Published:Updated:

மிஸ்டர் கழுகு: கட்டி கட்டியாகத் தங்கம்... அமலாக்கத்துறை வலையில் மாஜி!

விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
விஜயபாஸ்கர்

பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விழுப்புரம் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

மிஸ்டர் கழுகு: கட்டி கட்டியாகத் தங்கம்... அமலாக்கத்துறை வலையில் மாஜி!

பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விழுப்புரம் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

Published:Updated:
விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
விஜயபாஸ்கர்

“நாள்தோறும் ரசிகன்... பாராட்டும் கலைஞன்... காவல்கள் எனக்கில்லையே...” - இளையராஜாவின் இசையில் லயித்திருந்தபோது சத்தமே இல்லாமல் வந்தமர்ந்த கழுகார், “ஆனால், வி.ஐ.பி ஒருவர் தனக்குக் காவல் தேவை என டெல்லிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்” என்றார். ஆவிபறக்கும் டீயை கழுகாரிடம் நீட்டியபடி “யார் அந்த வி.ஐ.பி?” என்றோம்.

“வேறு யார்? தமிழக பா.ஜ.க தலைவர்தான்... தமிழகத்தில் பலரும் அவருடன் கருத்து முரண்பாட்டுடன் இருப்பதால் அவரது பாதுகாப்புக்குச் சிக்கல் ஏற்படலாம் என்று அவரின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து மத்திய அரசுக்குக் கடிதம் சென்றிருக்கிறது. அதாவது, தங்கள் தலைவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம்வர வேண்டும் என்பதே அவரின் ஆதரவாளர்களின் விருப்பமாக இருக்கிறது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இது பற்றி தமிழக ஐ.பி-யிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கும் முடிவை மத்திய அரசு எடுக்கும் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: கட்டி கட்டியாகத் தங்கம்... அமலாக்கத்துறை வலையில் மாஜி!

“அமலாக்கப் பிரிவால் மாஜி அமைச்சருக்கு சிக்கலாமே?”

“ஆமாம். கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர், ‘முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ‘கட்டி கட்டியாகத் தங்கம் வாங்கிக் கொடுத்தேன். அதற்குரிய பணத்தை அவர் தரவில்லை’ என்று குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தார். சமீபத்தில் ஷர்மிளாவை வேறொரு வழக்கில் கொச்சி அமலாக்கத்துறை விசாரித்தபோது, விஜயபாஸ்கருக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் ஷர்மிளா. அதாவது, விஜயபாஸ்கருக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தங்கம் கைமாறியது என்கிற விவரங்களையெல்லாம் அமலாக்கத்துறையிடம் புட்டு புட்டு வைத்திருக்கிறாராம். இதனால், கடும் பதற்றத்தில் இருக்கிறது விஜயபாஸ்கர் தரப்பு!”

“மின்வாரியத்தில் சர்ச்சைகள் ஓயாது போலிருக்கிறதே!”

மிஸ்டர் கழுகு: கட்டி கட்டியாகத் தங்கம்... அமலாக்கத்துறை வலையில் மாஜி!

“தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களை விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிலக்கரி விநியோகம் செய்த இரண்டு நிறுவனங்களில், ஒரு நிறுவனம் மீண்டும் ஒப்பந்தம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இந்த இரண்டு நிறுவனங்களுமே தரமற்ற நிலக்கரியை விநியோகம் செய்ததால் ஏற்பட்ட நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல... சேலத்து வி.ஐ.பி-யின் வாரிசை வளைத்துப்போட்டு ஏகத்துக்கும் கல்லாகட்டின. இப்போது அந்த நிறுவனங்களில் ஒன்று, துறை மேலிடத்திடம் வளமாக கவனிப்பதாகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஆனால், துறையின் மூத்த அதிகாரியோ, அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்க முடியாது என்று கறாராக இருக்கிறாராம்.”

“நிலக்கரி இருக்கட்டும்... நிலக்கரி சாம்பலைக்கூட விடவில்லையாமே?”

“ஆமாம்... வட சென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை அப்புறப்படுத்தவும், அதற்கான இயந்திரங்களை விநியோகம் செய்யவும் கடந்த பத்து ஆண்டுகளாக இரண்டெழுத்து நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துவந்தது. சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் இந்தத் துறையில் முன்னணியிலுள்ள மூன்றெழுத்து நிறுவனம் ஒன்று இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைக் குறைந்த விலைக்கு எடுத்தது. ஆனால், ஆட்சி மாறிய பிறகு இரண்டெழுத்து நிறுவனம் இப்போது ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துக்கு ஏகத்துக்கும் குடைச்சல் கொடுக்கிறதாம். இதற்குச் சில அதிகாரிகளும் உடந்தையாம்.”

“அப்படியா!”

“இன்னும் இருக்கிறது கேளும்... சமீபத்தில் இதே துறையில் 55 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டெண்டர் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரை எடுப்பதற்கும் மூன்றெழுத்து நிறுவனம் முயன்று, அரசு நிர்ணயித்த தொகையைவிட குறைந்த கட்டணத்தை ‘கோட்’ செய்திருக்கிறது. ஆனால், இரண்டெழுத்து நிறுவனமோ, தங்களைத் தவிர வேறு யாரும் அந்த டெண்டரை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக துறையின் மேலிடத்தை கவனித்து, டெண்டர் விதிமுறைகளையே வளைத்துவிட்டது. இதன் மூலம் விரைவில் நடக்கவிருக்கும் டெண்டரில் இரண்டெழுத்து நிறுவனம்தான் அந்த ஒப்பந்தத்தை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கொதித்துப்போயிருக்கும் மூன்றெழுத்து நிறுவனம் நியாயம் கேட்டு நீதிமன்றப் படியேறத் தயாராகிவருகிறது.”

“கோட்டைப் பக்கம் கழுகார் தலை தென்பட்டதாமே!”

“பீட் பார்க்கும் நிருபர் தகவல் சொல்லிவிட்டாராக்கும்! எல்லாம் மொட்டைக் கடிதம் விவகாரம்தான். பல்வேறு துறைகளிலிருந்தும் மொட்டைக் கடிதங்கள் ஏராளமாக வருகின்றன. என்னவென்று விசாரிக்க முதல்வர் அலுவலகம் சென்றால், அங்கேயும் அதே பஞ்சாயத்துதானாம். பவர்ஃபுல்லான துறையிலுள்ள சில அதிகாரிகளைப் பற்றி முதல்வருக்குக் கத்தை கத்தையாக மொட்டைக் கடிதங்கள் சென்றுள்ளன. கடுப்பான முதல்வர் உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். விசாரணையில், ‘மொட்டைக் கடிதங்களை அனுப்புவதே சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான். பசையான துறை கிடைக்காத விரக்தியில் இப்படி அனுப்புகிறார்கள்’ என்று தகவல் சொன்னதாம் உளவுத்துறை. இதையடுத்து, மொட்டைக் கடிதங்கள் போட்ட அதிகாரிகளின் பட்டியலைக் கேட்டிருக்கிறது முதல்வர் அலுவலகம்!” என்ற கழுகாருக்கு சூடான மசால் வடையைக் கொடுத்தோம். அதைத் கடித்துக்கொண்டே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

“பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விழுப்புரம் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அக்டோபர் 4-ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டி.ஜி.பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்ற எல்லைக்குள் வராது; வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று வாதிட்டார். அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்.பி தரப்பில், ‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; எனவே, வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ‘இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் இருக்கிறது; எஸ்.பி-யை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது’ என்று உத்தரவிட்டிருக்கிறது. எப்படியாவது இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்று சிறப்பு டி.ஜி.பி தரப்பில் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள்... எதுவும் நடக்கவில்லை.”

மிஸ்டர் கழுகு: கட்டி கட்டியாகத் தங்கம்... அமலாக்கத்துறை வலையில் மாஜி!

“அ.தி.மு.க-வில் புது டீம் ஒன்று உருவாகிறதாமே!”

“கடந்த மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் தி.நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகக் கூடிப் பேசியிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தங்கள் சிக்கல்களை யெல்லாம் தீர்த்துக்கொள்ள கட்சிக்குள்ளேயே ஒரு தனி டீம் அமைப்பதுதான் இவர்களின் நோக்கமாம். இருப்பதிலேயே பணக்கார எம்.எல்.ஏ., சுத்தமான துறையைக் கவனித்தவர், கோட்டை நபர், முன்னாள் செய்திப் பிரமுகர், விவசாய பிரமுகர் என ஐந்து பேர் இந்த அணியில் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறார்கள். விஷயம் இப்போது எடப்பாடிக்கு லீக் ஆனதால், அவர் தரப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* வெண்மைத்துறைப் பிரமுகரின் தொகுதியிலுள்ள நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ‘மாநகராட்சிக்கு மேயரே நான்தான்’ என்று இப்போதே கோதாவில் இறங்கிவிட்டாராம் பிரமுகரின் வாரிசு. இவரது டார்ச்சர் தாங்க முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் பலரும் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துவருகிறார்களாம்.

* ‘ஒளிமயமான’ துறையில், மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு கடந்த மார்ச் மாதமே பில்கள் க்ளியர் செய்யப்பட்டனவாம். ஆனால், க்ளியர் செய்யப்பட்ட பில்களுக்கு பணம் மட்டும் செல்லவில்லையாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது குறித்து துறை அமைச்சரிடம் கேட்டால், ‘அஞ்சு பர்சன்ட் வேண்டும்’ என்று கண்டிஷன் வந்து விழுந்ததாம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சில நிறுவனங்களுக்கு வரவேண்டிய தொகையும் தொங்கலில் நிற்பதால், மத்திய அரசின் பார்வைக்கு விவகாரத்தைக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளன சில நிறுவனங்கள்!

* முன்னாள் பெண் மாஜிக்கு தண்டனை விதிக்கப்பட்டது தெரிந்து அப்செட்டில் இருக்கிறாராம் மேலிடத்து மேடம். கடந்த காலங்களில் அவருக்கு ஆல் இன் ஆலாக இருந்தது அந்த முன்னாள் பெண் மாஜிதானாம்!