அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘மூன்று மாதம் கெடு...’ - அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்!

ஸ்டாலின், கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின், கனிமொழி

பாயின்ட்டைப் பிடித்து விட்டீர். துறைரீதியிலான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லி, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் டோஸ் விட்டிருக்கிறார் முதல்வர்.

“கடந்த ஒரு மாத காலத்துக்குள் 19 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். மேலும் 76 அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வரப்போகிறார்களாம். அவர்களுக்கெல்லாம் டெல்லியில் வேலையே இல்லைபோல” என்றபடி உரையாடலைத் தொடங்கிய கழுகார், காங்கிரஸ் செய்திக்குத் தாவினார்.

“அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல், சத்தியமூர்த்தி பவனிலும் நடந்தது. வாக்குச் சேகரிப்பின்போதே சசி தரூரைப் புறக்கணித்து, மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிர்வாகிகள் வாக்குப்பதிவின்போதும் அப்படியே நடந்துகொண்டார்கள். கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் தனியாகவும், கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கொஞ்சம் பேர்தான் என்றாலும் ‘எங்ககிட்டயும் சீப்பு இருக்கு... சீவுவோம்’ கதையாகத் தனியாகவும் முறைத்தபடி உட்கார்ந்திருந்தனர். இதனால் அங்கு ஒருவிதமான இறுக்கமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டுக்குள் மாநில காங்கிரஸ் பல அணிகளாக இருந்தாலும், இந்தத் தேர்தல் மூலம் அகில இந்திய காங்கிரஸுக்கும் இரண்டு அணிகள் உருவாகிவிட்டதாக முணுமுணுக் கிறார்கள் கதர் வேட்டிகள்.”

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

“பிரியங்கா காந்தியைப் பற்றிய பேச்சே இல்லையே... என்ன காரணமாம்?”

“ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு. ராகுல் மீது குவியும் கவனத்தை நாமே திசைதிருப்ப வேண்டாம் என்றுதான், பிரியங்கா காந்தியை அடக்கி வாசிக்கச் சொல்லியிருக் கிறார்களாம். அதேநேரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குத் திரண்டிருக்கும் ஆதர வைப் பார்த்து, வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்காவை பெல்லாரி தொகுதியில் களமிறக்கக் கோரியிருக்கிறது அந்த மாநில காங்கிரஸ் கட்சி. ஏற்கெனவே 1999 தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட சோனியா, பா.ஜ.க-வின் சுஷ்மா ஸ்வராஜை வீழ்த்திய வரலாற்றைச் சொல்லி இதை வலியுறுத்துகிறார்களாம். ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் கவனம் செலுத்திவரும் பிரியங்கா காந்தியை இங்கே கொண்டுவந்து விட்டு, ராகுலை கேரளாவிலிருந்து உ.பி-க்கு அழைத்துக்கொள்ளலாமா என்றும் டெல்லி காங்கிரஸில் பேச்சு ஓடுகிறது!”

ஸ்டாலின்
ஸ்டாலின்

“அமைச்சர்களுக்கு முதல்வர் செம ‘டோஸ்’ விட்டிருக்கிறாராமே?”

“ஆமாம். அக்டோபர் 14-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, சில அமைச்சர்களைத் தனித்தனியாக அழைத்து பாடம் எடுத்தாராம் முதல்வர் ஸ்டாலின். முதல் பாடம் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்குத் தானாம். அவர்மீது துறைரீதியிலான குற்றச் சாட்டுகள் ஏதுமில்லை. ஆனால், மதுரையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கட்சி விருந்து நிகழ்ச்சியில், ‘நான் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டேன். யாரிடமும் கையேந்தி நின்ற தில்லை. என் விருந்து நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் வருவதைச் சிலர் தடுக்கிறார்கள்’ என ஆவேசம் காட்டியிருந்தார். அவருக்கும், மதுரை மாநகர் தி.மு.க செயலாளர் கோ.தளபதிக்கும் இடையிலான உரசல் குறித்து அவரிடம் விசாரித்த ஸ்டாலின், ‘கட்சின்னா முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். தேவையில்லாததைப் பொதுவெளியில பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதீங்க’ என்று சொன்னா ராம். இதைக்கேட்டதும் பி.டி.ஆர் முகம் வாடிவிட்டதாம்.”

“ஓஹோ... அந்த வருத்தத் தில்தான், ‘அக்டோபர் 14-ம் தேதி என் வாழ்க்கையில் கடினமான நாள்’ என்று தன் ட்விட்டர் பக்கத் தில் பதிவிட்டிருந்தாரா பி.டி.ஆர்?”

பி.டி.ஆர் - அன்பில் மகேஸ் - பொன்முடி - மதிவேந்தன்
பி.டி.ஆர் - அன்பில் மகேஸ் - பொன்முடி - மதிவேந்தன்

“பாயின்ட்டைப் பிடித்து விட்டீர். துறைரீதியிலான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லி, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் டோஸ் விட்டிருக்கிறார் முதல்வர். ‘உங்க நடவடிக்கைகள்ல கவனமா இருங்க. சீனியரான உங்களைப் பார்த்துத்தான் ஜூனியர் கள் கத்துக்கணும். நீங்களே இப்படிப் பண்ணினா எப்படி?’ என அமைச்சர் பொன்முடிக்கும் அர்ச்சனை நடந்திருக்கிறது. அமைச்சர் மதிவேந்தனை அழைத்து, ‘உங்க டிபார்ட்மென்ட் என்ன என்றாவது தெரியுமா... முதல்ல வேலை பார்க்க விருப்பம் இருக்கா, இல்லையா?’ எனக் கடுமையாகவே கேட்டாராம் முதல்வர். அமைச்சர்களின் செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால், அமைச்சரவை மாற்ற யோசனை யையும் கைவசம் வைத்திருக்கிறாராம் முதல்வர். ‘ஆட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் அமைச்சர் களுக்கு மூன்று மாதங்கள் டைம் அளிக்கப் பட்டிருக்கிறது. அந்தக் கெடுவுக்குள் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், சீட்டு பறிக்கப்படும்’ என்று பேசிக் கொள்கிறார்கள் கோட்டையில்.”

“சரிதான்... அறிவாலயத்தில் தனக்கென தனி அறை ஒதுக்கச் சொல்கிறாராமே கனிமொழி?”

கனிமொழி
கனிமொழி

“ஐந்து துணைப் பொதுச் செயலாளர்களுக்கும் பொதுவாக ஓர் அறை அறிவாலயத்தில் இருக்கிறது. ‘மகளிரணியையும் கவனிப்பதால், பெண்கள் பல பிரச்னைகள் தொடர்பாக என்னிடம் பேசுவார்கள். சீனியர்கள் வரும்போது நான் அந்த அறையில் அமர்ந்துகொண்டு கட்சி நிர்வாகிகளின் புகாரை விசாரிக்க முடியாது. எனக்கென தனி அறையை ஒதுக்குங்கள்’ என கட்சித் தலைமையிடம் கனிமொழி கேட்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்ப அணியை பி.டி.ஆர் கவனித்தபோது, அவருக்கென ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதுபோல தனக்கும் ஒதுக்கச் சொல்கிறார் கனிமொழி. ஆனால், ‘அவருக்குத் தனி அறை கொடுத்தால் தனி ஆவர்த்தனமாகிவிடும்’ என சீனியர்கள் சிலர் முட்டுக்கட்டை போடுவதால், இன்னும் முடிவெடுக்கவில்லையாம் தலைமை.”

“ஓஹோ...”

“கட்சி நிகழ்ச்சிக்கு கனிமொழியை அழைத் தால், அவரது பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைப்பிதழ் அடிக்கச் சொல்லி ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கிறார்களாம் அவரின் ஆதரவாளர்கள். ஏற்கெனவே, கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ‘மேலிடம்’ என்ன நினைக்குமோ என்ற தர்ம சங்கடத்தில் இருக்கும் நிர்வாகிகள், உதவியாளர்களின் நெருக்கடியால், கனிமொழியை நிகழ்ச்சிக்கு அழைக்கவே தயங்குகிறார்களாம்” என்ற கழுகாருக்கு முந்திரிப் பருப்பு கொடுத்தோம். கொறித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“சென்னையை ஒட்டியிருக்கும் வசூல் கொழிக்கும் நகராட்சியில் உயர் பதவியில் இருக்கிறார் திருப்பதி கடவுளின் பெயரைக் கொண்டவர். அமைச்சர் ஒருவரின் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் நகராட்சி அதிகாரிகள் தொடங்கி லோக்கல் எம்.எல்.ஏ வரை யாரையும் மதிப்பதில்லையாம். வசூலிலும் கொடிகட்டிப் பறக்கிறாராம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்துக்கு அந்தத் துறையிலிருக் கும் உயரதிகாரி ஒருவர் பரிந்துரை செய்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அவர், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை நேரில் சந்தித்து, ‘நான் யார் தெரியுமா... எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வருவதற்குள் மேலிடத்தில் சொல்லி உங்களை மாற்றிவிடுவேன்’ எனச் சபதமிட்டிருக்கிறாராம்” என்ற கழுகார்...

“தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்த மணல் மனிதருக்கும், அவரின் சகோதரர்களுக்குமிடையே சொத்துத் தகராறு நீண்ட காலமாக இருந்துவருகிறது. இதில் மணல் மனிதருக்கு எதிராக அவரின் சகோதரர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

புகாரை விசாரித்த டி.எஸ்.பி-யும் இன்ஸ்பெக்டரும் இரண்டு தரப்பிலும் பேரம் பேசி ‘ஏழு ஸ்வீட் பாக்ஸ்’ கேட்டிருக்கிறார்கள். இதையடுத்து சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பட்டாணி மீது மணல் மனிதரின் சகோதரர் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸிடம் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில் இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப் பட்டிருக்கிறது. ஓய்வுபெறும் வயதில் இரண்டு அதிகாரிகளும் வசமாக மாட்டியிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* லோக்கலில்தானே இருக்கிறோம் எனத் தலைமைச் செயலகத்துக்கு கட்சி நிர்வாகிகள் வந்தாலே, ‘இங்க ஏன் வந்தே... யார் உன்ன வரச் சொன்னது?’ என வார்த்தைகளால் வறுத்தெடுக் கிறார்களாம் இரண்டு அமைச்சர்கள். ‘கூட்டம் நடத்தவும், பேனர் அடிக்கவும் மட்டும் நாங்க வேணும்... மத்த நேரத்துல இப்படி விரட்டிவிடுறாங்களே’ எனக் கொந்தளிக்கிறார்கள் அந்த மாவட்டங்களின் நிர்வாகிகள்.

* எடப்பாடி பக்கமிருக்கும் வடமாவட்ட சீனியர் தலைவருக்கு, சமீபத்தில் போன் போட்டிருக்கிறார் ‘காட் மதர்.’ குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘ஒற்றுமையாகச் சேர்ந்து செயல்படுவோம், வாங்க’ என்றாராம். ‘நீங்க பேசுனதுல சந்தோஷம். ஆனா, மீண்டும் ஒண்ணாச் சேர முடியாது’ என்றுவிட்டு போனைத் துண்டித்திருக்கிறார் சீனியர் தலைவர். இதை எதிர்பார்க்காத ‘காட் மதர்’, அவரிடம் பேசச் சொன்ன ஒரு முன்னாள் அமைச்சரை அர்ச்சித்துவிட்டாராம்.