அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு... அப்செட்டில் எடப்பாடி!

நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு

மற்றொருபுறம் தனக்கே தெரியாமல் நடந்த இந்தச் சந்திப்பால் விஜயபாஸ்கர்மீது எடப்பாடி கடும் அப்செட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்

“தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலால் அனல் பறக்கிறது அறிவாலயம். பதவியைப் பெறுவதற்காக நடக்கும் காய்நகர்த்தல்கள் `விறுவிறு’ சினிமாவை மிஞ்சுகின்றன. அறிவிப்பு வெளியாகும்போது கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என்பதால் உமது நிருபர்களைக் கூர்ந்து கவனிக் கச் சொல்லுங்கள்” என்றபடி உரையாடலைத் தொடங்கினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு... அப்செட்டில் எடப்பாடி!

“பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பந்தமாக, பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த சிலரைக் கைதுசெய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. அந்த அமைப்பைச் சேர்ந்த வர்கள்தான் இப்படியான களேபரங்களைத் திட்டமிட்டுச் செய்வதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருக்கும் நிலையில், ‘பெட்ரோல் குண்டுகளை வீசுவது பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ அமைப்பினரா அல்லது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களா?’ என்ற சந்தேகமும் மாநில உளவுத்துறைக்கு இருக்கிறது. ‘கடந்தகாலங்களில் பா.ஜ.க-வினர் தாங்களே தங்கள் வீடு, வாகனங்களை எரித்து அரசியல் லாபம் ஈட்ட முயன்றதன் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவங்கள் இருக்கின்றன’ என்றிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘ஒடிசா, பீகாரிலிருந்து ரயிலில் வரும் சிலர், தங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட கூகுள் லொகேஷன்களில் குண்டுகளை வீசிவிட்டுச் செல்கிறார்கள்’ என மாநில உளவுத்துறைக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப் படையிலும் விசாரணை நடக்கிறது. கணியாமூர் சம்பவம் போல எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறதாம் தமிழ்நாடு போலீஸ்.”

“செப்டம்பர் 28-ம் தேதிக்குள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு, நிபந்தனை களுடன் அனுமதி அளிக்க, காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்வதால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள். அதற்கு ஏதுவாக பேரணிக்குத் தடை கேட்டு நீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார் தொல்.திருமாவளவன். இது ஒருபுறமிருக்க, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு டெல்லிக்குப் பறந்திருக்கிறார் ஆளுநர்.”

“அமைச்சரவைக் கூட்டத்தில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கிறதா?”

“பெரிதாக ஒன்றுமில்லை. பருவமழை முன்னேற்பாடுகள், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம், ஆறுமுகசாமி அறிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பேசுகையில், ‘உங்க மாவட்டத்துல பிரச்னை ஏதும் பெருசாகாம பார்த்துக்கோங்க. லோக்கல் எஸ்.பி-க்களோட தொடர்பிலேயே இருங்க’ என்று அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறாராம் முதல்வர். துடுக்குத்தனமாகப் பேசி தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் அமைச்சர் களையும் முதல்வர் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.”

“அ.தி.மு.க அலுவலகத்துக்கு திடீரென வந்திருக்கிறாரே எடப்பாடி... என்ன விஷயம்?”

மிஸ்டர் கழுகு: நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு... அப்செட்டில் எடப்பாடி!

“ஜூலை 11-ம் தேதி நடந்த வன்முறையில், அலுவலகம் சூறையாடப்பட்டது அல்லவா... அதைச் சீரமைக்கும் பணிகளைப் பார்வையிடத்தான் அவர் சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு வாரங்களில், பொதுச்செயலாளர் தேர்தலுக்காக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டவிருக்கிறார். அது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கிறார். ஒரு மாவட்டச் செயலாளர் குறைந்தது 500 பேரையாவது அழைத்து வர வேண்டுமென்றும் உத்தரவு போட்டிருக்கிறாராம். `கட்சியில் என்ன நடந்தாலும் நம்ம தலையிலதான் விடியுது’ என்று சென்னை மாவட்டச் செயலாளர்கள் புலம்பிக்கொண்டே சென்றிருக்கிறார்கள்.”

“பன்னீர் தரப்பில் என்ன நடக்கிறது?”

“பொதுக்குழு, அலுவலகத்தின் மீதான உரிமை என எந்த வழக்கும் கைகொடுக்கவில்லை என்பதால், ரொம்பவே துவண்டுபோயிருந்தார் பன்னீர். இந்த நேரத்தில், டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்தபோது இணைப்பு குறித்துப் பேசியதை பன்னீருக்கு டெல்லி மேலிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. கூடவே, ‘உங்களை நாங்கள் கைவிடவில்லை. ஆனால், உங்கள் தரப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றும் கொம்புசீவி விட்டிருக்கிறார்கள். இதையடுத்து தனது அணியை பலப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தைக் கையிலெடுக்கலாமா என்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பன்னீர். ‘நிர்வாகிகளை நியமிக்கும் பணியை நாம் இப்போது தீவிரப் படுத்தினால், அ.ம.மு.க மாதிரி தனிக்கட்சி ஆக்கிவிடுவார்கள். இணைப்புக்குத் தேவையான நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்வோம்’ என்று மீண்டும் குழப்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள். எந்த வழியைத் தேர்ந்தெடுப்பதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாராம் பன்னீர்.”

மிஸ்டர் கழுகு: நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு... அப்செட்டில் எடப்பாடி!

“பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனியே சந்தித்துப் பேசியிருக்கிறாரே...”

“ஆமாம். காரைக்குடியில் நடந்த இந்தச் சந்திப்பு, அ.தி.மு.க-வில் அனலைக் கிளப்பிவிட்டது. ‘குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ-யின் பிடி இறுகலாம்’ என்கிற பேச்சு எழுந்திருக்கும் நிலையில், நட்டாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜயபாஸ்கர். தவிர, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் என்ன உதவி தேவைப்பட்டாலும் அதைச் செய்துகொடுக்க தான் தயாராக இருப்பதாக அவர் சொன்னதை நட்டா கண்டுகொள்ளவே இல்லையாம். மற்றொருபுறம் தனக்கே தெரியாமல் நடந்த இந்தச் சந்திப்பால் விஜயபாஸ்கர்மீது எடப்பாடி கடும் அப்செட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகாருக்கு முந்திரி பக்கோடா கொடுத்தோம். அதை ருசித்தவாறே பேச்சைத் தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு... அப்செட்டில் எடப்பாடி!

“மதுரை புத்தகத் திருவிழா அரங்குகளை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருவரும் திறந்துவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூர்த்தி தொடங்கிவைத்தபோது வராத பி.டி.ஆர்., தாமதமாகத் தனியே வந்திருக்கிறார். அவர் வந்ததும் பின்னாடியே வந்திருக்கிறார் மதுரை மேயர் இந்திராணி. `பி.டி.ஆராவது, சேடப்பட்டியாரின் வீட்டுக்குப் போனதால் தாமதமாக வந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம். மதுரையில் இருந்துகொண்டே மேயர், அமைச்சர் மூர்த்தியைப் புறக்கணித்திருக்கிறார். இது நீண்டகாலமாகவே தொடர்கிறது’ என்கிறார்கள் மதுரை தி.மு.க-வினர். இதன் மூலம் அமைச்சர்கள் இடையிலான கோஷ்டி மோதல் மீண்டும் ஒருமுறை வெட்டவெளிச்சமாகியிருக்கிறது” என்ற கழுகார்...

மிஸ்டர் கழுகு: நட்டா - விஜயபாஸ்கர் சந்திப்பு... அப்செட்டில் எடப்பாடி!

“மருத்துவத்துறையில் இணை இயக்குநர் களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்துக்கு ஆகஸ்ட் மாதத்திலேயே அமைச்சரிடம் கையெழுத்து வாங்கி விட்டார்களாம். ஆனால், இப்போதுதான் அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இடைப்பட்ட காலம் முழுக்க டீலிங் நடந்ததாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் அமைச்சருக்குத் தெரியுமா அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அதிகாரிகள்...” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* போக்குவரத்துத்துறையை தன் விரலசைவில் வைத்திருக்கும் முனிவர் பிரமுகருக்கு, சென்னை எழும்பூரில் வீடு ஒன்று இருக்கிறது. மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வாரம் ஒரு முறை அங்கு விருந்துவைத்து திக்குமுக்காட வைத்துவிடுகிறாராம் முனிவர் பிரமுகர். அப்போதே டெண்டர், டிரான்ஸ்ஃபர் விவகாரங்கள் பேசி முடிக்கப்படுகின்றனவாம்.

* தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற கூவத்தூர் ஸ்டைலில் இறங்கியிருக்கிறார் தென்மாவட்ட நிர்வாகி ஒருவர். நிர்வாகிகளிடம் ஓட்டுக்கு, பதவிக்கேற்ப ஒன்று முதல் ஐந்து லட்டுகள் வரையில் விலை பேசியிருக்கிறாராம் அவர்.

* சென்னையில் முக்கிய மாவட்டம் ஒன்றுக்கு செயலாளராவதற்குத் தீவிரமாக முயன்ற நிர்வாகியிடம், மாநகராட்சி வேலைகளில் 20 சதவிகிதம் கமிஷனும், ஆவடியில் அவர் செய்துவரும் பிசினஸில் இருந்த இடையூறுகளைச் சரிசெய்து தருவதாகவும் சொல்லி போட்டியிலிருந்தே விலகவைத்திருக்கிறாராம் அமைச்சர் ஒருவர்.