Published:Updated:

மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்!

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் என இரு பதவிகளுக்கும் சேர்த்து ஓட்டுக்கு ‘கால்’ நோட்டுக்கும் சற்றே அதிகமாக வெட்டச் சொன்னதாம் தலைமை.

பிரீமியம் ஸ்டோரி

மழையில் நனைந்தபடி என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், “ஒன்பது மாவட்டங்களிலும் ‘கரன்ஸி’ மழையாமே!” என்றோம்.

தலையைத் துவட்டிக்கொண்டே செல்லமாக முறைத்த கழுகார், “ம்ம்ம்... வழக்கம்போல கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம்” என்றபடியே செய்திகளை விவரிக்கத் தொடங்கினார்...

‘‘ஒன்பது மாவட்டங்களிலும் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை கிட்டத்தட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் ரேஞ்சுக்கு டீல் செய்திருக்கிறது ஆளுங்கட்சி. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதால், பாதிக்கும் மேற்பட்ட அமைச்சரவையே இறங்கி வேலை செய்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரு பதவிகளுக்கு மட்டுமே கட்சி சின்னத்தில் போட்டியிடுவதால், அந்த இரு பதவிகளுக்கும் சேர்த்து ஒரு ஓட்டுக்கு ‘அரை’ நோட்டை வெட்டியிருக்கிறார்கள். அதிலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் வளமான துறையைக் கைவசம் வைத்திருப்பதால், வாக்காளர்களை மட்டுமல்லாமல் தொண்டர்களையும் சைவ, அசைவ விருந்து என வகை வகையாக கவனித்திருக்கிறார்கள். ஆனால்...’’

‘‘என்ன ஆனால்..?’’

மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்!

‘‘வேலூர் மாவட்டத்தில் நிலவரம் இப்படியென்றால், விழுப்புரம் மாவட்டத்திலோ உடன்பிறப்புகள் `உம்’மென்று இருக்கிறார்கள். இந்த மாவட்டத்துக்கு மஸ்தான், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகிய அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்தது தலைமை. பாக்கெட்டில் கையைவிட்டவர்கள், கடைசி வரை பர்ஸையே எடுக்கவில்லையாம். ‘வருவாய் இல்லாத துறையை வைத்துக்கொண்டு அவர்களும்தான் என்ன செய்வார்கள்?’ என்று புலம்புகிறார்கள் இவர்களின் ஆதரவாளர்கள். இதனால், தேர்தல் முடிவுகள் எப்படி வருமோ என்று அப்செட்டில் இருக்கிறார்கள் விழுப்புரம் நிர்வாகிகள்!”

‘‘ஓஹோ... அ.தி.மு.க முகாமின் மழை நிலவரத்தைச் சொல்லும்!”

‘‘ஒருசில இடங்களைத் தவிர பல இடங்களில் தூறல்கூட இல்லை என்கிறார்கள். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் என இரு பதவிகளுக்கும் சேர்த்து ஓட்டுக்கு ‘கால்’ நோட்டுக்கும் சற்றே அதிகமாக வெட்டச் சொன்னதாம் தலைமை. ஆனால், முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பேற்ற ராணிப்பேட்டையில் மட்டுமே ‘மழை’ முழுமையாகப் பொழிந்ததாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், மோகன், எம்.சி.சம்பத் ஆகியோர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் தலைகாட்டியதோடு ‘எஸ்’ஸாகிவிட்டார்கள். இதனால், வேட்பாளர்கள்கூட இறுதிக்கட்ட பிரசாரத்துக்குச் செல்லாமல் புறக்கணித்துவிட்டார்கள்!’’

மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்!

“அ.தி.மு.க மீது பா.ஜ.க புகார் அளித்திருக்கிறதாமே?’’

‘‘வழக்கமாக நடப்பதுதான்... ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எட்டு மாவட்டங்களில் பா.ஜ.க - அ.தி.மு.க இடையே உடன்பாடு ஏற்பட்டு, இடங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால், உள்ளூர் அளவில் இரு கட்சியினருக்கும் ஒத்துப்போகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே ‘பா.ஜ.க-வைக் கூட்டணியில் சேர்த்ததுதான் தோல்விக்குக் காரணம்’ என்று அ.தி.மு.க-வினர் சொல்லிவந்த நிலையில், இப்போதும் அந்த உரசல் நீடிக்கிறது. ‘பா.ஜ.க வேட்பாளர்கள் நிற்கும் பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் வேலையே பார்க்கவில்லை’ என அ.தி.மு.க தலைமைக்கும், தங்களது டெல்லி தலைமைக்கும் புகார் அனுப்பியிருக்கிறது தமிழக பா.ஜ.க.’’

“பொதுப்பணித்துறைக்குள் புகையும் வாடை அடிக்கிறதாமே!”

“உமக்கும் அந்த வாடை வந்துவிட்டதா! எல்லாம் ஒப்பந்ததாரர்களின் புகைச்சல்தான்... பொதுப்பணித்துறையில் முதல் வகுப்பு ஒப்பந்ததாரர்களாகப் பதிவுசெய்ய ‘வட்ட அளவிலுள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் போதும்’ என்கிற விதியைக் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாற்றி, சென்னையிலுள்ள முதன்மைத் தலைமைப் பொறியாளர் வசம் ஒப்படைத்தார்கள். இதனால், புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவுசெய்யவும் புதுப்பிக்கவும் பெரிதும் அவதிப்பட்டார்கள். இதையடுத்து, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின்போது துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘மீண்டும் வட்ட அளவில் அனுமதி பெறும் பழைய முறையே தொடரும்’ என்று அறிவித்தார். ஆனால், துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்திவருகிறார். எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த இவரை மட்டும் இன்னமும் மாற்றாமல் இருப்பதன் ரகசியம் என்னவோ தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்’’ என்ற கழுகாருக்கு சூடான வடையைக் கொடுத்தோம். வடையைக் கடித்தவர், ‘‘முன்னாள் உச்சப்புள்ளியின் வீடு முற்றுகையிடப்பட்ட விவகாரத்தைச் சொல்லட்டுமா?’’ என்றபடி தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்!

‘‘கடந்த ஐந்தாண்டுகளில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் ஒதுக்கப்பட்ட டெண்டர்களுக்கு அப்போதே கமிஷனைப் பெற்றுவிட்டார்கள். ஆனால், தற்போதைய துறை மேலிடம் ஒப்பந்ததாரர்களிடம் மீண்டும் கமிஷன் கேட்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன் இல்லையா... ஒப்பந்ததாரர்கள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் துறை மேலிடம் மசியாததால், ‘கடந்த ஆட்சியில் யாரிடம் கொடுத்தோமோ அவரிடமே வாங்கலாம்’ என்று முன்னாள் உச்சப்புள்ளியிடம் சென்றிருக்கிறார்கள். ‘மொத்தமாகக் கணக்கிட்டால் சுமார் 750 ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுக்கவேண்டியிருக்கிறது’ என்று அவர்கள் பொருமவே... அவர்களைத் தேற்றியவர், ‘நான் ஏதாச்சும் பண்ணப் பார்க்குறேன்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறார்.’’

‘‘திமிங்கிலங்கள் விழுங்கியவை வெளியே வருமா என்ன... பார்ப்போம்!’’

‘‘மேற்கு மண்டல மாஜியின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்ட பிறகு அதில் எந்தவொரு மூவ்மென்ட்டும் இல்லை... இது அ.தி.மு.க-வினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியின் கொள்கையைப் பரப்பும் ஒருவர் இது பற்றி அந்த மாஜியிடமே கேட்டிருக்கிறார். பலமாகச் சிரித்த அந்த மாஜி, ‘எங்கு பேச வேண்டுமோ, அங்கு பேசி எல்லா டீலிங்குகளையும் முடித்துவிட்டேன்’ என்றாராம் கூலாக. இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் எட்டியதும், கண் சிவந்துவிட்டார் முதல்வர். ‘உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும்... அப்புறம் நான் யாரென்று காட்டுகிறேன்!’ என்று கர்ஜித்திருக்கிறாராம்.’’

‘‘சின்ன மம்மி ரிட்டர்ன்ஸ் என்கிறார்கள் தொண்டர்கள் சிலர்!”

‘‘ `ஸ்ஸ்ஸ்ப்பா... முடியலைடா சாமி’ என்ற குரல்களும் கூடவே எழுவது உமக்குக் கேட்கவில்லையா! அ.தி.மு.க தொடங்கப்பட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சென்னை தலைமைக் கழகத்தில் அன்றைய தினம் நடக்கவிருக்கும் பொன்விழாவுக்கு சசிகலா அதிரடியாக என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் சில முக்கியஸ்தர்களுக்கு போன் செய்து, ‘அக்டோபர் 15-ம் தேதி சாயங்காலம் சென்னைக்கு வந்துடுங்க. 16-ம் தேதி காலை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதிக்கு சின்னம்மா மரியாதை செலுத்துறார். 17-ம் தேதி நிகழ்வு பற்றி அப்புறம் சொல்றோம்’ என்று கூறி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறாராம். இதைவைத்துத்தான், 17-ம் தேதி சசிகலா அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்துக்குச் செல்லவிருக்கிறார் என்கிற தகவல்கள் படபடக்கின்றன” என்ற கழுகார், ‘‘முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி சமீபத்தில் கனடாவிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார். விரைவில் அவர் அரசு இருக்கையில் அமரலாம் என்று தகவல்கள் வருகின்றன” என்றபடி சிறகுகளை விரித்தார்!

மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்!

2 கிலோமீட்டர் நடைப்பயணம்... துர்காவின் நேர்த்திக்கடன்!

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், அக்டோபர் 6-ம் தேதி, மகாளய அமாவாசை அன்று மாலை திருச்சி டோல் பிளாசாவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்தே சென்று, சமயபுரம் மாரியம்மனை தரிசித்திருக்கிறார். மறுநாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார். துர்காவுக்கு உதவியாக அமைச்சர் நேருவின் மகள் உடன் சென்றிருக்கிறார். இதுவும் பழைய வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் ஒரு பார்ட் என்கிறார்கள் அவரின் குடும்பத்தினர்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* சொந்தக் கட்டடத்தில் இயங்கிவந்த எதிர்க்கட்சி ஆதரவுப் பத்திரிகை, ரெய்டுக்குப் பிறகு அதிரடியாக நகரத்துக்கு வெளியே வாடகைக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. காரணம் கேட்டால், எல்லாம் கணக்கு வழக்கு கையைக் கடிக்கிறது என்கிறார்கள்... அம்மாடியோவ்!

* கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி முக்கியப் புள்ளி சம்பந்தப்பட்ட மூன்று ஆடியோ பதிவுகள் சிக்கியுள்ளனவாம். ஆடிப்போயிருக்கிறது எதிர்முகாம்.

* அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளில் முக்கியப் பங்கு வகித்த ‘பிள்ளையார்’ பிரமுகர், விரைவில் ஓய்வுபெறவிருக்கிறார். அதற்கு முன்பாக அவர்மீது விசாரணை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், சில ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியதால் விவகாரத்தை அமுக்கியதுடன், அவருக்கு நட்சத்திர ஹோட்டலில் பிரிவு உபசார விழா கொண்டாடவும் ஏற்பாடு செய்துவருகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு