Published:Updated:

மிஸ்டர் கழுகு: காயப்பட்ட குஷ்பு! - கரைசேர்த்த தாமரை...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

காங்கிரஸ் கட்சியில் தன்னை உதாசீனப்படுத்தியது குஷ்புவின் மனதை வெகுவாகவே காயப்படுத்திவிட்டதாம்.

“புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறார்களாமே?” - கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களைக் கூறுகிறீர்களா?” என்றோம். கையோடு கொண்டுவந்திருந்த மணப்பாறை நெய் முறுக்குகளைத் தட்டில் அடுக்கியவர், “ஆமாம். கட்சியை ஆரம்பிப்பதற்காக பல்லடத்தில் முதல் கூட்டத்தையும் போட்டுவிட்டார்கள்” என்றபடி செய்திகளுக்குள் தாவினார்.

“நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அந்தக் கட்சியில் இளைஞரணி பொறுப்பிலிருந்த கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோருக்கும் மனக்கசப்பு உண்டாகி, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதை 9.9.2020 தேதியிட்ட இதழில் கூறியிருந்தேன். இவர்கள் இருவரில், கல்யாணசுந்தரம் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறாராம். இதற்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் முதல் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார். ‘நாம் தமிழர்’ என்பதுடன் ஈர்ப்பான ஒரு வார்த்தையையும் சேர்த்து, அதாவது, தி.மு.க-வுடன் அண்ணா தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க என்று சேர்த்து உருவாக்கியதுபோல யோசிக்கிறார்களாம்.

மொழிவாரியாக தமிழ்நாடு மாநிலம் உருவான நாளான நவம்பர் 1-ம் தேதி அல்லது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான நவம்பர் 26-ம் தேதி புதிய கட்சியின் தொடக்கவிழா இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கடந்த பத்து வருடங்களில் சீமானால் ஓரங்கட்டப்பட்டவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார் கல்யாணசுந்தரம்.”

திருப்பதியில் அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ்
திருப்பதியில் அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ்

“ஓஹோ... ‘முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்காதவர்கள், கூட்டணியைவிட்டு வெளியேறலாம்’ என்று கே.பி.முனுசாமி சீறியிருக்கிறாரே..?”

“கூட்டணிக் கட்சிகளுடனான சீட் பேரத்தில் அ.தி.மு.க-வின் பிடி நழுவிவிடக் கூடாது என்பதால் இந்த முன்னெச்சரிக்கையாம். இப்போதே பா.ஜ.க 60 சீட் எதிர்பார்க்கிறது. அவர்களே இவ்வளவு எதிர்பார்க்கும்போது, 5.5 சதவிகித வாக்குகளை இருபது வருடங்களுக்கு மேலாகத் தக்கவைத்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கணக்குப் போட மாட்டாரா? அ.தி.மு.க கூட்டணியில் 80 சீட் எதிர்பார்க்கிறாராம் பெரிய மருத்துவர்.”

“அடேங்கப்பா!”

“அதுமட்டுமல்ல... துணை முதல்வர் பதவியும் தர வேண்டுமென்று இரு கட்சிகளும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தத் தகராறுக்கு நடுவேதான், ‘நேற்றைய பொழுது நிஜமில்லை, நாளைய பொழுது நிச்சயமில்லை’ என ட்வீட் போட்டு, கூட்டணி பேரத்தை எகிறச் செய்திருக்கிறார் ராமதாஸ். சீட் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இவர்கள் கொடுக்கும் நெருக்கடியால்தான், ‘உங்களை நம்பி நாங்கள் இல்லை’ என்று ஓங்கி அடித்திருக்கிறார் கே.பி.முனுசாமி!”

“குஷ்பு பா.ஜ.க-வில் இணைந்த பின்னணி என்னவோ?”

“காங்கிரஸ் கட்சியில் தன்னை உதாசீனப்படுத்தியது குஷ்புவின் மனதை வெகுவாகவே காயப்படுத்திவிட்டதாம். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பில்லாதது, டெல்லி தலைமையைச் சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காதது என்று கட்சிரீதியாக விரக்தியிலிருந்தார் குஷ்பு. கட்சி விவகாரம் இப்படியென்றால் தனிப்பட்ட முறையிலும் அவருக்குச் சில நெருக்கடிகள்... சில மாதங்களாகவே குஷ்பு பண நெருக்கடியில் தவித்துவந்தாராம். தனது கடன் பிரச்னை குறித்து சமீபத்தில் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவரிடமும் புலம்பியிருக்கிறார். அந்தப் பிரமுகர் பதிலேதும் சொல்லாத நிலையில், குஷ்புவின் ‘பணப் பிரச்னை’ பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்குச் சென்றிருக்கிறது. பேச வேண்டியவிதத்தில் பேசி, குஷ்புவை தாமரைப் பக்கம் கொண்டுவந்துவிட்டார் அவர். தவிர, குஷ்புவின் மனதைக் கரைத்ததில் அவரின் கணவர் சுந்தர்.சியின் பங்கும் கணிசமானது. இதையடுத்தே குஷ்புவை வசமாக்கியிருக்கிறது பா.ஜ.க!”

“அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது செல்லூர் ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் கடுப்பில் இருக்கிறார்களாமே..?”

மிஸ்டர் கழுகு: காயப்பட்ட குஷ்பு! - கரைசேர்த்த தாமரை...

“அ.தி.மு.க வழிகாட்டுதல்குழுவில் மதுரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் என இருவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது அல்லவா... பன்னீரின் ஆதரவாளர்களான இவர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டதில், அமைச்சர் செல்லூர் ராஜூவும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவும் ஏற்கெனவே கடும் அப்செட்டில் இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான், சமீபத்தில் ஆர்.பி.உதயகுமார் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட கோபாலகிருஷ்ணனும் மாணிக்கமும் ‘எங்களுக்குப் பொறுப்பு கிடைக்கக் காரணம் அண்ணன் ஆர்.பி.உதயகுமார்தான்’ என்கிறரீதியில் டமாரம் அடித்திருக்கிறார்கள். இதைக் கேட்டு, ஆர்.பி.உதயகுமார் மீது கடும் ஆத்திரத்திலிருக்கிறது செல்லூர் ராஜூ, செல்லப்பா தரப்பு. வழிகாட்டுதல்குழுவால் கட்சியில் ஒற்றுமை ஏற்படும் என்று பார்த்தால்... பிளவுதான் அதிகரிக்கிறது.”

“தி.மு.க-வில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க குழு அமைத்துவிட்டார்களே..?”

“டி.ஆர்.பாலுவை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, எட்டுப் பேர்கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், டெல்டா விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி நன்கறிந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு இடம் கிடைக்கும் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் டி.ஆர்.பாலுவின் தலையீட்டால்தான், பழனிமாணிக்கத்தை குழுவில் சேர்க்கவில்லை என்கிறார்கள். இந்த விவகாரம் டெல்டாவில் கொதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. சிறுபான்மையினர் பிரதிநிதிகளாக இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களையும் குழுவில் நியமிக்காதது கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியிருக் கிறது.”

ஆர்.பி.உதயகுமார் - செல்லூர் ராஜு - ராஜன் செல்லப்பா
ஆர்.பி.உதயகுமார் - செல்லூர் ராஜு - ராஜன் செல்லப்பா

“கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க-வினர் ஸ்டாலினைச் சந்தித்துச் சென்றார்களே... என்ன விவகாரம்?” என்கிற கேள்வியுடன் இஞ்சி டீயை கழுகாரிடம் நீட்டினோம். ஒருமடக்கு பருகியவர், “திருவெண்ணைநல்லுார் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறார்கள். ‘கடந்த நான்கு தேர்தல்களாக கள்ளக்குறிச்சியில் தி.மு.க தோல்வியடைவதற்கு துரைராஜ்தான் காரணம். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’ என்று ஸ்டாலினிடம் குமுறிவிட்டார்களாம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறாராம் ஸ்டாலின்.”

“ஓஹோ... காங்கிரஸ் செய்திகள் ஏதேனும்..?”

“தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்பதை மனதளவில் ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டது சத்தியமூர்த்திபவன். இதனால், அந்தக் கட்சியின் தலைவர்கள் இப்போதே தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்களாம். திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் எனப் பலரும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். ‘கொடுக்கும் சீட்டில் பாதியைத் தலைவர்களே எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எப்படிக் கரைசேரும்?’ என்று புலம்புகிறார்கள் இளம் கதர்வேட்டிகள்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்...

“தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, நீதிமன்றம்வரை விவகாரம் சென்றது. கல்லூரி அதிபர் ஒருவருக்கும், நடிகர் சங்க நிர்வாகியான ஒரு நடிகருக்கும் இடையே நடக்கும் மோதலே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாம். நடிகர் சங்கத் தேர்தலின்போது, செலவுக்காகக் கல்லூரி அதிபரிடம் பணம் வாங்கிய அந்த நடிகர், பதிலுக்குப் படம் நடித்துத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அந்த உத்தரவாதத்தை மறந்துவிட்டார். கல்லூரி அதிபர் பலமுறை இதைக் கேட்டும் பிடிகொடுக்கவில்லை. இதை மனதில்வைத்தே, தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியை வாங்கிவிடக் கூடாது என்று கல்லூரி அதிபர் காய்நகர்த்திவருகிறார்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* அக்டோபர் 10-ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் ஒன்றாக திருப்பதிக்குச் சென்றிருக்கிறார்கள். வேலுமணியுடன் ஒருபோதும் ஐக்கியமாகாத பன்னீர் எப்படி இப்படிச் சேர்ந்து சென்றார் என்று ஆச்சர்யத்துடன் பார்க்கிறது அ.தி.மு.க முகாம். இவர்களுக்கான தரிசன ஏற்பாட்டை முன்னின்று செய்தவர், பா.ஜ.க-வுக்கு நெருக்கமான ஜூடிஷியல் கிருஷ்ணமூர்த்திதானாம்.

* டாஸ்மாக் நிர்வாக இயக்குநரான கிர்லோஷ்குமார் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவியைக் கூடுதலாக மோகனுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். கிர்லோஷ்குமாரை நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று கடந்த பல மாதங்களாகவே டாஸ்மாக்கில் ஒரு கும்பல் வேலை பார்த்துவந்தது. அவர்கள் கொடுத்த டார்ச்சரில் மனம் நொந்த கிர்லோஷ் குமார், ஏற்கெனவே பணிமாறும் மனநிலைக்கு வந்துவிட்டாராம். இந்தநிலையில், சீனியர்கள் பலரையும் ஹை ஜம்ப் செய்து மோகன் இந்தப் பதவிக்கு வந்துவிட்டார் என்கிறார்கள். மதுபான பாட்டில்களில் ஒட்டப்படும் ஹோலோகிராம் ஸ்டிக்கரை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹோலோகிராம் விஷயத்தில் மோகனின் நடவடிக்கையை, ஹோலோகிராம் தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்பார்ப்புடன் ‘கவனித்து’வருகிறார்களாம்.