அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை முடக்கிவிட்டு ஜெயித்துவிடுமா பாஜக? - சீறிய பழனிசாமி, சிதறிய நிர்வாகிகள்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் பிளவால், அந்தக் கட்சியின் பெயர், சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப் பட்டிருக்கின்றன

“நல்லா கிளப்புறாங்க பீதியை...” என்று சிரித்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடான வெங்காய பஜ்ஜியைக் கொடுத்து, “யாரைச் சொல்கிறீர்?” என்றோம். “நம்ம மாநில உளவுத்துறையைத்தான்...” என்று பஜ்ஜியைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ ‘பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா... வீழ்ச்சியா?’ எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஞாயிறன்று சென்னையில் நடத்தியிருக்கிறார்கள் அந்தத் திட்டத்தின் எதிர்ப்பாளர்கள். அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்ததே வெறும் நூறு பேர்தான். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, அரங்க வாசலில் சுமார் 150 போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘விமான நிலைய எதிர்ப்பாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக உளவுத்துறை அலர்ட் நோட் அனுப்பியிருக்கு... அதனாலதான் இந்தப் பாதுகாப்பு’ என போலீஸ் அதிகாரிகள் காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘நாங்க ஏங்க முற்றுகையிடப்போறோம்... நாலு பேர் ஒண்ணாச் சேர்ந்து கூட்டம் போட்டாலே, முற்றுகையிடப் போறாங்கன்னு அர்த்தமா... உளவுத்துறை நல்லா பீதியைக் கிளப்புது’ என்று தலையிலடித்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.”

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை முடக்கிவிட்டு ஜெயித்துவிடுமா பாஜக? - சீறிய பழனிசாமி, சிதறிய நிர்வாகிகள்!

“அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன், பன்னீர் பக்கம் ஜாகை மாறிவிட்டாரே... என்ன காரணம்?”

“எடப்பாடி அணியில் அவருக்கு உரிய மரியாதை தரப்படவில்லையாம். குறிப்பாக, சென்னையிலுள்ள அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. பொன்விழா நிறைவு பொதுக்கூட்டப் பேச்சாளர்கள் பட்டியலிலும் மைத்ரேயனைப் புறக்கணித்திருக்கிறது எடப்பாடி தரப்பு. இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். தொடக்க காலம் முதலே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடன் தொடர்பிலிருப்பவர் மைத்ரேயன். ‘பன்னீருடன் சேர்ந்து செயல்படுங்கள்’ என மேலிடத்திலிருந்து வந்த சிக்னலும் ஜாகை மாறுவதற்கு ஒரு காரணமாம். டெல்லியில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என தனக்கென ஒரு லாபியை வைத்திருக்கிறார் மைத்ரேயன். பன்னீரின் டெல்லி விவகாரங்களை இனி அவர்தான் கையாள்வார் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.”

“ஆதரவாளர்களுக்குப் பதவி மழை பொழிந்த பன்னீர், இளைய மகனுக்கும் ஏதோ பதவி தரப்போகிறாராமே?”

“பன்னீர் பதவி கொடுக்க முன்வந்தாலும், சிலர் வேண்டாம் என்று தெறிக்கிறார்களாம். கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைப் பெற கே.சி.பழனிசாமி மறுத்துவிட்டதால், அந்தப் பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்து கிறாராம் பெங்களூரு புகழேந்தி. தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பதவிக்கு, அ.தி.மு.க-வின் முன்னாள் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதனைப் பொறுப்பேற்குமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் மறுத்து விட்டாராம். எனவேதான், அந்தப் பதவியை தன் இளைய மகன் ஜெயபிரதீப் வசம் பன்னீர் ஒப்படைக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை முடக்கிவிட்டு ஜெயித்துவிடுமா பாஜக? - சீறிய பழனிசாமி, சிதறிய நிர்வாகிகள்!

“ம்... எடப்பாடி பழனிசாமி தரப்பில் தகவல் ஏதுமிருக்கிறதா?”

“மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் பிளவால், அந்தக் கட்சியின் பெயர், சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப் பட்டிருக்கின்றன. ‘இந்த விஷயத்தில் தங்கள் கூட்டணியில் இருக்கும் ஷிண்டே தரப்பை நம்பவைத்து கழுத்தறுத்ததைப்போல, நம் இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்படலாம்’ என்கிற பதற்றம் அ.தி.மு.க-வுக்குள் எழுந்திருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கெல்லாம் அசரவில்லை என்கிறார்கள். சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் இது பற்றித் தன்னிடம் புலம்பிய நிர்வாகிகளிடம், ‘நம்ம சின்னத்தை முடக்கிட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல ஜெயித்துவிடுமா பா.ஜ.க... நம்ம ஒத்துழைப்பு இல்லாம ஒரு தொகுதியிலகூட அவங்க ஜெயிக்க முடியாது. இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படாதீங்க’ என்று சீறினாராம். அவர் முகத்தில் வெளிப்பட்ட கோபத்தைக் கண்டு நிர்வாகிகளே அதிர்ந்துவிட்டார்கள்.”

“ஓஹோ...”

“ஓ.பி.எஸ் பலம் பெற்றால்தானே பிரச்னை என்று அவர் தரப்பை ஒடுக்க இன்னொரு திட்டமும் வைத்திருக்கிறாராம் எடப்பாடி. சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதற்குள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பான பிரச்னையில் சபாநாயகர் ஒரு முடிவை எடுக்கவில்லையென்றால், கூட்டத் தொடரையே புறக்கணிப்பது என எடப்பாடி ஆலோசித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘பன்னீரோட இனியும் உரசிக்கிட்டு உட்கார முடியாது’ என்று தன் ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவே கடுகடுத்துவிட்டாராம் எடப்பாடி” என்ற கழுகாருக்கு, மழைக்கு இதமாக சுக்கு காபி கொடுத்தோம். பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்...

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை முடக்கிவிட்டு ஜெயித்துவிடுமா பாஜக? - சீறிய பழனிசாமி, சிதறிய நிர்வாகிகள்!

“தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்து, இலவு காத்த கிளியாக ஏமாந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அவரின் ஆசைக்கு வேட்டுவைத்ததே அமைச்சர் செந்தில் பாலாஜிதானாம். அதே பதவிக்கு, ‘முதல்’ குடும்பத்துப் பெண்மணி மூலமாக செந்தில் பாலாஜியும் காய்நகர்த்தியிருக்கிறார். அது விவாதமானபோது, ‘அ.தி.மு.க-விலிருந்து வந்தவர். அவருக்கு மாவட்டச் செயலாளர், மண்டலப் பொறுப்பாளர் பதவி கொடுத்ததே பெரிது. அவரை எப்படி துணைப் பொதுச் செயலாளராக்க முடியும்... தொடக்க காலம் தொட்டு தி.மு.க-வில் இருப்பவர்களுக்குத்தான் அந்தப் பதவியை அளிக்க வேண்டும்’ என சீனியர்கள் முட்டுக்கட்டை போட்டிருக் கிறார்கள்.’’

``அதற்கும், எ.வ.வேலு பதவிக்கு வருவதற்கும் என்ன சம்பந்தம்?’’

``அமைச்சர் எ.வ.வேலு தி.மு.க-வுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தலைமைக்கு நெருக்கமாக இருந்தாலும், அவரை தி.மு.க ரத்தமாக சீனியர்கள் இன்னும் ஏற்க வில்லையாம். ‘வேலுவுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்தால், செந்தில் பாலாஜி அந்தப் பதவியைக் கேட்பது நியாயமாகிவிடும். எனவே, இரண்டு பேருக்குமே அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம்’ என முடிவெடுக்கப்பட்டு, வேலுவின் ஆசையில் ஒரு லோடு மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டார்கள் சீனியர்கள்.”

“சரிதான்... மாவட்டம்தோறும் ‘ஓசி’ கேட்டு கூட்டம் குவிகிறதாமே?”

“ஆமாம்... தீபாவளி ஆவின் ஸ்வீட் விநியோகத்தில்தான் இந்தத் தள்ளு முள்ளு. வழக்கமாக, ஆவினில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், அரசியல் அல்லு சில்லுகளெல்லாம் கிலோ கணக்கில் ஆவின் ஸ்வீட்டுகளை அள்ளிச் செல்வார்கள். இதற்கு எந்தக் கணக்கு வழக்கும் இருந்ததில்லை. கடந்த ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி பெயரைச் சொல்லியே ஒன்றரை டன் ஸ்வீட் வாங்கியது சர்ச்சையானது. இந்த முறை, அப்படியான சர்ச்சை ஏதும் எழுந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறதாம் ஆட்சி மேலிடம். ஆனாலும், கூட்டுறவுத்துறையில் பணியாற்றிய ஊழியர்கள் தொடங்கி கரை வேட்டிகள் வரையில் ஏகத்துக்கும் முட்டி மோதுவதால், இந்தத் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. ‘200 ரூபாய் செலவழித்து ஸ்வீட் வாங்கக்கூடவா அவர்களிடம் காசில்லை... அமைச்சர் பொன்முடி சொன்ன, ஓசி இவர்களுக்கே கச்சிதமாகப் பொருந்தும்’ என்ற புலம்பலும் ஆவினில் கேட்கிறது” என்ற கழுகார்...

“தமிழகத்தில் நடந்த ‘ஆபரேஷன் மின்னல்’ ரௌடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1,310 ரௌடிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிக்கைவிட்டிருக்கிறது காவல்துறை. இவர்களில் 979 ரௌடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 331 ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆக்டிவ்வாக இருக்கும் ரௌடிகள் வழக்கம்போல இந்த ஆபரேஷனிலும் மிஸ்ஸிங்காம்... எல்லாம் அரசியல் பின்னணிதான் காரணம் என்று முணுமுணுக்கிறார்கள் காவல்துறையினர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* அகிம்சா கட்சித் தலைவர் ஒருவருக்கும், மூத்த அதிகாரி ஒருவருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது அல்லவா... விவகாரம், ஆட்சி மேலிடம் வரை கொண்டுசெல்லப்பட்டு, அந்த அதிகாரியையே மாற்ற ஏற்பாடாகியிருக்கிறது. சமாதானம் பேசவந்த அந்த அதிகாரியிடம், முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லையாம் அந்த அரசியல் தலைவர்.

* கடந்த முறை பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதில் தொடர்புடைய சில நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது. எனவே, இந்தப் பொங்கலுக்கு கூட்டுறவுத்துறையில் தயாராகும் தரமான பொருள்களோடு பணமும் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

* சர்ச்சைக்குரிய ரியல் எஸ்டேட் நிறுவனம், சென்னையைச் சுற்றியும், புதிதாக விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியிலும் வில்லங்கச் சொத்துகளை ஏக்கர் கணக்கில் வாங்கிப்போட்டிருக்கிறதாம். அதிலுள்ள சிக்கல்களைத் தீர்க்க காவல்துறையின் உதவி தேவை என்பதாலேயே, தங்களுக்கு வேண்டப்பட்ட, சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ் அதிகாரியை அந்த இடத்துக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்களாம்.