அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க-வுக்கு எதிரான பிளான்... குஷியில் எடப்பாடி... அச்சத்தில் விஜயபாஸ்கர்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

சர்ச்சைக்குரிய தலைமறைவு சாமியார்மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால், இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல், ‘கற்பனை நாட்டில்’ தவியாய்த் தவிக்கிறார் அவர்.

“தமிழ்நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்களின் அறிக்கையைப் பற்றித்தான் ஊர் முழுவதும் பேச்சாக இருக்கிறது” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகார், கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “அறிக்கை வெளியானதை ஒட்டி என்னிடமும் சில விஷயங்கள் இருக்கின்றன” என்றபடி உரையாடலைத் தொடங்கினார்...

“ ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கையால், தன்னுடைய தவறுகள் அம்பலப்பட்டுப்போயிருப்பதால், அரசியல் களத்தில் இதை எப்படிச் சமாளிக்கலாம் என ஆலோசனை செய்திருக்கிறார் எடப்பாடி. அதில், ‘மாஞ்சோலை படுகொலை, கோவை குண்டு வெடிப்பு என தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களைவைத்து பதிலடி கொடுக்கலாம்’ என முடிவு செய்திருக்கிறார்களாம். அடுத்தடுத்து நடக்கும் அ.தி.மு.க பொன்விழா நிறைவு பொதுக்கூட்டங்களில் இந்த விவகாரத்தை முன்னிறுத்திப் பேச உத்தரவிட்டிருக்கிறார்களாம்.”

“ஓ.பி.எஸ் கேட்டுப் பெற்ற ஆணையம் பூமராங்போல அவரது தலையையே பதம் பார்த்திருக்கிறதே?”

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க-வுக்கு எதிரான பிளான்... குஷியில் எடப்பாடி... அச்சத்தில் விஜயபாஸ்கர்!

“ஆமாம்... அது ஓ.பி.எஸ்-ஸுக்குப் பேரிடிதான். கூடவே, ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை வைத்து ஓ.பி.எஸ்., சசிகலாவை காலி செய்யத் திட்டமிட்டுவருகிறாராம் எடப்பாடி. அதில் விஜயபாஸ்கர் தலையும் சேர்ந்தே உருளும் என்றாலும், அவருக்காக பிளானை எந்த வகையிலும் மாற்றுவதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். ‘இந்த வழக்கு பதிவாகி நாம் விசாரணை வளையத்துக்குள் சென்றால், குட்கா ஊழல் உள்ளிட்ட பழைய விவகாரங்களையும் அரசு மீண்டும் தோண்டுமே?’ என்று அச்சத்தில் இருக்கிறார் விஜயபாஸ்கர்.”

“அப்படி என்னதான் பிளான் வைத்திருக்கிறார் எடப்பாடி?”

“நாடாளுமன்றத் தேர்தலுக்காக லாப, நட்டக் கணக்கு போட்டு அ.தி.மு.க-வின் அணிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க விரும்புகிறது டெல்லி. அதற்காக எடப்பாடிக்கு நெருக்கடியும் கொடுத்துவந்தது. தற்போது ஆணைய கருத்தையே கேடயமாக்கி, ‘சசிகலா, ஓ.பி.எஸ்-ஸை இணைத்துச் செயல்பட்டால் நமக்கு ஓட்டே வராது’ என்று ஒரே போடாக போட்டுவிடலாம் என்பதே எடப்பாடியின் திட்டம். பா.ஜ.க-வால் அதை உதாசீனப்படுத்த முடியாது என்பது அவரது கணிப்பு. ‘இந்த அறிக்கை வெளியாகும்போது ஓ.பி.எஸ் தன்னுடன் இருந்திருந்தால், அதைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியிருப்போம். இப்போது இருக்கும் சூழலால் தனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை’ என்பதால் எடப்பாடி ரொம்பவே குஷியாக இருக்கிறாராம்.”

“அந்தக் குஷியில்தான், அறிக்கைகள் குறித்து கருத்தே சொல்லாமல் உதயகுமாருக்காகப் போராட்டம் நடத்தப்போனாரா?”

“உதயகுமாருக்காகவெல்லாம் இல்லை. பிரச்னையை திசைதிருப்பும் நாடகம்தான் அது. வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியில்லாமல் நடத்திய அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, எடப்பாடி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள் அல்லவா... அங்கே, எம்.எல்.ஏ-க்கள், முன்னணி நிர்வாகிகளை ஒரு ஹாலிலும், மற்றவர்களை அரங்கத்திலும் அமரவைப்பதற்கு, காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ‘தொண்டர் களுடன்தான் இருப்பேன்’ என்று அடம்பிடித்திருக்கிறார் எடப்பாடி. அரங்கத்தில் அமரும்போதும் ஏதோ கட்சிப் பொதுக்குழுபோல, துணைப் பொதுச் செயலாளர்களான கே.பி.முனுசாமியும், நத்தம் விசுவநாதனும் எடப்பாடிக்கு வலது, இடது பக்கத்தில் அமர்ந்துகொண்டனர். ஆனால், அவர்களிடம் எதுவுமே பேசாமல் தொண்டர்களுக்குக் கை காட்டுவது, முழக்கமிடுவது என்றே இருந்தார் எடப்பாடி. ‘முனுசாமியோடு தற்போது சுமுக உறவு இல்லை என்பதால்தான் அவருடன் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் எடப்பாடியார்’ என முணுமுணுத்தனர் அங்கிருந்த ரத்தத்தின் ரத்தங்கள்” என்ற கழுகாருக்கு மழைக்கு இதமாக சூடான இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்...

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

“சர்ச்சைக்குரிய தலைமறைவு சாமியார்மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால், இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல், ‘கற்பனை நாட்டில்’ தவியாய்த் தவிக்கிறார் அவர். சில இடைத்தரகர்கள் மூலமாக, டெல்லி வரை முட்டிப் பார்த்தும் கிரீன் சிக்னல் விழவில்லை. இந்த நிலையில்தான், தமிழ்நாடு பா.ஜ.க-வைச் சேர்ந்த `விளம்பரப் பிரியர்’ நிர்வாகியை அணுகியிருக்கிறது சாமியார் தரப்பு. ‘சுவாமி ஜி இந்தியா திரும்ப உதவுகிறோம். டெல்லியிடம் பேசவேண்டிய விதத்தில் பேசி, பச்சைக்கொடி காட்டவேண்டியது எங்கள் பொறுப்பு. பதிலுக்கு பத்து ஸ்வீட் பாக்ஸ் வேண்டும்’ என டீல் பேசப்பட்டு, முதற்கட்டமாக மூன்று ஸ்வீட் பாக்ஸ் கைமாறியதாகச் சொல்கிறார்கள்.”

“திருநெல்வேலிக்கே அல்வாவா?”

“ம்... இந்த விவகாரங்களையெல்லாம், மயிலாப்பூர் பிரமுகர் மோப்பம் பிடித்திருக்கிறார். அவருக்கும், பா.ஜ.க மாநிலப் பிரமுகருக்கும் இடையே உரசல் இருப்பதால், சாமியார் விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி கிண்டி மாளிகைக்கு ‘நோட்’ போட்டுவிட்டாராம் அவர். இதையொட்டி ரகசிய விசாரணையும் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே மயிலாப்பூர்க்காரர் கொடுத்த அழுத்தத்தால்தான், அடையாறு ஐடி விங் சமீபத்தில் கலைக்கப் பட்டதாம். இப்போது ரகசிய விசாரணையும் தொடங்கியிருப்பதால், அந்த ‘மாநிலப் பிரமுகருக்கு சிக்கல் அதிகரித்திருக்கிறது’ என்கிறது கமலாலய வட்டாரம்.”

“பா.ஜ.க `விளம்பரப் பிரியர்’ நிர்வாகி, மாநில நிர்வாகியின் காலையே வாரிவிட்டார் என்று சொல்லும்... பொங்கல் தொகுப்பு சர்ச்சை விவகாரத்தில் சிலர் முதல்வரின் காலையே வாரப் பார்க்கிறார்கள் என்கிறார்களே அப்படியா?”

“ஆமாம், அருணாச்சலா இம்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்ஷியல்ஸ், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் ஆகிய நிறுவனங்களிடமிருந்துதான் இப்போதும் ரேஷன் கடைகளுக்கான பொருள்கள் வாங்கப்படுகின்றன. இது குறித்து நாம் செய்தி வெளியிட்டபோது, சம்பந்தப்பட்ட நிறுவனங் களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்திருந்தார். ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது சட்ட விதிகளைத் திருத்தம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சீனியர் அமைச்சர்கள் இருவர், பவர்ஃபுல் அமைச்சர் ஒருவர் என மூவர் தலையிட்டு நிறுத்தச் சொல்லிவிட்டார்களாம். ‘பாவம் ஓரிடம்... பழி ஓரிடமா?’ என விழித்துக் கொண்டிருக்கிறாராம் சக்கரபாணி” என்ற கழுகார்...

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய மூன்று காவல்துறை அதிகாரிகள் சென்னையில் பணியாற்றிவருகின்றனர். அவர்களில் இருவர் முக்கியத்துவமற்ற பணிகளில் இருக்க, ஒருவர் மட்டும் ‘கண்ணை உறுத்தும்’ சட்டம்-ஒழுங்கு பதவியில் இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக மாற்ற முடிவெடுக்கப் பட்டிருக்கிறதாம். பதறிப்போன அந்த அதிகாரி, ஜோதிடரிடம் ஆரூடம் பார்த்தாராம். ‘உங்களுக்குக் கட்டம் சரியில்லை, சில பரிகார பூஜைகளைச் செய்யுங்கள்’ என்று ஜோதிடர் ஆலோசனை சொன்னாராம். தீபாவளி முடிந்ததும் பரிகார பூஜை செய்ய இப்போதே ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார் அந்த அதிகாரி. அதற்குள் அவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டரே வந்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தன் குடும்ப நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திய அமைச்சரை, தலைமைச் செயலக உதவியாளர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். ‘பிரமாண்டம்னா நீங்கதாம்ணே. அள்ளித் தர்றதுல நீங்க கர்ணன். தீபாவளி வருது... தம்பிங்களைக் கொஞ்சம் கவனிங்க’ என்றதும், அமைச்சர் என்ன மூடில் இருந்தாரோ... ‘உனக்கு ஏண்டா தரணும்...’ என்றபடி, தென்மாவட்ட பாஷையில் திட்டி விரட்டிவிட்டாராம்.

* பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததால், மூத்த அமைச்சர் தரப்புக்கு சமீபத்தில் ஒரு பெரும் தொகை பார்சலாகியிருக்கிறது. விஷயத்தை லேட்டாக மோப்பம் பிடித்த மேலிடத் தரப்பு, தங்கள் பங்குடன் டீலை மறைத்ததற்கான ‘பனிஷ்மென்ட்’ கட்டணம் 5 சதவிகிதத்தையும் சேர்த்துக் கறந்துவிட்டதாம். பொருமலில் இருக்கிறது அமைச்சர் தரப்பு.

* தினமும் கோடிகள் குவியும் துறையில், எந்த ஃபைலிலும் அந்த ‘சிப்பி’ அமைச்சரால் கையெழுத்திட முடியவில்லையாம். ‘எல்லாவற்றையும் அண்ணாநகரே முடிவெடுக்கிறது. அவர்கள் குறித்துக் கொடுத்த இடத்தில் கையெழுத்திட மட்டுமே என்னைப் பயன்படுத்துகிறார்கள்’ என்று காதில் புகைவிடுகிறாராம் அந்த அமைச்சர்.