அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சிக்கு செக்... எதிர்க்கட்சிக்கு ரிலாக்ஸ்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுநர் ஆர்.என்.ரவி

‘‘வேலுமணி விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி சில ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

கொட்டும் மழையில் நனைந்துகொண்டே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு மழைக்கு இதமாக சூடாக வெங்காய பஜ்ஜியும், இஞ்சி டீயும் கொடுத்தோம். சுவைத்தபடியே நமக்கும் ஜிலேபி ஸ்வீட் பாக்ஸை நீட்டியவர், “தீபாவளி வாழ்த்துகள்” என்று கைகுலுக்கிவிட்டு செய்திகளுக்குத் தாவினார்...

‘‘ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதாக கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம் அல்லவா... இப்போது, ஆளுநரின் நடவடிக்கைகள் மேலும் வேகமெடுத்துள்ளன. அக்டோபர் 30-ம் தேதியன்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் சந்தித்தார் ரவி. ‘தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களில் ஐந்தில் மட்டுமே நிதி ஆதாரங்கள் சிறப்பாக உள்ளன. மற்றவற்றில் சம்பளம் கொடுக்கவே தடுமாறுகிறார்கள். பணி நியமனங்கள் உள்ளிட்ட விஷயங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. நீங்களெல்லாம் என்னதான் செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். சில துணைவேந்தர்கள் மட்டுமே சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். அவை எல்லாமே அ.தி.மு.க ஆட்சி தொடர்பானது என்பதால், மெளனமாகியிருக்கிறார் ஆளுநர்.’’

‘‘அமலாக்கப் பிரிவினர் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது போலவே?’’

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சிக்கு செக்... எதிர்க்கட்சிக்கு ரிலாக்ஸ்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!
மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சிக்கு செக்... எதிர்க்கட்சிக்கு ரிலாக்ஸ்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!
மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சிக்கு செக்... எதிர்க்கட்சிக்கு ரிலாக்ஸ்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

‘‘தி.மு.க-வைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர்மீது ஏற்கெனவே அமலாக்கப் பிரிவில் புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்தப் புகார்களுக்கு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தீவிரமாகிறது அமலாக்கத்துறை. விரைவில் நோட்டீஸ் விநியோகிக்கப் படலாம். இந்தத் தகவல் தி.மு.க தலைமைக்கும் எட்டியிருப்பதால், இதை எப்படி எதிர்கொள்வது என்ற யோசனையில் இருக்கிறார்கள்.’’

‘‘அதிருக்கட்டும்... எதிர்க்கட்சியினருக்குச் சாதகமாக மத்திய அரசின் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல் வருகிறதே...”

‘‘வேலுமணி விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி சில ஆவணங்களை அள்ளிச் சென்றனர். அவற்றை ஆய்வு செய்துவரும் நேரத்தில், வேலுமணி மீது 2019-ம் ஆண்டு வருமான வரித்துறையில் பதிவான வழக்கையும் ஆய்வுசெய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டது. அந்த ஆண்டு வேலுமணி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல கோடி ரூபாயைக் கைப்பற்றினார்கள். அந்த வழக்கை விசாரித்த அதிகாரி ஒருவர், ‘வேலுமணி மீது பினாமி சட்டத்தில் வழக்கு பதியலாம்’ என்றும் நோட் போட்டிருந்தார்.’’

‘‘ம்ம்... நினைவிருக்கிறது. அப்போது அது குறித்தும் கட்டுரை எழுதியிருந்தோம் அல்லவா...”

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சிக்கு செக்... எதிர்க்கட்சிக்கு ரிலாக்ஸ்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

‘‘அதே விவகாரம்தான்... அந்த அதிகாரி சென்னையிலிருந்து மாற்றலாகிச் சென்றுவிட்டார். இப்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரிதான் இந்த வழக்கை கவனிக்கிறார். அந்தப் பெண் அதிகாரி வேலுமணி வழக்கு தொடர்பான ஆவணங்களில் மாற்றங்களைச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், 2019-ம் ஆண்டு வருமான வரித்துறை ரெய்டு தொடர்புடைய வழக்கின் விவரங்களைக் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால், அதற்கு வருமான வரித்துறை தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ். இதனால், வேலுமணி வழக்கில் வேகம் காட்ட முடியாமல் தவிக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.’’

‘‘கொங்கு மண்டலத்திலும் வருமான வரித்துறையைச் சுற்றி சர்ச்சை எழுந்திருக்கிறதே?’’

‘‘கடந்த வாரம் ஈரோட்டிலுள்ள எஸ்.கே.எம் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், வீடுகள் என 11 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது வந்த புகாரே ரெய்டுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், இதன் பின்னணிக் காரணம் வேறு என்கிறார்கள். எஸ்.கே.எம் நிறுவனத்தின் உரிமையாளர் மயிலானந்தன், வேதாத்திரி மகரிஷி மனவளக் கலை மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார். பத்து நாள்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரைச் சந்தித்து பள்ளிகளில் யோகாவைப் பயிற்றுவிக்கும் முறை பற்றிய ஒரு வரைவுத் திட்டத்தைக் கொடுத்துவிட்டுப் போனாராம். தமிழக அமைச்சர்களுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகுதான் இந்த ரெய்டு நடந்திருக்கிறது. இவரது திட்டத்தால் தனது மவுசு குறைந்துவிடும் என்று கருதிய பிரபல சாமியார் தரப்பு ஒன்று டெல்லி பா.ஜ.க மேலிடத்தின் மூலம் வருமான வரித்துறையை ஏவிவிட்டிருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள்.’’

‘‘எத்தனை சர்ச்சைகள் எழுந்தாலும், அந்த அமைச்சர் அலட்டிக்கொள்ளவே இல்லையே!’’

‘‘ம்... சமீபத்தில் ஒரு அனல்மின் நிலையத்துக்கான செக்யூரிட்டி ஏஜென்சியை நியமிக்க 3 கோடி ரூபாய் மதிப்பிலான இணையவழி டெண்டர் நடந்தது. பத்து கம்பெனிகள் வரை கலந்துகொண்ட இந்த டெண்டரில் பரிசீலனை ஆரம்பமான நேரத்தில், போன் கால் ஒன்று அதிகாரிகளுக்கு வரவே, டெண்டரை நிறுத்திவைக்கச் சொல்லிவிட்டார்கள். துறையின் முக்கியப் புள்ளி தனக்குவேண்டிய ஒரு நிறுவனத்துக்கு இந்தப் பணிகளைக் கொடுக்க முடிவெடுத்ததாலேயே இந்த நடவடிக்கை என்கிறார்கள். இதையடுத்து கடுப்பான நிறுவனங்கள், ‘அண்ணாமலையாரே சரணம்’ என்று சரணடைய முடிவெடுத்திருக்கிறார்களாம்.’’

‘‘குளுகுளு ஊட்டி இந்தக் குளிரிலும் தகிக்கிறதுபோல!”

“அக்டோபர் 1-ம் தேதியன்று ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றம் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு மேலும் ஐந்து நாள்கள் போலீஸ் கஸ்டடி வழங்கியிருக்கிறது. இதையடுத்து, தீபாவளிக்குப் பிறகு கொடநாடு வழக்கில் அனல் பறக்கும் திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் காவல்துறையினர். மற்றொருபுறம், எடப்பாடியின் தனி உதவியாளராக இருந்த மணியை காவல்துறை தேடிவந்த நிலையில், அவர் முன்ஜாமீன் கோரியிருக்கிறார். மணியை வளைத்துவிட்டாலே எடப்பாடிக்குப் பெரும் நெருக்கடியாகிவிடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!’’

தனபால்
தனபால்

“ஹெலிகாப்டர் கடத்தல் விவகாரம் தெரியுமா?”

‘‘தெரியுமே! டெல்லியிருந்து வந்த ஒரு தகவலின் அடிப்படையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள குடோன் ஒன்றில் ஒரு ஹெலிகாப்டரைப் பறிமுதல் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அந்த ஹெலிகாப்டரின் பாகங்களைக் கழற்றி குடோனுக்குள் மறைத்து வைத்திருந்தார்கள். இந்த விவகாரத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்குத் தொடர்பிருக்கிறதாம். ஐ.பி.எஸ் அதிகாரியின் வாரிசு சிங்கப்பூரில் நடத்தும் நிறுவனத்தின் மூலமே கப்பல்வழியாக இந்த ஹெலிகாப்டர் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் கடத்தலோடு ஹவாலா பண விவகாரமும் இதில் இருக்கலாம் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேகப்படுவதால், ஐ.பி.எஸ் அதிகாரி தரப்பு ஆடிப்போயிருக்கிறதாம்’’ என்ற கழுகார்,

‘‘முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், லஞ்ச ஒழிப்புத்துறை விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக ‘முனிவர்’ பெயர்கொண்ட தொழிலதிபர் மூலம் மேலிடத்தைத் தொடர்புகொண்டபோது, ‘எந்தப் பஞ்சாயத்துக்கும் இந்தப் பக்கம் வரக் கூடாது’ என்று எச்சரித்ததோடு, ‘எங்கள் பெயரை இனியும் பயன்படுத்தினால், கம்பி எண்ண வேண்டி வரும்’ என்று தொழிலதிபரை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* தீபாவளி நேரத்தில் தி.நகர் ஏரியாவில் ஆளுங்கட்சியின் பிரதிநிதியே நேரடியாகக் களமிறங்கி, கோடிகளில் கல்லாகட்டுகிறாராம். ‘‘அண்ணன் பேரை இப்படிக் கெடுக்குறாரே!” என்று புலம்புகிறார்கள் வணிகர்கள்!

* சென்னையில் இன்ஷூரன்ஸ் துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் பிசினஸ் பெரும்புள்ளிகளுடன் ஃபேஸ்புக்கில் நட்பாகி, அவர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களைவைத்து மிரட்டிப் பணம் பறிப்பதை வழக்கமாக்கியிருக்கிறார். சமீபத்தில் 60 வயதுடைய கேன்சர் நோயாளியைக்கூட விட்டுவைக்காமல் மிரட்டிப் பணம் பறித்திருக்கிறார் அந்தப் பெண். பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதால், விவகாரம் விரைவில் வெடிக்கலாம்!

* மூன்றெழுத்து பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தப்படுவதில் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று புதிய ஆர்டர் போடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளுக்கு, தனியார் இன்ஜினீயரிங் கல்லூரிகள் சார்பில் தீபாவளி ‘ஸ்வீட் பாக்ஸ்’களைக் கொடுத்ததே இதற்குக் காரணமாம்.