அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆர்.எஸ்.எஸ் பேரணி... திருமா வைத்த செக்!

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமாவளவன்

‘திருமாவளவன் மட்டும் பேரணிக்கு அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் நம் பாடு திண்டாட்டமாகி இருக்கும்’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.”

“பதற்றமான சூழலை ஒருவழியாக கடந்துவந்திருக்கிறது தமிழ்நாடு. சாதி, மதத்தைவிட நாட்டின் சட்டம்-ஒழுங்கு முக்கியம்” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், நேரடியாக உரையாடலைத் தொடங்கினார்...

“பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முக்கியப் பங்கு உண்டு என்கிறார்கள். தன்னுடைய சமீபத்திய டெல்லி பயணத்தில், பி.எஃப்.ஐ அமைப்புக்கு எதிராகப் பல ஆவணங்கள், ஆதாரங்களை மத்திய உள்துறை அதிகாரிகளிடம் அளித்திருக்கிறார் அவர். 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவருக்கும், பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு பரிமாற்றம் நடந்திருக்கிறது. அது குறித்த தரவுகளையும் டெல்லியிடம் அளித்திருக்கிறாராம் ஆளுநர். 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தங்கள் வியூகங்களுக்கு அந்தத் தலைவர் இசைந்து போகவில்லையென்றால், ஆளுநர் அளித்த தரவுகளைவைத்தே அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படலாம் என்கிறது டெல்லி வட்டாரம்.”

மிஸ்டர் கழுகு: ஆர்.எஸ்.எஸ் பேரணி... திருமா வைத்த செக்!

“ம்...”

“கத்திமேல் நடப்பதுபோல பி.எஃப்.ஐ விவகாரத்தை கடந்துவிட்ட தமிழ்நாடு காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் பேரணியை அடுத்த சவாலாகப் பார்க்கிறது. எனவேதான், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இதனால், காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, ஏற்கெனவே பேரணிக்கு அனுமதியளித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறது காவல்துறை. தொடக்கத்தில், நீதிமன்ற உத்தரவை ஏற்று பேரணிக்கு அனுமதி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில்தான் தி.மு.க அரசு இருந்ததாம். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடக்கும் அதே அக். 2-ம் தேதி, தமிழ்நாடு முழுக்க ‘சமூக நல்லிணக்கப் பேரணி’ நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்புவிடுத்ததும், அதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்பதாக அறிவித்ததும் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. இதைச் சாக்காக வைத்து, ‘பி.எஃப்.ஐ தடையால், பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுவீச்சுகள் நிகழ்ந்திருக்கும் நிலையில், எந்தப் பேரணிக்கும் அனுமதியளிக்க முடியாது’ எனக் காவல்துறை மறுத்துவிட்டது என்கிறார்கள்.”

“ஓஹோ...”

“ `எடப்பாடி ஆட்சியிலேயே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்காதபோது, இப்போது அனுமதித்தால் அது தி.மு.க ஆட்சிக்கே கரும்புள்ளியாக மாறிவிடும்’ என்று கூட்டணிக் கட்சிகளிடமிருந்தே விமர்சனங்கள் எழுந்தன. இதை எப்படிச் சமாளிப்பது என்று தமிழ்நாடு அரசு தவித்துக்கொண்டிருந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ்-ஸின் வீறுநடைக்கு செக் வைத்திருக்கிறார் திருமா. ‘திருமாவளவன் மட்டும் பேரணிக்கு அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் நம் பாடு திண்டாட்டமாகி இருக்கும்’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.”

மிஸ்டர் கழுகு: ஆர்.எஸ்.எஸ் பேரணி... திருமா வைத்த செக்!

“தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டாரே எடப்பாடி பழனிசாமி?”

“ஆகஸ்ட் மாதமே தொடங்கியிருக்கவேண்டிய சுற்றுப்பயணம் அது. நடுவில் பன்னீருக்குச் சாதகமாக வந்த தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் அது தடைப்பட்டது. அதன் பிறகு இரு நீதிபதிகள் அமர்வு, தனக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தபோதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வரட்டும் என்று பொறுமை காத்தார் எடப்பாடி. ஆனால் தொடர்ச்சியாக, ‘சாதி சார்ந்து செயல்படுகிறார், தென்மாவட்டங்களுக்குச் செல்ல பயப்படுகிறார், தொண்டர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இல்லை’ போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், ஓ.பி.எஸ் சமூகத்தால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடுமோ என்று தயக்கம் காட்டிவந்த எடப்பாடியிடம் ‘மதுரையில் பொதுக்கூட்டம் போடலாம். நாங்க பார்த்துக் கொள்கிறோம்’ என நந்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் போன்றோரும் தைரியமூட்டினார்களாம்.”

“ஆனாலும், எடப்பாடிக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றனவே?”

“மதுரையில் பொதுக்கூட்டம் என்று எடப்பாடி தரப்பு அறிவித்ததுமே, அதற்கு எதிராக என்ன செய்யலாம் என்று ஓ.பி.எஸ் தரப்பு ஆலோசனை செய்திருக்கிறது. அதன்படி, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டால் முக்குலத்தோர் மக்கள் வஞ்சிக்கப்பட்டதாக போஸ்டர் ஒட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படிதான், அனைத்து மறவர் கூட்டமைப்பு சார்பாக எடப்பாடி பயணிக்கும் நெடுஞ்சாலைகளில் ஆர்.பி.உதயகுமார் ஒட்டிய போஸ்டர்கள் மீது எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது எதிர்பார்த்ததுதான் என்பதால், எடப்பாடி தரப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் தேவர் ஜெயந்தியை மையமாக வைத்து அடுத்த சுற்றுப்பயணத்துக்கும் தயாராகிறாராம் எடப்பாடி...”

“அ.தி.மு.க-வின் டெல்லி முகம் யார் என்ற போட்டி வேறு தொடங்கியிருக்கிறதே?”

மிஸ்டர் கழுகு: ஆர்.எஸ்.எஸ் பேரணி... திருமா வைத்த செக்!

“ஜெயலலிதா காலத்திலேயே டெல்லியில் அ.தி.மு.க-வின் முகமாக இருந்தவர் தம்பிதுரை. தற்போது அவருக்கும் எடப்பாடிக்கும் ஒத்துவரவில்லை என்கிறார்கள். இதனால்தான், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சமீபத்தில் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லிக்குச் சென்ற எடப்பாடி, சி.வி.சண்முகத்தை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது அ.தி.மு.க-வின் டெல்லி முகமாக மாறிவிட சி.வி.சண்முகமும் முயல்கிறாராம். இதை ரசிக்காத தம்பிதுரை, ‘அம்மா காலத்திலிருந்து அ.தி.மு.க-வின் டெல்லி முகமாக நான்தான் இருக்கிறேன். என்னை விட்டுவிட்டு நேற்று வந்த சண்முகத்தை உடன் அழைத்துச் செல்வது நன்றாக இல்லை. டெல்லியில் யாரிடம், என்ன, எப்படிப் பேசுவது என்று சண்முகத்துக்கு ஏதாவது தெரியுமா?’ என்று எடப்பாடி காதுக்குச் செல்லும்படியே கொதித்திருக்கிறாராம்” என்ற கழுகார்...

“காரைக்குடியில் நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்குச் செலவு செய்ய பெரிய தொகை ஒன்று கமலாலயத்திலிருந்து உள்ளூர் நிர்வாகி ஒருவருக்கு வந்ததாம். ஆனால், நிகழ்ச்சிக்குப் பந்தல் அமைத்தவர் தொடங்கி ஹோட்டல், மளிகைக்கடை வரைக்கும் எந்த பில்லையும் செட்டில் செய்யாமல் கம்பிநீட்டிவிட்டாராம் அந்த நிர்வாகி. அதேபோல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நட்டாவைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்து அதற்கும் சில லட்டுகளைப் பரிசாகப் பெற்றுவிட்டாராம். `ஒரேயொரு பொதுக் கூட்டம்தான்... அதிலேயே இவ்வளவு சம்பாதித்துவிட்டாரே... தான் இருந்த பழைய கட்சியில் செய்த வேலையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டாரே’ என வாய் பிளந்து நிற்கிறார்கள் சிவகங்கைக்காரர்கள்...” என்றபடி ஜூட் விட்டார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், மூத்த வழக்கறிஞரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வழக்குகளை விசாரிக்க எஸ்.பி ஒருவரும் விரைவில் நியமிக்கப்படவிருக்கிறாராம்.

* பணிவானவரின் படைத்தளபதிக்கு சிங்கப்பூரில் சொத்து இருந்திருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில், அந்தச் சொத்தை எழுதி வாங்கிவிட்டது அப்போதைய தலைமை. அந்தச் சொத்தை மீண்டும் தருகிறோம் என ஹபிபுல்லா சாலை அளித்த உத்தரவாதத்தின் பேரில்தான், தர்மயுத்தம் 2.0-வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் அந்தத் தளபதி. இப்போது, அந்த உத்தரவாதத்தைக் காப்பாற்றுவதில் ஹபிபுல்லா சாலை போக்கு காட்டுவதால், டென்ஷனில் இருக்கிறாராம் தளபதி.

* கடலோர மாவட்டத்தில் இறால் பண்ணை வைத்திருக்கும் தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவர் அதற்குரிய பல லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறாராம். பெரிய இடத்துப் பெண்மணியின் குலதெய்வக் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை முன்னின்று நடத்தியவர் என்பதால் இணைப்பைத் துண்டிக்கவும் முடியாமல், பணத்தை வசூலிக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.

* திருவேற்காடு பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு கோயில்களுக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் இடத்தை அமைச்சரும், அவருடைய மகனும் தங்களின் பினாமி கட்டுமான நிறுவனத்துக்கு லீஸுக்குக் கொடுக்கப்போகிறார்களாம். அதற்குள் 40 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வேலி அமைத்துவிட்டதாம் அந்தக் கட்டுமான நிறுவனம்.