Published:Updated:

மிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி! - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க

‘அடுத்தமுறை அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது கடினம்’ என்று தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் டெல்லிக்குத் தகவல் பாஸ் செய்திருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி
“விஷ்ஷ்ஷ்க்க்க்...” என்ற சப்தம். கையில் அ.தி.மு.க வழிகாட்டுதல்குழு பட்டியலுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். நமது நிருபர்கள் எழுதியிருந்த கட்டுரையைக் கழுகாரிடம் நீட்டிவிட்டு, கூடவே தட்டில் மைசூர்பாகை அடுக்கினோம். கட்டுரையை வாசித்தவர், ‘கச்சிதமாக இருக்கிறது’ என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“ஐபேக் தரப்பைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறதாம் தி.மு.க தலைமை. ஏற்கெனவே, ஆன்லைனில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளாம். போதாக்குறைக்கு, ‘தொகுதிக்கு மூன்று பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தயார் செய்கிறோம். இதில் இடம்பெற வேண்டுமானால், எங்களை கவனியுங்கள்’ என்று ஒருசில ஏரியாக்களில் ஐபேக் பெயரைச் சொல்லி வசூல்வேட்டை நடப்பதாகப் புகார்கள் செனடாப் சாலையை எட்டியிருக்கின்றன. இதனால், ஐபேக்கை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், கட்சியினரிடமிருந்தும் நேரடியாக தரவுகளைத் திரட்ட தயாராகியிருக்கிறார் ஸ்டாலின். முதற்கட்டமாக, ஐபேக் தரப்பில் நடக்கும் குளறுபடிகளைப் பட்டியலிட்டு, தலைமைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறாராம். இந்தப் புகார் பட்டியலில் பல பூதங்கள் வெளிவரலாம் என்கிறார்கள்.”

ஆ.ராசா - கனிமொழி - தயாநிதி மாறன் - துரைமுருகன்
ஆ.ராசா - கனிமொழி - தயாநிதி மாறன் - துரைமுருகன்

“ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் என்ன பிரச்னை?”

“ஆன்லைனில் பெறப்படும் உறுப்பினர் அட்டையைவைத்து, தி.மு.க உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார்கள். உறுப்பினர் அட்டையில் உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதி கட்சி நிர்வாகியின் கையெழுத்து வேண்டுமாம். ஆன்லைனில் உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு, உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகக் கட்சி சீனியர்களிடம் பேசியபோதுதான், இந்தச் சிக்கல் தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவல் ஒவ்வொரு மாவட்டமாகப் பரவி, இப்போது ஆன்லைன் மூலமாகக் கட்சி உறுப்பினராகச் சேரவே தயக்கம் காட்டுகிறார்களாம். ஏற்கெனவே, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் துவண்டுவிட்டது. இப்போது, ‘எல்லோரும் நம்முடன்’ திட்டமும் சுருண்டுவிட்டதால், ஐபேக் மீது ஸ்டாலின் குடும்பம் கோபத்தில் இருக்கிறதாம்!”

“கூட்டணிப் பேச்சுகள் பற்றியெரிகின்றன போலவே?”

“ஆமாம். பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிவைப்போம்’ என்று நெருப்பைப் பற்றவைத்திருக்கிறார். ‘அடுத்தமுறை அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது கடினம்’ என்று தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் டெல்லிக்குத் தகவல் பாஸ் செய்திருக்கிறார்கள். இதைக் கணக்கிட்டே

அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வது சந்தேகம் என்று பற்றவைத்தாராம் பொன்னார்.”

“டெல்லி பா.ஜ.க என்ன நினைக்கிறதாம்?”

மிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி! - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க

“அ.தி.மு.க-வை ஒருபக்கம் ஆட்டுவித்தாலும், தாமரை தரப்பு தி.மு.க மீதும் ஒரு கண்ணைப் பதித்திருக்கிறது. தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழற்றிவிடச் சொல்லி, டெல்லியிலிருந்து மறைமுகமாக அழுத்தங்கள் வருகின்றனவாம். தி.மு.க-வைப் பணிய வைப்பதற்காக, 2ஜி வழக்கு விசாரணையை பா.ஜ.க தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேகப்படுத்தியிருக்கிறார்கள். ‘தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கின் தீர்ப்பு வந்துவிட வேண்டும்’ என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இதனால், ஏற்கெனவே கீழ் கோர்ட்டில் அரசுத் தரப்புக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்த ஆசீர்வாதம் ஆச்சாரி, முன்னாள் தகவல் தொடர்புதுறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர், மறைந்த முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆகிய மூவரின் சாட்சியங்களை அடிப்படையாகவைத்தே தற்போது இந்த வழக்கை மேல்முறையீடு செய்திருக்கிறது சி.பி.ஐ. இவர்களின் சாட்சியங்கள் வலுவாக இருப்பதால், இந்த முறை தண்டனை உறுதியாகக் கிடைக்கும் என்று மத்திய அரசுத் தரப்பில் தி.மு.க-வுக்கு கிலியைக் கிளப்புகிறார்கள்.”

“ஓஹோ...”

“அது மட்டுமல்ல, 2ஜி வழக்கு வேகமெடுப்பது போலவே தயாநிதி மாறன் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கையும் மீண்டும் கிளப்ப சி.பி.ஐ-க்கு உத்தரவு பறந்திருக்கிறதாம். கூடவே துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக வருமான வரித்துறையின் நடவடிக்கையையும் துரிதப்படுத்த சிக்னல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம்!”

“இதுவும் மிரட்டல் வேலைதானா?”

“மிரட்டல் அல்ல, கூட்டணிக்கு நூல்விட்டிருக்கிறார்கள் என்கிறார்கள். தி.மு.க தலைவர் ஒருவரைத் தொடர்புகொண்ட டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ‘ராகுல் வேண்டுமா, ஆ.ராசா வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்றாராம்.

ஒன்று, இப்போதே சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது... அல்லது வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலாவது தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது என்கிற முனைப்பிலிருக்கிறதாம் பா.ஜ.க மேலிடம்.”

“இன்னும் என்னென்ன கணக்குகள் இருக்கின்றனவோ!”

மிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி! - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க

“2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வும் ஜெகன்மோகன் ரெட்டியும் எதிரெதிராகத் தேர்தலைச் சந்தித்தனர். பிறகு இருதரப்பும் நட்பாகிவிட்டன. சமீபத்தில்கூட மோடியை டெல்லியில் சந்தித்து 40 நிமிடங்களுக்கும் மேலாக ஜெகன் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை இணைத்துக்கொண்டு, இரண்டு அமைச்சர் பதவிகளைத் தரவும் பா.ஜ.க தயாராக இருக்கிறதாம். ஜெகனின் மாமா விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, ஜெகனின் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பான வழக்கு ஆகியவை சி.பி.ஐ வசம் நிலுவையில் இருக்கின்றன. பா.ஜ.க கூட்டணியில் ஜெகன் இணையும் பட்சத்தில், இந்த வழக்குகள் பரண்மேல் தூக்கிப் போடப்படும். இதே சலுகையை தி.மு.க-வுக்கும் தரத் தயாராக இருக்கிறது பா.ஜ.க. இதற்கு முதற்கட்டமாகத்தான் 2ஜி வழக்கைத் துரிதப்படுத்தி, நூல்விட்டிருக்கிறார்கள்” என்ற கழுகாருக்கு, சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம்.

“தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், பூண்டி துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் திருமணம் வரும் 2021, ஜனவரி 29-ம் தேதி வைக்கலாமா என்று ஆலோசனை நடக்கிறதாம். ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாகிவிடுவார் என்று அவர்களாக ஒரு கணக்கு போட்டு இந்தத் தேதியை குறித்திருக்கிறார்களாம்” என்று சொன்னபடி காபியைப் பருகியவர் “ஒரு விவகாரத்தைச் சொல்கிறேன். பெயர் கேட்காதீர்” என்று தொடர்ந்தார்.

“வடசென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா களப்பணியாற்றியபோது தொற்று ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார். திருமணமாகாத அந்த மருத்துவருக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள வயதான அம்மா மட்டும் இருக்கிறார். வண்ணாரப்பேட்டையில் இவர்கள் வசிக்கும் சொந்த வீட்டின் மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாய் இருக்குமாம். ஆளில்லாத சொத்தை ஆட்டையைப் போடலாம் என்று காய்நகர்த்திய அந்த ஆளும்கட்சி வாரிசுப் பிரமுகர், அந்த வயதான பெண்மணிக்கு 30 லட்ச ரூபாய் கொடுத்து, உறவினரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வீட்டை அபகரித்துக்கொண்டாராம். அந்தப் பிரமுகரின் ரௌடியிசத்தால் மிரண்டுபோன டாக்டர் குடும்பம், புகாரளிக்கக்கூடத் தெம்பில்லாமல் ஒடுங்கிவிட்டது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் அந்தப் பெண்மணி சார்ந்த சமூகப் பிரதிநிதிகள் சிலர், முதல்வரிடம் பெட்டிஷன் கொடுக்கத் தயாராகிறார்கள்!” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு