Published:Updated:

மிஸ்டர் கழுகு: “ஒட்டுக்கேட்கிறாங்கப்பா!” - அலறும் துரைமுருகன்...

‘போன்ல யார் கூப்பிட்டாலும் அவசரக் கொடுக்கு மாதிரி பேசக் கூடாது. எல்லாத்தையும் டேப் பண்றானுங்க...’

பிரீமியம் ஸ்டோரி
கையில் முரசொலியுடன் வந்தார் கழுகார். முந்திரி பக்கோடாவை தட்டில் நிரப்பிவிட்டு, “அறிவாலயத்தில் என்ன விசேஷம்?” என்றோம். “புதிய பொறுப்பாளர்கள் நியமனம் களைகட்டுகிறது” என்று பக்கோடாவைக் கொறித்தபடி செய்திகளை வாசிக்க ஆரம்பித்தார் கழுகார்.

“ஏற்கெனவே கோவை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அமைப்புரீதியாகப் பிரிக்கப்பட்டதுபோல, இப்போது தேனி மாவட்டத்தையும் பிரித்திருக்கிறது தி.மு.க தலைமை. ஒருங்கிணைந்த தேனி மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மீது கோஷ்டிப் பூசலை வளர்ப்பதாக ஏற்கெனவே புகார் உண்டு. சமீபத்தில், தி.மு.க முதன்மைச் செயலாளர் நேரு கூட தேனி சென்று களநிலவரத்தை விசாரித்துவிட்டு வந்தார். அப்போது, ‘தேனி மாவட்டத்தில் வலுவாக இருக்கும் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாவட்டப் பொறுப்பு வழங்கினால் கட்சிக்கு நல்லது’ என்று ஐபேக் தரப்பு அறிக்கை கொடுத்ததாம். இதன் அடிப்படையில்தான் தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனை தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள் என்கிறார்கள்.”

கம்பம் ராமகிருஷ்ணன், 
தங்க தமிழ்ச்செல்வன்
கம்பம் ராமகிருஷ்ணன், தங்க தமிழ்ச்செல்வன்

“வெள்ளக்கோவில் சாமிநாதன் ஏதோ அப்செட் என்கிறார்களே..?”

“தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை உதயநிதிக்காக விட்டுக்கொடுத்தபோது, ‘தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் அமைச்சர் பதவி நிச்சயம்’ என வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு நம்பிக்கை அளிக்கப் பட்டதாம். அந்த நம்பிக்கையில், காங்கேயம் தொகுதியில் தேர்தல் வேலையைப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் ஆரம்பித்துவிட்டார். இந்தநிலையில், திடீரென ‘சேனாபதி காங்கேயம் கால்நடைகள் ஆராய்ச்சி மைய’ தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தி.மு.க-வில் ஆக்டிவ்வாக வலம்வருகிறார். சமீபத்தில், உதயநிதியைச் சந்தித்தும் பேசியிருக்கிறார். அதனால், ‘சிவசேனாபதிதான் காங்கேயம் தொகுதி தி.மு.க வேட்பாளர்’ என்று திருப்பூர் மாவட்டத்தில் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால்தான், சாமிநாதன் அப்செட்!”

“ம்ம்... பாளையங்கோட்டையில் உதயநிதி போட்டியிடப் போவதாக ஒரு தகவல் ஓடுகிறதே..?”

வெள்ளக்கோவில் சாமிநாதன்
வெள்ளக்கோவில் சாமிநாதன்

“அதுவும் உள்குத்து அரசியல்தான். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து நான்காவது முறையாக இருக்கிறார் டி.பி.எம்.மைதீன்கான். இந்தத் தொகுதியைக் குறிவைத்து, நெல்லை தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் பலமுறை முட்டிமோதியபோதும், மைதீன்கானை அசைக்க முடியவில்லை. மைதீன்கானுக்கு மாற்றாக வேறொருவரை வேட்பாளராக நிறுத்தும் ஐடியாவும் தி.மு.க தலைமைக்கு இல்லை. இந்தநிலையில்தான், ‘பாளையங்கோட்டைத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும்’ என்று அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்கள் உள்குத்து விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை உதயநிதி ஸ்டாலினிடமும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ‘எனக்குக் கிடைக்காதது, உனக்கும் கிடைக்கக் கூடாது என்கிற உக்கிர அரசியல் இது’ என்கிறார்கள் நெல்லை உடன்பிறப்புகள்.”

“ஓஹோ... ஊட்டி தி.மு.க-வில் என்ன பஞ்சாயத்து?”

“எல்லாம் சீட்டுக்காக நடக்கும் பஞ்சாயத்துதான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய தி.மு.க மாவட்டச் செயலாளர் முபாரக், வரவிருக்கும் தேர்தலில் தன் மகன் வாசிம் ராஜாவை களமிறக்கக் காய் நகர்த்துகிறாராம். சமீபத்தில் ஊட்டியில் நடந்த கருணாநிதி சிலை திறப்புவிழாவில் முன்வரிசையில் தன் மகனை நிற்கவைத்து நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களிலும் தன் வாரிசை களமிறிக்கிவருகிறார். இதற்கிடையே முபாரக்கின் எதிர்கோஷ்டியான முன்னாள் அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனும், தன் மகளுக்கு குன்னூர் தொகுதி எம்.எல்.ஏ சீட்‌ கேட்க முடிவெடுத்திருப்பதால் நீலகிரி தி.மு.க தகிக்கிறது” என்ற கழுகாருக்கு மணக்க மணக்க ஃபில்டர் காபியை நீட்டினோம். நறுமணத்தில் லயித்த கழுகார்,

“தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அரண்டு போயிருக்கிறார் தெரியுமா?” என்று காபியை உறிஞ்சியபடி செய்தியைத் தொடர்ந்தார்.

“துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், ‘புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறி என்னை இரண்டு பேர் சந்தித்தனர். எனக்குப் பாதுகாப்பு இல்லை’ என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் ‘திகில் கதை’ கிளப்பினார். இந்தப் புகாரில் உண்மை இல்லை என்று டெல்லி போலீஸ் மேலிடத்தில் தெரிவித்துவிட்டது. இதன் எதிரொலியாகத்தான் துரைமுருகனின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன், வங்கி மேலாளர் தயாநிதி ஆகியோர்மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.”

மிஸ்டர் கழுகு: “ஒட்டுக்கேட்கிறாங்கப்பா!” - அலறும் துரைமுருகன்...

“இதெல்லாம் தெரிந்த விஷயம்தானே...”

“பொறும்... மேலே சொன்னது வெறும் ட்ரெய்லர்தானாம். மெயின் பிக்சர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. சி.பி.ஐ-யின் அதிரடியைத் தொடர்ந்து, இதே வழக்கில் சட்டவிரோத மாகப் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறதா என்று அமலாக்கத்துறையும் தன் பங்குக்கு துளைத்தெடுக்கத் தயாராகிறதாம். இதுதவிர துரைமுருகன், அவரின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் இருவருக்கும் நெருக்கமான பத்துக்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் அலைபேசிகள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தனக்கு விசுவாசமாக இருக்கும் சில அதிகாரிகள் மூலம் தெரிந்துகொண்ட துரைமுருகன் தன் மகனிடம், ‘போன்ல யார் கூப்பிட்டாலும் அவசரக் கொடுக்கு மாதிரி பேசக் கூடாது. எல்லாத்தையும் டேப் பண்றானுங்க...’ என்று கண்டித்திருக்கிறாராம்!”

“பிள்ளையைப் பெத்தா கண்ணீரு என்பது இதுதான்போல... சரி, அ.தி.மு.க-வில் நிலவரம் எப்படியிருக்கிறது?”

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

“மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி-யாக இருக்கும் வைத்திலிங்கம், இந்தமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டாராம். இவருக்கு 2022, ஜூன் மாதம் வரை பதவிக்காலம் இருக்கிறது. ஒருவேளை ஒரத்தநாட்டில் வெற்றிபெற்றால், எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிடுவது... இல்லையென்றால் எம்.பி பதவியிலேயே நீடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம். இதனால், இப்போதே ஒரத்தநாடு அ.ம.மு.க நிர்வாகிகள் பலரையும் வளைக்கும் வேலையை வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி செய்துவருவதாகத் தகவல். ஆனால், தவமணி உள்ளிட்ட சிலரின் ஆடம்பரத்தால்தான் கடந்த முறை ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் தோல்வியைத் தழுவினார். இப்போதும் அந்த நபர்களின் தலையீடு கட்சிக்குள் அதிகரித்துவிட்டது என்று அ.தி.மு.க-வினர் புலம்புகிறார்கள்.”

“அ.தி.மு.க தலைமையில் ஏற்பட்ட பஞ்சாயத்தால், கன்னியாகுமரி அ.தி.மு.க குஷியில் திளைக்கிறதாமே?”

“உமக்கும் தெரிந்துவிட்டதா... கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோகன் உற்சாகத்தில் இருக்கிறார். அவர் பொறுப்புக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் அழகேசனைக் கொண்டுவருவதற்கு தளவாய் சுந்தரம் மூவ் செய்துவந்தார். மறுமுனையில் நாஞ்சில் கோலப்பன் என்பவரை மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குக் கொண்டுவர பன்னீர் தரப்பு முயன்றது. அதனால், அசோகன் பதவி காலியாகிவிடும் என்று கன்னியாகுமரியில் பரபரப்பு நிலவிய சூழலில், தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் அந்த நடவடிக்கை தள்ளிப்போயிருக்கிறதாம். இதுதான் அசோகனின் மகிழ்ச்சிக்குக் காரணம்!” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவர் அந்தஸ்திலிருந்த விஜயகுமார் ஒய்வுபெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியிருக்கிறார்கள். ‘ஜெயந்த் முரளி இடத்துக்கு யாரை நியமிக்கலாம்?’ என்று முதல்வர் பழனிசாமி ஆலோசித்தபோது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் ராஜேஸ்தாஸின் பெயரை டி.ஜி.பி திரிபாதி பரிந்துரைத்தாராம். ஆனால், ராஜேஸ்தாஸின் மனைவி பீலா ராஜேஷ் சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்தபோது, அவரது நடவடிக்கைகள் முதல்வருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அங்கேயிருந்து பீலா மாற்றப்பட்டார். அப்படியிருக்கும்போது ராஜேஸ்தாஸை முக்கியப் பொறுப்பில் நியமிக்கலாமா என்று முதல்வர் தயங்கினாராம். ஒருவழியாக முதல்வரை திரிபாதி சமாதானப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள். இன்னொரு கொசுறு தகவல்... திரிபாதியும் ராஜேஸ்தாஸும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கண்ணடித்தபடி விண்ணில் பறந்தார் கழுகார்.

***

“சொந்த வீடு அமையணும்!” - பன்னீர் வேண்டுதல்

சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் சிறுவாபுரி முருகனை தரிசித்தால் சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை. சமீபத்தில் பன்னீரைச் சந்தித்த ஜோதிடர் ஒருவர், ‘உங்களைப் பொறுத்த வரைக்கும் சொந்த வீடுங்கிறது அ.தி.மு.க கட்சிதான். அந்தச் சொந்த வீடு உங்களுக்கு வரணும்னு சிறுவாபுரி முருகன்கிட்ட நேர்ல வேண்டிக்கோங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்று ஆலோசனை வழங்கினாராம். இதையடுத்துதான், அக்டோபர் 1-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் இருக்கும் முருகனை தரிசித்திருக்கிறார் பன்னீர். சொந்த வீடு கனவு பலிக்குமா என்பதுதான் தெரியவில்லை!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* பன்னீரின் பாய்ச்சலுக்குப் பின்னால் அவருடைய மகன் ரவீந்திரநாத் இருப்பதாகச் சொல்கிறார்கள். ரவீந்திரநாத்துக்கு பா.ஜ.க நெட்வொர்க்குகளை டெல்லியில் ஏற்படுத்திக் கொடுப்பது சசிகலா புஷ்பாவாம்.

* புதுச்சேரி காங்கிரஸ் அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தை வளைப்பதற்கு பா.ஜ.க முயல்கிறதாம். இந்தச் செய்தியை அவர் மறுத்திருக்கும்போதிலும், சென்னை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பேர் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல். பா.ஜ.க-வில் இணைந்தால் முதல்வர் பதவி உறுதி என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

* மூன்று நாள்களாக சென்னை ராயப்பேட்டை அ.ம.மு.க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் தலைகாட்டாத தினகரன், இரண்டு நாள்கள் பெங்களூரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி, சிறைத்துறை தொடர்புடைய சில முக்கியப் புள்ளிகளைச் சந்தித்தாராம். தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி கிளம்பி புதுச்சேரி பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாராம்.

* தமிழகத்தின் பிரதான கட்சி ஒன்றில் மெயின் ‘சப்ளையர்’ அவர். சமீபத்தில் அந்தக் கட்சியில் பிரயளம் ஏற்பட்டபோது, தென் மாவட்ட பிரமுகர் ஒருவரை அடிக்கக் கை ஓங்கியிருக்கிறார் சப்ளையர். அதிர்ந்துபோன தென் மாவட்ட பிரமுகர், இது குறித்து தனது கோஷ்டித் தலைவரிடம் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆந்திரா எல்லையிலும், சென்னையின் மத்தியப் பகுதியிலும் சப்ளையர் நடத்திவரும் அந்தரங்க பிசினஸ் விவகாரங்களைத் தோண்டியெடுக்கச் சொல்லியிருக்கிறாராம் கோஷ்டித் தலைவர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு