையென்றால், அண்ணாமலையை பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் அவருக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகள் சிலர், ‘அண்ணாமலைஜியை சின்ன ஊர்லல்லாம் பேச வைக்கலாம். அவருக்கு பயங்கரமா கூட்டம் கூடுது...’ என்று அண்ணனுக்கு `ஜே’ போட்டிருக்கிறார்கள்!”

“உமது காமெடிக்கு சிரிப்பே வரவில்லை... சரி, அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

மிஸ்டர் கழுகு: “பா.ம.க-விடம் பேச்சுவார்த்தை வேண்டாம்!” - முட்டுக்கட்டை போட்ட ஸ்டாலின்...

“வேலூர் அண்ணாசாலையில் பழைய தியேட்டரை வளைத்துப்போட்டிருக்கிறார் ஓர் அமைச்சர். முதலில் இந்தச் சொத்தை மூன்று பேர் வாங்கியிருக்கிறார்கள். அவர்களை அழைத்த அந்த அமைச்சர், ‘எனக்கு ஜோலார்பேட்டை, ஏலகிரி, ஓசூர், பெங்களூருவில் மட்டுமே சொத்துகள் இருக்கு. வேலூர் சிட்டியில எந்தச் சொத்தும் கிடையாது, இந்தச் சொத்தை எனக்குக் கொடுத்துடுங்க’ என்றாராம். தியேட்டர் தரப்போ, அமைச்சர் மிரட்டுகிறாரா... கெஞ்சுகிறாரா என்று புரியாமல் எதற்கு வம்பென்று 60 கோடி ரூபாய்க்குப் பேரத்தை முடித்திருக்கிறது. முதல் தவணையாக 20 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“தன்னுடைய அண்ணா திராவிடர் கழகத்தை பா.ஜ.க-வோடு இணைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டது திவாகரன் தரப்பு. சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில், நவம்பர் 13-ம் தேதி இரவு பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவரும், திவாகரன் தரப்பிலிருந்து ஒருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல். `சசிகலாவைப் பழிவாங்கிய பா.ஜ.க-வுடன் இணைவது எந்த வகையில் நியாயம்... இது துரோகம் இல்லையா?’ என்று கொதிக்கின்றன மன்னார்குடி உறவுகள்” என்றபடி ஜூட் விட்டார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* கர்நாடகா நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை சசிகலா தரப்பு செலுத்துவிட்டது. இதற்கான நகலும் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அபராதத் தொகை செலுத்தப்பட்டவிதத்தில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதை மோப்பம் பிடித்திருக்கும் எதிர்த்தரப்பு, அதைவைத்து சசிகலாவுக்குக் குடைச்சல் கொடுக்கத் தயாராகிறதாம்.

* தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத், தன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நைட் கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஏடாகூட மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார். ஆனால், இந்தத் தொழிலில் ஏகபோகமாகச் சம்பாதித்துவந்த ஆளும்தரப்பு ‘சப்ளையர்’ பிரமுகர் ஒருவர், துணை ஆணையரை தி.நகரிலிருந்து மாற்றியே தீர வேண்டுமென்று கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுக்கிறாராம்.