அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க...” - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

சில வாரங்களுக்கு முன்னர் தி.மு.க குடும்பப் பிரமுகரும், லாட்டரி அதிபரின் மருமகனும் டெல்லிக்குச் சென்றனர். அங்கு ரஜினிக்கு நெருக்கமான மூவரணியைச் சேர்ந்த வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசித்திருக்கிறார்கள்.

கழுகாருக்காக வாங்கி வந்திருந்த சமோசா பொட்டலங்களைத் திறந்தோம்... உள்ளே மெதுவடை இருந்தது. ‘‘பாக்கெட் மாறிவிட்டதே... வாங்கும்போதே கவனித்திருக்கலாம்” என்று நாம் முணுமுணுத்தை கவனித்த கழுகார், ‘‘அனுபவமே பாடம்...’’ என்று கமென்ட் அடித்தார். வடையை அவருக்குப் பகிர்ந்தபடி, ‘‘ரஜினி செய்திக்குள் நுழையப்போகிறீரோ?” என்றோம். சட்னியுடன் வடையைச் சுவைத்தவர், ‘‘வரி விவகாரத்தில் ஏக டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி!’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட ஆறரை லட்சம் ரூபாய் வரியைக் குறைக்கச் சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே முதலில் ரஜினிக்குத் தெரியாதாம். மண்டப மேனேஜரும், கிச்சன் கேபினெட்டும் சேர்ந்துதான் இதைச் செய்திருக்கிறார்கள். தொலைக்காட்சியில், ‘ரஜினிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை’ என்று ஃப்ளாஷ் நியூஸ் ஓடுவதைப் பார்த்து டென்ஷனாகிவிட்டாராம் ரஜினி. ‘டோல்கேட்டுல கட்சிக்கொடியைக் கட்டிகிட்டு 40 ரூபாய் கட்டணம்கூட கொடுக்காமப் போறாங்க. அதுமாதிரி நாம நடந்துக்கலை. நம்ம உரிமையைத்தானே கேட்கிறோம்’ என்று பதிலுக்குக் குரலை உயர்த்தியிருக்கிறது கிச்சன் தரப்பு. ‘உரிமையைக் கேட்கிற முறைனு ஒண்ணு இருக்கு’ என்று காட்டமான ரஜினி, உடனடியாக வரியைச் செலுத்தச் சொல்லியிருக்கிறார். அதோடு, ‘நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்’ என ட்வீட் செய்திருக்கிறார் ரஜினி.’’

‘‘ரஜினிக்கு தி.மு.க நெருக்கடி கொடுப்பதாகக்கூட ஒரு பேச்சு உலாவருகிறதே?’’

‘‘உண்மைதான். ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக அமெரிக்க நண்பர் ஒருவரும், சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், ஒரு மருத்துவரும் இருக்கிறார்கள். எந்த விவகாரமாக இருந்தாலும் சரி, இந்த மூவரிடமும் கருத்து கேட்பது ரஜினியின் வழக்கம். இந்த மூவரணி மூலமாக ரஜினியைக் குழப்பும் வேலையை தி.மு.க ஆரம்பித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தி.மு.க குடும்பப் பிரமுகர் ஒருவரும், லாட்டரி அதிபர் ஒருவரின் மருமகனும் இதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.’’

‘‘ஓஹோ...’’

ரஜினி
ரஜினி

“சில வாரங்களுக்கு முன்னர் தி.மு.க குடும்பப் பிரமுகரும், லாட்டரி அதிபரின் மருமகனும் டெல்லிக்குச் சென்றனர். அங்கு ரஜினிக்கு நெருக்கமான மூவரணியைச் சேர்ந்த வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசித்திருக்கிறார்கள். ‘அவருக்கு எடுத்துச் சொல்லுங்க... கடைசி நேரத்துல தேர்தல்ல இறங்கி தோத்துப் போயிட்டா, அவருக்குத்தான் ரொம்ப அசிங்கம். புரியும்படி அவர்கிட்ட சொல்லுங்க’ என்று கூறினார்களாம். இதற்கு பிரதிபலனாக என்ன ‘டீல்’ பேசப்பட்டது என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து ரஜினியிடம் பேசிய அந்த வழக்கறிஞர், ‘தேர்தலைவிட உடலும் நிம்மதியும்தான் இப்போ உங்களுக்கு முக்கியம். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாசம்தான் இருக்கு... அதுக்குள்ள தலைகீழா நின்னாலும், நீங்க நினைக்குற மாற்றத்தை உருவாக்க முடியாது. பேசாம ஒதுங்கிருங்க’ என்று தூபம் போட்டிருக்கிறார். குழம்பிய ரஜினி, அமெரிக்க நண்பரிடமும் மருத்துவரிடம் கலந்தாலோசித்திருக்கிறார். அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். சும்மாவே ‘தலை சுத்திருச்சு’ என்பவர், தி.மு.க கொடுக்கும் மறைமுக நெருக்கடியால் இப்போது ஏகக் குழப்பத்தில் இருக்கிறாராம். ரஜினி சுயமாக முடிவெடுக்காதவரை, அவர் அரசியல் என்ட்ரியும் கானல் நீர்தான்!’’

‘‘ரஜினிக்கு எதிரி ரஜினிதான் என்று சொல்லும்...”

“குஷ்பு பா.ஜ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான விஜயதரணியும் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல் பரவியது அல்லவா... அந்த வதந்தியைக் கிளப்பியதே காங்கிரஸ்காரர்கள்தானாம். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் சீட்டுக்கு விஜயதரணி காய்நகர்த்துகிறார். அதே சமயத்தில், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான பிரின்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். இந்த இரண்டு பேரும்தான் தனக்கு சீட் கிடைக்கக் கூடாது என்று புரளியைக் கிளப்பியதாகக் கடுப்பிலிருக்கிறது விஜயதரணி தரப்பு. ‘இனி யாராவது வதந்தி பரப்பினால் கிரிமினல் வழக்கு போடுவேன்’ என்று பாய்ந்திருக்கிறார் விஜயதரணி.’’

விஜயதரணி
விஜயதரணி

‘‘அட பாவமே!’’

‘‘இதுவும் ஒரு வதந்தி விவகாரம்தான். ‘ஆலங்குளம் தி.மு.க எம்.எல்.ஏ-வான பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது’ என்று அவருக்கு வேண்டாதவர்கள் வதந்தி பரப்பிவந்தார்கள். இந்த நிலையில், ‘பூங்கோதை விரைவில் பா.ஜ.க-வில் சேரப்போகிறார்’ என்று புது வதந்தி ஆலங்குளம் தொகுதியில் பரவியதால், தி.மு.க-வினர் பலரும் அவரைப் பார்த்தாலே விலகி ஓடும் நிலை ஏற்பட்டது. காட்டமான பூங்கோதை, தன்மீது அவதூறு பரப்பிய தென்காசி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் மீது சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.’’

பூங்கோதை
பூங்கோதை

கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியை நீட்டிவிட்டு, ‘‘தி.மு.க-வில் மாவட்டப் பிரிப்பு தொடருமா, இல்லையா?” என்றோம்.

காபியை உறிஞ்சியபடி தொடர்ந்தார் கழுகார். ‘‘ஏற்கெனவே கோயம்புத்தூரை ஐந்து மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அது தொடரும் என்பதுதான் அறிவாலயத் தகவல். வரும் அக்டோபர் 21-ம் தேதி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆறு மாவட்ட கட்சி நிர்வாகிகளை ஆலோசனைக்கு அழைத்திருக்கிறது அறிவாலயம். அமைப்புரீதியாக மாவட்டத்தைப் பிரிப்பது குறித்தும், தேர்தலுக்குத் தயாராவது குறித்தும் முடிவெடுக்கவிருக்கிறார்களாம். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாவட்டங்கள் பிரிக்கப்படலாம். நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தியைப் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு, மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம். இப்படிப் பிரிக்கப்படும் மாவட்டத்தில் காந்தி செல்வனுக்கும், ‘பார்’ இளங்கோவனுக்கும் பொறுப்பு அளிக்கப்படலாம் என்கிறார்கள். ஈரோட்டை மூன்றாகப் பிரித்து என்.கே.கே.பி.ராஜாவுக்கு மாவட்டப் பொறுப்பு அளிக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். திருப்பூர், சேலம் மாவட்டங்களும் பிரிக்கப்படும் லிஸ்ட்டில் இருக்கின்றன. ‘கரூரிலுள்ள நான்கு தொகுதிகளின் வெற்றிக்கும் நான் கேரன்டி’ என்று செந்தில் பாலாஜி உத்தரவாதம் அளித்திருப்பதால், அதுமட்டும் தொங்கலில் இருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க...” - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க!

‘‘ம்ம்... பிரசாந்த் கிஷோர் மீது ஏதோ வருமானவரி வழக்கு பாயப்போகிறதாமே?’’

‘‘பிரசாந்த் கிஷோர் 13 கோடி ரூபாய் வருமானவரி மோசடி செய்துவிட்டதாக சென்னையைச் சேர்ந்த இருவர் டெல்லிக்குப் புகாரளித்தனர். அந்தப் புகாரை விசாரிக்கச் சொல்லி, சென்னை வருமான வரித்துறைக்கு டெல்லி தலைமை ஓலை அனுப்பியிருக்கிறது. கிஷோருக்கு மாதந்தோறும் பெரிய தொகையை ஊதியமாக அளிக்கிறது தி.மு.க தரப்பு. அந்தக் கணக்கு வழக்குகளில் கிஷோரை இறுக்கினால், பணம் கொடுத்த தி.மு.க-வுக்குச் சிக்கல் வரலாம். கிஷோர் மீது புகாரளித்த அந்த இருவருமே, தாங்கள் அந்தப் புகாரை அனுப்பவில்லை என்று இப்போது ஜகா வாங்குகிறார்களாம். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நாங்கள் டெண்டர் எடுத்து விடுவோம் என்று எங்கள் போட்டியாளர்கள் கருதுகிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் எங்கள் பெயரில் போலி புகார் அனுப்பியிருக் கிறார்கள்’ என்று பொருமுகிறார்களாம். எது எப்படியோ, புகாரை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது வருமான வரித்துறை.”

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

‘‘ம்ம்... அ.தி.மு.க செய்திகள் ஏதேனும்..?’’

‘‘கரூர் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளராக இருக்கும் காமராஜும், கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகக் கச்சை கட்டுகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு காமராஜும், அரவக்குறிச்சி தொகுதிக்கு செந்தில்நாதனும் குறிவைத்திருக்கிறார்களாம். ‘என்னை மீறி உங்களுக்கு எப்படி சீட் கிடைக்குதுனு பார்க்கிறேன்’ என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்விடுவதால், இரண்டு தரப்பும் ஏகத்துக்கும் மோதிக்கொள்கின்றன. ‘தன்னை மீறி கரூரில் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நினைக்கிறார். இப்படியே சென்றால், கரூர் மாவட்ட அ.தி.மு.க-வுக்கு டெபாசிட் கிடைப்பதே திண்டாட்டம்தான்’ என்று புலம்புகிறது அ.தி.மு.க வட்டாரம்.”

‘‘சரிதான்!’’

‘‘அக்டோபர் 15-ம் தேதி நிலவரப்படி, 64 தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. முதல்வர் அலுவலகச் செயலாளர் ஒருவரின் டிரைவர் ஒருவருக்கே தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி இரண்டு முறை முதல்வரைச் சந்தித்து, ‘மத்திய அரசுகூட 50 சதவிகித ஊழியர்கள் வந்தால் போதும் என்கிறது. மாநில அரசு அலுவலகங்களில் 100 சதவிகிதப் பணியாளர்கள் பணிக்கு வருகிறார்கள். அதை மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.’’

‘‘ஓஹோ...’’

‘‘உயர்கல்வித்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் ஓர் உயரதிகாரியின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டது என்கிறார்கள். ‘டி.ஆர்.பி தேர்வில் பாஸ் பண்ணவைக்கிறேன்’ என்று பலரிடம் பணத்தைக் கறந்திருக்கிறாராம் அந்த அதிகாரி. தனக்குக் கீழுள்ள ஓர் அதிகாரி மூலமே அனைத்து டீலிங்கையும் வைத்துக்கொள்கிறாராம் அவர். சமீபத்தில் மாணவர் ஒருவருடன் அந்த அதிகாரி பேரம் பேசும் ஆடியோ ஒன்றை உயர் கல்வித்துறையின் அமைச்சர் தரப்புக்கே அனுப்பியிருக்கிறார்கள். ஆடியோ புகாரை அமுக்கிவிட்டதாம் அமைச்சர் தரப்பு’’ என்றபடி கிளம்பத் தயாரான கழுகார்,

வெற்றிவேல்
வெற்றிவேல்

கொரோனா காரணமாக அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் மறைந்துவிட்டார் என்ற செய்தியை டி.வி-யில் பார்த்துவிட்டு, உச்சுக் கொட்டியபடியே, ‘‘கொரோனா பீதியால் நான்கைந்து மாதங்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாப்பாகத்தான் இருந்தார் வெற்றிவேல். ‘கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்துங்கள்’ என்று ராயப்பேட்டையி லிருக்கும் தலைமை அலுவலகத்துக்கு அவரை வரச் சொல்லி, கொரோனா வருவதற்குக் காரணமாகிவிட்டார் தினகரன்’ என்று வெற்றிவேலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டு கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.