Published:Updated:

மிஸ்டர் கழுகு: “வாய்ஸ் கொடுங்க போதும்!” - ரஜினிக்கு ஆடிட்டர் அட்வைஸ்

ரஜினி - ஆடிட்டர் குருமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - ஆடிட்டர் குருமூர்த்தி

‘உங்க உடல்நிலையை நீங்க கவனிக்கணும்கிறது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதுக்காக, அரசியல்லருந்து முழுவதுமாக நீங்க ஒதுங்குறது சரியா இருக்காது.

ழை லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. சிறகுகளில் படிந்திருந்த தூறலைச் சிலுப்பி உதறியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடாக லெமன் டீயை கழுகாருக்கு அளித்துவிட்டு, ‘‘ரஜினியை திடீரென ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்திருக்கிறாரே..?’’ என்றோம். ‘‘எல்லாம் தி.மு.க குடும்பப் பிரமுகர் மூலமாகக் கிளம்பிய அறிக்கை விவகாரம்தான்’’ என்று டீயை உறிஞ்சிக்கொண்டே செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

‘‘ரஜினியிடம், ‘பலரிடமும் கருத்து கேட்காதீர்கள்’ என்று குருமூர்த்தி ஏற்கெனவே எச்சரித்திருந்தார். அதை மீறி, தன்னைச் சந்தித்தவர்களிடமெல்லாம் தன் உடல்நிலை குறித்து ரஜினி உளறிவைக்கவும், அதை தி.மு.க குடும்பப் பிரமுகர் தரப்பு தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டது. ரஜினியைச் சந்தித்தபோது இதுகுறித்து குருமூர்த்தி கடிந்துகொண்டிருக்கிறார். மேலும் ரஜினியிடம், ‘உங்க உடல்நிலையை நீங்க கவனிக்கணும்கிறது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதுக்காக, அரசியல்லருந்து முழுவதுமாக நீங்க ஒதுங்குறது சரியா இருக்காது. 1996 சட்டமன்றத் தேர்தலப்போ வாய்ஸ் கொடுத்த மாதிரி, 2021 தேர்தலுக்கும் வாய்ஸ் கொடுங்க போதும்’ என்றாராம் குருமூர்த்தி.’’

மிஸ்டர் கழுகு: “வாய்ஸ் கொடுங்க போதும்!” - ரஜினிக்கு ஆடிட்டர் அட்வைஸ்

‘‘இதற்கு ரஜினியின் ரியாக்‌ஷன்?’’

‘‘1996 தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. ஆனால், வரும் தேர்தலில் எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு எதிராக அல்லவா குருமூர்த்தி வாய்ஸ் கொடுக்கச் சொல்கிறார். ‘இது ஆளுங்கட்சியுடன் கூட்டணி போட்டதுபோல் ஆகாதா?’ என்பதுதான் ரஜினியை யோசிக்கவைத்திருக்கிறது. தாடியைத் தடவியபடி, ‘ஷ்யூர் ஷ்யூர்... யோசிச்சு சொல்றேன்’ என்று ஆடிட்டரை வழியனுப்பிவைத்தாராம். தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கை தன்னுடையதல்ல என்று கூறும் ரஜினி, அது தொடர்பாக சைபர் க்ரைமில் ஒரு புகார்கூட அளிக்காததும் விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.’’

‘‘ம்ம்... ரஜினியின் வரவை அ.தி.மு.க-வும் விரும்பவில்லைபோலிருக்கிறதே..?’’

‘‘ஆமாம். ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால், 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு விழுந்த 41.3 சதவிகித வாக்குகளில் 31 சதவிகிதம் தங்கள் பக்கம் வரும் என்று நினைக்கிறது இலைக்கட்சி. பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் சுறுசுறுப்பாக உழைத்தால், இந்த விகிதாசாரம் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் உயரவும் வாய்ப்பிருப்பதாகக் கணக்கு போடுகிறார் எடப்பாடி. இந்தத் தேர்தல், எடப்பாடி Vs ஸ்டாலின் என்று செல்லும்பட்சத்தில், வடக்கிலும் கொங்கு மண்டலத்திலும் சேர்த்து 80 தொகுதிகளை அள்ளிவிட்டால் போதும்... தி.மு.க கூட்டணிக்குள் ‘சாம தான பேத தண்ட’த்தைப் பயன்படுத்தி அரியணையையும் எட்டிப் பிடித்துவிடலாம் என்று அவர் அசாத்திய துணிச்சலில் இருக்கிறாராம். சீட் பங்கீட்டில் முரண்டு பிடித்தாலும், பா.ஜ.க-வுடன் கூட்டணி என்பதில் அ.தி.மு.க உறுதியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.”

“ஓ... துரைக்கண்ணுவின் மகன் ஏதோ அதிருப்தியில் இருக்கிறாராமே..?”

மிஸ்டர் கழுகு: “வாய்ஸ் கொடுங்க போதும்!” - ரஜினிக்கு ஆடிட்டர் அட்வைஸ்

“எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிரச்னைதான். அமைச்சர் துரைக்கண்ணுவின் இளையமகன் ஐயப்பன், அ.தி.மு.க-வில் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த துரைக்கண்ணுவின் உடல், சென்னையிலிருந்து சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்து சேர்வதற்குள், கட்சியின் லோக்கல் வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து ஐயப்பன் வெளியேறியது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க தலைமைக்கும், துரைக்கண்ணு குடும்பத்துக்கும் இடையிலான ‘கொடுக்கல் - வாங்கல்’ விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தலைமை நடந்துகொண்டவிதம் ஐயப்பனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாம். அந்த அதிருப்தியில்தான் கட்சியின் வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து அவர் திடீரென வெளியேறியதாகக் கூறுகிறார்கள். துரைக்கண்ணு கைவசமிருந்த வேளாண்துறையை, முதலில் செங்கோட்டையனுக்குதான் ஒதுக்குவதாக இருந்ததாம். ஆனால், ‘வன்னியரான துரைக்கண்ணு வகித்த துறை, மற்றொரு வன்னியருக்குத்தான் செல்ல வேண்டும்’ என்று எடப்பாடி கருதியதால், உயர்கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டதாம்.’’

‘‘ஓ... தி.மு.க செய்திகள் ஏதேனும்..?’’

‘‘திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பிரமுகர் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் பதவிக்கும், சட்டமன்றத் தேர்தல் சீட்டுக்கும் சேர்த்து மிகப்பெரிய ஸ்வீட் பாக்ஸைக் காணிக்கையாக அளித்திருக்கிறாராம். இதில், மூன்று ஸ்வீட் பாக்ஸ்களை கட்சிப் பஞ்சாயத்துகளை கவனிக்கும் முன்னணித் தலைவர் ஒருவர் கமிஷனாக எடுத்துக்கொண்டாராம். மீதி பாக்ஸ்கள்தான் தலைமைக்குச் சென்றிருக்கின்றன. மாவட்டப் பொறுப்பாளர் பட்டியலில் திருநெல்வேலிப் பிரமுகரின் பெயர் ஏறியிருப்பதை அறிந்துகொண்ட பலர், இப்போது முன்னணித் தலைவரை ஸ்வீட் பாக்ஸுடன் அணுக ஆரம்பித்திருக்கிறார்கள்.”

கழுகாருக்கு வேர்க்கடலையைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘யாரென்று புரிகிறது...’’ என்று கண்சிமிட்டினோம். கண்டுகொள்ளாமல் கடலையைக் கொறித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘நாமக்கல்லில் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை, நாமக்கல்லைச் சேர்ந்த சத்தியமூர்த்தி அண்ட் கோ என்ற நிறுவனம்தான் டெண்டர் எடுத்திருக்கிறதாம். சமீபத்தில், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்தியின் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். சோதனை தொடங்கிய மறுநாள், அதாவது அக்டோபர் 30 அன்று அவர்கள் கட்டிவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் போர்டிகோ தளம் திடீரென சரிந்து விழுந்தது. ‘தேர்தலுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்தே ஆக வேண்டும்’ என்று ஆளும்தரப்பு கொடுத்த அழுத்தமும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்கிறது அதிகாரிகள் தரப்பு.’’

ஐயப்பன்
ஐயப்பன்

‘‘ரெய்டு தொடர்பாக வேறு ஏதாவது தகவல் உண்டா?’’

‘‘நாமக்கல், ஈரோட்டை மையமாகக்கொண்டு, 1,000 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை பல்வேறு அரசுத்துறைகளில் கான்ட்ராக்ட் வேலை செய்யும் ஆறு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சத்தியமூர்த்தியின் நிறுவனம். இந்த ரெய்டு நடந்துகொண்டிருந்தபோதே, வருமான வரித்துறைக்கு நாமக்கல், ஈரோட்டிலிருந்து நிறைய ரகசியத் தகவல்களைச் சிலர் தெரிவித்தார்களாம். ‘கரூர் மாவட்டத்தில், நவம்பர் கடைசி வாரத்தில் சுமார் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள செக் டேம்கள் அமைக்க டெண்டர் விடப்படவிருக்கிறது. ஈரோடு அருகேயுள்ள பிரபல நிறுவனம் ஒன்று கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தும்விட்டது. எனவே, அந்த நிறுவனத்துக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கிற சூழ்நிலை. ஆனால், அந்த நிறுவனத்துக்குப் போதுமான தகுதியில்லை’ என்பது அந்த ரகசியத் தகவல்களில் ஒன்று. மொத்தத் தகவல்களையும் பிரித்து எடுத்து பிளான் போட்டுவருகிறதாம் வருமான வரித்துறை.’’

‘‘ம்ம்...’’

‘‘தி.மு.கழக எம்.எல்.ஏ-வான சுரேஷ்ராஜன், ‘நாகர்கோவிலில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் செப்பனிடப்படாமல் கிடப்பதால், முதல்வர் பழனிசாமி ஆய்வுக் கூட்டத்துக்காக இங்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டப்படும்’ என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால், கன்னியாகுமரியைக் கைக்குள் வைத்திருக்கும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் அப்செட். ‘நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக சரவணகுமார் பணியில் இருந்த வரைக்கும் சுரேஷ்ராஜன் அவருகிட்ட மோதிக்கிட்டு இருந்தாரு. தேவையில்லாத போராட்டங்களை சுரேஷ்ராஜன் அறிவிச்சா, சரவணகுமாரே அதற்கு பதிலடியும் கொடுத்துக்கிட்டிருந்தாரு. சுரேஷ்ராஜனுக்கு அதுக்கே நேரம் சரியா இருந்தது. இப்போ சரவணகுமார் மாற்றலாகிட்டதால சுரேஷ்ராஜன் குடைச்சல் தாங்க முடியலை’ என்று கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் தளவாய் சுந்தரம். சுரேஷ்ராஜனைச் சமாளிப்பதற்காக சரவணகுமாரை மீண்டும் நாகர்கோவிலில் களமிறக்க ஆளுங்கட்சித் தயாராகிறதாம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

மிழகத்திலேயே அதிக வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் பேரூராட்சிகள்கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம். சிவன் பெயரைக்கொண்ட உயரதிகாரி ஒருவர்தான் அந்த மாவட்டத்தில் வசூல் ஏஜென்ட்டாக இருக்கிறாராம். இவருக்குக் கீழுள்ள நான்கு இன்ஜினீயர்கள் மூலமாக, தீபாவளிக்காக ஸ்பெஷல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை நான்கு கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது. இந்த வசூலில், முருகனின் பெயர்கொண்ட உயரதிகாரிக்கு தீபாவளி கிஃப்ட் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

l டெல்டா பகுதி ஆற்றின் பெயரைக்கொண்ட பெண் போலீஸ் அதிகாரியின் கணவர், ரியல் எஸ்டேட் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கிறார். சென்னை புறநகர் பகுதியில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்வதற்காக, தன் மனைவியை சென்னைக்கு அருகிலேயே மாவட்ட எஸ்.பி-யாக உட்காரவைக்க கையில் சூட்கேஸுடன் கோட்டை வட்டாரத்தில் அலைகிறாராம்.

l சொத்துகளை முடக்கும் அதிகாரமிக்க மத்திய அரசுத்துறையின் சென்னை உயரதிகாரியாக இருப்பவர் அவர். தன் டேபிளில் மதப் புத்தகங்களை எப்போதும் வைத்திருக்கிறாராம். ஏதாவது பிரச்னைக்குப் போனால், அந்தப் புத்தகங்களின் வரிகளை மேற்கோள் காட்டி குட்டிப் பிரசங்கமே நடத்துகிறாராம். எதிரில் இருப்பவர் முகம் சுளித்தாலும் விடுவதில்லையாம். இவரின் இந்த மதப் பிரசங்கம் மத்திய அரசுக்கு பெட்டிஷனாகச் சென்றிருக்கிறது.