Published:Updated:

மிஸ்டர் கழுகு: எக்குத்தப்பாக செலவுவைக்கும் உதயநிதி... சொத்தை அடகுவைக்கும் நிர்வாகிகள்!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், பாரம்பர்ய முறைப்படி சூரசம்ஹாரம் நடத்துவோம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன

‘‘தி.மு.க வட்டாரத்தில், ‘ஐயய்யோ... இப்படி ஏகத்துக்கும் செலவை இழுத்துவிடுகிறாரே?’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள்’’ என்றபடி நுழைந்தார் கழுகார். வாழைப்பூ வடையைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘உதயநிதியின் சுற்றுப் பயணத்தைத்தானே குறிப்பிடுகிறீர்?’’ என்றோம். வடையைப் பிய்த்து மென்ற கழுகார், ‘‘ஆமாம். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் நவம்பர் 20-ம் தேதியிலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான செலவு 40 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறதாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘உதயநிதியின் பிரசாரம் எந்த ஊரில் நடக்கிறதோ, அங்கெல்லாம், ‘ஒயிலாட்டம், கரகாட்டம்’ என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆடம்பரச் செலவை இழுத்துவிடுகிறார்கள். இதுபோக, தொகுதிக்கு நூறு பேர் வீதம் வேலைக்கு ஆள் எடுத்திருக்கிறது ஐபேக். அவர்கள் தலா 20 பேரை உதயநிதியின் கூட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள். இப்படி அழைத்து வரப்படுபவர் களுக்கான ‘தலைக்கூலி’யையும் சாப்பாடு மற்றும் வழிச் செலவையும் கட்சி நிர்வாகிகளின் தலையில் கட்டிவிடுவதால், செலவுக் கணக்கு வழக்கத்தைவிட எகிறுகிறதாம். பல மாவட்டச் செயலாளர்கள் சொத்தை அடமானம்வைத்து செலவை ஈடுகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். டெல்டா மாவட்டச் செயலாளர் ஒருவரின் வீட்டில், ‘கட்சிக்குச் செலவழிச்சு எல்லாத்தையும் அழிக்கிறீங்களா?’ என்று கணவன் மனைவிக்குள் காரசார சண்டை நடந்து, குடும்பத்தில் யாரும் பேசிக்கொள்வ தில்லையாம்.’’

உதயநிதி
உதயநிதி

‘‘அடப் பாவமே... கும்பகோணத்தில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்திலும் ஏதோ சலசலப்பாமே?’’

‘‘கூட்டம் நடந்த ஹாலில் இளைஞர்கள் பலரும் உதயநிதியைப் பார்ப்பதற்காக நின்றிருக்கின்றனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான தட்சிணாமூர்த்தி என்பவர், ‘வெளியே கட்சிக்காரன் அவ்வளவு பேர் நிக்கிறான். நீங்க என்ன ஸ்பெஷலா?’ என்று அவர்களை ஒருமையில் பேசி வெளியே அனுப்பியிருக்கிறார். இதை அருகில் நின்றிருந்த இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி கண்டுகொள்ளாததால், ‘பொல்லாத தலைவரு... வாங்கடா போகலாம்’ என்று வசைமாரிப் பொழிந்துவிட்டுத் திரும்பினார்களாம். கும்பகோணம் சாக்கோட்டையில், கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்விலும் உதயநிதி பங்கேற்றபோது, சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார்கள். இதில் கடுப்பான கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், ஒருவரை ஓங்கி அறைந்துவிட அந்த இடமே ஸ்தம்பித்துப்போனது. உதயநிதி செல்லும் இடமெல்லாம் கலகம்தான். இதேபோல ஒரு பஞ்சாயத்து அ.தி.மு.க-விலும் ஓடுகிறது.’’

“அங்கே என்ன பிரச்னை?”

“எல்லாம் மண்டலப் பொறுப்பாளர் நியமன விவகாரம்தான். இவர்கள்தான் வேட்பாளர் தேர்வில் முக்கியப் பங்காற்றப்போகிறார்கள் என்பதால், ‘பசை’யான பதவி இது என்று கண்சிமிட்டுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தெற்கு என்று ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்த கட்சித் தலைமை, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு மதுரை மாநகர், புறநகர் கிழக்கு என்று இரண்டு மாவட்டங்களை மட்டும் ஒதுக்கியதால் செல்லூர் ராஜூ கடும் அப்செட். தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜூக்கு எந்தப் பொறுப்பும் முதலில் வழங்கப்படவில்லை. ‘என்னை ஒதுக்குகிறீர்களா?’ என அவர் பொங்கியெழவும், வேறு வழியில்லாமல் கட்சித் தலைமை, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்ட தென்காசி வடக்கை மட்டும் அவரிடமிருந்து பிரித்து கடம்பூர் ராஜூவுக்குக் கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறது. ஆனால், அவரது சொந்த மாவட்டமான தூத்துக்குடிக்கு டெல்டா மாவட்ட அமைச்சர் காமராஜை நியமித்து, செக் வைத்திருக்கிறது.

அதேபோல், விருதுநகர் மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கணக்கில் எடுக்காமல், விருதுநகருக்கு நத்தம் விஸ்வநாதனைப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். மண்டலப் பொறுப்பில் இடம் கிடைக்காத பெண் அமைச்சர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மண்டலப் பொறுப்பாளர் நியமனத்தில் பாகுபாடு பார்க்கப்பட்டிருப்பதாக இலைக் கட்சியில் உஷ்ண ரேகைகள் படர்கின்றன’’ என்ற கழுகாருக்கு, சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். ‘‘சப் கலெக்டர் ஒருவரை, உயரதிகாரி ஒருவர் ஒருமையில் திட்டியது கன்னியாகுமரியில் பிரச்னையாகி யிருக்கிறது’’ என்று காபியை உறிஞ்சியபடி செய்தியைத் தொடர்ந்தார்.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், பாரம்பர்ய முறைப்படி சூரசம்ஹாரம் நடத்துவோம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன. மாவட்ட அதிகாரிகள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில், பெண் சப் கலெக்டர் சரண்யா அரி சில வழிகாட்டுதல்களைக் கூறி, அதன்படி விழாவை நடத்தும்படி அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கு ஒப்புதல் வாங்குவதற்காக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணியை துறை அதிகாரிகள் அழைத்திருக்கிறார்கள். அவர்கள் லௌடு ஸ்பீக்கரில் பேசுவது தெரியாமல், சப் கலெக்டரை ஒருமையில் பேசியிருக்கிறார் இணை ஆணையர். இதைக் கேட்ட சரண்யா அரி கொதித்துவிட்டாராம். விவகாரம் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் வரை சென்று, அவரும் இணை ஆணையரிடம் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில் தளவாயின் போனை எடுக்காமல் தவிர்க்க ஆரம்பித்து விட்டாராம் இணை ஆணையர் அன்புமணி. ‘அன்புமணி மேல ஒன்பது விஜிலென்ஸ் கேஸ் இருந்தும், அவர் திருச்செந்தூர் இணை ஆணையராகத் தொடர்வதற்கு தளவாய் உதவி செய்யறாரு. ஆனாலும், அவர் அண்ணன்கிட்டயே மோதுறார்’ என்று தளவாயின் ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள்.”

செல்லூர் ராஜூ - ஆர்.பி.உதயகுமார்
செல்லூர் ராஜூ - ஆர்.பி.உதயகுமார்

“சரிதான்...”

“சென்னையில் அமித் ஷா மேடைப் பேச்சின்போது ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது... எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. கூட்டத்தில் தமிழில் வரவேற்புரையாற்றிய பெண், துணை முதல்வர் பன்னீரைக் குறிப்பிடும்போது, ‘துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அவர்களே...’ என்றார். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், ‘பீப்பிள் சீஃப் மினிஸ்டர் ஓ.பன்னீர்செல்வம்’ என்று குறிப்பிடவே... ஜெர்க்கான முதல்வர் பழனிசாமி, நம்பியார் பாணியில் கைகளைத் தேய்த்து, கடுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்!”

“சுவாரஸ்யம்தான்... சரி, காங்கிரஸ் முகாமில் என்ன நடக்கிறது?”

“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், ‘நட்சத்திர விடுதிகளில் கூட்டம் நடத்திக் கட்சியை வளர்க்க முடியாது’ என்று காட்டமாகச் சாடியிருக்கிறார். இந்தக் காட்டத்தின் பின்னணியே தமிழகத்தில் நடந்த ஒரு கதைதான் என்கிறது கதர் வட்டாரம். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவுக்காக, வழக்கமாக அறையெடுக்கும் விடுதியை விட்டுவிட்டு, வெவ்வேறு ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறைகள் புக் செய்யப்பட்டதை கூறியிருந்தேன் அல்லவா... அந்த ஹோட்டல்களில் கவனிப்பு பலமாக நடந்திருக்கிறதாம். இந்த கவனிப்புகளை யாரோ ஒரு தொண்டர் வீடியோவாக எடுத்து ராகுல் காந்தி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்போது குண்டு ராவ் உட்பட அனைவருக்கும் டெல்லியிலிருந்து செம டோஸ் விழுந்திருக்கிறதாம்.”

தினேஷ் குண்டு ராவ்
தினேஷ் குண்டு ராவ்

“குண்டு ராவுக்கே குண்டுவைத்து விட்டார்களே!”

“நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்துக்காக உள்ளூர் நிர்வாகிகள் பெரும் கூட்டம் சேர்த்திருந்தனர். மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். யாத்திரைக்கு போலீஸ் அனுமதி இல்லை என்பதால், கைது நடவடிக்கைக்கு போலீஸ் தயாராகும்போதே, கூட்டம் கலைய ஆரம்பித்திருக்கிறது. இதைத் தடுத்த பா.ஜ.க நிர்வாகிகளிடம், ‘500 ரூபா கொடுக்குற இடத்துல ஆளுக்கு 250 ரூபாதான் தர முடியும்னு பேரம் பேசி கூட்டிட்டு வந்துட்டு, இங்கே வந்ததும் அரெஸ்ட் வேற ஆகச் சொல்றீங்களா... இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று பலரும் அலறியடித்து ஓட்டம்பிடிக்க, நயினார் கடுப்பானதுதான் மிச்சம்” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகாருக்கு, லட்டு ஸ்வீட் பாக்ஸை நீட்டினோம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

‘‘நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், கட்சி ஆரம்பிப்பதற்காக தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருந்த விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுவிடுவார் என்று அவர் விண்ணப்பித்த அன்றே கூறியிருந்தீர்களே... அது நடந்துவிட்டது. தாமதமாக நடந்திருந்தாலும், உங்கள் வாக்கு பலித்ததற்குத்தான் இந்த ஸ்வீட்” என்றோம்.

சிரித்தபடி லட்டுவைப் பிட்டு வாயில் போட்டுக்கொண்ட கழுகார், ‘‘ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான லிஸ்ட்டை எடுத்துக்கொண்டு முதல்வர் பழனிசாமியைச் சந்தித்திருக்கிறார் டி.ஜி.பி திரிபாதி. ‘சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸிடம் கலந்தாலோசித்து விட்டீர்களா?’ என்று முதல்வர் கேட்டதும், திரிபாதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லையாம். ‘பேசிவிட்டு மீண்டும் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிய திரிபாதி, இது தொடர்பாக ராஜேஷ் தாஸிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஒரு லிஸ்ட்டை ரெடி செய்து வைத்திருந்ததால், இப்போது ஐ.பி.எஸ் பணியிட மாறுதல் தொங்கலில் இருக்கிறது’’ என்றபடி ஜூட் விட்டார்.