Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசிகலா தொடர்ந்த வழக்கு... வாய்தா வாங்கிய பன்னீர்... அதிர்ச்சியில் எடப்பாடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தினகரன் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி
தினகரன் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி

சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை பன்னீர் கூறிய நிலையில், வைத்திலிங்கமும் டெல்டா மாவட்டங்களில் சசி தரப்புக்கு ஆதரவு திரட்டிவருவதாகக் கூறப்படுகிறது.

பிரீமியம் ஸ்டோரி

“மொபைலில் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லரை பார்த்துக்கொண்டிருந்தபோது என்ட்ரி கொடுத்த கழுகார், “ரிலீஸான ட்ரெய்லரை நீங்கள் பாருங்கள்... ரிலீஸாகாத ஒரு ட்ரெய்லரை நான் சொல்கிறேன்” என்று ‘பன்ச்’ அடித்தபடியே செய்திகளுக்குள் தாவினார்...

“அக்டோபர் 27-ம் தேதி சென்னை சன் டி.வி அலுவலகத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் ப்ரீவியூ ஷோ திரையிடப்பட்டது. ரஜினி வருகையையொட்டி பத்தடிக்கு ஒரு பவுன்ஸர்கள் நிறுத்தப்பட்டு ஸ்பெஷல் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. ரஜினியின் குடும்பத்தினருடன், படத்தின் இயக்குநர் சிவாவும் கலந்துகொண்ட இந்த ஷோவில், கடைசி நேரத்தில் சர்ப்ரைஸாக வந்து ரஜினிக்கு சிறப்பு விருந்து அளித்திருக்கிறார் கலாநிதி மாறன். ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றதற்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட இந்த விருந்துக்கு கலாநிதி மாறன் வீட்டிலிருந்து ஸ்பெஷலாக உணவு வந்திருக்கிறது. ஒருபக்கம் இவர்கள் கொண்டாட்டமாக இருந்தார்கள் என்றால், இன்னொரு பக்கம் விஷால் தரப்பு திண்டாடிப்போயிருக்கிறது. ஏனெனில், ‘அண்ணாத்த’ ரிலீஸாகும் தீபாவளி அன்றுதான் விஷால் நடித்த ‘எனிமி’ படமும் ரிலீஸாகிறது. ‘அண்ணாத்த’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ரிலீஸ் செய்வதால், தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் புக் செய்யப்பட்டுவிட்டன. கடந்த தி.மு.க ஆட்சியின்போது நடந்ததுபோலவே, இம்முறையும் இவர்கள் தரப்பின் படங்களுக்காக மற்ற படங்கள் பின்னுக்குத் தள்ளப்படுவது திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரச்னையைச் சமாளிக்க உதயநிதியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஷால். ஓரிரு தினங்களில் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சசிகலா தொடர்ந்த வழக்கு... வாய்தா வாங்கிய பன்னீர்... அதிர்ச்சியில் எடப்பாடி!

“சசிகலா விவகாரத்தில் ஏதேனும் அப்டேட்?”

“சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் சேர்த்துக்கொள்வது குறித்து பன்னீர் சொன்ன கருத்துதான் அ.தி.மு.க-வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பன்னீர் கருத்தை ஜெ.சி.டி.பிரபாகர், செல்லூர் ராஜூ ஆகியோர் வரவேற்றிருப்பதே சசிகலாவுக்கு அ.தி.மு.க முகாமிலிருந்து கிடைத்திருக்கும் மறைமுக ஆதரவு என்கிறார்கள். இதற்கிடையே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் உச்ச அமைச்சர் ஒருவரும் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள். பொதுவாக அ.தி.மு.க கட்சி நாளிதழான ‘நமது அம்மா’வின் முதல் பக்கத்தில் பன்னீர் தொடர்பான செய்திகள் அதிகம் இடம்பெறாது. ஆனால், அக்டோபர் 26 அன்று வெளியாகவிருந்த நாளிதழில் அச்சுக்குப் போகும் முன்பு முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்கிற தலைப்பில் சசிகலா தொடர்பான பன்னீரின் பேட்டி இடம்பெற்றிருந்தது. கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர் தரப்பு இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்திருந்த நிலையில், இந்தத் தகவல் எடப்பாடி முகாமுக்குச் செல்லவே... கொதிப்படைந்தவர் முன்னாள் அமைச்சரிடம் கடுமையாக வாதிட்டாராம். இதையடுத்து, நள்ளிரவு 1 மணிக்கு அச்சுக்குச் சென்ற நாளிதழை நிறுத்தி, அதே செய்தியின் தலைப்பை, ‘கழக அரசுத் திட்டங்களை நிறுத்தினால் மக்களைத் திரட்டிப் போராடுவோம்’ என்கிற தலைப்பில் உப்புசப்பில்லாமல் பன்னீரின் பேட்டியைப் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள்!”

“ஓஹோ!”

“இது மட்டுமல்ல... இன்னும் இருக்கிறது கேளும். பன்னீரின் சசி பாசம் நீதிமன்றம் வரை நீண்டுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அக்டோபர் 23-ம் தேதியன்று இந்த வழக்கில் எடப்பாடி, அமைப்புச் செயலாளர் செம்மலை ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோர முடியாது’ என்று கடுமையாக வாதிட்டனர். இந்த வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி பன்னீர் தரப்பில் வாதிட வேண்டும். ஆனால் பன்னீர் வழக்கறிஞரோ, ‘இது குறித்து கருத்து சொல்ல பத்து நாள்கள் வாய்தா வேண்டும்’ என்று கேட்டு வாங்கியுள்ளார். நீதிமன்றத்தில்கூட சசிகலாவுக்கு எதிராக பன்னீர் வாய் திறக்க மறுத்திருப்பதுதான் ஹைலைட்.”

மிஸ்டர் கழுகு: சசிகலா தொடர்ந்த வழக்கு... வாய்தா வாங்கிய பன்னீர்... அதிர்ச்சியில் எடப்பாடி!

“தினகரன் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலாவை பன்னீரின் தம்பி சந்திப்பதாகத்தானே தகவல் வந்தது?”

“ஆமாம். அக்டோபர் 27-ம் தேதி தினகரன் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பில் சசிகலா வருவதற்கு முன்பாகவே மேடைக்கு வந்த ஓ.ராஜா, தினகரனை பார்த்துக் கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டே கிளம்பிச் சென்றார். அதன் பிறகு சசிகலா, இளவரசி, விவேக் ஆகியோர் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர். சசிகலாவையும் ராஜாவையும் எப்படியும் சந்திக்கவைத்துவிட வேண்டும் என்று தினகரன் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், பூண்டி செல்லும் வழியில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டதால் சசிகலா வருவதற்கு தாமதமாகிவிட தினகரனின் திட்டம் அரங்கேறவில்லை என்கிறார்கள்.”

“டெல்டாவிலிருந்தும் பன்னீருக்கு பாசக்கரங்கள் நீண்டிருக்கின்றனபோலவே?”

“ஆமாம்... தஞ்சை வந்த ஓ.ராஜாவை வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் அறிவுடை நம்பி வரவேற்றிருக்கிறார். சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை பன்னீர் கூறிய நிலையில், வைத்திலிங்கமும் டெல்டா மாவட்டங்களில் சசி தரப்புக்கு ஆதரவு திரட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை பன்னீர், எடப்பாடி என யார் பக்கமும் சாயாமல் இருந்த வைத்திலிங்கம் இப்போது பன்னீருக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

மிஸ்டர் கழுகு: சசிகலா தொடர்ந்த வழக்கு... வாய்தா வாங்கிய பன்னீர்... அதிர்ச்சியில் எடப்பாடி!

“தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-க்களுக்கு வந்த சிக்கல் தெரியுமா?”

“மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியிலும், செயலாளர் அப்துல் சமது மணப்பாறை தொகுதியிலும் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். தி.மு.க சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால் அந்தக் கட்சியில் இணைந்திருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு வழக்கில் வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார், தான் தி.மு.க-வில் இருப்பதாகச் சொல்லியிருந்தார். அது போன்றே ஜவாஹிருல்லா, அப்துல் சமது இருவரும் தி.மு.க-வில் இணைந்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டதால் இருவரும் மனிதநேய மக்கள் கட்சியில் தொடரக் கூடாது என்று அந்தக் கட்சியின் முன்னாள் இளைஞரணிச் செயலாளர் அப்துல் ஹக்கீம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால், இருவருக்கும் சிக்கல் வரலாம் என்கிறார்கள்.”

“ஆளுங்கட்சி தரப்பில் வெயில் மாவட்டத்தில் நடந்த வசூல் விவகாரம் வெயிலைவிட தகிக்கிறதே?”

“பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்று கேட்டு, அவர்கள் சொல்லும் தொகையை மாவட்டச் செயலாளரோ அல்லது மாவட்ட அமைச்சரோ வாங்கி வைத்துக்கொள்வார்கள். பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் செலவுகளுக்கு அது பயன்படுத்தப்படும். அதாவது, வேட்பாளர்களை நேரடியாகச் செலவு செய்ய வைப்பதற்கு பதிலாக, கட்சியே ஆட்களை வைத்து செலவு செய்யும். அந்தவகையில், வெயில் மாவட்டத்திலுள்ள இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்குப் போட்டியிடும் 42 கவுன்சிலர் வேட்பாளர்களிடமும் பல லட்சங்களை ஆளுங்கட்சியில் இரண்டாம் இடத்திலுள்ள சீனியரின் வாரிசு வாங்கி வரவு வைத்துக் கொண்டாராம்.”

“சரி, வரவு வைத்ததில் என்ன பிரச்னை?”

“வரவு மட்டுமே வைத்ததுதான் பிரச்னை. வாரிசுத் தரப்பு பணம் வாங்கிய பிறகு வெயில் மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக ‘ஷாக்’ அமைச்சர் நியமிக்கப்பட்டார். அவரும் வழக்கம்போல தலைமையிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு ஒன்றியங்களிலும் வாரி இறைத்துவிட்டார். வாரிசும் கமுக்கமாக இருந்துவிட... தேர்தலுக்குப் பிறகு பணம் கொடுத்தவர்களோ, ‘எல்லா செலவையும்தான் அந்த அமைச்சரே பார்த்துக்கிட்டாரே... நாங்க கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்க...’ என்று கேட்க, வாரிசு தரப்போ மௌனமாக இருப்பதால் இப்போது தலைமைக்குப் புகார் அனுப்பத் தயாராகிவருகிறார்கள்!”

“ம்க்கும்... நடவடிக்கை எடுத்துவிட்டாலும்...”

“அது எனக்குத் தெரியாது. ஆளும் முகாமில் இன்னொரு வசூல் புள்ளி பற்றியும் சொல்லிவிடுகிறேன்... மீசைக்கார மந்திரி துறையில் அ.தி.மு.க ட்ரீட்மென்ட் புள்ளியின் உறவினரான ‘ரோஜா’ நடிகர் பெயர்கொண்டவர்தான் ஆல் இன் ஆலாக இருக்கிறாராம். `கடந்த ஆட்சியில் வசூலில் கொடிகட்டிப் பறந்தவர் இந்த முறையும் எப்படி உள்ளே வந்தார், இது அமைச்சருக்குத் தெரியுமா?’ என்று புலம்பிவருகிறார்கள் உடன்பிறப்புகள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* அ.தி.மு.க-வின் மத்திய மண்டல மாஜி அமைச்சர் ஒருவர், கடந்த ஆட்சியில் கல்லாகட்டிய கரன்சியை தங்கக்கட்டியாக்கி புதர் ‘மண்டி’யிருக்கும் பகுதியில் புதைத்துவைத்துவிட்டாராம். இதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பூமிக்கு அடியிலுள்ள உலோகங்களைக் கண்டறியும் நவீன கருவிகளைக்கொண்டு தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு