அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: உடுப்பி... கே.சி.பி சந்திப்பு... வேகமெடுக்கும் ஓ.பி.எஸ்!

ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ்

சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், கே.சி.பழனிசாமியை வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்

“தி.மு.க ஆட்சியின் அங்கமான அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை தங்கள் சொல்லாலும் செயலாலும் சர்ச்சையில் சிக்குவதும், அவர்களை எச்சரிக்கும்விதமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதும் மாறி மாறி நடக்கின்றன. ஆனால், தி.மு.க-வினர் யாரும் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை” என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

“சமீபத்தில்கூட ஓர்அறிக்கை விட்டிருக்கிறாரே?!”

“அதுவும்கூட காரமாக இல்லை. ‘நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ இடமளிக்கும் வகையில் நடந்துகொண்டதாக என் கவனத்துக்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கச் சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்’ என சாஃப்ட் டோனில்தான் எச்சரிக்கை விடுத்திருந்தார்... அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட, ‘கேமரா, மைக் இருப்பதை நினைவில் வைத்துக்கொண்டு பேசுங்கள்’ என்றுதான் சொல்லியிருக்கிறார். ‘இனி இப்படி பேசவே கூடாது’ எனக் கண்டிக்காமல் இப்படி சாஃப்டாகப் பேசினால் யார் கேட்பார்கள்?”

“அது சரி... தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு மத்திய அரசு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே?”

மிஸ்டர் கழுகு: உடுப்பி... கே.சி.பி சந்திப்பு... வேகமெடுக்கும் ஓ.பி.எஸ்!

“ஆமாம்... கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. அவர்மீது பிரதமர் மோடிக்குப் பாசப் பார்வை உண்டென்பதால், இந்தப் பதவி வழங்கப்பட்டதாம். கட்சியிலும், அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி ‘கன்ஃபார்ம்’ என்கிறது அறிவாலய வட்டாரம். அக்டோபர் 6-ம் தேதி அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்துவது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. து.பொ.செ பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதால், அந்தப் பதவி கனிமொழிக்கு வழங்கப்படவிருக்கிறது. அமைச்சர் எ.வ.வேலுவும் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்கிறார்கள்.

அறிவாலயத்திலேயே கனிமொழிக்குத் தனி அறை ஒதுக்கப்படவிருக்கிறதாம். ‘அதனாலெல்லாம் எந்தப் பயனும் இல்லை. கட்சித் தொண்டர்களுக்கும் தலைமைக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாக ஆரம்பித்துவிட்டது. கருணாநிதியைப் போல, ஸ்டாலினால் தினமும் அறிவாலயம் போக முடியவில்லை. அதற்கு அவரது பணிச்சுமை காரணமாக இருக்கலாம். இனி, கனிமொழி யிடமாவது அந்தப் பொறுப்பை ஒப்படைத்து, நாள்தோறும் தொண்டர்களைச் சந்தித்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியை கவனிக்கச் சொல்லலாம். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தப் பதவியைக் கொடுத்தற்குப் பலன் இருக்கும். அதுமட்டுமல்ல... வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் தெம்பாக எதிர்கொள்ள முடியும்’ என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.”

“கனிமொழி து.பொ.செ ஆகிவிட்டால், மகளிரணி பொறுப்பு யாருக்கு?”

“முன்னாள் அமைச்சர் தமிழரசி எம்.எல்.ஏ., கன்னியாகுமரி முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரையில் இருக்கின்றனவாம். இருவரில் ஹெலன் டேவிட்சன் வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்கிறார்கள். கனிமொழியும் இவரது பெயரைத்தான் பரிந்துரை செய்திருக்கிறார் என்கிறார்கள். இதற்கிடையே மேலிடத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழச்சி தங்கபாண்டியனும் இன்னொரு பக்கம் முயன்றுவருகிறாராம்” என்ற கழுகாருக்கு வறுத்த முந்திரிப் பருப்புகளைக் கொடுத்தோம். ருசித்துச் சாப்பிட்டவர் அ.தி.மு.க செய்திகளுக்குத் தாவினார்...

மிஸ்டர் கழுகு: உடுப்பி... கே.சி.பி சந்திப்பு... வேகமெடுக்கும் ஓ.பி.எஸ்!

“கட்சியின் ஐடி விங் செயல்பாட்டைத் தீவிரமாக்கச் சொல்லியிருக்கிறது எடப்பாடி தரப்பு. அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் தலைமையில் திருச்சி மண்டல, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட ஐடி விங் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. இன்னொரு பக்கம், பன்னீரின் புகைப்படத்தைத் தலைமை, மாவட்ட அலுவலகங்களிலிருந்து அகற்றியதைப்போல அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட கட்சியின் மற்ற பிரிவுகளின் அலுவலகங்களிலும் நீக்கவும் எடப்பாடி தரப்பு உத்தரவிட்டிருக்கிறது.”

“இங்கே இவ்வளவு அமளி துமளி நடந்துகொண்டிருக்கையில், பன்னீர் திடீரென கர்நாடக மாநிலம் உடுப்பிக்குப் போயிருந்தாரே?”

“தன் மனைவிக்குத் திதி கொடுப்பதற்காகவே அவர் குடும்பத்துடன் உடுப்பிக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். கொல்லூர் மூகாம்பிகை கோயிலிலும் வழிபாடு செய்திருக்கிறார் பன்னீர். ஆனால், பயணத்துக்கு பக்தி மட்டும் காரணமில்லையாம். சமீபத்தில் காசிக்குச் சென்றிருந்த பன்னீர், பா.ஜ.க-வின் தேசிய அமைப்புச் செயலாளரும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான பி.எல்.சந்தோஷின் ஆட்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படிதான், உடுப்பியில் சில பா.ஜ.க முக்கியஸ்தர்களை அவர் சந்தித்ததாகச் சொல்கிறார்கள்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அந்த பா.ஜ.க ஆட்களிடம் யோசனை கேட்டாராம் பன்னீர். என்ன சொன்னார்களோ தெரியவில்லை... வேகமெடுக்கிறார் பன்னீர். அடுத்தகட்ட நிர்வாகிகள் லிஸ்ட்டை அறிவித்துவிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் மாவட்டம்தோறும் நடத்த அவர் மும்முரமாவதாகத் தகவல்.”

“முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியையும் பன்னீர் தரப்பு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாமே?”

“ஆமாம், சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், கே.சி.பழனிசாமியை வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தங்கள் அணியில், துணை ஒருங்கிணைப்பாளர் அல்லது கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி தருவதாகச் சொல்லி தூண்டில் போட்டார்களாம். ஆனால், கே.சி.பழனிசாமி சிக்கவில்லையாம். ‘டி.டி.வி.தினகரன் செய்த அதே தவறைத்தான் நீங்களும் செய்கிறீர்கள். நீங்கள் தி.மு.க., பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்ப்பதே இல்லை. ஒரு சமூகத்துக்கான பிரிவாக ஓ.பி.எஸ் அணி மாறிவிட்டது. அதைச் சரிசெய்வதற்காக என்னை அழைக்கிறீர்கள். என்னுடைய சீனியாரிட்டிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தந்தால் ஓ.கே’ என்றிருக்கிறார் கே.சி.பி. எடுத்ததுமே, தன்னுடைய பதவியைக் கேட்பார் என்று வைத்திலிங்கம் தரப்பு எதிர்பார்க்கவே இல்லையாம். என்ன முடிவெடுப்பதெனத் தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறாராம் பன்னீர்.”

மிஸ்டர் கழுகு: உடுப்பி... கே.சி.பி சந்திப்பு... வேகமெடுக்கும் ஓ.பி.எஸ்!

“இங்கே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே எடப்பாடி தரப்பு அய்யாதுரையை தூக்கியிருக்கிறதே?”

“ஆமாம். தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க சென்று அங்கே தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த அய்யாதுரை பாண்டியன் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். அ.ம.மு.க-வில் இருந்தவரை, பா.ஜ.க-வுக்கு இழுக்க முயன்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட இசக்கி சுப்பையா, அய்யாதுரையிடம் நேரடியாகப் பேசி, மாவட்டப் பொறுப்போடு, பக்கத்து மாவட்டத்தில் எம்.பி சீட்டும் வாங்கித்தருவதாக உறுதியளித்திருக்கிறார். இதையடுத்தே சேலத்துக்கு நேரில் போய் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் அய்யாதுரை. இணைந்த வுடனேயே கடையநல்லூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அய்யாதுரையின் வருகை பொருளாதாரரீதியிலும், சமூகரீதியிலும் பெரிய பலமாக இருக்கும் என நினைக்கிறது எடப்பாடி தரப்பு” என்ற கழுகார்...

“கொடுமை கொடுமையென்று ஆலயத்துக்குப் போனால்... அங்கே ஒரு கொடுமை கதையாக... அறிவாலயத்தில் மன்னர் பிரமுகரின் அத்துமீறல் அதிகரித்துக்கொண்டே போகிறதாம்... உட்கட்சி விவகாரங்களைத் தீர்ப்பதில் நடுநிலையோடு நடந்துகொள்வார் என்று எண்ணித்தான் தலைமை அவரை நியமித்தது. ஆனால், அவரோ தனக்கு வேண்டியவர்களிடம் ஒரு மாதிரியும், வேண்டாதவர்களிடம் வேறு மாதிரியும் நடந்து கொள்கிறாராம். புண்படுத்தும் வார்த்தைகளையும் பொசுக்கெனப் பயன்படுத்திவிடுகிறாராம். இதனால் அறிவாலயத்தில் அவர் தன் கேபினில் இருந்தால், அந்தப் பக்கம் தலைகாட்ட சீனியர்களே தயங்குகிறார்களாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னை புறநகரிலுள்ள இரண்டு தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் சாதியைச் சொல்லி திட்டிக் கொண்ட விவகாரம், கட்சித் தலைமைக்கும் புகாராகச் சென்றிருக்கிறது. இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அமைச்சர் ஒருவர் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

* சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த தேன்மொழி, வடக்கு மண்டல ஐ.ஜி-யாக மாற்றப்பட்டு ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மீண்டும் அவரை சி.பி.சி.ஐ.டி-யின் கொடநாடு வழக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரியாகத் தூக்கியடித்திருக்கிறார்கள். இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியின் நிழலானவர் இருக் கிறாராம். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், நிழலானவர் பேச்சைக் கேட்டு, மாயோன் அதிகாரி ஒருவர் சர்ச்சையான வழக்கைப் போட்டு, அந்தச் சிக்கலால் டம்மியான பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதே, ‘மீண்டும் நல்ல போஸ்ட்டிங் உங்களைத் தேடிவரும்’ என்று அவருக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டதாம். அவரை வடக்கு மண்டல ஐ.ஜி ஆக்கவே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பந்தாடப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.