அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: தொடர் புகார் மழை... அண்ணாமலையை புறக்கணித்த மோடி!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக், கோவையில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. அவரைக் கண்காணிக்காமல் தமிழ்நாடு உளவுத்துறை கோட்டைவிட்டிருக்கிறது

“அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் கன்னித்தீவு கதைபோல நீண்டுகொண்டிருக்கிறது. 21-ம் தேதியுடன் வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கு நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் அப்செட்டில் இருக்கிறார் எடப்பாடி” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார்...

“சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் செய்த மேல்முறையீட்டு மனு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ‘பொதுக்குழுத் தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்’ என எடப்பாடி தரப்பு வலியுறுத்தியது. ஆனால், ‘கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்ற ஓ.பி.எஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதே எடப்பாடியின் அப்செட்டுக்குக் காரணம் என்கிறார்கள்.”

“கர்நாடகாவில் ஆட்டோ வெடிகுண்டு வெடித்திருக்கிறதே?”

“ஆமாம்... ‘இது ஒரு பயங்கரவாதச் செயல்’ என அந்த மாநிலக் காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததும், ‘கோவை கலவரபூமியாக இருக்கிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மோசமான உளவுத்துறை இருக்கிறது. திட்டமிட்டபடி குண்டு வெடிப்பு நடந்திருந்தால் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கும்’ என்று குதித்த அண்ணாமலை, அதே குண்டு பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் வெடித்ததும் இப்போது வேறு குரலில் பேசியிருக்கிறார்...”

மிஸ்டர் கழுகு: தொடர் புகார் மழை... அண்ணாமலையை புறக்கணித்த மோடி!

“என்ன சொல்கிறார்?”

“ ‘மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக், கோவையில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. அவரைக் கண்காணிக்காமல் தமிழ்நாடு உளவுத்துறை கோட்டைவிட்டிருக்கிறது. இது உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதோடு, தமிழ்நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியிருப்பதையும் காட்டுகிறது’ என இந்தச் சம்பவத்துக்கும் தமிழ்நாடு போலீஸ் மீதே பாய்ந்திருக்கிறார். ‘என்னதான் இருந்தாலும் அண்ணாமலைக்குச் சொந்த மாநிலத்தைவிட, வேலை பார்த்த மாநிலத்தின்மீதுதான் பாசம் அதிகம்... இப்படியே போனால், காவிரிப் பிரச்னை தொடங்கி காஷ்மீர் பிரச்னை வரைக்கும் தமிழ்நாடு அரசையும், உளவுத்துறையையும்தான் கைகாட்டுவார் அண்ணாமலை’ என்று தி.மு.க-வினர் கலாய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.”

“கமலாலயத்துக்குள்ளேயே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் ஓடுகின்றனவாமே?”

“வேறென்ன.. வழக்கம்போல, ‘ஒன் மேன் ஷோ’தான். சமீபத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு ஆறுதல் சொல்ல அண்ணாமலை தலைமையில் அவரது வீட்டுக்கு ஒரு குழு சென்றது அல்லவா... அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மாநில துணைத் தலைவர் வினோஜ் பி செல்வத்தின் பெயரையோ, படத்தையோ எங்கும் பயன்படுத்த வேண்டாம் என அண்ணாமலைத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாம். சொன்னதுபோலவே, பிரியாவுக்கு மரியாதை செலுத்தச் சென்றதாக பா.ஜ.க சார்பில் வெளியான எந்தச் செய்தியிலும் வினோஜின் பெயர் இடம்பெறவில்லை என்கிறார்கள்.”

வினோஜ் பி செல்வம், காய்த்ரி ரகுராம்
வினோஜ் பி செல்வம், காய்த்ரி ரகுராம்

“காய்த்ரி ரகுராமும் ட்விட்டரில் பொங்கியிருக்கிறாரே... அது என்ன விவகாரமாம்?”

“கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கமிட்டியிலும் உறுப்பினராக இருக்கிறார். ஆனால், வாரணாசியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட, சங்கமம் தொடக்கவிழா நிகழ்வுக்கு காயத்ரியை மாநில பா.ஜ.க அழைக்கவே இல்லை என்கிறார்கள். அந்த வருத்தத்தைத்தான் தன் ட்விட்டர் பக்கத்தில் கொட்டியிருக்கிறார் காயத்ரி. உடனே பொங்கியெழுந்த பா.ஜ.க மாநிலத் தலைவரின் ஆதரவாளர்கள், ட்விட்டரில் காயத்ரியை கன்னா பின்னாவென வசைபாடத் தொடங்கிவிட்டனர். பதிலடியாக, ‘எனக்கு கமென்ட் செய்வதை விட்டுவிட்டு எப்போதும்போல, ‘ஒருவருடைய ட்வீட்’டுக்கு 4,000 லைக்ஸ் போடுவீர்களே... அங்கேபோய் லைக் போடுங்கள்’ என்று சீறிவிட்டார் காயத்ரி.”

“ஓஹோ...”

“தன்னுடைய பதிவுகளுக்கு லைக் போடவும், தனக்கெதிராகப் பேசுபவர்களை வசைபாடவும் ஒரு தனி ஐடி விங்கை பா.ஜ.க மாநிலத் தலைவர் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், காயத்ரி இப்படிப் போட்டு உடைத்திருப்பது கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது. அவரிடம் சமாதானம் பேசுவதற்கு மாநிலத் தலைவர் தரப்பிலிருந்து சிலர் முயன்றிருக்கிறார்கள். ‘என்னைப் பதவியைவிட்டுத் தூக்குவதென்றால் தூக்கிவிடுங்கள். மரியாதைக் குறைவாக யார் பேசினாலும் இப்படித்தான் பதிலடி கொடுப்பேன்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் காயத்ரி. வினோஜ் மற்றும் காயத்ரி விவகாரங்கள் டெல்லி வரை புகாராகப் பறந்திருக்கின்றன. அதனால்தான், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், இளையராஜா உள்ளிட்ட அனைவரின் பெயரையும் சொன்ன பிரதமர் மோடி, அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிடவே இல்லை. அண்ணாமலையின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை உணர்த்தவே, அவரின் பெயரைத் தவிர்த்திருக்கிறது டெல்லி என்கிறார்கள் சீனியர்கள்” என்ற கழுகாருக்கு கருப்பட்டி அல்வாவும், சாத்தூர் காராச்சேவும் கொடுத்தோம். அவற்றை ருசித்துச் சாப்பிட்டவர் காங்கிரஸ் செய்திகளுக்குத் தாவினார்.

“பா.ஜ.க விவகாரத்தைப்போலவே, காங்கிரஸ் கோஷ்டி மோதல் பஞ்சாயத்தும் டெல்லி வரை போயிருக்கிறது. நவம்பர் 15-ம் தேதி நடந்த ரத்தக் களேபரத்துக்குப் பிறகு, சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா நடந்தது அல்லவா... அதில், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு, கே.எஸ்.அழகிரியைப் பதவியிலிருந்து இறக்க என்ன செய்ய வேண்டும் எனத் தனியாக ஒரு ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். கூடவே, அழகிரிமீது புகார்க் கடிதம் ஒன்றைத் தயார்செய்து, அதை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேவிடம் கொடுப்பதற்காகப் படையைத் திரட்டிக்கொண்டு டெல்லிக்குப் போயிருக்கிறார்கள்.”

கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை
கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை

“அப்புறம்...”

“அங்கு போனதும், ‘ஜோதிமணியைத் தலைவராக்கலாம்’ என்று செல்வப்பெருந்தகை சொல்லியிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மற்றவர்கள் என்ன சொல்வது என விழிக்க, ‘அதைத் தலைமை முடிவு செய்துகொள்ளும். இப்போதைக்கு வந்த பிரச்னை குறித்து மட்டும் பேசுங்கள்’ என கார்கே சொல்லியிருக்கிறார். மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவர்கள், ‘தலைவர் பதவி யாருக்கு என்பதை நீங்களாக எப்படிச் சொல்லலாம்?’ என செல்வப்பெருந்தகையுடன் மல்லுக்கு நின்றிருக்கிறார்கள்.”

“புகார் கொடுக்கப்போன இடத்திலேயே, கோஷ்டிச் சண்டையா... சரி, அமைச்சர் மதிவேந்தன் மறுபடியும் வெளிநாடு சென்று திரும்பியிருக்கிறாரே?”

“போனது என்னவோ லண்டனில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கைத் தொடங்கி வைக்கத்தான். ஆனால், ‘சுற்றுலா அமைச்சரின் இன்பச் சுற்றுலா’ என்று சொல்லும் அளவுக்கு ஸ்காட்லாந்து, அயர்லாந்து என அமைச்சரும் அதிகாரிகளும் ரவுண்ட் அடித்திருக்கிறார்கள்.அவருடன் துறைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநர் சந்தீப் நந்தூரியும் போயிருந்தார்கள். இந்தப் பயணத்துக்காகப் பல லட்ச ரூபாய் செலவு செய்தும் துறையின் வளர்ச்சிக்காக ஒப்பந்தத்தையோ, திட்டத்தையோ பெறாமல் வெறும் கையோடு நாடு திரும்பியிருக்கிறார்கள். இந்த விவகாரம் மேலிடத்தை எட்ட, ‘இதுவரை சென்றுவந்த வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் அதன் மூலம் கொண்டுவரப்பட முதலீடுகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறதாம். ‘இப்ப நான் என்ன சொல்றது..?’ என்று வடிவேலு மாதிரி திகைத்து நிற்கிறாராம் மதிவேந்தன்” என்ற கழுகார்...

மதிவேந்தன்
மதிவேந்தன்

“திகார் சிறையில் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சரின் சொகுசு வாழ்க்கை வீடியோ புழல் சிறை வரையில் எதிரொலித்திருக்கிறது. சிறைத்துறை டி.ஜி.பி அம்ரேஷ்பூஜாரியே சென்னை புழல் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். அடுத்து மதுரைக்குச் சென்று கைதிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். சென்னை புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த சர்சைக்குரிய யூடியூபர், புழல் சிறையிலுள்ள வசதிகள் குறித்து பகிரங்கமாகக் கருத்துகளைத் தெரிவித்திருந்ததே இந்த ரெய்டுக்குக் காரணமாம். ஆனால், ‘இது வழக்கமான ரெய்டுதான். சிறை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்த ரெய்டு’ என்று சமாளிக்கிறார்கள் சிறைத்துறையினர்” என்றபடி சிறகுகளை விரித்தார்!