Published:Updated:

மிஸ்டர் கழுகு: தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

‘பயங்கரவாத’ விசாரணை வளையத்தில் வாரிசு!

தென்னை மரம் டிசைன் போட்ட சட்டை, கெளபாய் தொப்பி, கூலிங் கிளாஸ் சகிதம் கலக்கலாக என்ட்ரி கொடுத்தார் கழுகார். “கடற்கரை ரிசார்ட்டுக்குச் செல்லும் ஐடியா ஏதேனும் இருக்கிறதா?” என்று நாம் கிண்டலடித்ததைக் கண்டுகொள்ளாத கழுகார், “மாலத்தீவுக்கு வாரிசு பிரமுகர் ஒருவர் டூர் அடித்ததில்தான் வில்லங்கம் முளைத்திருக்கிறது. அந்த நாட்டின் ஸ்பெஷல் ஜவ்வரிசி போண்டிபாய் ஸ்வீட் சாப்பிடுங்கள்...” என்று ஸ்வீட்டை நீட்டியபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“அக்டோபர் இரண்டாவது வாரத்தில், ஆளும்கட்சி அரசியல்புள்ளியின் வாரிசு ஒருவர் தன் நண்பர்களுடன் மாலத்தீவுக்கு ‘இன்ப’ச் சுற்றுலா சென்றார். தனி சொகுசு விமானத்தில் மாலத்தீவு சென்ற வாரிசு பிரமுகர், பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்வது தொடர்பாகவும் பேசி முடித்தாராம். ஐந்து நாள்களில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிவிட்ட அந்த வாரிசை தற்போது மத்திய உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது.”

“அரசியல்வாதிகளின் வாரிசுகள் டூர் அடிப்பது சகஜம்தானே?”

“பிரச்னை அதுவல்ல. சென்னையிலிருந்து வாரிசு பிரமுகரின் சொகுசு விமானம் கிளம்பிய அடுத்த இரண்டு மணி நேரத்தில், மற்றொரு சொகுசு விமானம் கிளம்பியுள்ளது இதி ஐந்து பெண்கள் சென்றார்களாம். இந்தப் பெண்களில் ஒருவர் பயங்கரவாத தொடர்புடைய கேரளாவின் அரசியல் கட்சிக்கு நெருக்கமானவராம். மல்லிகைப்பூவை பெயரில் சூட்டியிருக்கும் அந்தப் பெண்மணி, கேரள அரசியல் கட்சிக்காக நிதி திரட்டும் வேலையைச் சென்னையில் செய்துவருகிறார். இரு தரப்பும் மாலத்தீவில் சந்திப்பு நடத்தியதா, பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுபவருடன் வாரிசுக்கு என்ன வேலை என்றெல்லாம் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது மத்திய உளவுத்துறை. இதனால், இன்பச் சுற்றுலா ‘துன்ப’ச் சுற்றுலாவாக மாறி வாரிசுக்குக் குடைச்சல் கொடுக்கக்கூடும் என்கிறார்கள்.”

“அடேங்கப்பா...”

“வாரிசு பிரமுகரின் நண்பரான முருகப் பெருமான் பெயர்கொண்டவர்தான் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். முதல்வர், துணை முதல்வர் பெயரைச் சொல்லி இவர் ஆடும் ஆட்டம் தனி என்கிறார்கள். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், மயிலாப்பூர் தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டை இந்த முருகப் பெருமான் பெயர் கொண்டவர் விலைக்கு வாங்கியிருக்கிறார். ஆனால், நிலுவைத் தொகையான ஒன்றரைக் கோடி ரூபாயை இன்னும் கொடுக்கவில்லையாம். மயிலாப்பூர் தி.மு.க பிரமுகர் பணத்தைக் கேட்டபோது, ‘நீங்க எங்கே போனாலும் ஒண்ணும் நடக்காது’ என முஷ்டியை முறுக்குகிறாராம். ஆட்சி மாறினால் கைதுசெய்ய வேண்டியவர்களின் பட்டியலில், இவரது பெயரை முதலிடத்தில் வைத்திருக்கிறது தி.மு.க தரப்பு. இதனால், வாரிசு பிரமுகருக்கு சிக்கல் மேல் சிக்கல் வரும் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா...

“ம்ம்... நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாணசுந்தரத்தையும் மத்திய உளவுத்துறை கண்காணிக்கிறதாமே..?”

“ஆமாம். கல்யாண சுந்தரம் பேசிய பழைய வீடியோக்களில் சர்ச்சைக்குரிய பேச்சுகளைத் தேட ஆரம்பித்திருக்கிறது உளவுத்துறை. ஏதாவது சிக்கினால் அதைவைத்து கல்யாணசுந்தரத்தை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் முடக்கவும் திட்டமிட்டிருக்கிறதாம்.”

“அவர்மீது ஏனிந்த காட்டம்?”

“தமிழ்த் தேசிய அரசியலில் சீமான் மட்டுமே பெரிய பிம்பமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்குப் போடுகிறது. ஈழம், காவிரி பிரச்னைகளை உணர்ச்சிபூர்வமாகப் பேசி, மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு எதிரான பிம்பத்தை சீமான் ஏற்படுத்தும் அளவுக்கு வேறு யாராலும் முடியவில்லை என டெல்லி கருதுகிறதாம். அடுத்த மாதம் கட்சி தொடங்கும் கல்யாணசுந்தரம், தனி ஆவர்த்தனம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்யாணசுந்தரத்தால், தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது; அவை ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. இதனால்தான் அவரை முடக்கும் வேலையை உளவுத்துறை மூலமாக ஆரம்பித்திருக்கிறார்களாம்.”

மிஸ்டர் கழுகு: தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா...

கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்துவிட்டு, “அ.தி.மு.க-வில் கொலை மிரட்டல் செய்தியெல்லாம் வெளிவருகிறதே?” என்றோம்.

டீயை உறிஞ்சியபடி தொடர்ந்தார் கழுகார். “சாத்தூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜவர்மன்தான் இந்தச் சர்ச்சை குண்டை வீசியிருக்கிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்ட அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கும் மோதல் வலுத்துக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் சாத்தூரில் நடந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் பேசிய ராஜவர்மன், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவரைவிட்டு ஒதுங்கிவிட்டேன். ஆனாலும், ‘கூலிப்படையை ஏவி ராஜவர்மனை வெட்டிக் கொல்வேன்’ என்று ராஜேந்திர பாலாஜி பேசிவருகிறார். ஓர் அமைச்சருக்கான பொறுப்புணர்வே அவரிடம் இல்லை’ என வெடித்துவிட்டார். ராஜவர்மனின் பேச்சு அப்படியே அமைச்சரின் காதுகளுக்குச் செல்லவும், புகைச்சல் அதிகமாகிவிட்டதாம்.”

“ஓஹோ... ‘ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சதி நடந்திருக்கிறது. என்னை பலியாக்கிவிட்டனர்’ என முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் கொந்தளித்திருக்கிறாரே..?”

“ஜெயலலிதா மரணத்தின்போது ராமமோகன் ராவ்தான் தலைமைச் செயலாளராக இருந்தார். இதனால், நிறைய விஷயங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், அதை முன்வைத்து மேற்கண்ட குற்றச்சாட்டை அவர் சொல்லியிருக்கலாம். இந்த விஷயத்தில் அவர் வெளிப்படையாகப் பேசினால், பல விவகாரங்கள் வெளியே வரும் என்கிறார்கள்!”

ராஜவர்மன்
ராஜவர்மன்

“தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமிருந்தும், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அரசுத் தரப்பில் இழுத்தடிக்கிறார்கள்’ என்று அறிக்கை வந்திருக்கிறதே, இதற்கும் அதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?”

“இல்லை, பெண்கள் ஓட்டை குறிவைக்கிறார் ஸ்டாலின். விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒன்பதாவது முறையாக மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிப்பு கேட்டிருக்கிறார் ஆறுமுகசாமி. இந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சாட்சி சொல்லவில்லை. ‘ஜெயலலிதா ஆதரவு மனநிலையிலிருக்கும் பெண்களின் ஓட்டுகளைக் குறிவைத்துத்தான், இந்தப் பிரச்னையை ஸ்டாலின் எழுப்பியிருக்கிறார்’ என்கிறது தி.மு.க வட்டாரம். ஒருவேளை ஆணையத்தின் அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவந்தால், ‘தி.மு.க அழுத்தம் கொடுத்ததால்தான் அறிக்கை வந்தது’ எனக் கூறிக்கொள்ளலாம் அல்லவா!”

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

“அடேங்கப்பா... தி.மு.க செய்திகள் வேறு ஏதேனும் இருக்கிறதா?”

“அ.ம.மு.க-விலிருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரனையும், அ.தி.மு.க-விலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் வேலூர் விஜய்யையும் தி.மு.க-வின் தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக நியமித்துள்ளனர். இருவருமே 2021 சட்டமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியை குறிவைத்திருப்பதால், சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயன் உதறலில் இருக்கிறாராம். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தரப்பும் கார்த்திகேயனைக் கழற்றிவிடும் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிருப்தியடைந்த அவர் வேலூர் பகுதியிலிருக்கும் தங்கமான சாமியாரைச் சந்தித்துப் பேசினாராம். ‘உனக்கு ஏற்ற இடம் பா.ஜ.க-தான்’ என்று அவர் அருள்வாக்கு சொன்னதால், பா.ஜ.க-வுக்குத் தாவும் மனநிலைக்கு கார்த்திகேயன் வந்துவிட்டார் என்கிறார்கள்.”

“அது இருக்கட்டும்... மதுரை தி.மு.க-வில் என்ன பஞ்சாயத்து?”

“மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களைக் கட்சியில் இணைக்கும் விழா, மாவட்டச் செயலாளர் தளபதி தலைமையில் அக்டோபர் 17-ம் தேதி நடந்தது. அதேநாளில் செல்லூர் பகுதியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் இதே போன்ற இணைப்பு விழாவைத் தனியாக நடத்தினார். இதை முன்வைத்து செல்லூர் வட்டச் செயலாளர் நல்லதம்பி என்பவர், ‘வட்டச் செயலாளரான எனக்குத் தெரியாமல் சரவணன் செல்லூரில் நிகழ்ச்சி நடத்துகிறார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு கலவரம் ஏற்படும். அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வட்டச் செயலாளர் கொடுத்த புகாரின் பின்னணியில் தளபதி இருப்பதாக சரவணன் கோஷ்டியும், ‘தனி ஆவர்த்தனம் செய்து கட்சி ஒற்றுமையை சரவணன் கெடுக்கிறார்’ என்று தளபதி கோஷ்டியும் மாறி மாறிக் குரலை உயர்த்துவதால், மதுரை தி.மு.க பற்றியெரிகிறது.”

“சர்சைக்குரிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் வீடியோ பேச்சு ஒன்று உலா வருகிறதே... கவனீத்தீரா?”

“ஆபாசத்தின் உச்சம் அது. நீதிபதிகள் வட்டாரத்தில் அதைப் பற்றிக் கேட்டால், ‘சில ஆண்டுகளாக வில்லங்கமாகவே பேசிவருகிறார் கர்ணன். சிறைவாசம்வரை சென்றும் அவர் மாறுவதாகத் தெரியவில்லை. மனநிலை பிறழ்ந்த ஒருவரால்தான் இப்படியெல்லாம் பேச முடியும். அவரது பேச்சு தொடர்பாக நீதிபதிகள் வட்டாரத்தில் பெரும் விவாதமே நடந்துவருகிறது. விரைவில் நடவடிக்கை பாயலாம்’ என்கிறார்கள்.”

“ஓஹோ!”

“திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் ஒருவர், தனது தேவஸ்தான அலுவலகத்தையே அதிகார மையமாக மாற்றிவிட்டார் என்று புகார் எழுந்திருக்கிறது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றில் ஏதேனும் வேலை நடக்க வேண்டும் என்பவர்கள் அவரது அலுவலகத்தில் குவிகிறார்களாம். பார்ட்டிகளை அழைத்துவரும் பொறுப்பை ‘இணை’ அதிகாரி ஒருவர் செய்கிறாராம். ஆந்திராவின் சித்தூர் அருகே ஆசிரமம் நடத்திவரும் ஒருவர், வருமான வரித்துறை வழக்கில் சிக்கியிருக்கிறார். அந்த வழக்கை முடித்துத் தருகிறோம் என்று கூறி 25 கோடி ரூபாய் கறந்துவிட்டதாம் உறுப்பினர் தரப்பு. விவகாரம் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் சென்றிருக்கிறதாம்” என்ற கழுகார்,

“அ.ம.மு.க-வின் பொருளாளராக இருந்த வெற்றிவேல் மறைந்துவிட்டார். ‘வெற்றிவேலின் மரணத்துக்குக் காரணமே தினகரன்தான் என்பதுபோல வெற்றிவேல் குடும்பத்தினர் குற்றம்சாட்டி பேசிவருகிறார்கள்’ என்று கேள்விப்பட்டதைக் கடந்த இதழில் கூறியிருந்தேன். இந்தநிலையில், வெற்றிவேல் குடும்பத்தினர் தரப்பிலிருந்து என்னிடம் பேசியவர்கள். ‘அவருடைய மரணம் பேரிழப்புதான். அதற்காகக் கட்சி மற்றும் தினகரன் மீது எங்களுக்கு வருத்தம் இருப்பதாகப் பரவும் செய்தியில் உண்மை ஏதுமில்லை’ என்று சொன்னார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.