Published:Updated:

மிஸ்டர் கழுகு: சென்டிமென்ட்... காமெடி... காரசாரம்... அ.தி.மு.க ‘நவரசா’ கூட்டம்!

அ.தி.மு.க  கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க கூட்டம்

அ.தி.மு.க பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம் பற்றிய கருத்துகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசக் கூடாது’ என்று கண்டிஷன் போட்டுவிட்டார்.

மிஸ்டர் கழுகு: சென்டிமென்ட்... காமெடி... காரசாரம்... அ.தி.மு.க ‘நவரசா’ கூட்டம்!

அ.தி.மு.க பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம் பற்றிய கருத்துகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசக் கூடாது’ என்று கண்டிஷன் போட்டுவிட்டார்.

Published:Updated:
அ.தி.மு.க  கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க கூட்டம்

டி.வி-யில் காமெடி சண்டைக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கேபினுக்குள் நுழைந்தார் கழுகார். ‘‘இதைவிட காமெடி சண்டையெல்லாம் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் நடந்திருக்கிறது’’ என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்...

‘‘அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க தொடங்கப்பட்டு 50-வது ஆண்டை எட்டுகிறது. ‘அன்றைய தினம் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்துவது, அடுத்த அவைத் தலைவராக யாரை நியமிப்பது என்றெல்லாம் விவாதிக்க அக்டோபர் 10-ம் தேதி தலைமைக்கழக நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும்’ என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மறுநாள் 11-ம் தேதியன்று, ‘மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளலாம்’ என்று அறிவித்தார்கள். அதன்படி, 11-ம் தேதி காலை பன்னீர் - எடப்பாடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில்தான் காமெடிக்கும் காரசாரத்துக்கும் பஞ்சமில்லாத காட்சிகள் அரங்கேறின.’’

‘‘ஓஹோ... சொல்லும் சொல்லும்!’’

‘‘எடப்பாடி, பன்னீர், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் முதலிலேயே சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டு அமர்ந்துவிட்டனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே எடப்பாடி, ‘அ.தி.மு.க பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம் பற்றிய கருத்துகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசக் கூடாது’ என்று கண்டிஷன் போட்டுவிட்டார். அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரன் பேசும்போது, ‘பொன்விழாவையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ என்று பெயர் சூட்ட வேண்டும்’ என்றிருக்கிறார். உடனே எழுந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ‘அதெல்லாம் முடியாது. இந்தச் சொத்து ஜானகி பெயரில்தான் இருந்தது. அவர் கொடுத்த இடத்தில் கட்டிய கட்டடம் இது’ என்றாராம். இதைக் கேட்டு ‘இப்போது இது தேவையா?’ என்று பன்னீரும் வைத்திலிங்கமும் கடுப்பானார்கள். ‘பிரபாகர் பேசும்வரை குறுக்கிட்டு எதையும் பேச வேண்டாம்’ என்று வளர்மதியிடம் வைத்திலிங்கம் கூற, டென்ஷனான வளர்மதி ‘அதையெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. நீங்க மட்டும்தான் கட்சியா?’ என்று எகிறியிருக்கிறார். இதையடுத்து, கோபத்தில் விருட்டெனக் கிளம்பிவிட்டார் வளர்மதி. பிறகு எடப்பாடிதான், ‘அந்தம்மாவைக் கூட்டிட்டு வாங்க’ என்று சொல்ல... வளர்மதியை மீண்டும் உள்ளே அழைத்து வந்திருக்கிறார்கள்!’’

அ.தி.மு.க  கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்

‘‘அப்புறம்..?’’

‘‘முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேச எழுந்தபோதே, ‘என்னைக் கட்சியைவிட்டு நீக்கினாலும் பரவாயில்லை’ என்று தொடங்க... குறுக்கிட்ட பன்னீர், ‘முதலில் இந்த வார்த்தையைத் திரும்பப் பெறுங்கள்’ என்றிருக்கிறார். அதன் பிறகு அன்வர் ராஜா, ‘டி.வி விவாத நிகழ்ச்சிகளிலும், மீடியாக்களிலும் பேசுவதற்குத் தடை விதித்திருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர் குறித்து துரைமுருகன் பேசியபோது, நாம் கண்டிப்பாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்’ என்றார். அதற்கு எடப்பாடியோ, ‘டி.வி டிபேட்களில் நம்மை மட்டுமே கார்னர் செய்கிறார்கள். அதனால், தடையை நீக்க முடியாது’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார். அடுத்து, பொன்னையன் பேசியதுதான் ஹைலைட்... ‘ஊழலை எதிர்த்துத்தான் எம்.ஜி.ஆர் கட்சியையே தொடங்கினார். இன்று நம் கட்சிமீதே ஊழல் கறை படிந்திருக்கிறது’’ என்று ஆரம்பிக்க... முன்னாள் அமைச்சர்கள் சிலர், ‘அவரை முதல்ல உட்காரச் சொல்லுங்க...’ என்று குரல் எழுப்பவே, ‘போதும்டா சாமி...’ என்று நொந்தபடி அமர்ந்துவிட்டாராம்.’’

‘‘ராஜ்ய சபா எம்.பி தம்பித்துரை, எடப்பாடியிடம் ஏதோ புலம்பியிருக்கிறாராமே?’’

‘‘நானும் கேள்விப்பட்டேன். எடப்பாடி, பன்னீர் ஆகியோரை சில நாள்களுக்கு முன்பு தம்பித்துரை சந்தித்திருக்கிறார். அப்போது, ‘தி.மு.க திரைமறைவில் பா.ஜ.க-வுடன் நெருக்கமாகி வருகிறது. முதல்வரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைவர்களின் வாரிசுகளோடு அடிக்கடி சந்திப்பை நடத்தி உறவை பலப்படுத்திவருகிறார். இந்த நேரத்தில், நாம் அமைதியாக இருப்பது நல்லதல்ல. பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர்கள் நாம்தான் என்பதை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு ஏதுவாக, மத்திய அமைச்சரவையில் எனக்கும், தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கும் பதவிகளைக் கேளுங்கள்’ என்றாராம். அதைக் கேட்ட எடப்பாடியோ, ‘எதற்கு சுற்றிவளைக்கிறீர்கள்... உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதுதானே நோக்கம். இந்தப் பேச்சை இத்துடன் நிறுத்துங்கள். கடந்த தேர்தல்களில் மக்கள் ஏன் நமக்கு ஓட்டுப் போடவில்லை என்று காரணம் தெரியாதா? தமிழக அரசியல் களம் வேறு; டெல்லி அரசியல் களம் வேறு. டெல்லியுடன் ஓவர் நெருக்கம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம்!’’

‘‘தலைவர் ஒருவர் உதயமாகிறார்போல..!”

‘‘துரை வைகோவைத்தானே சொல்கிறீர்கள்... ம.தி.மு.க-வில் வைகோவின் மகன் துரை வைகோவை கட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வரலாமா என்று ஆலோசனை நடக்கிறதாம். கட்சித் தலைமையகமான தாயகத்தில் அக்டோபர் 20-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார் வைகோ. அந்தக் கூட்டத்தில் துரை வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்த முடிவு வெளியாகிறதாம். கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படலாம். ஆனால், துரை வைகோவுக்கு நெருக்கமான வர்களோ, அவருக்குச் செயல் தலைவர் பொறுப்புக் கொடுக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் இதற்கு எதிராகக் குமுறலும் வெடித்திருக்கிறது!’’

மிஸ்டர் கழுகு: சென்டிமென்ட்... காமெடி... காரசாரம்... அ.தி.மு.க ‘நவரசா’ கூட்டம்!

‘‘வாரிசு அரசியல் என்றாலே குமுறலும் இருக்கத்தானே செய்யும்!”

‘‘வாரிசு அரசியலை எதிர்த்ததாலேயே தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவரை நீக்கியதற்காக ஆறு பேர் தீக்குளித்து மடிந்தனர். அப்போது வைகோ எந்த வாரிசு அரசியலை எதிர்த்தாரோ, இப்போது அதையே அவரும் முன்னெடுப்பது நியாயமா என்று சீனியர்கள் சிலர் குமுறுகிறார்கள். அதனால்தான் முன்னதாகவே, ‘என் மகனை அரசியலுக்கு அழைத்துவர எனக்கு விருப்பமில்லை; அவர் அரசியலுக்கு வருவதை மாவட்டச் செயலாளர்கள் தான் முடிவு செய்வார்கள்’ என்று முன்னெச்சரிக் கையாக ஒரு கருத்தையும் தெரிவித்திருக்கிறார். கட்சியின் சீனியர்களைச் சமாதானப்படுத்தவே வைகோ இப்படிப் பேசினார் என்கிறார்கள்!”

‘‘ஆளுநர் மாளிகையை முன்வைத்து செய்திகள் கசிகின்றனவே?”

‘‘ஆமாம். தமிழக அரசின் அரசு ஆலோசகர் பதவியை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டிக்கு வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து முதல்வருக்குச் சில விவரங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதற்கு அரசுத் தரப்பில் ‘இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை’ என்று சொல்லப்பட்டதாம். இப்படியொரு தகவல் ஓடினாலும், முதல்வர் அலுவலகத்தின் சில உயரதிகாரிகளோ வேறு மாதிரி சொல்கிறார்கள்... ‘தமிழக சட்டசபையில் ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆளுநரிடம் ஆலோசிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்’ என்கிறார்கள் அவர்கள்...” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

*****

ஆணவக்கொலை... பின்னணியில் தி.மு.க பிரமுகர்?

கும்பகோணம் அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் என்ற இளைஞரும், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியும் காதலித்துவந்த நிலையில், மாணவியின் அப்பா மணிகண்டன் அக்டோபர் 9-ம் தேதி பிரபாகரனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். ‘‘இது ஆணவக்கொலை. தி.மு.க பிரமுகரும், ஒன்றிய கவுன்சிலருமான சீதாபதியின் தூண்டுதல்பேரிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது. ஆளுங்கட்சி என்பதால் அவரை போலீஸ் கைது செய்யவில்லை’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* எதிர்க்கட்சியின் ‘வளர்ந்த’ நிர்வாகி மூலமே கட்சிக்குள் நடக்கும் விஷயங்களெல்லாம் ஆளும் தரப்புக்குச் செல்கிறது என்று தலைமை சந்தேகப்படு கிறதாம். இதையடுத்து, அவர் செல்லுமிடமெல்லாம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது!

* தலைநகரில் பணியாற்றும் பழைய நடிகையின் பெயரைக்கொண்ட பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரில் ‘அப்ரூவ்டு பை’ என்று ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். எஃப்.ஐ.ஆரைப் பார்த்துப் பதறிய ஐ.பி.எஸ் அதிகாரி, இன்ஸ்பெக்டரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.